"நிதிநெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறந்த வழியாக, அமெரிக்க அரசு விரைவில் ஒரு புதிய போரை ஆரம்பிக்க வேண்டும்!" இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை, அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் RAND ( Research ANd Development) நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் சக்திவாய்ந்த RAND நிறுவனத்தை முன்னாள் சி.ஐ.ஏ. உப தலைவரும், பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனமான கார்லைல் நிர்வாகியுமான கார்லூச்சி தலைமை தாங்குகின்றார். இவர் கார்லைல் நிறுவனத்தில் பதவிவகித்த காலத்தில் தான், ஆப்கானிஸ்தான், ஈராக் யுத்தங்கள் மூலம் பல கோடி டாலர்கள் லாபம் ஈட்டப்பட்டது. 


வங்கிகள் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எதற்கு 700 பில்லியன் கொடுக்க வேண்டும்? அந்தப் பணத்தைக் கொண்டு புதிய போர் ஒன்றை தொடங்கினால், அதனால் வரும் விளைவுகள் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும். இதனால் எமது நிறுவனங்கள் மீண்டும் லாபம் சம்பாதிக்கலாம். வங்கிகளும் நெருக்கடியில் இருந்து மீளும். அது பொருளாதார தேக்கத்தை கட்டுப்படுத்தி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அது எப்படி சாத்தியமாகின்றது? போர் என்று வரும் போது அமெரிக்க இராணுவத்திற்கு நிறைய ஆயுத தளபாடங்கள் தேவைப்படுவதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் வங்கிகள் முதலீடு செய்கின்றன. அரசாங்கம் வாடிக்கையாளராக ஆயுதங்களை வாங்குகின்றது.

 
RAND வழங்கிய ஆலோசனைப்படி இந்த முறை அமெரிக்கா படையெடுக்கப் போவது, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற "சிறிய நாடுகளாக" (எதிர்த்து நிற்கப் பலமற்ற நோஞ்சான் நாடுகள்) இருக்கக் கூடாது என்றும், உலக பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு செலுத்தும் மிக முக்கியமான நாடாக இருக்க வேண்டும். அது எந்த நாடு என்பது இன்று வரை மர்மமாக உள்ளது. ரஷ்யாவா, சீனாவா, அல்லது ஈரானா என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே வட கொரியா தவிர்க்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அது அவர்கள் எதிர்பார்க்கும் விளைவுகளைக் கொடுக்காதாம். ஆச்சரியப்படத் தக்கதாக, ஜப்பானின் பெயர் அடிபடுகின்றது. சர்வதேச பொருளாதாரத்தில் ஜப்பான் வகிக்கும் பாத்திரம் மட்டும் இதற்கு காரணமல்ல. அமெரிக்கா ஜப்பானிடம் கடன் பத்திரங்களை அடமானம் வைத்து நிறைய கடன் வாங்கியுள்ளது. ஆகவே போர் தொடுத்து ஜப்பானையே ஆக்கிரமித்து விட்டால், கடனாவது திருப்பிக் கொடுப்பதாவது.

அமெரிக்காவில் இனி பதவியேற்கப் போகும் புதிய ஜனாதிபதி, பெரியதொதொரு சர்வதேச பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும், என்று முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களும், இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதிகாரியும் தெரிவித்துள்ள காலகட்டத்தில் RAND இன் அறிக்கை வந்துள்ளது.

இந்தத் தகவல்கள் எப்படி வெளியாகின? சில பிரெஞ்சு ஊடகங்களும், அதை தொடர்ந்து பிரபல சீன வெகுஜன ஊடகங்களும் இந்த செய்தியை மக்களுக்கு அறிவித்துள்ளன. தற்போது இது சீனாவில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக ஆகியுள்ளது. "அமெரிக்காவின் இலக்கு சீனாவாக இருக்குமா?" என்பது விவாதத்தின் கருப்பொருள் என்பதை சொல்லத்தேவையில்லை.

மேலதிக விபரங்களுக்கு :

_____________________
சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பார்ப்பதற்கு(சீன மொழியில்) :
 Sohu.com
ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தியை பார்ப்பதற்கு:
 RAND Lobbies Pentagon: Start War To Save U.S. Economy