தமிழக எழுச்சியும் சிங்களத்தின் எதிர்ப்பும்

இலங்கையில் வன்னிப்பகுதியில் நடந்து வரும் உக்கிரமான கடும்சண்டை பெருமளவு தமிழ் மக்களின் இடப்பெயர்வுக்கு வழிவகுத்ததும், அந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழ் நாட்டு கரைகளை தொட்ட போது, தமிழர்களின் தன்னெழுச்சி தோன்றியதும், அது இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதும், ஏற்கனவே பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் விலாவாரியாக சொல்லிய செய்திகள் தான்.


ஆனால் இந்திய அழுத்தமானது, இலங்கையில் (குறிப்பாக சிங்களப் பகுதிகளில்) எத்தகைய விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து யாரும் அதிகம் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போது இந்திய-இலங்கை அரசுகள் தமக்குள்ள பழைய புரிந்துணர்வுகளை புதுப்பித்துக் கொண்டதாலும், அதற்கு தமிழக மாநில அரசும் ஒப்புதல் அளித்ததாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒருவேளை 1989 ம் ஆண்டு நடந்தது போல, மீண்டும் இந்தியாவின் நேரடித் தலையீடு வரலாம் என்ற ஐயம், துவண்டு போயிருந்த ஜே.வி.பி. போன்ற சிங்கள தேசியவாத/பேரினவாத சக்திகளை உசுப்பி விட்டுள்ளது. இந்தியாவுக்கு அடிபணியும் இலங்கை அரசின் இயலாமையைக் காரணமாகக் காட்டி, அரசியல் நடத்தி அதிகாரத்தை கைப்பற்ற தருணம் பார்த்திருக்கின்றனர். இந்தியத் தலையீட்டை காட்டி, அப்போது நடந்தது போல இந்திய வர்த்தகத்திற்கு எதிரான, "இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம்" வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் இந்திய வர்த்தகர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இவ்வாறு வினை, அதற்கெதிரான எதிர்வினை என்று பிரச்சினைகள் தொடர்கின்றன. அரசியல்மொழியில் சொன்னால், "சிங்களதேசியம் --> தமிழ் தேசியம் --> சிங்களத் தேசியம்" என்று பிரச்சினை மீளமுடியாத சுழற்சிக்குள் சிக்கிக் கொள்கின்றது. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள், எப்போதும் போல தாமே அதிகம் பாதிக்கப்படப் போவதாக கவலையுறுகின்றனர்.

இலங்கையின் நிலைமையை பக்கச் சார்பற்று வெளிப்படுத்த விரும்பும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உருவாகிய, Young Asia Television (YA TV) வழங்கும் (தமிழ்)தீபாவளி நிகழ்ச்சி இது. அனைத்து தரப்பு வாதங்களும் மக்கள் முன்வைக்கப்படும் போது தான், இலங்கை இனப்பிரச்சினை எவ்வளவு சிக்கலானது என்ற உண்மை உறைக்கின்றது.