Sun01192020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...

டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...

  • PDF

டாலரின் மதிப்பு திடீரென ஒரே நாளில் குறைந்து, உலகம் முழுவதும் டாலரை நிராகரித்தால் என்ன நடக்கும்? நிதி நெருக்கடி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகையில், எந்த நேரம் எதுவும் நடக்கலாம் என்பதால், அதன் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் VPRO, பொருளாதார செய்திகளை தாங்கி வரும் NRC Handelsblad உடன் இணைந்து, "டாலர் வீழ்ச்சியடைந்த அந்த நாள்..." என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது.

 பொருளாதாரத் துறை சார்ந்த நிபுணர்களை பேட்டி கண்டு, அவர்களது எதிர்காலம் பற்றிய ஊகங்களின் அடிப்படையில், கற்பனை கலந்து, பொது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.


டாலர் மதிப்பு திடீரென சரிவதற்கு சாத்தியமான ஒரு நிகழ்வு, பெருமளவு டாலர்களை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசியநாடுகள், அதன் மதிப்பு மேலும் குறைவதற்கு முன்னர் சந்தையில் விற்று, தமது முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள முனைவதேயாகும். அதிகாலையில் உலக சந்தை முதலாவதாக வியாபாரத்தை ஆரம்பிக்கும் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் சில வணிகர்கள் பெருமளவு டாலர்களை விற்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்போதே டாலரின் வீழ்ச்சி ஆரம்பமாகும். சிறிது நேரம் கழித்து சிங்கப்பூர் பங்குச் சந்தையிலும் அப்படி எல்லோரும் தம்மிடம் இருக்கும் டாலரை எப்படியாவது விற்றுவிட துடித்தால், அந்த சர்வதேச நாணயத்தின் பெறுமதி கணிசமாக குறையும். இது பற்றிய செய்திகள் ஐரோப்பாவில் பரவும் போது, ஏற்கனவே "டாலர் நெருக்கடி" உருவாகி விட்டிருக்கும்.

ஆரம்பத்தில் சாதாரண மக்கள் எதனையும் உணராவிட்டாலும், டாலர் மதிப்பு இறங்குவது பற்றிய செய்தி பீதியைக் கிளப்பும் வேளை, எல்லோரும் தமது கையிருப்பில் உள்ள டாலர்களை விற்றுவிட முனைவார்கள். நாணய மாற்று நிலையங்களில், அல்லது வங்கிகளில் குறிப்பிட்ட அளவு டாலர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுமென அறிப்பார்கள். கட்டுப்படுத்தப்பட முடியாவிட்டால் டாலர் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள். வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில், எல்லோரும் தமது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துவிட முண்டியடிப்பார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில், வங்கிகள் தானியங்கி இயந்திரங்களை நிறுத்தி விடுவார்கள். மக்கள் தமது கையில் இருக்கும் பணத்தை சிக்கனமாக செலவிட வேண்டி வரும்.

அமெரிக்காவில் பங்குச் சந்தை தரகர்களும், வணிகர்களும் எதுவுமே நடக்காதது போல பாவனை செய்வார்கள். இதற்கு முன்னரும் பொருளாதார நெருக்கடி வந்ததாகவும், அதிலிருந்து அமெரிக்கா மீண்டு விட்டதாகவும் சமாதானம் கூறிக்கொள்வர். ஆனால் அங்கேயும் டாலர் பெறுமதி மேலும் குறைவதை தவிர்க்க முடியாது. இதுவரை நட்பு பாராட்டி வரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு தடைவிதிப்பர். எரிச்சலடையும் அமெரிக்க ஜனாதிபதி பிற நாடுகளுடனான இருதரப்பு வர்த்தகத்தை இரத்து செய்வார். அமெரிக்கா உலகில் இருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும். நிச்சயமாக வர்த்தக உறவு முறிவடைவதை சீனா விரும்பப்போவதில்லை. தற்போது மேலாண்மை வல்லரசாகிவிடும் சீனா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும். அமெரிக்கா பொருளாதார நெருக்கடியை இராணுவப் பலம் கொண்டு தீர்க்கும் முகமாக, சீனாவை அண்டிய பசுபிக் கடல் பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகளை மேற்கொள்ளும். இத்துடன் இந்த பொருளாதாரத் திகில் படம் முடிவுறுகின்றது.

டாலர் வீழ்ச்சியடையும் ஊழிக்கால சம்பவங்கள் நிகழ்வதற்கு அடிப்படையான பொருளாதார அடிப்படை தரவுகள் என்ன? உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செய்யும் அமெரிக்காவின் செல்வாக்கு, மற்றும் டாலர் இன்றியமையாத அந்நிய செலாவணியாக மாறிவிட்டதன் விளைவுகளே அவை. இன்றைய நிலையில், அனைத்து நாடுகளும் டாலரை தமது சேமிப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது. உலக சந்தையில் குண்டூசி முதல் ஆகாயவிமானம் வரை வாங்குவதற்கு டாலர் தேவைப்படுகின்றது. மேலும் பெற்றோலின் விலை டாலரில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, சீனா உட்பட பல நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து தமது கஜானவை டாலரால் நிரப்பிக் கொள்கின்றன. இதற்காகவே தமது சொந்த நாணயத்தின் பெறுமதியை குறைத்துக் கொள்கின்றன. ஐரோப்பா கூட தமது ஐரோ நாணயம் டாலரை விட மதிப்பு கூடுவதை விரும்பவில்லை. இது ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் என அஞ்சுகின்றன.

நிலைமையை விளக்குவதற்கான உவமானக் கதை ஒன்று. ஒரு தீவில் ஐந்து பேர் மட்டும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒன்று அமெரிக்கா, மற்றயவர்கள் ஆசிய நாடுகள். மீன் பிடித்தல், உணவுப்பயிர் விளைவித்தல், கால்நடை வளர்ப்பு என ஒவ்வொருவர் தமக்குத் தெரிந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா மட்டும் இவர்கள் உற்பத்தி செய்யும் உணவை வாங்கி உண்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளது. எஞ்சும் உணவே மற்றவர்களுக்கு கிடைக்கின்றது. அவர்கள் இத்தகைய சூழலில் அமெரிக்கா இருப்பதாலேயே தமக்கு உணவு கிடைப்பதாக கருதிக்கொள்கின்றனர். இன்றைய உலகமும் அப்படிதான் இயங்குகின்றது. உலகில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு பொருட்களை அதிகம் நுகர்வோனாக அமெரிக்கா உள்ளது. உதாரணத்திற்கு உலகில் ஐம்பது வீதமான பெற்றோலை அமெரிக்காவே வாங்குகின்றது. எஞ்சிய ஐம்பது வீதத்தை மிகுதி நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.

அமெரிக்கா இவ்வாறு உலகம் முழுவதும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு கடனும் ஏறிக்கொண்டே இருக்கின்றது. அதாவது ஊர் முழுக்க கடன் வாங்கி, அந்தப் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளிடமும், நிறுவனங்களிடமும் கடன் வாங்கி தான், தனது பட்ஜெட்டை சரிக்கட்டுகின்றது. சீனா உட்பட பிற நாடுகள், அமெரிக்க கடன் பத்திரங்களை(இவை பங்குகள் போல சந்தையில் ஏலம் விடப்பட்டாலும், கடனை திருப்பிக் கொடுக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது) பெருமளவில் வாங்கி வைத்துக் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் கடன் அந்நாடுகளின் இருப்பில் இருக்கும் வேளை, டாலரின் மதிப்பு இறங்குவதோ, அமெரிக்க பொருளாதாரம் வீழ்வதையோ, அல்லது இருபக்க வர்த்தகம் தடைப்படுவதையோ யாரும் விரும்பப்போவதில்லை. இருப்பினும் அமெரிக்க பொருளாதாரம் மீதோ, அல்லது டாலர் மீதோ நம்பிக்கை இல்லாமல் போகும் போது தான் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உருவாகும்.தற்போதைய நிதி நெருக்கடியால், பங்குச் சந்தை குறியீட்டு சுட்டெண் தொடர்ந்து குறைந்து வருகையில், அமெரிக்காவில் பொருளாதார தேக்கம் உருவாகும். அது அந்நாட்டு பொருளாதாரம் வளரவில்லை என்பதன் அறிகுறி. அதன் விளைவுகளாக, அமெரிக்கா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ளும். இது ஒருவகையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, சேமிப்பு போன்ற சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதே நேரம் அமெரிக்காவின் உலக பொருளாதார ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பிற நாடுகளும் எதிர்பாராத வளர்ச்சியை காணலாம். குறிப்பாக இதுவரை காலமும் டாலரின் மதிப்பு கூடியிருந்தால் தமக்கு நன்மை(ஏற்றுமதி வர்த்தகம்) என்று நினைத்துக் கொண்டு, பல நாடுகள் உள்நாட்டு நாணய பெறுமதியை செயற்கையாக குறைத்து வைத்திருந்த நிலை மாறும். இதனால் நமது நாட்டு நாணயங்களுக்கு என்றுமில்லாதவாறு மதிப்பு அதிகரிக்கும். அவற்றின் பெறுமதி கூடுவதால், மக்களின் வாங்குதிறன் அதிகரிக்கலாம். டாலரின் வீழ்ச்சி கொடுக்கும் அதிர்வலைகள், குறிப்பிட்ட காலத்திற்கு உடனடி கலவரங்களை உருவாக்கினாலும், நீண்ட கால நோக்கில் அது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

  

"டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்" ஒளிப்பதிவை (நெதர்லாந்து மொழி) இங்கே பார்வையிடலாம் : De dag dat de dollar valt...

http://kalaiy.blogspot.com/

Last Updated on Friday, 31 October 2008 19:57