03282023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

வருடந்தோறும் காந்தி ஜெயந்தியும், நேரு ஜெயந்தியும் டெல்லி அரசியலில் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் கடைபிடிக்க வேண்டிய கர்மங்களாகும். அதே போல தமிழக அரசியலில் அண்ணா, பெரியார், காமராஜர் நினைவு நாட்களில் சமாதிகளுக்கு செல்லும் தலைவர்கள் எல்லோரும் சமீப ஆண்டுகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சமாதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

 மற்ற ஜெயந்திகளுக்கும் தேவர் ஜெயந்திக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு.

தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தங்கள் அரசியல் பிழைப்புக்காக கொள்கை அடையாளத்துக்காக சம்பந்தப்பட்ட தலைவர்களை சடங்கு போல நினைவுகூர்வதற்குத் தேவை இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஓட்டு எதுவும் கூடுதலாக விழப்போவதில்லை என்றாலும் வரலாற்றில் சாதனை எதுவும் செய்யாத தங்களது பங்கை மறைப்பதற்கும், குறிப்பிட்ட தலைவர்களை வைத்து சாதனை செய்ததாகக் காட்டுவதற்கும் சிலைகளுக்கு மாலை, மரியாதை செய்யும் பூஜை, புனஸ்காரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் தேவர் ஜெயந்தி மட்டும் தென்மாவட்டங்களில் தேவர் சாதி மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு பயன்படுகிறது.

 

அம்பேத்கார் ஜெயந்தியும் தலித் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துத்தான் கொண்டாடப்படுகிறது என்றாலும் தேவர் ஜெயந்திக்குள்ள முக்கியத்துவம் இதற்குக் கிடையாது. அம்பேத்கார் சிலைக்கு மதுசூதனனோ, செங்கோட்டையனோ மாலை அணிவிக்கச் செல்லும் போது தேவர் சமாதிக்கு மட்டும் ஜெயலலிதா படை சூழ செல்வது வழக்கம். இன்று கூட விமானத்தில் ஏறும்போது சறுக்கி விழுந்து காலில் அடிபட்டாலும் அதைவிட தேவர் சாதி ஓட்டு முக்கியம் என்று கருதி பசும்பொன்னுக்குச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஆணவ அரசி ஜெயலலிதாவுக்கே இந்த கதியென்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

எல்லாக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் தேவர் சமாதிக்கு வந்தார்களா இல்லையா என்ற கண்காணிக்கப் படுவதால் ஒருவர் விடாமல் வருடந்தோறும் உள்ளேன் ஐயா என்று பசும்பொன்னில் ஆஜர் வைக்கிறார்கள்.

 

தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது? தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். பசும்போன் தேவரை நினைவு கூர்வதின் குறியீடுகள் இதைத் தவிர வேறில்லை. தேவர் சாதி மக்களின் கம்பீரமான வரலாற்றை முத்துராமலிங்கம் பொதிந்து வைத்திருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள். தென் மாவட்ட அரசியலில் தேவர் சாதிப் பெருமிதத்தை அங்கீகரிக்காமல் எந்தக் கட்சியும் பிழைப்பை ஓட்டமுடியாது என்பதால் உள்ளூர் வட்டம் முதல் மாவட்டம் வரை சாதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆதிக்கம் செய்யும் தேவர் சாதிப் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் தளபதிகளாக ஆட்சி நடத்துவது மறுக்க முடியாத யதார்த்தமாகும்.

பசும்பொன் தேவரின் காலத்திலேயே நடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக தேவர் சாதி மக்கள் நடத்திய முதுகளத்தூர் கலவரமும், இம்மானுவேல் படுகொலையும் அவரது ஆதிக்கசாதி அடையாளத்தைப் பறைசாற்ற போதும். மற்றபடி அவர் நேத்தாஜியின் தளபதியாக சுதந்திரத்திற்குப் பாடுபட்டார் என்பதன் யோக்கியதையை வரலாற்றில் தேடவேண்டியதில்லை. நேத்தாஜியின் கட்சியான பார்வர்டு பிளாக் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடது சாரிக் கட்சியாக இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் தேவர் சாதிக் கட்சியாக இயங்கிவரும் கூத்தைப் பார்த்தாலே போதுமானது. பசும்பொன் தேவர் தலைவராக அலங்கரித்த கட்சி என்பதால் மட்டும் பார்வர்டு பிளாக் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் கார்த்திக் போன்ற சினிமா கோமாளிகளெல்லாம் அரசியல் தலைவராக பத்திரிகைகளின் அட்டையில் சற்று காலம் வலம் வந்த கொடுமையும் நடந்தது.

 

மற்ற மாநிலங்களில் இடதுசாரி அரசியல் பேசும் பார்வர்டு பிளாக்கின் தலைவர் பிஸ்வாஸ் தமிழகத்தில் மட்டும் சாதி அரசியலில் அதுவும் கார்த்திக்கோடு சேர்ந்து ஈடுபடவேண்டிய நிர்பந்தம். தேர்தல் தோறும் திராவிடக் கட்சிகள் கொடுக்கும் ஓரிரு தொகுதிகளுக்காக இந்த தேசியக் கட்சி தேவர் சாதியின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் இயங்கி வருகிறது. இது போக தேவரின் இந்துமதச்சாயலை வைத்து இந்துமதவெறி அமைப்புக்களும் அவரை மாபெரும் தலைவராகச் சித்தரிக்கின்றன.

 

90களில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தென்மாவட்டக் கலவரங்கள் முதுகளத்தூர் கலவரம் போல ஒருதரப்பாக மட்டும் நடக்கவில்லை. வரலாற்றில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியின் திமிரை எதிர்த்துப் போராடினார்கள். இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்பு இனிமேலும் தலித் மக்கள் காலம் காலமாக அடிபடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிவித்தது. அடி வாங்கியதால்தான் ஆதிக்க சாதியின் கலவரம் ஒரு கட்டத்தில் பின்வாங்கி சமாதனம் என்று இறங்கி வந்தது. கொடியங்குளம் போன்ற பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே தலையெடுத்தன் விளைவே இந்த மாற்றம்.

 

இப்படி முதல் முறையாக அடிவாங்கியதால் தேவர் சாதியின் கவுரவத்திற்கு வந்த சோதனைதான் தற்போது தேவர் ஜெயந்தியில் தன்னை மீட்டெடுப்பதற்கு முயல்கிறது. கொடியன்குளம் கலவரத்திற்குப் பிறகுதான் தேவர் சமாதிக்கு தனி மவுசு கூடி தலைவர்கள் வருவதும் தேவர் ஜெயந்திக்கு வரும் தேவர் சாதித் தொண்டர்கள் வருடந்தோறும் வரும் வழியில் பலவீனமாக இருக்கும் தலித் மக்களைத் தாக்குவதும் வழக்கமானது. இன்றும் தேவர் ஜெயந்தி என்றால் இந்த அடிதடிகளை நினைத்து பசும்பொன் ஊரைச்சுற்றி இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் திகிலுடன்தான் எதிர்கொள்கிறார்கள்.

 

இதுபோக மேலவளவு படுகொலையோடு தலித் பஞ்சாயத்து தலைவர்கள் ஆங்காங்கே கொல்லப்படுவதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் தலித் மக்கள் தேர்தலில் போட்டி போட முடியாத சில ஆண்டு வரலாறும் சாதி ஆதிக்கத்தின் இருப்பை இன்றும் உறுதி செய்கிறது. தேவர் ஜெயந்தி நடைபெறும் இக்காலத்தில்தான் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகாவில் கரிவலம்வந்தநல்லூருக்கு அருகில் இருக்கும் பந்தப்புளி கிராம தலித் மக்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடுகிறார்கள்.

 

ஊரிலிருக்கும் கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் தலித் மக்களுக்கு வழிபடும் உரிமை இல்லை. ஆதிக்க சாதியின் குறிப்பாக தேவர் சாதியின் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து இக்கிராம தலித் மக்கள் பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள். பசும்பொன்னுக்கு வரும் எந்த தலைவரும் கட்சியும் இம்மக்களின் பிரச்சினைக்கு முகம் காட்டியதில்லை. அந்த மக்கள் சொந்த முயற்சியில் சங்கரன் கோவில் துணை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு கோவிலில் வழிபடும் உரிமையை தீர்ப்பாகப் பெற்றார்கள்.

 

நீதிமன்றம் அனுமதித்தால் மட்டும் இந்தப் பிரச்சினை முடிந்து விடுமா என்ன? எந்தச் சட்டம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மேல்சாதியினர் அதை மறுத்தார்கள். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகார வர்க்கமோ பல தேதிகளைக் குறித்து தள்ளிப் போட்டு வந்தது. இறுதியில் செப்டம்பர் 23ஆம் தேதி நுழையலாம் என்று அதிகாரவர்க்கமும், மேல்சாதியினர் மற்றும் தலித் மக்கள அடங்கிய சமாதானக் கமிட்டியும் முடிவு செய்தது.

 

அன்று தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது கோவில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். அன்றும் தலித் மக்களுக்கு மாரியம்மன் அருள்பாலிக்கவில்லை. இதன் பிறகு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி அரசு நிர்வாகம் கோவிலைப் பூட்டி சீல் வைத்தது. அப்போதும் கூட தீண்டாமைக் கொடுமை அகற்றப்பட்டு சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்படவில்லை. மாறாக கோவிலை பூட்டினாலும் பூட்டுவோமே ஒழிய தலித் மக்களை நுழைய விட மாட்டோமென திமிர் பேசும் சாதி ஆதிக்கம்தான் அரசு நிர்வாகத்தைத் தாண்டி ஆட்சி செய்கிறது.

 

கேவலம் ஒரு மாரியம்மனைக்கூட கும்பிடுவதற்கு பத்தாண்டு போராடி, நீதிமன்ற உத்தரவு பெற்றும் கூட ஒன்றும் நடக்கவில்லையே என சலித்துப்போன மக்களை இரவு நேரங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் கும்பலாக வந்து தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்பதோடு, வழிபடும் உரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்பதாலும் தலித் மக்களின் எழுபது குடும்பங்களும் கால்நடைகளோடு அருகாமை மலைக்கு சென்று விட்டது. அங்கு வந்த அதிகாரிகளிடம் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து என்றைக்கு எங்களுக்கு வழிபடும் உரிமை கிடைக்கிறதோ அன்று கிராமத்திற்கு வருகிறோம் என்று அறிவித்து விட்டு போராட்டத்தைத் தொடர்கிறார்கள் தலித் மக்கள்.

 

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சினையில் தங்களது நோக்கம் நிறைவேறவில்லை என்பதற்காக மேல்சாதி மக்கள் மலைப்பகுதிக்கு சென்று தங்கியதும் சுற்று வட்டாரத்து மேல்சாதியினரிடமிருந்து பொருளாதார உதவி வந்தோடு, எல்லா அரசியக் கட்சிகளும், அதிகாரிகளும் அந்த மக்களிடம் வந்து ஊருக்குத் திரும்புமாறு மன்றாடினார்கள். இதே போராட்ட வடிவத்தை மேற்கொண்டிருக்கும் தலித் மக்களுக்கு இத்தகைய வரவேற்பு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. இந்தப் பதிவு எழுதும் இந்நேரம் வரையிலும் இந்தப் பிரச்சினை இன்னும் முடியவில்லை.

 

இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் சந்திராயன் விண்கோள் நிலவுக்கு செல்வதாகப் பீற்றித் திரியும் பாரதாமாதா பக்தர்கள், தலித் சாதியில் பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு அம்மன் கோவிலுக்குள் நுழைய முடியாத இந்தக் கொடுமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்தியாவின் அளவு கோல் சந்திராயனிலா, பந்தப்புளியிலா?

http://vinavu.wordpress.com/2008/10/31/pasumponil/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்