நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு
சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி

 

மரத்தில் உதிரக் காத்திருக்கும் ஆப்பிள்
மௌனித்திருக்கும் என் வதைகளிலொன்று
பறித்தெடுத்த ஆப்பிளில் இறங்கும்
தேவதைக் கனவு கூசும் பற்களில்
குதறும் விற்றமீன்களுக்கு பொழுதொரு வதையாய்

 

அனைத்து நித்தியங்களும் அமிழ்ந்தழிய
அறத்தின் ஓரத்தில் காமக் கலப்பை தாக்கக்
கண்ணீர் வதையுள் கடுப்படக்கும்
காலத்துள் உதிரும் எதிர்ப் பால் வினையும்

 

ஒரு வழிப் பாதை இருவருக்கும்
காலத்துள் அறபடக் காத்திருக்கும் ஜீவன்
கைப் பிடி மண்ணுள் இவ்வளவு கண்ணீர் பொழிவா?
இதயம் அதிரும் உயிரது கூத்துள்

 

குறுகும் பொழுதுகளில் உடைபடும் நாணம்
குவியும் கருப்புக்கு ஒதுங்கும் உறவு
மெய்தர மறுக்கும் கருமை மனது
ஈரஅலை இதயத்திலிருக்க உறங்கும் தாம்பாத்யம்

 

தொப்புள் கொடியுறவொன்றிணைக்கும் குடும்பம்
குட்டையைக் குழப்பும் கோதாரி மனது
கும்மாளமிடும் காழ்ப்புணர்வு
வதைக்கும் நினைவுகள்
வடுவாய் விரியும் நாவினாற் சுட்ட புண்

 

எனினும்,
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஒரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
மௌனிக்க முனையும் பாலுறுப்பு

 

ஓலமிடும் ஒலியின் அதிர்வில்
சுவரில் உரசும் இதழ்கள்
இதயத்தின் அடியில் உலர்ந்த சாம்பல்
நாவிற்கடியுள் நலியும் காதல்

 

வீசியடிக்கும் குளிர்ந்த காற்றுள்
இதழாள் சுவையும்
நெருங்கி வரும் இரவில்
உடலின் மிடுக்கும் உருவந்தர மறுக்கும்
வலியை மென்று மனது ஒடுங்கும்

 

துயரத்தின் கொடுவாள்
அறுத்தெறியும் காலத்தின் மரிப்பில்
தொலைவதென்னவோ நீயும் நானுமே
தவித்தென்ன தண்ணியடித்தென்ன
தாழ்வது நமது நலமே!


நேரத்தோடு அறியப்படாத
எனது நிறமாற்றம்
தொலைவதில் வியப்பு என்ன?