உலகளவில் கொள்ளையடித்தவர்களால் உருவாகியுள்ள உலக நெருக்கடி, தெளிவாக எமக்கு ஒன்றை கற்றுத் தருகின்றது. அரசுகள் என்பது மக்களை ஏய்க்கும் கொள்ளைக் கோஸ்டிகளை வழிநடத்தும் திருட்டுக் கோஸ்டி என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இவர்களின் 'ஜனநாயக" ஆட்சியில் சர்வதேச நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் மீதோ, மக்களின் நிதியைக் கொள்ளையடித்தவர்கள் மீதோ எந்த நீதி விசாரணையும் கிடையாது. பணத்தைத் திருடி வைத்துள்ளவர்களிடமிருந்து அதை மீளப் பறிமுதல் செய்தது கிடையாது.
பணம் எங்கும் காணாமல் போகவில்லை. அவையோ சிலரின் தனிப்பட்ட சொத்தாகியுள்ளது. மக்கள் அன்றாடம் உழைத்து கிடைத்த கூலியை வங்கியில் போட, கூலி கொடுத்தவனே மீள திருடிய கதை தான் இந்த உலக நெருக்கடி. இந்த சர்வதேச குற்றத்தை இழைத்த கொடுங்கோலர்களை பாதுகாப்பது தான், இன்றைய நெருக்கடிகள் மீதான தீர்வுகள். இதை பாதுகாக்கும் வகையில், கொள்ளைக் கோஸ்டிகளின் கையில் சட்டங்கள்.
இந்த கொள்ளைக் கோஸ்டி இந்த நெருக்கடிக்கு வைத்திருக்கின்ற தீர்வுகள் என்ன? மக்களின் உழைப்பின் மேலான புதிய வரிகளைக் கொண்டு, காணாமல் போன மக்களின் பணத்தை மீள அவர்களுக்கு கொடுப்பது. அதாவது அதை மக்களிடமே அறவிட்டு, அதை மீளக் கொடுப்பது. இதைத்தான் இந்தக் கொள்ளைக்கார அரசுகள் செய்கின்றது.
இப்படி மக்களின் பணத்தை திருட உதவும் கொள்ளை கோஸ்டிகளே, அரசாக இருக்கின்றது. கொள்ளை அடிக்க உதவுவது, பின் அதை பாதுகாப்பது தான், அரசின் கடமையாக உள்ளது. இதற்கு அவர்கள் கைக்கொள்வது தான் 'ஜனநாயகம்", 'சுதந்திரம்" பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும்.
மக்களை இப்படி சுதந்திரமாக சூறையாடுவது தான் 'ஜனநாயகம்". இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. விசராணை செய்ய முடியாது. நீதிக்கு உட்படுத்த முடியாது. மக்களின் சொத்தை மீளப் பறிமுதல் செய்ய முடியாது. இப்படிச் செய்வது, செய்யக் கோரி பிரச்சாரம் செய்வதைத்தான், இவர்கள் கம்யூனிச சர்வாதிகாரம் என்கின்றனர்.
திருடனின் சுதந்திரம் தான் 'ஜனநாயகம்". திருட்டை ஒழிப்பது சர்வாதிகாரம். சட்டங்கள், நீதி விசாரணைகள், அதை கடிவாளம் கொண்டு ஆளும் ஆட்சிகள் என, அனைத்தும் மக்களை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பது தான். இவையோ இதை நியாயப்படுத்தும் கொள்ளை கோஸ்டிகளின் சமூக நிறுவனங்களாகும்.
கொள்ளைக் கோஸ்டிகளின் ஜனநாயகம் தான் மனிதவுரிமை
அடடே இதற்காக எத்தனை வாதங்கள், எத்தனை தர்க்கங்கள், எத்தனை நியாயங்கள். இவற்றை அள்ளி வீசிய முதலாளித்துவ அற்பர்கள் கூட்டம் தான், தம் 'சுதந்திர உலகம்" பற்றி பீற்றிக்கொண்டனர். கொள்ளையடித்தவனின் சொத்துரிமையைப் பாதுகாப்பது தான் இவர்கள் முன்வைக்கும் 'மனிதவுரிமை"யாகும். அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கொலின் பாவெல் கூறுவது போல் 'தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம்; இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது." என்றார். இதைத்தான் அரசுகள் சமரசமின்றி மக்களை ஒடுக்கி பாதுகாக்கின்றன. இப்படி இவர்கள் சதா பீற்றிக் கொள்ளும் அனைத்து மனிதவுரிமைகளும், தாம் கொள்ளை அடிப்பதற்கும், அதை பாதுகாப்பதற்கும் உள்ள உரிமைக்கு உட்பட்டதே.
இதை சட்டம் போட்டு தடுக்க முடியாது. மாறாக தமது கொள்ளைக்கு வசதியாக தம் சட்டத்தையே அவர்கள் திருத்துகின்றனர். கொள்ளையடிக்கும் சட்டங்களையே உலகமயமாக்கின்றனர்.
இதற்கு தடையாக அரசு இருப்பதை இவர்கள் அனுமதிப்பதில்லை. அரசை இவர்கள் அலுவலக அதிகார வர்க்கமாக (பீரோ கிராட்டாக) கூறிய 'சுதந்திரம்" பற்றி சதா ஓப்பாரி வைத்தனர். கொள்ளையடிக்கும் 'சுதத்திரத்தை" மட்டுப்படுத்துவதாக கூறி, அதை 'கம்யூனிசம்" என்றனர். இப்படி கூறி அரசை கூட்டாக கொள்ளையடிக்கும் ஒரு கூட்டுக் கொள்ளை நிறுவனமாக மாற்றினர்.
இதை அழகாகவே கார்ல் மார்க்ஸ் 150 வருடத்துக்கு முன்னர் பிரான்சின் வர்க்கப் போராட்டம் என்ற தனது நூலில், இந்த இழிவான வர்க்கத்தைபப் பற்றி மிக அழகாவே கூறியுள்ளார். 'நிதி ஆதிக்க மேற்குடியினர் சட்டங்களை இயற்றியதால், அரசு நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கிறது. அரசாங்க அதிகாரங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. பத்திரிகை மூலமும் மற்றும் உண்மையான அரச விவகாரங்கள் மூலமும் பொதுக் கருத்தை மாற்றுவதற்கு அதிகாரம் படைத்திருக்கின்றது. அதே விபச்சாரம், அதே வெட்கங் கெட்ட மோசடி, அதே பணக்காரன் ஆக வேண்டும் என்ற அரிப்பு, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அரங்கத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது... உற்பத்தி மூலம் செல்வந்தன் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை, மாறாக ஏற்கனவே உற்பத்தி செய்து பிறர் வைத்திருக்கும் சொத்தைக் களவாடி தன் பையில் போட்டுக் கொள்வதன் அடிப்படையில், செல்வந்தனாக எண்ணுகின்றனர். அடிப்படையில் எப்போதுமே முதலாளித்துவ சட்டங்களோடு மோதிக் கொண்டும், ஆரோக்கியமற்ற மிருக வெறி உணர்வோடு முதலாளித்துவ சமுதாயத்தின் மேல்தட்டு மக்கள் செயல்படுவர்... நிதி ஆதிக்க சக்திகள் பணம் திரட்டுவதிலும் வாழ்வை அனுபவிப்பதிலும் முதலாளித்துவ சமுதாயத்தின் உச்சத்தில் மீண்டும் லும்பன் சமுதாயம் தோன்றுவதைக் குறிக்கின்றது" என்றார். இன்றைய நிதி நெருக்கடியின் பின்னால் இந்த உண்மையை, நாம் மிக அழகாவே காணமுடிகின்றது. இன்று இதுவே உலகமயமாகி முதிர்ந்துவரும் வடிவத்தையும், அதன் லும்பன்தனமான அராஜகத்தையும் காண்கின்றோம்.
பொதுச்சொத்தை கொள்ளையடிப்பதில் தான், இவர்களின் நாகரீகம் பகட்டுத்தனம் பெற்றது. இதற்காகவே பொதுச்சொத்தை தனியார் மயமாக்குகின்றனர். அரசதுறைகளை நட்டத்தில் இயங்குவதாக கூறி, அதை எந்த பெறுமதியுமற்ற ஒரு விலையை தாமே தீர்மானித்து அவற்றைக் கொள்ளையடித்தனர். இதற்குரிய பணத்தைக் கொடுக்கவும், மக்கள் வங்கிகளில் போட்டு இருந்த பணத்தைத் தான் அபகரித்தனர். அதை பின் திவாலாகியதாக காட்டி, வங்கிக்கு மக்களின் வரிமூலம் கொடுக்கக் கோருகின்றனர்.
அரசதுறையை நட்டமானதாக காட்டும் இந்தக் திருட்டுக் கும்பல், அதற்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து எதுவும் கொடுக்கக் கூடாது என்;றனர். மாறாக தம்மிடம் அதைத் தந்துவிட வேண்டும் என்று கூறி 'சுதந்திர மனிதர்கள்" அவற்றைக் கைப்பற்றினர். இந்த அரசு துறைகளை நட்டமானதாக காட்ட ’சுதந்திர மனிதர்களும்" அதற்கு அரசுடன் சேர்ந்து திட்டம் தீட்டியே நட்டமாக்குகின்றனர்.
இப்படி கொள்ளைக் கோஸ்டிகள் நாட்டை ஆளுகின்றன. அவர்களோ உலக மக்களை எப்படி எந்தவைகையில் சூறையாடுவது என்பதுதான், அவர்களின் 'சுதந்திரமான" குறிக்கோள்.
இந்த நிதி நெருக்கடி மூலம் பெரும் தொகையாக உலகளவில் கொள்ளையடித்தவர்கள், நிம்மதியாக அதை பாதுகாத்துக் கொள்ள இன்று அவசர நிவாரணங்கள். ஆனால் கோடி கோடியாக மக்கள் திவலாகி வருகின்றனர். ஒரு நேர கஞ்சியைக் கூட குடிக்க முடியாத வகையில், தம் வேலைகளையே இழக்கின்றனர். கம்யூனிசம் தான் இதற்கு ஒரு தீர்வை வைக்கின்றது என்பதை, அவர்களாகவே சொந்த அனுபவத்தில் கற்றுக்கொள்ளும் புரட்சிகரமான காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். புரட்சி செய்ய நாம் கற்றுக்கொள்வதும், கற்றுக்கொடுப்பதும் தான், மனித வாழ்வாக எம் முன் மாறி நிற்கின்றது. இதை விட உழைத்து வாழும் மனித குலத்துக்கு வேறு மாற்று வழியில்லை.
பி.இரயாகரன்
26.11.2008