Language Selection

சமர் - 5-6 : 1992
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்ற இதழ் தொடர்ச்சி......

 

அடைந்த வெற்றிகள் ரசிய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ரசிய மக்கள் ஸ்டாலின் தலைமையின் கீழ் சாதித்த மாபெரும் சாதனைகளாகும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஏவுகணை உற்பத்திக்கான அஸ்திவாரங்கள் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டவை. இந்த முக்கிய வரலாற்று உண்மைகளை எப்படி அழிக்க முடியும்? எல்லாப் பெருமைகளும் குருச்சேவுக்கே எப்படி சேரும்?

லெலினியம் காலாவதியாகிவிட்டது என்று கூறும் குருசேவ்வை மார்க்சிய-லெனிய அடிப்படைக் கோட்பாடுகளைத் திரித்துப் புரட்டிய குருசேவ்வை அவர்கள் மார்க்சிய-லெனியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைபடுத்திய புத்திக்கூர்மையுள்ள முன்மாதிரி என்று புகழ்கிறார்கள்.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது என்ற போர்வையில் செய்வது யாவும், லெனின் மிகச் சரியாகச் சொன்னதைப் போல சாதாரண விசயங்களைப் பற்றி மிகச் சாதாரண கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த பழைய தலைவர்களுக்குப் பதிலாக, இயற்க்கைக்கு அப்பாற்பட்டு முட்டாள்தனமாகவும் குழப்பமாகவும் பேசுகின்ற புதிய தலைவர்களை முன்வைக்கின்ற செயலேயாகும்.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பகிரங்கக் கடிதம் மார்க்சிய லெனியத்தை பின்பற்றும் எங்கள் நிலைப்பாட்டின் மீது அவதூறு செய்கிறது. தனிநபர் வழிபாட்டுக் காலத்தில் திகழ்ந்து வந்த சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகள் தலைமைக்கான வடிவங்கள் மற்றும் முறைகள் ஆகிய, நடைமுறையில் இருந்தவற்றை பிற கட்சிகளின் மீது திணிக்க முயல்வதாக எங்கள் மீது அவதூறு கூறுகிறது. இந்தக் கூற்று தனிநபர் வழிபாட்டை எதிர்த்து போராடுவதன் முட்டாள் தனத்தை மீண்டும் அம்பலப்படுத்துகிறது.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சி ரசியாவில் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டிய பிறகு அங்கு ஒரு தனிநபர் வழிபாட்டுக்காலம் தொடங்கியது. அந்தக் காலத்தின் சமூக அமைப்பு முறையும் சித்தாந்தம் மற்றும் நெறிமுறைகளும் சோசலிசத்துக்கானவை அல்ல என்று தோன்றும். அந்த காலத்தில் ரசிய உழைக்கும் மக்கள் ஒரு கனத்த சுமையினால் அழுந்தப்பட்டு கிடந்தார்கள். அங்கே மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சியமின்மையும், சந்தேகமும், அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது. இவை ரசிய சமுதாய வளர்ச்சியை தடைசெய்தன.

1963 ஜுலை 19-ல் ரசிய ஹங்கேரி நட்புறவு பேரணியில் குருச்சேவ் ஆற்றிய உரையில் ஸ்டாலின் ஒரு கோடரியை கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார் என்று கூறி ஸ்டாலினுடைய பயங்கர ஆட்சி பற்றிப் பேசினார். அந்த காலத்தில் சமூக நிலைமைகளை கீழ் கண்டவாறு வர்ணித்தார். அந்தகாலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் வர்ணிப்புப்படி தனிநபர் வழிபாட்டுக்காலத்தில் சமுதாயம் நிலப்பிரபுத்துவம் அல்லது முதலாளித்துவக் காலத்திலிருந்ததை விட மிகவும் வெறுக்கத்தக்கதாகவும் காட்டுமிராண்டிதனமாகவும் இருந்தது.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் கூற்றுப்படி அக்டோபர் புரட்சியின் விளைவாக நிறுவப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், சோசலிச அமைப்பு முறையும் உழைக்கும் மக்களின் மீதான ஒடுக்கு முறையை நீக்குவதற்கோ அல்லது ரசிய சமுதாயத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கோ பல பத்தாண்டுகளாகத் தவறிவிட்டன. ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது பேராயம் தனிநபர் வழிபாட்டை எதிர்த்த போராட்டத்தை நிறைவேற்றிய பின்புதான் உழைக்கும் மக்களின் மீது இருந்த கனத்த சுமை அகற்றப்பட்டது. ரசிய சமுதாயத்தின் வளர்ச்சி திடீரென்று துரிதப்படுத்தப்பட்டது.

குருச்சேவ் சொன்னார் ஆ! ஸ்டாலின் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பே செத்திருந்தால்! எல்லோருக்கும் தெரிந்தது போல் ஸ்டாலின் 1953-ல் இறந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு என்பது 1943 ஆக இருந்திருக்கும். அந்த ஆண்டுதான் ரசிய நாடு மாபெரும் தேசபக்த யுத்தத்தில் எதிராக தாக்குதல் தொடங்கியிருந்தது. அந்தக் காலத்தில் ஸ்டாலின் இறந்து போக வேண்டுமென்று விரும்புவது யார்? ஹிட்லர்!

சர்வதேச கம்யூனிச இயக்க வரலாற்றில் மார்க்கிய-லெனியத்தின் எதிரிகள் பாட்டாளி வர்க்க தலைவர்களைக் கொடியவர்களாகக் காட்டுவதும் தனிநபர் வழிபாட்டை எதிர்ப்பது போன்ற முழக்கங்களைப் பயன்படுத்தி பாட்டாளிவர்க்க இலட்சியத்ற்க்கு குழிபறிப்பதும் புதிய விசயமல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் கண்டு கொண்ட ஒரு அசிங்கமான தந்திரமே இது.

முதலாவது அகிலத்தின் காலகட்டத்தில் சதிகாரன் பக்கூனின் மார்க்சை வசைபாட இத்தகைய மொழியைத்தான் பயன் படுத்தினான். முதலில் மார்க்சின் நம்பிக்கையைப் பெறுவதற்கு புழுவைப் போல நெளிந்து நான் உங்கள் சீடன் அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று எழுதினான். பிறகு முதலாவது அகிலத்தில் தலைமையைக் கைப்பற்றுவதற்கான தனது சதியில் தோல்வியுற்ற அவன் மார்க்சை வசை பாடினான். ஒரு ஜெர்மனியனும் யூதனுமான அவன் அடியிருந்து முடிவரை ஒரு ஏதேச்சதிகாரி மற்றும் ஒரு சர்வாதிகாரி என்று சொன்னான்.

இரண்டாவது அகிலத்தின் காலகட்டத்தில் லெனினை வசைபாட ஓடுகாலி காவுஸ்கி இதே மாதிரி மொழியைத்தான் பயன்படுத்தினான். ஒரு அரசாங்க மதத்தின் தரத்துக்கு மட்டுமல்ல, மாறக ஒரு மத்தியக் கால அல்லது கிழக்கத்திய(மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தைக் குறுக்கி விட்டது ஏக கடவுள் கொள்கையினரின் கடவுள் என்று லெனினை பழித்துக் கூறினான்.

மூன்றாவது அகிலத்தின் காலக்கட்டத்தில் ஸ்டாலினை வசைபாட ஓடுகாலி டிராட்ஸ்கி இதே மாதிரி மொழியைதான் பயன்படுத்தினான். ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்றும் ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களைச் சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது என்று கூறினான்.

நவீன திரிபுவாத டிட்டோ கும்பலும் ஸ்டாலினை வசைபாட இதே மொழியை பயன்படுத்துகிறது. ஸ்டாலின் முற்றுமுழுக்க தனிநபர் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பு முறையில் சர்வாதிகாரியாக இருந்தார் என்று கூறுகிறது.

இவ்வாறு ரசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையினால் எழுப்பப்பட்டடுள்ள தனிநபர் வழிபாட்டை எதிர்க்கும் போக்கும் பாட்டாளி வர்க்க தலைவர்களை தாக்கவும், பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்துக்கு குழிபறிக்கவும் பக்கூனின், காவுஸ்கி, டிராஸ்கி மற்றும் டிட்டோ போன்ற அனைவரும் பயன்படுத்தியதுதான் என்பது தெனிவாகிறது.

சந்தர்ப்பவாதிகள் சர்வதேச கம்யூனிஸ்ச இயக்க வரலாற்றில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அல்லது லெனினை வசைபாடுவதின் மூலம் அவர்களை மறுதலிக்க முடியவில்லை. குருச்சோவினாலும் வசைபாடுவதன் மூலம் ஸ்டாலினை மறுதலிக்க முடியவில்லை.

லெனின் சுட்டிக்காட்டியதைப் போல .உயர்ந்த பதவி இழிவுபடுத்தலின் வெற்றியை உறுதிபடுத்த முடியாது.

லெனின் அருங்காட்சியத்திலிருந்து ஸ்டாலினுடைய உடலை அப்புறப்படுத்த குருச்சேவ் தனது உயர்ந்த பதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அவர் எவ்வளவுதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மக்கள் மனதிலிருந்தும் ஸ்டாலின் மீதான மாபெரும் பற்றுதலை நீக்குவதில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.

மார்க்சிய-லெனியத்தை ஒரு வழியிலோ அல்லது இன்னொரு வழியிலோ திரித்துப் புரட்டுவதற்கு குருச்சேவ் தன்னுடைய உயர்ந்த பதவியை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அவர் என்னதான் முயன்றாலும் உலகெங்குமுள்ள மார்க்சிய-லெனியயவாதிகளால் பாதுகாக்கப்பட்ட, ஸ்டாலினால் பாதுகாக்கப்பட்ட மார்க்சிய லெனினியத்தை தூக்கியெறிவதில் ஒரு போதும் வெற்றியடைய முடியாது.

நாங்கள் தோழர் குருச்சேவுக்கு அக்கறையுடன் ஒரு அறிவுரை கூற விரும்புகிறோம். நீங்கள் உங்கள் தவறுகளை உணர்ந்துகொண்டு தவறான பாதையிலிருந்து மார்க்சிய-லெனியப் பாதைக்கு திரும்பி வருவீர்கள் என்று நம்புகிறோம்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரது மாபெரும் புரட்சிகர போதனைகள் வாழ்க