சமர் இதழ் ஒன்றில் வெளிவந்த 3வது நிலைக்கான கோரிக்கை மிகவும் தேவையானதே. தற்போதைய போராட்ட சூழ்நிலையில், ஜனநாயக மறுப்புகளுக்கு மத்தியில், அமைப்பு ரீதியான இயக்கங்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் எம் மண்ணில் 3வது நிலை சாத்தியமற்றதே. எனவே புலம்பெயர்ந்தோர் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து, பொது அரசியல் வழிமுறை ஒன்றினை சரியான விவாதங்களுக்கூடாக கண்டுபிடித்தல் இன்றைய காலகட்டத்தின் முன் உள்ள முக்கியமான தேவையாகும். அத்துடன் இம் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஓரு அமைப்பு ரீதியில் ஸ்தாபன மயப்படுத்தலுக்குரிய வேலைத்திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தலும் அவசியமாகிறது.

சரியான விவாதங்களுக்கூடாக நேச அணிகள், முற்போக்கு சக்திகள் எவை எவையென இனங் காணப்படும் அதே வேளை பிற்போக்கு சக்திகளை அம்பலப்படுத்துவதும் மிக முக்கியமானதாகிறது. இதன் பொழுது புலிகள் மீதான பார்வை தவிர்க்க இயலாததாகும்.

ஒரு சிலர் தனிய ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு (நின்று போராடுதல், தற்காப்பு யுத்தம் புரிதல் போன்ற சில நிகழ்வுகள்) புலியினர் ஒரு நேசவணி என்றும், அவர்கள் தேசியப்போட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் எனவும், அவர்கள் ஒரு தேசியசக்திகள் என்றும் முடிவுக்கு வருகிறார்கள், ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவானது ஒரு ஆரோக்கியமான முடிவாக இருக்காது. முற்றுமுழுதான ஒரு பரந்துபட்ட விவாதத்தின் பின்னரே(சமூகப்பின்னணி, போராட்டத்தின் அரசியல் அடிப்படை, போராட்ட விளைவுகளும், அதனது தொலைநோக்கு பக்க விளைவுகளும் போன்ற அடிப்படையில் ஒரு பரந்துபட்ட முழுவிவாதத்தின் பின்னரே ஒரு ஆரோக்கியமான முடிவு கிட்டும் என்பது எனது அபிப்பிராயயமாகும்.

எனவே சமர் இது போன்ற ஒரு முழுமையான விவாதங்களுக்கு ஒரு மேடையாக அமையும் என்றும், புலம்பெயந்தோர் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளை அணிதிரட்டி ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைக்க தன்னை முழுமையாக ஈ;டுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கிறேன்.