சமர், தூண்டில், உயிர்ப்பு, மனிதம் இதழ்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய சக்திகள் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து, கனடாவிலிருந்து வெளிவரும் தேடல் இதழில் தேசிய சக்திகள் தொடர்பாக கட்டுரை வெளிவந்துள்ளது. தேடல் இதழ் 10இல் சி.சிவசேகரம் எழுதிய கட்டுரையை நாம் விமர்சனத்துக்கு முன்னெடுக்கும் அதேநேரம் தேடல் இதழ் 10 க்கு முந்திய இதழ்கள் எமக்கு கிடைக்காமையால். அதில் இது தொடர்பான விவாதம் நடந்ததாவென தெரியாமல் உள்ளது.

 

1970 களிலும் 1980 களிலும் உலகநிலைமைகள் இளைஞர் மத்தியில் மார்க்சிச, சோசலிச சிந்தனைகள் பற்றிய அக்கறையை ஓரளவு தூண்டின. பழைய அரசியல் தலைமைகள் வெற்றிகரமாகத் தமிழரின் பாராளுமன்ற அரசியலிருந்து ஒதுங்கிய இடதுசாரி சிந்தனைகள் 1970 களுக்குப் பின் இனைஞர்களைக் கவர்ந்த காரணங்கள் நாட்டின் உள்ளேயும் இருந்தன. தமிழ் தேசியவாதத் தலைமையின் வலதுசாரி அரசியலின் இயலாமையும் 1971 ஏப்ரல் கிளர்ச்சியும் 1970 களுக்கூடாக படிப்படியாக விரிவடைந்து 1977க்குப் பின் உக்கிரமடைந்த அரசு ஒடுக்குமுறையும் வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் தமிழர் முன்னெப்போதும் கண்டிராத இனவாத வன்முறைக்கு முகம் கொடுக்க நேர்ந்தமையும் இடதுசாரி முனைப்புக்கட்கு ஆதாரமாக இருந்தன என்ற வாதத்தில் 1970 களில் வளர்ச்சியடைந்த ஜே-வி-பி மார்க்சியத்தை சொல்லிக்கொண்டாலும், அவர்கள் எப்போதும் அடிப்படையில் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியும், 1970 களில் எழுந்த உலகப் பொருளாதார நெருக்கடியும், இளைஞர்களை புரட்சியின் பக்கத்திற்கு தள்ளியது. புரட்சியை விரும்பிய இளைஞர்களை ஜே-வி-பி-யும், அதே நேரம் சிறிமாவோ தலைமையிலிருந்த இடதுசாரிக் கருத்துக்களை உச்சரித்தபடி சுரண்டும் வர்க்கங்களைப் பாதுகாக்க முயன்றனர். மற்றும் பழைய அரசியலிலிருந்து ஒதுங்கிய இடதுசாரிச் சிந்தனைகள் என்ற வாதம் அடிப்படையில் தவறானது. 1970க்கு பின் தமிழ்த் தலைமைகள் தீவிரமாக முன்பை விட ஒன்றிணைந்து பலம் பெற்றனர். 1977களில் தேர்தல் வெற்றி இதை தீர்மானகரமாக பறைசாற்றுகிறது. 1980 களில் பாராளுமன்ற அரசியல் தலைமையை இடதுசாரிகள் ஒதுக்கவில்லை, மாறாக 1977 தேர்தலில் எந்த கோசத்தை முன் வைத்து வென்றார்களோ அதே கோசத்தைக(வலதுசாரிகள்) முன்னெடுத்த ஆயுதம் ஏந்தியோரே அவர்களை ஒதுக்கினர். 1977 களின் பின் தீவிரமடைந்த வன்முறைக்கு மூலகாரணமாக (சுரண்டல் பேர்வழிகள்) 1970 களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோவுடன் இருந்த இடதுசாரிகளே பிரதானமாகவும் இருந்தனர். இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தலை அமுலுக்குக்கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சனையை இனவாத வன்முறைக்கூடாக அடக்கினர்.

 

1970 களில் வலதுசாரிகளின் இயலாமையெனக் குறிப்பிடும் கடடுரையாளர் 1970 இன் பின் வந்த இடதுசாரிகள் மக்களின் பிரச்சனையைத் தீர்த்ததாகப் பறைசாற்றுகின்றார். இடதுகள் கூட இயலாமையால் தான் தேசியப் பிரச்சனையை முன்தள்ளி தமது இயலாமையை வெளிக்காட்டினர். அத்துடன் 1977இல் இடதுசாரிகளின் இயலாமை மீண்டும் வலதுசாரிகளை ஆட்சியில் ஏற்றினர். எனவே கட்டுரையாளர் 1970 க்கும் 1977 க்கும் இடையிலான அரசை(சுரண்டும் வர்க்கத்தை) நியாயப்படுத்துகின்றார்கள்.

 

இன்று புலிகள் அரசாங்ககத்தின் இன ஒடுக்கல் யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் போராட்ட சக்தியாக உள்ளனர். ஆயினும் நிலைமை மாறக்கூடியது. என்ற வாதத்திலோ, தொடர்ச்சியான விவாதத்திலோ முக்கியமான ஒன்றைப்பற்றி ஆராயத் தவறியுள்ளார். வர்க்க நோக்குப் பற்றி சொல்லும் கட்டுரையாளர் தேசியத்தையும், பாசிசத்தையும், வர்க்கத்துடன் ஒப்பிடத் தவறுவது ஏன்?. வர்க்கத் தன்மையுடன் ஒடுக்குமுறை மாறுபாட்டுத் தன்மையை..... பார்க்காமல்; விடுவதன் ஊடாக இக்கட்டுரை தவறானதாகவுள்ளது. இது வர்க்கத்தன்மையுடன் சம்மந்தப்பட்டது. அதைக் கட்டுரையாளர் சொல்லத் தவறி, தனது அரசியல் பார்வையை தெளிவாக வாசகர்களுக்கு இனம் காட்ட தவறுகின்றார்.

 

இவ்வாறான பிறழ்வுகள் ஒரு விடுதலை இயக்கத்தின் முற்போக்கான தன்மையின் மறுதலிப்பாகும். இவற்றினூடு அந்த இயக்கத்தின் போராட்டம் தடம் புரளலாம். ஆயினும் இவை ஒரு இயக்கத்தின் தேசிய தன்மையை மாற்றி விடுவதில்லை. தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று எவ்வாறு மாறுபடும் தேசிய, சர்வதேசிய நிலவரங்கட்கேற்ப ஏகாதிபத்தியத்துடன் தனது நாட்டின் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் தனது உறவை மாற்றிக் கொள்ளுகிறதோ அவ்வாறே பாட்டாளி வர்க்கத் தலைமையற்ற ஒவ்வொரு தேசிய விடுதலை இயக்கமும் ஊசலாட்டத்துக்குள்ளாகின்றது. இதில் தேசிய முதலாளிவர்க்கம் ஒன்று எனச் சொல்லி அதைப் பொதுப்படையாக அரசு, மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு பொதுவாகப் பொருத்த முயன்றுள்ளனர். இவ்விவாதம் புலிகளை தேசிய முதலாளிகள் எனச் சொன்னதாகவும் வாதிடலாம். சொல்லவில்லை எனவும் வாதிடலாம். அது அல்லது இது எனக் தேவைக்கு வசதியாக வாதிடும் வகையில் அமைந்ததே. ஏகாதிபத்தியத்தின் உறவுடன் எப்போது அரசோ, விடுதலை இயக்கங்களோ, ஊசலாட்டத்திற்கும், ஒடுக்கும் வர்க்கத்துடன் உறவை மாற்றுகின்றதோ அன்றே குறித்த சக்தி தேசிய முதலாளித்துவம் என்ற நிலையிலிருந்து தரகு முதலாளிகளாக மாறிவிடுகின்றனர். இச் செயற்பாடு பற்றி ஒரு புரட்சியில் எதிரி பற்றிய விடயத்தை தெளிவாக சுட்டிக்காட்டப்படாவிடின் பாரிய தவறு இழைக்கப்படும். குறித்த இச்சக்திகள் போராட்டத்தில் எதிரி நிலைக்கு மாறிவிடுகின்றனர். இவர்கள் கூட தேசியத்தை முன்னெடுக்கமுடியும். கிட்லர், காந்தி, அமிர்தலிங்கம்...... என நீண்ட வரலாற்றில் அனைவரும் தேசியத்தை உயர்த்திப் பிடித்தனர். ஆனால் அவர்கள் ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றச் சேவை செய்ய முயன்றனர். இவர்கள் எப்போதும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கு எதிரியே. தேசியத்தை முன்னெடுக்கின்றார்கள் என்ற ஒரு வரையறையை மடடும் கொண்டு இவர்களைத் தேசிய சக்தியாகப் பார்க்கக் கூடாது. இவர்களின் வர்க்கமூலம் அதிலிருந்து அவர்களின் நோக்குகளை ஆராய்வதின் மூலம், ஆரம்பம் முதலே அம்பலப்படுத்தியழிக்க வேண்டும்.

 

திராவிடப் பிரிவினை தமிழ் நாட்டின் சுயாட்சி போன்ற கொள்கைகளைக் கைவிட்டதால் தி-மு-க போன்ற சக்திகள் தேசிய சக்திகளாக இல்லாமல் போய் விடவில்லை. என்ற விவாதத்தில் மேற்குறிப்பிட்து போல் சுயாட்சி கோரினார் என்ற காரணம் தேசிய சக்தியாக பார்க்க போதுமானதில்லை. அக் கட்சியின் வர்க்க மூலத்திலிருந்தே தேசிய சக்தியா என ஆராய முடியும். சுயாட்சியைக் கைவிட்ட பின்பும் தி-மு-க இன்று தேசிய சக்தியாகக் காட்ட முனையும் சிவசேகரம் வர்க்க அடிப்படையிலிருந்து விலகிய நிலையில் வெளிவந்த கருத்துக்களே. தி-மு-க- ஆட்சி ஏறிய காலத்தில் கூட அவர்கள் தேசிய நோக்கில் சமுதாயத்தை மாற்றவில்லை. இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் ஆட்சி ஆட்சியதிகாரத்திலுள்ள வர்க்கமான தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவத்திற்குச் சேவை செய்வதில் சிறந்த பிரதிநிதிகளாகவே இருந்தனர். அவர்கள் கூட பெரும் நிலப்பிரபுக்களாகவும், தரகு முதலாளிகளாகவுமே உள்ளனர். அவர்களைத் தேசியவாதிகள் எனச் சொல்ல வரும் சிவசேகரம் எதையோ நியாயப்படுத்த முயல்கின்றார்.

 

இன்று விடுதலைப் புலிகளின் வர்க்கச் சார்பு பற்றிய கேள்வியே நமக்கு முக்கியமானது. அவர்களது நேச சக்தி யார் எதிரிகள் யார் என்பதை வர்க்க நலன்களே தீர்மானிப்பன. புலிகளின் வர்க்கத்தைப் பற்றி குறிப்பிட்டு கேள்வி கேட்டதுடன் விட்டு விடுவதால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று என்ற சிவசேகரம் சொன்ன வரையறை புலிக்குப் பொருந்தாது எனக் கொள்ளளாம். புலிகளின் வர்க்கத்தைச் சுட்டிகாட்டாமல் புலிகளின் தேசியத்தன்மை தொடர்பாக, தேசிய சக்திகளாக இனம் காணப் புறப்பட்ட சிவசேகரம் வர்க்க நோக்கிலிருந்து தேசிய சக்தியெனச் சொல்லாமை புலப்படுகின்றது. இதன் பின் அவர்களின் நேசசக்திகள் எதிரிகள் பற்றி கதைக்க முற்படும் சிவசேகரம் புலிகளின் தத்துவவாதியாக நின்று ஆராய முற்படுகின்றார்.

 

அவர்களை(புலிகளை) ஆதரிப்பதற்கோ, எதிர்ப்பதற்க்கோ அவர்கள் தேசிய சக்தியா, இல்லையா என்ற கேள்வியை மட்டும் நாம் பயன்படுத்த முடியாது. இதில் முடியாதெனின் எதை வைத்துத் தீர்மானிப்பது. இதை சொல்லாமல் நழுவி விடும் சிவசேகரம் முடியாது எனச் சொல்லும் முறை விமர்சகர்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ உரிய பாணியல்ல. புலிகளின் வர்க்கத்தில் இருந்தே தேசிய சக்தியா என முடிவுக்கு வரவேண்டும். இராணுவத்திற்கு எதிராகப் போராடுகின்றார்கள் என்ற ஒரு எடுகோளிலிருந்து முடிவுக்கு வரமுடியாது. ஆனால் வர்க்க மூலத்திலிருந்து ஒரு சக்தியை தேசிய சக்தியென அறிந்து கொண்டால் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கவேண்டும்.

 

விடுதலைப்புலிகள் தேசிய சக்திகளல்ல என்போர் அவர்களைப் பாசிச சக்திகள் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறோம். பாசிசம் என்பது தேசியவாதத்தின் மிகவும் கொடூருமான வடிவமாக இருக்கையில் தேசிய சக்திகள் இல்லாதொரு இயக்கம் பாசிச சக்தியாக எவ்வாறு விருத்தியடைய முடியும்? இவ் விவாதம் தேசிய சக்திகளை நிறுவும் நோக்கில் பாசிசம் தேசிய சக்திகளுக்கு மட்டும் உரிய பண்பென வாதிட முயல்கின்றனர். பாசிசம் என்பது தேசியத்தை முன்னெடுப்பவர்களும், தேசியத்தை முன்னெடுக்காதவர்களும் கூட பயன்படுத்தமுடியும். தேசியத்தை முன்னெடுக்கும் சக்திகளுக்கெதிராக செயற்படும் அரசுகளும் பாசிசத்தையே பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறுது. இதை வியட்நாம், இலங்கை, சீனா.... என்று அனைத்து அரசுகளும் நாட்டில் எழும் தேசிய எழுச்சியைப் பாசிசத்தைக் கொண்டு அடக்குகின்றது. எனவே தேசியத்தின் குணம் குறி பாசிசமல்ல. பாசிசத்தை எந்தச்சக்தியும் கையாளும.; எனவே பாசிசம் என்ற சொல்லை சிவசேகரமே ஆழமான அறிவில் நின்று சொன்னதாக தெரியவில்லை. தேச விடுதலைப் போராட்டம் தீவிரமடையும் நாடுகளில் அவ்வரசுக்கள் பாசிச அடக்குமுறையை மக்கள் மீது ஏவுகின்றனர்.

 

பாசிசவாதி என்பது வகைச் சொல்லாக பயன்படுத்துவதாகச் சொல்லும் சிவசேகரம் அடாவடித்தனமும், எதேச்சதிகாரமும் மட்டுமே பாசிசத்தின் அடையாளங்களாயின் என்று கேட்பதனூடாக இதற்கப்பால் பாசிசத்தை இனங்காண என்ன வரையறையை முன்வைக்க முனைகின்றார். அது பற்றி விட்டுவிடும் சிவசேகரம் தம்முன்னுள்ள சக இயக்கங்களின் மோதலை காட்ட முயல்கின்றார். இயக்கங்களுக்கிடையிலான மோதல் என்பது ஒரு வர்க்க நலன் சார்ந்ததே. பாசிசம் தொடர்பானதல்ல. பாசிசம் என்பது ஒரு இயக்கத்தின், அரசின் பண்பாகவே இருக்கும். பாசிசவாதி என்பது வகைச் சொல்லல்ல. அதுவொரு சக்தியின் செயற்பாட்டை வகைப்படுத்தும் வகையில் அமைந்ததே.

 

ஸ்டாலின் வாதி, ரொஸ்க்கியவாதி, குட்டிபூர்சுவா போன்ற பதங்கள் எவ்வாறு எதிரிகளை மட்டும் தட்டும் நோக்குடன் மடடுமே பயன்படுகின்றனவோ என்ற வாதத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது எனின் சரியாகப் பயன்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றார். அப்படியிருக்க பொதுப்படையாக எதிரியை மட்டம் தட்டப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லி குட்டிப்பூர்சுவா கருத்துக்களை வெளியிடுபவர்களை பாதுகாக்க முனைகின்றார். ஸ்டாலினியவாதி என்ற கருத்துக்களை எடுப்பின் அவர்கள் ஒவ்வொருவரும் தனியான தத்துவத்தை கொண்டிருந்தவரென அழைக்கப்படலாம். ஸ்டாலின் அப்படித் தனியான தத்துவத்தை மார்க்சிசத்திலிருந்து வேறுபட்டுக் கொண்டிருக்கவில்லை என நாம் கருதுகின்றோம். அந்த வகையில் ஸ்டாலின் வாதி என்ற பதம் அர்த்தமற்றது.

 

பாசிசத்தின் பிரதான தன்மை வலதுசாரி, தேசியவாத சர்வாதிகார அரசியலாகும். பாசிச நடைமுறையில் சில கொடும் செயல்களை சில விடுதலை இயக்கங்கள் வரித்துக் கொண்டுள்ளன. அத்தகைய பாசிசப் பண்புகளையும் இப்படியான பண்புகளைக் கொண்டுள்ள இயக்கங்களும் பாசிச வாதிகளே. இவர்களை பாசிசவாதிகளெனச் சொல்ல முடியாதெனச் சொல்லி பாசிசவாதி என்ற சொல் வெறும் வகையாகப் பயன்படுகின்றது என்பது கற்பனையானது. பாசிசப் பண்பை ஏற்றுக்கொள்ளும் சிவசேகரம் அதைப் பாசிசமில்லை எனச் சொல்லி வகைச் சொல்லாக சொல்லுவது தவறானது. பாசிசப் பண்பு தேசியவாதம் இல்லாத பிரிவுகளிடத்தில் ஏற்படினும் அவைகளை பாசிச சக்திகளாக இனம் காணமுடியும்.

சமர், தூண்டில், உயிர்ப்பு, மனிதம் மற்றும் தனிநபர்களின் கடந்தகால விவாதங்களில் புலிகள் தமிழ் மக்களின் தேசவிடுதலைப்போராட்டத்தை தமது நோக்கில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் புலிகளைப் பாசிச சக்தியெனக் கூறுகின்றனர். ஆனால் சிவசேகரத்தின் விவாதம் தேசியசக்தியெனச் சொல்லாதவர்கள் (தேசியத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) பாசிசம் எனச் சொல்வதாக சொல்கிறார். அப்படியான கருத்துக்களை யார் முன்வைத்தார்களெனத் தெரியாமல் உள்ளது. பழைய தேடல் இதழ் அல்லது இது தொடர்பான கருத்துக்கள் கிடைப்பின் இவ் விவாதம் சிறப்பாக அமையும். அப்படி வெளிவந்த கருத்துக்கள் எதில் வந்ததென அறியத்தரின் விவாதத்தை தொடரமுடியும்.