மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இதைப் பெரும்பாலும் அன்பன் சேனனின் கட்டுரையுள் விலாவாரியாகக் காணக்கிடைக்கிறது.இதை மையப்படுத்தியே சேனன் கட்டுரையை எழுதியிருக்கிறார்.இந்த வன்மத்தை அவர் சுட்டிச் செல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது.வரவேற்கப்பட்டு,இந்த வன்மம் களையப்பட வேண்டும்.


இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோருக்கும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய நிலையில், இத்தகைய "மாற்றுக் கருத்துக்களை"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச் சென்றுவிடுகிறதென்ற உண்மையில் அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.சேனன் இதைக் குறித்துரைக்கிறார்.இது வரவேற்கப்படவேண்டியது!!


ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களை நண்பர்கள் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது,அல்லது விற்கப்படுகிறது(இதன் முன்னோடிகளில் ஒருவராகத் திருவாளர் அசோக் என்ற யோகன் கண்ணமுத்து இனம் காட்டப்படுகிறார்).இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத் தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-இயக்கங்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்ககுநிலையிலிருந்து இந்த"மாற்றுக் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல.இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.


மக்களின் விடுதலையிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த"தார்ப்பார்களை"உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்கே,சேனின் கருத்துக்கள்-தரவுகளிலிருந்து இத்தகைய போக்குகளின் திசைவழியை நாம் இலகுவாக இனங்காண முடியும்!சேனன் இதை மிகத் தெளிவாக முன்வைக்கிறார்.

 

தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர்நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல் சேட்டைகள்"கூட்டங்களா-நிகழ்வுகளாக-நினைவுக் கொண்டாட்டாகங்களாக-விழா எடுப்புகளாக"புலம் பெயர் வாழ்சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணகருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, அறிக்கைப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது!இதற்குத் தேசம்நெற்றே முதன்மையான எடுத்துக்காட்டாக இருப்பதென்பதைவிட,அத்தகைய எடுத்துக்காட்டு நம் எல்லோரிடமும் மிக மங்கிய நிலையில்பின் தொடர்வதைச் சுய விமர்சனத்தூடாக இனம் காணவேண்டும்.


இதுவரை கூட்டாக இயங்க முடியாதளவுக்கு-ஒரு கூட்டை உருவாக்குவதற்கு எதிரான கலைப்பு வாதம் தந்த இந்தப் பரிசு, ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.எவரிடமும் புரட்சிகரமான பணியைச் சார்ந்தியங்கும் மனத்தை-நடுத்தரவர்க்க எண்ணங்களை இல்லாதாக்கிய புரட்சிகர மனது உருவாகிவிடவில்லை!இங்கே,தெரிதாவோ அல்லது பூப்காவோ இவர்களுக்கு இதை வகுப்பெடுத்திருக்காலாம்.ஆனால், புரட்சிகரமான பணி இதற்கு மாறாக இயங்கக் கோருகிறது!ஒவ்வொரும் தம்மைத் தாமே முன்னிலைப்படுத்தியபடி மக்களின் நலன்களைத் தமது தனிப்பட்ட விரோதங்களைப் பொதுமைப்படுத்துவதன் தெரிவில் தம்மை இயங்க அனுமதிக்கிறார்கள்.இது, புரட்சிகரமானவொரு அணித் திரட்சிக்கு எப்பவும் குறுக்கே நின்றுகொள்கிறது.இதுதாம் இன்றைய அதிகார நிறுவனங்களுக்கு மிக அவசியம்.இதை நம்ம தோழர்கள் செவ்வனவே செய்வதில் போட்டியிடுகிறார்கள்-அவ்வளவுதாம்.


புரட்சிகரமான நிலைப்பட்டை முன்வைத்து, அதன் வாயிலாக நமது இந்தக் கோலங்களையெல்லாம் சிறிதுசிறிதாக அகற்றி நம்மை சமுதாயத்தில் கால்பதிக்கவைக்கும் வர்க்கவுணர்வைத் தொடர்ந்து இயங்கவைப்பது ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமே.அதைப் பூண்டோடு கைகழுவிய இந்த நண்பர்கள் இப்போது தனிநபர்களாகக் குறுகிச் சிதைவுறுவதைக்கூட மக்கள்சார்ந்த மதிப்பீடுகளால் நியாயப்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் கவலையுறவேண்டியிருக்கிறது.


அன்றாடச் சிக்கல்களாக இவர்களுக்குள் உருவாகிய இத்தகைய மனவிருப்புகள்-தெரிவுகள் எப்போதும்போலவே மக்களைக் குதறும் இயக்க-குழுவாதத்தை மறைமுகமாக ஏற்று இயங்குகிறது.இதை இனம்கண்டு தகர்க்காதவரை இவர்களால் எந்த முன்னெடுப்பும் அதிகாரமையங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட முடியாது.மாறாக, அத்தகைய மையங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதில் தமக்குள் உள்ளவரை வேட்டையாடிக் குலைத்து அதிகாரத்துக்கு உடந்தையான-துணைபோனவர்களாகவே இருப்பார்கள்.


சேனனின் இக்கட்டுரை ஓரளவு முக்கியமான பிரச்சனைகளை அலசுகிறது.


எனினும்,மையமான கருத்துக்களை-தெரிவுகளை வெறும் தனிநபர்வாதச் செயலூக்கமாகப் பார்க்கிறது.இன்றைய மாற்றுக் கருத்தாளர்களின் பின்னே உலாவரும் நீண்ட வலுக்கரங்களைக் குறித்து எதுவுமே பேசமுடியாத இத்தகைய பார்வைகள் "சில விகாரமான அரசியல் நிகழ்வுகளை"தனிநபர்களின் தன்னியல்பால் செயற்பாடாகவும் குறுக்கிவிட முனைகிறது.இதுதாம் சேனின் கட்டுரையிலுள்ள பலவீனம்.


இங்கே,நெடுங்குருதி நிகழ்வினூடாகக் கட்டியமைக்கப்படும் இந்த விவாதம் அத்தகைய புள்ளியைத் தொட்டாக வேண்டும்.எவரெவர் மக்களின் நலனை தத்தமது சுய இலாபங்களுக்காக மக்களின் எதிரிகளோடு ஏலம் போடுகிறார்கள் என்றும்,எத்தகைய முகமூடிகளோடு தமிழ்ச் சமுதாயத்திலுள்ள ஒடுக்கப்பட்டவர்களைச் சிதைத்து இலங்கை ஒருமைப்பாட்டை உருவாக்க முனைகிறார்கள் என்றும் இனம்காணும் நிலைமையில் ஒடுக்கப்படும் குரல்கள் இருக்கின்றன.


சேனின் கட்டுரை இத்தகைய பார்வையை முன்வைக்கத் தவறுவிடுகிறது.


இன்றைய மாற்றுக்குழுக்களுக்குள் உட்புகுந்த இலங்கை-இந்திய அரசியல் வியூகங்கள் ஒருவரையொருவர் வேட்டையாடுவதற்கானவொரு சூழலை மெல்ல உருவாக்கிவிட்டுள்ளதோ என்றும் அஞ்சவேண்டியுள்ளது!


கட்டுரையாகத் தகவல்களைச் சொல்லும் சேனனையும் படியுங்கள் நண்பர்களே!


சேனன் சொல்வதிலிருந்து இன்னொரு முகத்தை அவரது எழுத்துக்குள் நாம் மிக நேர்த்தியாக இனங்காணலாம்.அந்த முகம் ஓரளவாவது இனிவரும் "மாற்றுக் கருத்தாளர்களின்" எதிர்வினையுள் இன்னொரு சிதைவாக வெளிப்படும்.


அதுவரை...


நட்புடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்

23.11.2008