"கொம்சொமோல்"(Komsomol) என்ற ரஷ்ய பெயரால் அழைக்கப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் இளைஞர் அமைப்பு, கடந்த 29 ஒக்டோபர் தனது 90 வது பிறந்த நாளை கொண்டாடியது. இன்று அந்த அமைப்பு முக்கியத்துவம் இழந்து விட்டாலும், (கொள்கைரீதியாக பிரிந்துள்ள) பல்வேறு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் இளைஞர் அணியினர், கொம்சொமொலின் 90 வது பிறந்தநாள் விழாவை பரவலாக ரஷ்யாவெங்கும் கொண்டாடியுள்ளனர்.

இன்று மிகப்பெரிய கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பான "புரட்சிகர போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி" நடத்திய மகாநாட்டில், முன்னாள் சோவியத் குடியரசுகளான பெலாரஸ், உக்ரைன், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் பலர் பங்குபற்றினர். அந்த மகாநாட்டில் மீண்டும் அனைத்து சோவியத் குடியரசுகளை உள்ளடக்கிய புதிய கொம்சொமோல் ஸ்தாபிக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.

இன்றைய ரஷ்யாவில் முன்னாள் அதிபர் விளாடிமிர் புத்தின் உருவாக்கிய "நாஷி" என்ற இளைஞர் அமைப்பு தான் பலமாக உள்ளது. இந்த நாஷிக்கும், கொம்சொமொலுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நாஷி, புத்தினின் தலைமை வழிபாட்டையும், ரஷ்ய தேசியவாதத்தையும் முன்னெடுக்கின்றது. அதற்கு மாறாக கொம்சொமோல் மாணவர், இளைஞரை பயனுள்ள திட்டங்களில் ஈடுபடுத்தியது. கொம்சொமோல் ஓரளவுக்கு பிரிட்டிஷாரின் சாரணர் அமைப்பைபோடு ஒப்பிடத்தக்கது. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவும் இருந்தது. மேற்குலகில் பரவலாக நம்பப்படுவதைப் போல, இந்த இளைஞர் மன்றத்தில் அங்கத்தவராக சேருவது கட்டாயமாக இருக்கவில்லை. இருப்பினும் கொம்சொமோல் அங்கீகாரம் பல பதவிகளுக்கு தேவைப்பட்டது.

பழைய கொம்சொமோல் உறுப்பினர்கள் இப்போது நினைவு கூறுவது போல, அரசியல் கூட்டங்கள் பலருக்கு சலிப்பை கொடுத்திருக்கலாம். வாரமொரு முறை கண்டிப்பாக செய்ய வேண்டிய தொண்டு வேலையும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் மேற்குலகில் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது போல, "கொம்சொமோல் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள்" கலாச்சார சீரழிவுக்கு இட்டு செல்லவில்லை. வேண்டாவெறுப்பாக அந்த அமைப்பில் சேர்ந்தவர்களின் சாட்சியமே, அந்த பிரச்சாரத்தை முறியடிக்கிறது. தன்னால் "சாதாரண(அங்கத்துவரல்லாத) இளைஞர்கள் போல மதுபான விடுத்திக்கு போக முடியவில்லை" என்றும், "தொண்டு வேலை செய்து கிடைத்த சிறு தொகையில் இரகசியமாக மது வாங்கி குடிக்க வேண்டியிருந்ததாகவும்" இவர்கள் கொம்சொமோல் காலங்களை நினைவு கூறுகின்றனர். (பார்க்க:Happy Birthday, Komsomol!)

மாணவர், இளைஞர்களை நிறுவனப்படுத்தி அவர்களுக்கு சமூகப் பொறுப்பை கற்றுக் கொடுப்பதே கொம்சொமொலின் நோக்கமாக இருந்தது. போல்ஷெவிக் புரட்சியின் பின்னர் 1918 ம் ஆண்டு கொம்சொமோல் உருவாக்கப்பட்ட போது, அதன் உறுப்பினர்கள் தொகை 22000. இரண்டு வருடங்களுக்கு பின்னர், சோவியத் முழுவதும் போல்ஷெவிக் அதிகாரம் வந்த பின்னர், உறுப்பினர் தொகை நான்கு லட்சமாக உயர்ந்தது.

புரட்சிக்குப் பின்னான Komsomol உறுப்பினர்களின் முதலாவது கடமை, அனைத்து சோவியத் மக்களுக்கும் எழுத்தறிவை கொடுப்பதாகவிருந்தது. அப்போது பெரும்பான்மை ரஷ்யர்கள் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளாக இருந்த காலம் அது. 1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட காலத்தில், "எழுத்தறிவின்மையை ஒழிக்கும்" போராட்டத்தில் குதித்த Komsomol உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு எழுதப்படிக்க(இலவசமாக) கற்பித்தனர். அதை தவிர மொஸ்கோ நிலக்கீழ் சுரங்கரயில் திட்டம், துர்கெஸ்தான்- சைபீரிய ரயில்பாதை கட்டுமானம் போன்றன இன்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள். இரண்டாம் உலகப்போரில் Komsomol தனது உறுப்பினர்களை விமானமோட்டிகளாக பயிற்சி கொடுத்தது. உலகப் போருக்கு பின்னர் பல திறமையான முகாமையாளரை உருவாக்கியது. முரண்நகையாக சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் நிறுவனங்களை பொறுப்பெடுத்த முதலாளிகளும் கொம்சொமொலின் பயிற்சிப்பட்டறையில் இருந்து வந்தவர்கள் தான்.

"மனித குலத்தின் அனைத்து அறிவுச் செல்வங்களையும் கற்றுத்தேர்ந்து புலமை பெற்ற பின்பு தான், நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் ஆக வர முடியும்." - லெனின், Komsomol மூன்றாவது மகாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து.

உசாத்துணை தொடுப்புகள் :
Happy Birthday, Komsomol!
Komsomol (Wikipedia)
Video: Long Live Komsomol