குடும்ப ஆட்சி, தனிமனித சர்வாதிகாரம் ஆட்சி வடிவங்களாக பல நாடுகளில் நடந்தன. நடக்கின்றன. இதில் நமது நாடும் விதி விலக்கல்ல. இச் சர்வாதிகாரிகள் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைக் கூட அளிக்க மறுப்பதால் இங்கே வர்க்க சார்பின்றி மக்கள் போராட வேண்டிய நிர்ப்பந்தம் இயல்பாகிறது. இச் சூழ்நிலையின் முரண்பாட்டை தெளிவான நெறிப்படுத்தலினூடாக அரசை நோக்கிப் போராடும்படி மக்களை வழி நடத்த தேச விடுதலைக் கட்சிகள் காத்திருப்பதும், சூழ்நிலையைப் பயன்படுத்தி இக் கட்சிகள் தேசத்தின் விடுதலையில் கணிசமான முன்னேற்றம் அடைகின்றனர் அல்லது அடுத்த கட்ட நகர்வுக்கு அனுபவத்தைப் பெறுகின்றனர் என்பதைப் பல நாடுகளின் வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.

 

நமது தேசத்தைப் பொறுத்தவரையில் தேச விடுதலை பற்றிய நோக்குள்ள முனைப்புக்கள் ஆங்காங்கே உதிரியாயிருப்பது நமக்குத் தெரிகின்ற போதிலும், தற்போதைய அரசுக்குள்ளும், பாராளுமன்றத்திலும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டால் வெளிவந்து கொண்டிருக்கும் கொலைகளையும், தேசத்துரோகத்தையும், சர்வாதிகாரத்தின் உச்சநிலை ஆட்சியையும், நாட்டின் கடைசிக் குடிமகனும் ஆளும் கும்பல் பற்றி அறிந்து கொண்ட இவ்வேளையில், இவ் முரண்பாட்டைப் பயன்படுத்த எந்தவொரு தேச விடுதலை ஸ்தாபனமும் இல்லாதிருப்பதை விடுதலையை நேசிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உணரவேண்டிய நேரமிது.

 

இலங்கையில் தொடர்ச்சியான சிங்களப் பேரினவாத ஆட்சியால் இன முரண்பாடு கூர்மையடைந்துள்ள இவ்வேளையில் ஜனாதிபதி ஆட்சி முறைக்கெதிராகவும், பிரேமதாஸா மீதான அரசியல் குற்றப் பட்டியலையும் சி.சு.க, ல.ச.ச.க, ம.ஐ.மு, .ஐ.சோ.மு, ஈ.ம.வி.மு, இ.தொ.கா. ஆகிய கட்சிகளோடு இணைந்து ஐ.தே.க யின் முக்கிய தலைவர்களான காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி ஆகியோர் உட்பட46 ஐ.தே.க உறுப்பினர்களும் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்ததற்கான அரசியல் பின்னணியை ஆராய்வது அவசியமானதே.

 

ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்த போது கட்சிக்குள்ளும் பராளுமன்றத்திலும் இரண்டு சம எண்ணிக்கையுள்ள குழுக்கள் ஜே.ஆர் இற்கும் பிரேமதாஸாவுக்கும் இருந்தது. பிரேமாவுக்கு அப்போது நாட்டின் தலைவர் என்னும் பதவி இல்லாமலிருந்த போதிலும், நடுத்தர வர்க்கத்தையும், அதற்கு கீழ்ப்பட்டவரையும் கவரும் தன்மை கொண்ட சிங்களமொழி பேச்சுவன்மையும் தனது வளர்ச்சிக்காக அவர் உழைத்த சளையாத சாகச உழைப்புமேயாகும்.

 

இதன் நிமித்தம் ஜே.ஆர். அரசில் பிரதமர் பதவியும், பின்னர் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஜே.ஆர் உம் கட்சியும் விரும்பியோ விரும்பாமலோ அனுமதிக்க வேண்டியேற்பட்டது என்றால் அது மிகையாகாது. (பிரேமதாஸாவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜே.ஆர். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஐ.தே.க. வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும், பிரேமதாஸா என்னும் பெயரை உச்சரிக்காமலே அதிருப்தியைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.) கட்சியில் அரைவாசிப்பேரும் ஜே.ஆரும் தனக்கு நேர் எதிராக முன்கூட்டியே இயங்குவதை அறிந்து கொண்ட பிரேமதாஸா, பாராளுமன்றத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்துவது என்னும் இழுபறியில் ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்து, அனைத்து அதிருப்தியாளர்களையும் தனது வெற்றிக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தினார் என்பது சரியானதே. ஜே.ஆர் குழுவில் இருந்த லலித், காமினி ஆகியோருக்கும் பிரோமதாஸாவுக்கும் குழுநிலைவாத முரண்பாடு இருந்தபோதும் குறைந்த பட்சம் பிரதமர் பதவியையாவது எட்டிப் பிடித்தால் அடுத்த கட்டம் நாட்டின் தலைவர் பதவிக்குத் தாவிவிடலாம் என்று காத்திருந்தோர் மிகவும் ஏமாந்து போயினர். ஜே.ஆர், பிரேமா ஆகியோரின் சிங்களப் பேரினவாத, மேற்கத்தைய பொருளாதார ஆட்சி அமைப்பு முறையில் சகல உடன்பாடுகளும் உள்ள லலித் குழு, அதிகாரத்தில் பங்கோ, எதிர்கால வாரிசு என்னும் இடமோ, கிடைக்காததால், பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் தேவை, ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் அதிகாரம் ஒரு தனிமனிதனிடம் போய் விடுகிறது, இங்கே ஜனநாயகம் இல்லை, சர்வாதிகாரம் நடக்கின்றது என்று சந்தர்ப்பவாதத் தனத்தோடு கூச்சலிடுவது மக்களின் அழிவு பற்றி அறிந்து கொள்ளாத கேலி அரசியலாகும். இலங்கையில் சிங்கள அரசியல் தலைமைகள் அனைத்தும் அரசு மாற்றம், தேர்தல் பிரச்சாரம், புரட்சி, கட்சியின் தலைமை மாற்றம், எதுவாக இருந்தாலும் இனவாதம் பேசிச் சாதிப்பது மரபுவழிச் செயல் போன்றே பேசிச் சாதித்துள்ளனர். இதே வழிமுறையை நழுவவிடாது லலித் குழுவினரும் இப்போது அதிகாரப் போட்டிக்குப் பயன்படுத்துவது இவர்களின் அரசியல் மரபாக இருந்த போதிலும் தொடர்ந்தும் இனங்களுக்கிடையிலான விரிசலையும் தேசிய இனங்களின் உரிமைகட்கெதிராகவும் எடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மக்களும் இவர்களை இனம் காணவேண்டும்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார வரம்புகளைத் தீர்மானிப்பதில் ஜே.ஆர் தன்னோடு ஏற்படுத்திக் கொண்ட குழுவில் பிரோமதாஸா, லலித், கமினி ஆகியோரை இச் சூழ்நிலையில் குறிபிடத் தக்கவர்களாகக் கருதலாம். ஜே.ஆர் தலைமையில் நடந்த பௌத்த சிங்களப் பேரினவாத அரசில் அதிமுக்கியமாக சுயநிர்ணய உரிமை கோரும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்கக் கூடிய சட்டங்களும் தொழிலாளர்கட்கும், பத்திரிகையாளர், எதிர்க்கருத்துள்ளோரை ஒடுக்கும் சட்டங்களும்(6வது திருத்தச்சட்டம்) இயற்றப்பட்டதோடு, இவர்கட்கெதிராக அரச இயந்திரமும் படைகளும் முடுக்கி விடப்பட்டன. வேலை நிறுத்தம் செய்யும் உரிமை ரத்து(ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்ததால் 40,000 பேர் வேலை இழந்தனர்) அப்பாவித் தமிழ் மக்கள் மீது குண்டு வீசித் தாக்கி பல்லாயிரம் பேரைக்கொன்றொழித்தமை, தமிழ்ப் பிரதேசங்கள் மீது திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தியபோதெல்லாம் பாராளுமன்றத்தில் எந்தவித விவாதங்களோ சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயமான முடிபுகளை அறியாமல் ஜனாதிபதி செயலகம் காலால் இட்டபணியை தலையால் செய்து முடித்த குழுவினர் தான் தற்போது ஜனநாயகத்துக்காக இனவாதம் பேசுகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும்.

 

அதன் பின் வந்த பிரேமதாஸாவின் தலைமையின் கீழும் தெற்கில் பல்லாயிரம் இளைஞர்கள் பழைய ரயர்கட்கு இரையாகிய போதும் (எம்.பி) சரத்முத்தட்டுகம படுகொலை செய்யப்பட்டபோதும், ரிச்சர்ட் டீ சொய்சா கொலை செய்யப்பட்ட போதும், பிரேமதாஸாவின் வேண்டுதலுக்காக விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோரை கொலை செய்த போதும், ரோகண விஜவீர, உபதிஸ்ச கமநாயக்கா போன்றோரைக் கொலை செய்த போதும், விஜய குமாரணதுங்க கொலை செய்யப்பட்ட போதும. இவ் ஆளும் கும்பல் கருத்தொருமித்தவர்களாகவே இருந்தனர். பாராளுமன்ற ஆட்சி அமைப்பில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் கருத்துக்கள் கணிசமான அளவு செயல் வடிவம் பெறாமல் போன போதும் முக்கியமான விடயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி அமைப்பு முறை, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாசைகளை பூரணமாக நிராகரிக்கும் தனி மனித பலம் கொண்டவை என்பதில் லலித் குழு உட்ப்பட அனைத்து ஆட்சியாளர்கட்கும் மறைமுகமான திருப்தி அப்போது இருந்ததை நாம் மறந்து விடலாகாது.

 

சிறுபான்மைத் தேசிய இனங்களின் எதுவித நலனையும் கவனத்திற் கொள்ளாது இனவாதிகள் தொடர்ந்தும் இனவாதத்தையே பேசும் போதும் ஈ.ம.பு.வி.மு. யினர் தொடர்ந்தும் தங்கள் இந்திய எஜமானர்களின் கட்டளைப்படியே நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. பிரேமதாஸா மீதான அரசியல் குற்றப் பட்டியலை விவாதத்திற்கெடுத்து நிச்சயம் விவாதிக்கப் போவதாகச் சூழுரைத்த சபாநாயகர் மொகமட், சட்டமா அதிபரின் ஆலோசனை தன்னைக் கட்டுப்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதிக்கு மூன்று கடிதங்களையும் அனுப்பி உறுதியளித்தார்.

 

பிரேமதாஸாவின் அதிரடி அரசியல் நடவடிக்கையின் வெள்ளோட்டமாகத் தொண்டமானைத் தூதனுப்பியவுடன், சபாநாயகருக்கு அரசியமைப்பும், பாராளுமன்ற ஒழுங்கு முறையும் மறந்து உயிர் பற்றிய பயம் வந்துவிட்டது போலும்......... சட்டமா அதிபரின் ஆலோசனையை ஏற்று மனு காலாவதியாகிவிட்டதாக அறிவித்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டம், பாராளுமன்ற மரபு அனைத்தையும் பிரேமதாஸா தன் முன் மண்டியிட வைத்துள்ளார் என்பது சரியானதே.

 

பிரேமதாஸாவின் மனித உரிமை மீறல், அரசியல் குற்ற நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம், படுகொலைகள், லஞ்ச ஊழல் ஆகியவை அனைத்தும் அம்பலத்திற்க்கு வந்துள்ள இவ்வேளையில், இந்த அதிருப்தி நிலையை வென்றெடுத்து தனது பதவியையும் அரசையும் நிலைக்க வைக்க, தமிழ் மக்கள் மீதும் குடாநாட்டின் மீதும் உக்கிரமான இராணுவத் தாக்குதலில் ஈடுபட்ள்ளார்.

 

இந்த நடவடிக்கையால் ஏற்படும் அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளைக் கண்டு சிங்கள மக்கள் திருப்தியடைவார்களானால் அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதோடு பிரேமதாஸாவின் அரசும் நீடிக்கும்.

 

ஒரு மாபெரும் சர்வாதிகாரி நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் மக்கள் முற்று முழுதாக அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.

 

கடுமையான போர்ச் சூழலில் வாழும் இன்றைய தமிழ் மக்களின் வாழ்நிலையில் இருந்து ஒப்பிட்டு ரீதியாகப் பார்க்கும் போது, சிங்கள மக்கள் ஓரளவு அமைதியாக சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம். இதைத் தமிழர்கள் வாழும் போர்ச் சூழலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார அழிப்புக்களை கவனத்தில் கொள்ளாது, இனவாத இராணுவத்தினாலும், பாசிச இயக்கங்களாலும் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ்மக்களினதும் போராளிகளினதும், மொத்த எண்ணிக்கையிலும் பார்க்க ஒப்பிட்டளவில் இருமடங்கு சிங்கள இளைஞர்களை பிரேமதாஸா அரசு குறுகிய காலத்துக்குள் கொன்றொழித்ததை நாம் அனைவரும் அறிவோம். இது எப்படி நடந்தது. இவ்வளவு மனித உயிர்களையும் எதிர்யுத்தம் புரியாமலே பலி கொடுக்க வேண்டிய பிற்போக்குத்தனமான ஏற்பாட்டிற்கு காரணமாயிருந்த சக்திகளின் அரசியல் பின்னணி என்ன என்பதை ஆராய்வதை சற்று ஒதுக்கிவைத்து நோக்குமிடத்து, அரசின் ஓடுக்குமுறைக்கெதிரான போர்க் குணாம்சம் கொண்ட அனைத்து சக்திகளையும் அழிப்பதில் ஆளும் வர்க்கம் கட்சி பேதமின்றி ஒருமித்திருந்ததை நிருபிக்க அச் சூழ்நிலையில் அனைத்துக் கட்சியின் சலனமற்ற மௌனம் ஒரு சான்று. சூழ்நிலைக்கேற்றவாறு கதை சொல்லும் பிரேமதாஸா நிலபிரபுத்துவ சமுகம், வர்க்க முரண்பாடுகள் பற்றியெல்லாம் பேசத் தொடங்கி இருப்பதை நோக்கிமிடத்து இலங்கை மக்களை வெறும் கால்நடைகளாக எண்ணுகின்றனர் போலும்.

 

தற்போது பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்துப் பிற்போக்குக் கட்சிகளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தங்கள் வர்க்கநலன் கருதியும், குழு நலனுக்காகவும் உழைக்கும் மக்களை காட்டிக் கொடுத்து வந்துள்ளதோடு இன முரண்பாடுகளையும் கொதிநிலையில் வைத்திருப்பதை விரும்புகிறது.

 

ஆகவே, இன முரண்பாடுகளுக்கு மூலக் காரணியாயுள்ள அனைத்து அம்சங்களையும் உழைக்கும் மக்களைக் கூறுபோடவும் வர்க்க ரீதியான ஒருமைப்பாடு ஏற்படாமலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்க்காகவே பயன்படுத்துகின்றனர். ஆகவே, தமிழ் மக்களின் தேசவிடுதலைப் பாதையில் ஏற்பட்டிருக்கும் சீரழிவுச் சூழ்நிலையையும், அன்னிய சக்திகளின் தலையீட்டையும், சிங்கள முற்போக்கு சக்திகளும் உழைக்கும் மக்களும் தமிழ் மக்களின் தோல்வியாகப் பார்க்காது சமூக பொருளாதார அரசியல் நோக்கோடு அணுக வேண்டும். அப்போதே ஒடுக்குமுறைக்குகெதிரான இப் போராட்டத்தில் அனைத்துப் பாஸிசத்தையும் வென்று உழைக்கும் மக்களுக்காகிய தமிழீழத்தின் அடித்தளத்திலே முழு இலங்கையின் உழைக்கும் மக்களுக்காகிய விடுதலையை வெல்ல முடியும் என்று கூறக் கூடிய காலகட்டத்தில் நாமுள்ளோம். இந்நாள் வரும் வரை இவ் ஆட்சியாளர்களின் அரசியல் நாடகங்களை நாம் பார்த்தேயாகவேண்டும்.

 

இனவாத அரசு, சீனச் சோசலிச அரசின் ஆயுதத் துணை கொண்டு விடுதலை கோரும் தமிழ் மக்களை அழிக்கும் இக் காலத்தில் பீக்கிங்கில் உள்ள தங்கள் எஜமானர்களைத் தட்டிக்கேட்க வக்கற்ற புதிய ஜனநாயகக் கட்சினர், கொழும்பிலே(சீன சார்பு) கம்யூனிஸ்சக் கூடாரம் அடித்து விட்டு, ஜக்கிய முன்னணி அமைத்து ஸ்ரீ.ல.சு.கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்யும் இவர்கள், தற்போது நடந்த பாராளுமன்றப் புரட்சியைக் கண்டு குதூகலித்திருக்க கூடும்! ஆனால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கமல்ல.