மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக் கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.
இலங்கை முதல் புலம்பெயர் நாடுகள் வரை, மொத்தத்தில் மக்களின் அவலத்தை மூடிமறைத்து, பாசிசங்களுக்கு சேவை செய்தையே தமத சமூக அறமாக பறைசாற்றி நிற்கின்ற பிழைப்புத்தனமே இவர்களின் ஊடகவியலாகின்றது. இந்த ஊடக கிரிமினல்களிடம் அறிவு, பண்பு, மனித நேயம், மனித நேர்மை என எதுவும் இவர்களிடம் கிடையாது. பாசிசத்தைக் கொப்பளித்த மக்களின் முகத்தில் காறித் துப்புகின்ற இழிவு கெட்ட பண்பு தான், இவர்களின் மொத்த சமூக அறிவாகும்.
செய்தி ஊடகங்கள் உண்மைக்கு பதில் புனைவையும், கற்பனைகளையும், திரிபுகளையும், மிதமிஞ்சிய பரபரப்பையும், அதையொட்டிய விளம்பரங்களையும், பக்கச்சார்பாக திணிப்பதையே பாசிசங்கள் வழி காட்டுகின்றன. இந்தப் பொது வேலைத்திட்டத்துக்கு அமையத்தான், இலங்கையின் மொத்த ஊடகவியலும் தரம் கெட்டு இயங்குகின்றது.
இப்படி இந்த கிரிமினல்கள் வழங்கும் செய்திகள், பொதுவாக இரண்டும் எல்லைக்கு உட்பட்டுள்ளது.
1. பேரினவாதம் கட்டமைத்துள்ள பாசிசம். அதை சார்ந்து இயங்கும் புலியல்லாத புலியெதிர்ப்பு துரோகிகளும்.
2. மக்கள் விரோதப் புலிகள் கட்டமைத்துள்ள பாசிசம். இதை சார்ந்து இயங்கும் புலிப் பினாமிகள்.
தமிழ்-சிங்கள மொத்த ஊடகவியலும், இந்த இரண்டும் பாசிசத்தின் வேலைத்திட்டத்துக்குள் இயங்குகின்றன. தத்தம் பாசிச நடவடிக்கைளை நியாயப்படுத்தி, தமது தரப்பு மக்களுக்கு இழைக்கும் கொடூரங்களை மூடி மறைத்தபடி தான், அவை செய்திகளை வெளியிடுகின்றன. ஆய்வுக் கட்டுரைகளை எழுதுகின்றனர். இப்படி பக்காக் கிரிமினல்களின் கூடாரமாக, மொத்த செய்தி ஊடகங்களும் மக்களுக்கு எதிராகவே திட்டமிட்டு இயங்குகின்றது.
சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம், இந்த கிரிமினல்களைப் பொறுத்த வரையில் பாசிசத்துக்கு கொம்பு சீவி விடுவதுதான். மக்களை மேலும் குத்தி குதறுவதையே இவர்கள், தத்தம் பாசிச மொழியில் விடுதலை என்கின்றனர். இதை மூடிமறைக்க இந்த கிரிமினல்கள், புலிப் பயங்கரவாதம் என்றும், தமிழ் தேசியம் என்றும் மூகமுடியைப் போட்டுக் கொள்கின்றனர்.
தமிழ் - சிங்கள அப்பாவி மக்களின் துயரங்களை, அவர்கள் யுத்த பின்னணியில் அனுபவிக்கின்ற கொடூரங்களையிட்டு யாரும் கவலைப்படுவது கிடையாது. நாள்தோறும் அர்த்தமற்ற மரணங்கள், அவை எண்ணில் அடங்காது. குழந்தையை இழந்த தாய், கணவனை இழந்த பெண், தந்தையை இழந்த குழந்தைகள் என்று கதறும் மனிதத்தை, ஊடக பாசிட்டுகள் மனித 'விடுதலைக்கானது" என்கின்றனர். இந்த எல்லைக்குள், மனிதத்தின் மேல் காறி உமிழுகின்றனர். இப்படி மக்களை இந்த ஊடக கிரிமினல்கள், தம் ஊடக மொழியில் கொன்றே விடுதலையளிக்கின்றனர். எந்த அர்த்தமுமின்றி மனிதம் பந்தாடப்படுவதை கண்டிக்கவும், அதை அம்பலப்படுத்தவும் தயாரற்ற ஊடக 'சுதந்திரம்". பாசிச அதிகாரத்தை நிலைநிறுத்தும் யுத்தத்தைத் ஆதரித்து, கோசம் போடும் ஊடக 'ஜனநாயகமே" இன்று கொடிகட்டிப் பறக்கின்றது.
தமிழ் மக்களுக்கு தீர்வு எதையும் தர மறுக்கும் பேரினவாதப் பாசிசம், மக்களின் உரிமைகளைத் தர மறுக்கும் புலிப்பாசிசம், தத்தம் பாசிச அதிகாரத்துக்காக யுத்த வெறி பிடித்து அலைகின்றனர். யுத்த கோசத்துக்கும் வகை தொகையின்றி அப்பாவிகளை கொன்று குவிக்கின்றனர். இந்த கொலைவெறியாட்டத்துக்கு ஆட்களை பிடிக்க, கிரிமினல் ஊடகவியலாளர்கள் மூலம்; உருவேற்றும் பிரச்சாரத்தை செய்கின்றனர்.
படுகொலைகளால் எம் தேசம் நனைகின்றது. இந்த யுத்தத்தின் விளைவு தான் என்ன? யார் என்னத்தை இந்த மக்களுக்கு தரப் போகின்றார்கள். இதையா ஊடகங்கள் சொல்லுகின்றன!? இல்லை.
நாங்கள் எத்தனை பேரைக் கொன்றோம், எத்தனை உடலைக் கைப்பற்றினோம், எதைப் பிடித்தோம், இனம் தெரியாத எமது கொலை அவர்களின் கொலை என வகைப்படுத்தல், எமக்கு ஆதரவான பிழைப்புவாதிகளின் பிரச்சாரம் என்று இதற்குள் மகிழ்ச்சிப்படுத்த அள்ளிக் கொடுக்கும் செய்திகள். தம் தரப்பு பாசிட்டுகளை துக்கப்படுத்தம் செய்திகளை முற்றாக மூடிமறைத்தல். யாரும் மக்கள் படும் துன்பத்தைப் பற்றி, எந்த பக்கச் சார்புமின்றி வாய் திறப்பதில்லை. பாசிசத்தால் வக்கிரம் பிடித்த சமூக உணர்வை, பாசிசத்துக்கு ஏற்ப கட்டமைக்கும் ஊடகக் கிரிமினல்கள் எங்கும் புழுத்துக் கிடக்கின்றனர். இந்த கிரிமினல்களை இனம் கண்டு களையாமல், சமூகத்தின் அவலத்துக்கு என்றும் முடிவு கிடையாது.
பி.இரயாகரன்
23.11.2008