மக்கள் விரோத தமிழ் தேசியவாதிகளினால் உருவாகும் பேரினவாதத்தின் வெற்றி, தமிழினத்தின் அடிமைத்தனத்தின் மேலான வரலாறாகின்றது. இப்படி இவர்களால் தமிழ் இனம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்?
புலிகள் மற்றும் புலியெதிர்புக் கும்பலால் மட்டும் இது நிகழவில்லை. இவர்களோ முழு அரசியலையும் தம் கையில் எடுத்து, தமிழ்மக்களை தம் அரசியல் நடத்தைகள் மூலம் தோற்கடித்தனர். இதில் முதன்மையாக புலிகள் இருந்தனர். புலிகள் தமிழ் மக்களை தம் சொந்த எதிரியாகவே பார்த்தனர். தமிழ் மக்களின் ஜனநாயகமும், தமிழ் மக்களின் உரிமைகளும் தமக்கு எதிரானதாக புலிகள் கருதினர். இதனடிப்படையில் முழு தமிழ் மக்களையும் கருவறுத்தனர். இந்த புலிகளின் பாசிசத்துக்கு முகம் கொடுக்க முடியாது போனவர்கள் தான், பெரும்பாலான புலியெதிர்ப்பு நிலையெடுத்தவர்கள். இவர்கள் கொண்டிருந்த மக்கள் விரோதக் கருத்துகள், பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கும் இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கும் நேரடியாக துணை போகத் தூண்டியது. இதன் மூலம் அவர்கள் புலிகளைப் போல், தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர்.
இப்படி தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்ட இரு பிரதான போக்குகள், எம்முன் வெளிப்படையாக உள்ளது. இதை விட உள்ள மற்றைய போக்கோ, சந்தர்ப்பவாத அரசியலை அடிப்படையாக கொண்டு இயங்கியது. புலிகளின் தோல்வியும், எதிர்காலத்தில் எழுகின்ற மக்கள் போராட்டத்தையும் திசைதிருப்ப முனையும் இந்த சந்தர்ப்பவாதக் கூட்டத்தை, முன் கூட்டியே நாம் இனம் காணவேண்டும்.
இந்த வகையில் மார்க்சியம் முதல் முற்போக்கு பேசிக்கொண்டும், அறிவுத்துறையினராக தம்மைக் காட்டிக்கொண்டும், சமகாலத்தில் சந்தர்ப்பவாதமாக தம்மை மூடிமறைத்துக் கொண்டும், படுபிற்போக்கான நிலையெடுத்து நிற்கின்றது இந்தக் கூட்டம்.
இங்கு நாம் சில பெயர்களை குறிப்பிடுவது உதாரணத்துக்குத் தான். ஆனால் இந்த பட்டியலில் பலர். இப்படி சரிநிகரில் இருந்து வந்தவர்கள் உதாரணமாக சிவகுமார் போன்றவர்கள், சூரியன் எப்.எம் இல் இருந்து வந்த குரு போன்றவர்கள் (உலகத் தமிழ் செய்திகள் - GTN தற்போது புலிக்காக இணையம் வைத்துள்ளவர்கள்), வெக்ரோன் ஊடாக அறிமுகமான தயானந்தா (உலக தமிழ் காட்சி - GTV புலிக்காக ஒளிபரப்பு செய்கின்ற தொலைக்காட்சி உள்ளவர்) போன்றவர்கள், முன்ளாள் புளட் ரெசோ மாணவர்கள் அமைப்பை சேர்ந்த உதிரிகள், 1985 இல் மக்கள் அரசியல் பேசிய பலரை, இங்கு நாம் குறிப்பிட முடியும்.
இதில் பலர் இன்று தம் வேஷத்தைக் கலைந்து, புலிக்காக காகா என்ற கரைய முனைகின்றனர். ஆனால் அதையும் மூடிமறைத்துக் கொண்டும், சந்தர்ப்பவாதமாக, அதே நேரம் முற்போக்கு வேஷம் போட்டுக்கொண்டு ஊர் உலகத்தையே ஏமாற்ற முனைகின்றனர்.
புலியை ஆதரிப்பதை வெளிப்படையாக முன்வைக்காமல், ஆட்களுக்கு ஏற்ப முதுகுக்கு பின்னால் புலி அரசியலை செய்கின்றனர்.
புலிகளைத் தாம் பாதுகாப்பதாக ஒரு வேஷம், புலிகள் அழிந்தால் தாம் இவற்றையெல்லாம் விலத்தி முற்போக்காக இருந்ததாக காட்ட ஒரு வேஷம். இப்படி இரண்டு வேஷம். நிர்ப்பந்தம் காரணமாக இதைத் தெரிந்துள்ளதாக காட்டும், மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத முயற்சிகள். இவர்கள் தான் அரசியலில் படுபிற்போக்கான சந்தர்ப்பவாதிகள். தமிழ் மக்களின் கழுத்தை அறுக்கும், பாசிசத்துக்கு துணை போகின்றவர்கள்.
தமிழ்மக்களை கேடுகெட்ட இழிநிலைக்கு தாழ்த்தி, அவர்களை தோற்டித்தவர்கள் யார்?
இந்த கேள்விக்கு இவர்களின் பதில் தான் என்ன? அந்த பதில் இது தான்.
1. பேரினவாதம்
2. புலிக்கு எதிராக கருத்துரைத்தவர்கள்.
இதுதான் இன்றைய தோல்விக்கு காரணம் என்கின்றனர்.
இதைத்தான் புலியும் சொல்லுகின்றது என்றால், மார்க்சியம் முற்போக்கும் பேசும் இவர்களும் இதையே சொல்லுகின்றனர். மார்க்சியமும் முற்போக்கும் பேசும் இந்த வேஷதாரிகளின் அரசியலை கூட்டிக் கழித்துப் பார்த்தால், புலியிசம் தான்.
புலி சொல்வதை விடுவோம், இந்த முற்போக்கு கனவான்கள் இதையே சொல்லும் போது இவர்களின் அரசியல் நேர்மை தான் என்ன? வாய் திறக்காது கள்ள மௌனம் சாதிக்கும் இவர்களின் வாய்க்குள், முட்டிக் கிடப்பது புலிப் பாசிசம். இவர்கள் மக்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர். பேரினவாதம் அரசு, மற்றும் புலிகளால் மக்கள் அனுபவிக்கின்ற துயரத்தை பற்றி, எப்பபோதாவது பக்கச் சார்பின்றி கதைக்கின்றனரா!? இவர்களின் பத்திரிகை தர்மமோ, மக்களைப் பற்றியே கதைக்க மறுத்தது.
பேரினவாதம் மட்டுமா மக்களை ஒடுக்கியது!? உங்கள் பத்திரிகை சுதந்திரத்தை பேரினவாதம் மட்டுமா தடுத்தது!? இப்படி கதை சொல்லும் உங்கள் சுதந்திரக் கருத்துகள் அனைத்தும் போலியானவை, பொய்யானவை. இது மக்களை ஏமாற்றுகின்றதும், புலிப் பாசிசத்துக்கும் துணையானவை. அறிவின் மேலாண்மையைக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கும், அற்ப பிழைப்புத்தனமாகும். மக்களைப்பற்றி, அவர்களின் அனைத்து துயரத்தையும் பேசுவது தானே நேர்மை. இப்படி மக்களுக்காக எங்கே, எப்போது போராடினீர்கள், கருத்துரைத்தீர்கள்.
ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் மரணங்கள், பல பத்தாயிரம் மக்களின் மரணங்கள் ஊடாக ஒரு போராட்டம் நடத்துள்ளது. இது எந்த வகையில் மக்கள் அரசியல் உடன் பின்னிப்பிணைந்ததாக இருந்தது!? சுயநிர்ணய உரிமைக்கானதாக எப்படி நடந்தது!? இதை மக்களுக்கானதாக மாற்ற, எங்கே எப்படி எவ்வாறு நீங்கள் இதைத் திருத்த முனைந்தீர்கள்!? மக்களுக்கு எதிரான பாசிசத்துக்கு கொம்பு சீவுவதையே பிழைப்பாக கொண்டு நக்குவதையே, உங்கள் ஊடகச் சுதந்திரம் என்கின்றீர்கள். இப்படி பாசிசத்துடன் சேர்ந்து, மக்களை தோற்கடித்தவர்கள் நீங்கள்.
பேரினவாதத்தை எதிர்த்த யுத்தம், மக்கள் யுத்தமல்ல
இப்படி நீங்கள் சொல்ல வரும் இந்தப் பாசிசம் தான் புலியிசம். இரண்டு ஆளும் வர்க்கங்களின் யுத்தத்தின் பின்னணியில், எந்த மக்கள் நலனும் இருந்ததில்லை. ஏன் மக்களுக்காக யுத்தம் செய்ய முடியாது!? அதை ஏன் நீங்கள் கோர முடியாது போனது!? உங்கள் புலி சூதாட்டத்தை விட்டுவிட்டு, வாயைத் திறவுங்கள்.
புலியின் யுத்தம் பேரினவாதத்தை எதிர்த்த ஒரு யுத்தமாக இருந்தால் தான், நாம் அதை மக்கள் யுத்தமாக மாற்றும்படி தொடர்ச்சியாகவே எம் விமர்சனத்தை முன்வைத்து வந்தோம். மக்களை நேசிக்கக் கோரினோம். மக்களின் உரிமைகளை வழங்கக் கோரினோம். இந்த வகையில் எமக்கு கிடைத்த எழுத்துச் சுதந்திரத்தை, மக்களுக்காக முழுமையாக பயன்படுத்தினோம். அதற்காகவே உழைத்தோம். ஆனால் அதையே கேவலப்படுத்தியவர்கள் நீங்கள்.
போகட்டும், நீங்கள் பேரினவாதத்துக்கு எதிராக புலியின் யுத்தத்தை, மக்கள் யுத்தமாக நடத்தும்படி எங்கே எப்போது கோரினீர்கள். உங்கள் கருத்துச் சுதந்திரத்தை, இதற்காக எங்கே எப்போது நேர்மையாக பயன்படுத்தினீர்கள். தமிழ் மக்களின் மேல் அக்கறையுள்ள அனைவரினதும் கடமை இது தான். இதைச் செய்ய மறுத்தும், மறந்தும், புலிகளின் பினாமியாகி கரைவதும், சிலர் புலியின் சம்பளப்பட்டியலுக்குள் தம்மை வளப்படுத்தி நிற்பதில் அல்லவா, அறிவு பயன்படுத்தப்படுகின்றது. மக்கள் பற்றி இவர்களுக்கு என்ன தான் கவலை?
இன்று புலிகள் அழிகின்றனர், எனவே அதைப் பலப்படுத்த வேண்டும்
இன்று இவர்கள் வைக்கின்ற வாதம் இது. ஏனென்றால் புலிகள் அழிந்தால், இனி ஒரு போராட்டம் நினைக்கவே முடியாது என இப்படி பற்பல வாதங்கள்.
இதைத்தான் புலிகளும் சொல்லுகின்றனர். புலிகள் அண்மைக் காலத்தில், தலைவரின் காலத்தில் தமிழீழத்தை அடைய உதவுங்கள் என்றனர். காலத்துக்கு காலம் புலிகளின் விதவிதமான பிரச்சாரம். இதை நீங்கள் அடைவதில், நாம் எந்தவிதத்திலும் தடுக்கும் ஆற்றல் அற்றவர்கள்.
புலிகள் அழிகின்றனர், எனவே ஆதரியுங்கள். நாங்கள் ஆதரித்தால் புலிகள் வென்று விடுவார்கள் என்ற இந்த தர்க்கம் படுபிற்போக்கானது. புலிகளின் அழிவு நாம் ஆதரிக்காதன் விளைவு என்ற அடிப்படையில், இது விளங்கப்படுத்தப்படுகின்றது. புலிகளின் அழிவு நாம் ஆதரிக்கத் தவறியதால் அல்ல. ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் இப்படித்தான் கூறுகின்றனர்.
புலிகளின் அழிவு அதன் சொந்தப் பாசிச அரசியலால் நிகழ்கின்றது. அதை தடுத்து நிறுத்த தயாரற்றவர்கள், அதை விமர்சித்து திருத்த தயாரற்றவர்கள், அதையே ஆதரிக்கக் கோருகின்றனர். பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்த, புலிகள் தம்மை உடனடியாகவே சுயவிமர்சனம் செய்து தம்மைத் திருத்த வேண்டும். அதைச் சொல்ல மறுத்து, அழிவை ஆதரிக்கக் கோருவது தான் இந்த 'முற்போக்குகளின்" பாசிசமாக உள்ளது.
நாங்கள் புலிகளை திருத்தக் கோரும் விமர்சனத்தை முன் வைக்கின்றோம். போராட்டத்தை மக்கள் மயப்படுத்தக் கோருகின்றோம். அதாவது மக்களின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமைகளை முன்வைக்க கோருகின்றோம். இப்படி பேரினவாதத்துக்கு எதிரான யுத்தத்தை மக்கள் யுத்தமாக மாற்றும் படியான விமர்சனத்தை முன்வைக்காது, பாசிசத்தை ஆதரித்து தொடர்ந்து அழிக்கக் கோருகின்றனர் இவர்கள். புலிகள் போராட்டத்தின் தவறை திருத்தி, தியாகங்களை மக்களின் விடுதலையுடன் பொருந்திச் செல்லக் கோருகின்றோம் நாங்கள். அதை செய்ய வேண்டாம் என்று கூறும் இவர்கள், புலிப் பாசிசத்தை ஆதரித்து புலியின் அழிவை துரிதப்படுத்தக் கோருகின்றனர். இதுவே இதன் பின்னுள்ள உண்மை.
இப்படி இவர்களும் புலியுடன் சேர்ந்து தான் மக்களை தோற்கடிக்கின்றனர். இதை நாம் இன்றே இனம் காணவேண்டும். எதிர்கால தலைமுறை இதையும் இன்றே கற்றுக்கொண்டு தான், மக்களுக்காக உண்மையாக போராடமுடியும்.
பி.இரயாகரன்
20.11.2008