கரூர் தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவரும் பாண்டியம்மாள், மாணவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திப் பழிவாங்கும் "ஆண்டையம்மாள்'' என்று பேர் பெற்றவர். மாணவர்களை வாடா, போடா என ஒருமையில் ஏசுவது, கிராமப்புற மாணவர்களின் உருவ தோற்றத்தைக் கூறி அவமானப்படுத்துவது, ரெக்கார்டு நோட்டில் கையெழுத்து வாங்கச் செல்லும் மாணவர்களை மணிக்கணக்கில் நிற்க வைத்து அலட்சியப்படுத்துவது முதலான வக்கிரக் குணங்களைக் கொண்ட அவர்,

 பிறரை இழிவுபடுத்தி சுய இன்பம் காணும் ஒரு "சாடிஸ்ட்''. கல்லூரியில் ஆய்வக வசதிகள் இல்லாத நிலையில், அதற்கான கட்டணம் தொடர்ந்து வசூல் செய்யப்படுவதைப் பற்றி துறைத் தலைவரான அவரிடம் முறையிட்ட மாணவர்களைச் செய்முறைத் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவித்தும், ""நீங்க படிக்கிற படிப்புக்கு இது ஒரு கேடா?'' என்று ஏளனமாகப் பேசியும் அவமானப்படுத்தியுள்ளார். பாண்டியம்மாளின் திமிரைக் கண்டித்தும், ஆய்வகம் அமைக்கக் கோரியும் கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் மனு கொடுத்து முறையிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


 இத்தகைய அவமானங்களையும் மனித உரிமை மீறல்களையும் சகித்துக் கொள்ள முடியாத இக்கல்லூரி மாணவர்கள், இப்பகுதியில் இயங்கி வரும் பு.மா.இ.மு.வில் தங்களை இணைத்து அமைப்பாக்கிக் கொண்டு, கடந்த 18.8.08 அன்று வகுப்புகளைப் புறக்கணித்து ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மறுநாள் காலை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை வாயிலிலேயே நிறுத்தி, முன்னணியில் செயல்பட்ட ஐந்து மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவித்து, கல்லூரி நிர்வாகம் மிரட்டியது. எந்த விசாரணையுமின்றி அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவை அதிகார முறைகேடு என்று சாடிய கல்லூரி மாணவர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வரும் பாண்டியம்மாளும் இவர்களுக்கு தூண்டுகோலாக விளங்கும் வீரையனும் "டேய்! நீங்களெல்லாம் டிகிரி வாங்க முடியாது; நாங்க நினைச்சா உங்களையெல்லாம் பெயிலாக்கிடுவோம்'' என்று ஆத்திரத்தில் மிரட்டிப் பார்த்தனர். அரண்டு போன நிர்வாகம் போலீசை வைத்து அச்சுறுத்திப் பார்த்தது. ஆனால், இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் உறுதியாக நின்று மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததும் விழிபிதுங்கிய அரசு, ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அவரோ, இரு தரப்பினரும் சமரசமாகப் போகச் சொல்லி உபதேசித்துவிட்டு தனது விசாரணை நாடகத்தை முடித்துக் கொண்டார்.


 பின்னர், போலீசு தூண்டுதலின் பேரில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், பாண்டியம்மாள், வீரையன் ஆகியோர், மாணவர்களின் நியாயமான போராட்டத்தை வழிநடத்திய பு.மா.இ.மு. தோழர்கள் இருவர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர். மீண்டும் வழக்கம் போலவே, கல்லூரியில் இவர்களது அதிகாரத் திமிர் களைகட்டத் தொடங்கி விட்டது. இதுபற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மாணவர்கள் முறையிடச் சென்றபோது, அவர் மனுவைக் கூடப் பார்க்காமல் மாணவர்களை ஏசி விரட்டியுள்ளார்.


 மக்கள் வரிப்பணத்தில் ஊதியமாகத் தின்று கொழுக்கும் இத்தகைய அதிகார வர்க்கம், மக்களுக்குப் பொறுப்பாகவும் நியாயமாகவும் செயல்படாது. மாணவர் போராட்டங்களை ஒடுக்கவும், தமது அதிகார முறைகேடுகளை நியாயப்படுத்தவும் "தன்னாட்சி' அதிகாரத்தை எல்லா கல்லூரிகளும் செயல்படுத்துகின்றன. ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தில் கல்வியளித்து வந்த அரசுக் கல்லூரிகளை சுயநிதிக் கல்லூரிகளாக மாற்றும் தனியார்மய சதிகளும் வேகமாக நடந்து வருகின்றன.


 இந்த உண்மைகளை உழைக்கும் மக்களிடம் துண்டுப் பிரசுரம் மூலம் பிரச்சாரம் செய்த பு.மா.இ.மு., அதன் தொடர்ச்சியாக, 26.9.08 அன்று கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாணவர்இளைஞர்களை அணிதிரட்டிப் போர்க்குணமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கல்லூரியில் புவியியல் துறை ஆய்வகம் அமைக்கவும், மாணவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதை எதிர்த்தும், பு.மா.இ.மு. தோழர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும் தோழமை அமைப்புகளின் பங்கேற்போடு நடந்த இந்த ஆர்ப்பாட்டம், அடுத்து வரப்போகும் மாணவர் போராட்டத்தை முன்னறிவிப்பதாக அமைந்தது.


 பு.ஜ. செய்தியாளர், கரூர்.