தேவையானப்பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 1 கப்
சோளம் அல்லது அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

வெங்காயத்தைத் தோலுரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பைத்தூவி, விரல்களால் மெதுவாக பிரட்டி விட்டு, வெங்காயத்துண்டுகளைத் தனித்தனியாக பிரிக்கவும். அதை அப்படியே பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை ஒரு கையில் எடுத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் சோளம் அல்லது அரிசி மாவைத் தூவி பிரட்டி விடவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டுத் துண்டுகள், சோம்புத் தூள், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறவும். அதன் பின் கடலை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிரட்டி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெங்காயதிலுள்ள நீரிலேயே மாவு ஒட்டிக் கொள்ளும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், அடுப்பை தணித்துக் கொள்ளவும். ஒரு கை மாவை எடுத்து இலேசாக விரல்களால் எண்ணையில் உதிர்த்து விடவும். பகோடா வெந்து சிவந்தவுடன், அரித்தெடுத்து வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான சாம்பார் சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

குறிப்பு: பூண்டு வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம்.
http://adupankarai.kamalascorner.com/2008/11/blog-post.html