09262022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !

பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

 

மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பண்ணைப்புரம் கிராமத்தில் பண்ணையாரும் உண்டு; பண்ணையடிமைகளும் உண்டு. செத்துப் போன வடிவேல் கவுண்டர் எனும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் மகன் பிரசாத் என்பவர்தான் இப்போது பண்ணைப்புரத்தின் பண்ணை.

 

ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் - 400 குடும்பங்கள்,  சக்கிலியர் சமூகத்தினர் - 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில குடும்பங்கள்- என்பதுதான் பண்ணைப்புரம் மக்கள் தொகையின் சாதிவாரியான சேர்க்கை.

 

நிலங்கள் மற்றும் சிறிய, நடுத்தர எஸ்டேட்டுகளும் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒக்கலிக கவுண்டர்கள். தாழ்த்தப்பட்டோரில் ஆகப்பெரும்பான்மையினர் நிலமற்ற கூலி விவசாயிகள் அல்லது எஸ்டேட் தொழிலாளிகள். பெரும் பண்ணையாரான பிரசாத்தின் பண்ணையில் சக்கிலியர், பறையர் சமூகத்தைச் சேர்ந்த பலர் பண்ணையடிமைகள். பறையர் சமூகத்தில் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் விவசாயம் தவிர சாதி ரீதியான அடிமைத் தொழில்களெதுவும் செய்வதில்லை. மேலும் பறையர் சமூகத்தில் ஓரளவு படித்தவர்களும் உள்ளனர்.

 

இருப்பினும் பண்ணைப்புரம் தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தேநீர்க் குவளைதான்; சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ கடைக்ககு வெளியே ஒதுங்கி உட்கார்ந்துதான் தேநீர் குடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளூர் சலூனில் முடி திருத்த முடியாது; துணியும் சலவைக்குப் போட முடியாது. பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுதான் நிலைமை.

 

இந்த இழிவைச் சகிக்க முடியாத தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலர் தேநீர்க் கடைக்குள் போவதில்லை; அல்லது தேவைப்படும்போது யாரையேனும் அனுப்பி வாங்கிவரச் செய்து குடித்துக் கொள்வார்கள்.

 

உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல; சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்டவர் வீட்டுத் திருமணத்துக்கு வந்த உறவுக்கார இளைஞர்கள் தேநீர் குடிக்கச் சென்றபோது அவர்களுக்கும் தனிக்குவளை தரப்பட்டது. டாக்டர் படிப்பு போன்ற உயர்கல்வி கற்ற அந்த இளைஞர்கள் மனம் குமுறி தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாகக் காசைக் கொடுத்து விட்டு தேநீர் குடிக்காமல் சென்றிருக்கின்றனர்.

உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி ஒடுக்கும் சாதி வெறியர்களுக்கு அருகாமையிலுள்ள மீனாட்சிபுரத்து இளைஞர்கள் என்றால் மட்டும் நடுக்கம். சுமார் 8 மாதங்களுக்கு முன் தங்களுக்குத் தனிக்குவளை என்று புரிந்து கொண்ட மீனாட்சிபுரத்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கூட்டமாகத் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சீரங்கன் என்பவர் தனிக்குவளை தந்தால் உடனே வேல்கம்பால் பாய்லரை ஓட்டை போட்டுவிட்டுப் போய்விடுவார் என்றும் பழைய சம்பவங்களை மக்கள் நினைவு கூர்கின்றனர்.

 

1956, 57 வாக்கில் இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராசன், சாமுவேல், கருப்பண்ணன், சின்னையா போன்ற ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து  ” ராயல் உணவு விடுதி ” என்ற கடையில் சாதி ஒதுக்கலும் தீண்டாமையும் கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடியுள்ளனர். அது பாவலர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்த காலம். அதன்பின் 1972 வாக்கில் நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளராக மாறிய பாவலர், தனது இறுதிக் காலத்தில் தி.மு.க.வில் இணைந்தார்; பின் 1976-இல் மரணமடைந்தார்.

 

தனித் தேநீர்க் குவளைக்கெதிராக யாராவது குரல் கொடுத்தால் பிரச்சினை பெரிதாகும் எனத் தெரிந்தால் உடனே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கண்ணாடி கிளாஸ் வைப்பது, ஆனால் அதில் லேசாக ஆணியால் கீறி அடையாளம் செய்து கொள்வது - பிறகு சிறிது நாளில் பழைய வடிவத்துக்கே திரும்பி விடுவது என்பதுதான் பண்ணைப்புரத்தில் நடந்து வருகிறது.

 

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையொட்டி பண்ணைப்புரத்தில் தனி தேநீர்க் குவளை ஒழிப்புப் போராட்டத்தை அறிவித்தது விவசாயிகள் விடுதலை முன்னணி ( மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பு ). தனித் தேநீர்க் குவளை வைப்பது சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

 

பண்ணைப்புரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கவுண்டர், கள்ளர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ” 31.10.97 அன்று போராட்டம் ” என்று அறிவிக்கும் தட்டியைப் பார்த்தவுடன் சாதி வெறியர்களிடையே சூடு பரவத் தொடங்கியது. பண்ணையார் பிரசாத் வீட்டில் சாதிவெறியர்களின் சதியாலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இரவோடிரவாகத் தட்டிகள் எரிக்கப்பட்டன.

 

தட்டி எரிக்கப்ட்டது பற்றி புகார் கொடுக்கப் போன பண்ணைப்புரம் வி.வி.மு தோழர் ( கள்ளர் சாதியில் பிறந்தவர் ) காவல் நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

 

அதே நேரத்தில் கோம்பை நகரில் குத்தகை விவசாயியை வெளியேற்றிய டி.இ.எல்.சி பாதிரியாருக்கு எதிராக வி.வி.மு போராடிக்கொண்டிருந்தது. சமரசப் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று தோழர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து சுமார் 11 பேர் மீது பாதிரியாரைக் கொல்ல முயன்றதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

 

இதுவன்றி கம்பம் வட்டாரம் முழுவதும் வி.வி.மு. தோழர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். முன்னணியாளர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விட்டதால் போராட்டம் நடைபெறாது என்று பிரச்சாரத்தையும் போலீசே கட்டவிழ்த்துவிட்டது.

 

இருப்பினும் 31.10.97 காலை பண்ணைப்புரம் நேநீர்க்கடை வாயிலில் போலீசு இறக்கப்பட்டுவிட்டது. சாதிவெறியர்கள் சுமார் 300 பேர் கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் தயாராக நின்று கொண்டிருந்தனர். வரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வந்தார்கள்; கையில் கொடியுடன் தீண்டாமைக்கெதிராக முழக்கமிட்டபடியே வந்தார்கள்; முன்னணியாளர்கள் சிறை பிடிக்கப்பட்டாலும் சோர்ந்து முடங்கிவிடாத தோழர்கள் வந்தார்கள்; எதிரில் கொலை வெறியுடன் நின்று கொண்டிருந்த சாதி வெறியர்களையும், கோபத்தால் துடித்துக் கொண்டிருந்த போலீசாரையும் சட்டை செய்யாமல் நேநீர்க் கடையை நோக்கி வந்தார்கள்; சாதி வெறியர்கள் வீசிய கற்கள் தலையில் பட்டுத் தெரித்த போதும் பார்வை சிதறாமல் தேநீர்க்கடை நோக்கி வந்தார்கள்.

 

தனிக்குவளையைப் பாதுகாப்பதற்காகவே தருவிக்கப்பட்டிருந்த போலீசு அவர்களைப் பாய்ந்து மறித்துப் பிடித்தது. போராட வந்த வி.வி.மு. தோழர்களில் பாதிப்பேர் தேவர் சாதிக்காரர்கள் என்பதை அங்கே கூடிநின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொஞ்சம் ஆச்சரியத்துடன் கவனித்தார்கள்; அதுவும் அவர்கள் சாதிவெறிக்கும், வெட்டு குத்துக்கும் பேர் போன கூடலூரிலிருந்து வந்தவர்கள் என்பதை உள்ளூர் மறவர்களும், கவுண்டர்களும் அதிர்ச்சியுடன் கவனித்தார்கள்;  அப்போது ஊருக்கு வந்திருந்த இளையராஜாவின் மனைவி, வீட்டு வாசலில் நின்றபடியே இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவர், கைது செய்யப்பட்ட தோழர்கள் வண்டியில் ஏற்றப்பட்டவுடன் காரில் ஏறிக் கிளம்பினார்.

 

கைது செய்து கொண்டு போன தோழர்களை கோம்பை நகரத் தெருவில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கிக் குதறின காவல் நாய்கள். ” திமிரெடுத்த பள்ளன் - பறயனையும், அவனுடன் கூடப்போகும் மானங்கெட்ட கள்ளனையும்” வாய்க்கு வந்தபடி ஏசவும் செய்தார்கள்.

 

போராட்டத்தில் பங்கு கொண்ட பண்ணைப்புரத்தைச் சேர்ந்த தேவர் சாதியிற் பிறந்த தோழர்களின் குடும்பங்களைச் சார்ந்த சாதிவெறி கொண்ட பெண்கள் சாடை பேசினார்கள். ” கொண்டு போய் மகளைப் பள்ளனுக்குக் கட்டிக் கொடு ” என்று வைதார்கள். கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களை இந்த ‘வசவு’ ஆத்திரப்படுத்தாது என்பது கூட சாதிவெறி கொண்ட அந்த மண்டைகளுக்கு உரைக்கவில்லை.

 

போலீசாரின் சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து கூடலூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார் ஆண்டிப்பட்டி வி.வி.மு. தோழர் செல்வராசு. ” சூத்திரன் என்றால் பாப்பானின் வைப்பாட்டி மகன் என்ற மனுதர்ம ரகசியத்தை பெரியார் அம்பலப்படுத்தினார். தமிழக போலீசில் எத்தனை பேர் ‘தேவடியா மக்கள் ‘ என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஊரில் இன்னின்னார் இருக்கிறார்கள் ” என்று பேசினார் செல்வராசு.

 

ஆத்திரம் கொண்ட போலீசு அதிகாரிகள் நள்ளிரவில் வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டினர். ராஜத்துரோக (124-ஏ) குற்றத்தில் அவர்மீது வழக்குப் போட்டனர்.

 

வசவுகள், தாக்குதல்கள், வழக்குகள் …. அனைத்தும் ஒருபுறமிருக்க பண்ணைப்புரத்தில் தனிக்குவளை எடுக்கப்பட்டு விட்டது. பண்ணைப்புரத்தில் பண்ணையாருக்கும் சாதி வெறியர்களுக்கும் அடங்கி மவுனமாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். “இந்த ஊரில் தீண்டாமை இல்லை ” என்று ஊர்க் கூட்டம் போட்டு எழுதிக் கையெழுத்து வாங்க பிரசாத் முயன்றபோது “முடியாது ” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள் தாழ்த்தப்ட்ட மக்கள்.

 

தனிக்குவளை எடுக்கப்பட்டதைக் காட்டிலும் முக்கியமான வெற்றி இதுதான்.

 

- புதிய கலாச்சாரம், மார்ச் - 1998 இதழிலிருந்து.