03212023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும்

ஒன்று எப்போதும் முன்னிலை பெற்ற போதும், மக்கள் இயக்கம் என்பது அந்த ஒன்றுக்குள் மட்டும் குறுகிவிடுவதில்லை.

 

ஒரு முரண்பாடு சார்ந்து ஒரு குறுகிய எல்லையில் போராட்டம் குறுகும் போது, அது இயல்பாகவே வறட்டுத்தனமாக மாறிவிடுகின்றது. இதனால் மக்களிடையே நிலவும் அனைத்தும் தழுவிய பன்முக முரண்பாடுகளை எதிராக பார்க்கின்ற அதேநேரம், அதை ஒடுக்குகின்ற போக்கும் வளர்ச்சியுறுகின்றது. உண்மையில் இந்த குறுகிய வரட்டுத்தனமான தன்மை என்பது, பிரதான முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய வகையில் பார்ப்பதை படிப்படியாக மறுத்துவிடுகின்றது.

 

பிரதான முரண்பாட்டை சுரண்டுகின்ற வர்க்கம் தலைமை தாங்குகின்ற நிலை உருவாகும் போது, அதுவே முற்றாகவே மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் பிரதான முரண்பாடு சுயநலம் சார்ந்து, அது சுரண்டும் வர்க்கத்தின் அற்ப தேவைகளை ப+ர்த்திசெய்யும் ஒரு முரண்பாடாக சீரழிகின்றது.

 

இந்த மக்கள் விரோத அரசியலை விமர்சிக்க மறுப்பவர்கள், இதற்குள் வம்பளப்பதன் மூலம் அரசியல் இழிதனத்தை கொண்டு பிழைக்கின்ற சுரண்டும் வர்க்கத்தினராகி விடுகின்றனர்.

 

பாராளுமன்ற அரசியல் கட்சிகள் முதல் பாராளுமன்றம் செல்லாத இயக்கங்கள் வரை, சுரண்டும் வர்க்க நலனை பேணுவதில் உள்ள வர்க்க ஒற்றுமையை நாம் காணமுடியும். அவர்கள் மக்களின் வாழ்வியல் அவலத்தை உருவாக்கி, அதன் மூலம் தாம் மட்டும் பிழைத்துக் கொள்கின்றனர்.

 

இந்த வகையில் ஒரு இலட்சம் மக்களை பலியிட்ட தமிழீழப் போராட்டத்தை எடுப்போம். இப் போராட்டம் 25000 பேரை விடுதலையின் பெயரிலும், 10000 பேரை துரோகியின் பெயரிலும் கொன்று குவித்துள்ளது. பல பத்தாயிரம் விதைவைகளை உற்பத்தி செய்துள்ளது. சில ஆயிரம் ஊனமுற்றவர்களை உற்பத்தி செய்தன் மூலம், சமூகமே ஊனமாக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் போராட்டத்தால் பல ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். குடும்பங்கள் பிரிந்து ஆழமாகவே சிதறிவிட்டன. சமூக சீரழிவுகள், சமூக விதையாக எங்கும் எதிலும் ஊன்றப்பட்டுவிட்டன.

 

இது மட்டுமா! இல்லை. கோடி கோடியாக சொத்திழப்பு. சொந்த மண்ணை இழந்த புலம்பெயர்வுகள். எங்கும் சீரழிந்து போன அகதி வாழ்க்கை. சொந்த மண்ணை இழந்துவிடுகின்ற துயரம். ஒரு இனம் சிதறடிக்கப்பட்டு, சீரழிகப்பட்டுவிட்டது. ஒரு இனம் தனது தேசிய அடையாளங்களுடன் வாழமுடியுமா என்றளவுக்கு மாபெரும் வக்கிரத்தை புகுத்திவிட்டனர். கண்ட கண்ட தெரு நாய்களெல்லாம், கண்ட கண்ட இடத்தில் மக்களை அடிபணிய வைத்துள்ளனர். இப்படி மக்கள் மீள முடியாத, வாழ்வின் அவலங்கள்.

 

இப்படி எத்தனை விதமான மனிதம் சார்ந்த உளவியல் துயரங்கள். அச்சம், பீதி, பயம், நித்திரை இன்மை, நம்பிக்கையீனங்கள், அவநம்பிக்கைகள், பாலியல் சிக்கல்கள், கண்ட கண்ட நாய்களுக்கு எல்லாம் சாலம் போட்டு வாழ வேண்டிய வாழ்க்கை. இப்படி எத்தனை எத்தனை மன அழுத்தங்கள். நம்பிக்கையற்ற வாழ்கை, விரக்தியே வாழ்வின் போராட்டமாகிவிட்டது. எங்கும் எதிலும் இதுவே தலைவிதி. துரோகி தியாகி என்ற எல்லைக்குள், மலடாக்கப்பட்டு விட்ட சமூகம்.

 

இந்தப் போராட்டம் இதை மட்டுமா தந்தது? இல்லை. சில ஆயிரம் முஸ்லீம் மக்களை கொன்று குவித்துள்ளது. அந்த மக்களுக்கும் முடிவற்ற அகதி வாழ்வு. தமது வாழ்ந்த மண்ணையே துறந்து விட்ட மனித அவலங்கள். இப்படி சொந்த நிலத்தை இழந்து, உழைத்த உழைப்புகளை இழந்து, சொத்தையும் இழக்க வைத்துள்ளது போராட்டம். அத்துடன் பல பத்தாயிரம் சிங்கள மக்களையே கொன்று குவித்துவிட்ட போராட்டம்.

 

இந்தப் போராட்டம் எதைச் சாதித்தது. எதைச் சாதிக்க போகின்றது? சரி மக்களுக்கு எதை பெற்றுத்தரப் போகின்றது. எதுவுமில்லை. மனித துயரத்தைத் தவிர வேறு எதையும் அல்ல.

 

இந்த அவலத்தில் இருந்து மக்கள் மீள முடியாத வகையில் விலங்குகளை போட்டபடி, ஒரே வர்க்கம் பல பெயரில் பலவிதமான குறுகிய தனது சொந்தக் கோசத்துடன், அனைத்தின் மீதும் ஆதிக்கம் வகிக்கின்றது. இந்த வகையில்

 

1. பேரினவாதிகள் சிங்கள மேலாதிக்க கோசத்துடன் புலி ஒழிப்பு பற்றி சதா ஊளையிட்டுக் கொண்டு, தமிழ் மக்களை ஓடுக்கி மேலும் மேலும் ஆக்கிரமிக்கின்றது. இதன் மூலம் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து சுரண்டுகின்றது.

 

2. புலியெதிப்பு புலி ஒழிப்புவாதிகளோ புலியை ஒழித்தால் தான், தாம் சுதந்திரமாக தமிழ் மக்களை சுரண்டி வாழவும், அடக்கவும் முடியும் என்ற கனவுடன் புலி ஒழிப்பு பற்றி உளறுகின்றனர்.

 

3. புலிகள் தமது குறுகிய இனத் தேசியவாதமாக புலித் தமிழீழத்தை வைப்பதன் மூலம், தாம் மட்டும் சுரண்டி வாழும் வர்க்க வாழ்வைக் கொண்டு, தமிழ் மக்களை இழிவான நிலைக்கு அடிமைப்படுத்துகின்றனர்.

 

4. ஏகாதிபத்தியமும், இந்தியாவும் சமாதானம், மனிதவுரிமை மீறல் என்று கூறி இலங்கையில் தலையிட்டபடி, மொத்த மக்களையும் அடிமைப்படுத்தி சுரண்டுகின்ற மனித உரிமை மீறலை நிறைவேற்றி வருகின்றனர்.

 

இந்த எல்லைக்குள் தான், தமிழ் மக்களை வழிநடத்த முனைகின்றனர். இதை மீற முடியாத வகையில், இதற்குள் தமது அதிகாரத்தைக் கொண்டு அடிமைப்படுத்தியுள்ளனர். ஒன்றுடன் ஓன்று தொடர்புடைய வகையில், மக்களை இதற்குள் சிறைவைத்து அழகு பார்க்கின்றனர். மக்களை துயரப்படுத்துகின்ற இந்த அரசியல் சகதிக்கு, இவர்கள் கவர்ச்சியாக ஜனநாயகம் மனித உரிமை, உரிமைப் போராட்டம் என்ற விதவிதமான பெயர்கள்.

 

இப்படியான அரசியல் மூலம், மக்கள் பெற்றது என்ன? கடந்த மூன்று பத்து வருடங்களாக, இந்த அரசியல் மனித அவலத்தைத் தவிர வேறு எதையும் பெற்றுத்தரவில்லை. ஏன் இனியும் இந்த அரசியல் எதையும் பெற்றுத் தரப்போவதில்லை.

 

மக்கள் எதையும் தாம் பெறவேண்டும் என்றாலும், மக்கள் தமக்காக தாமே போராட வேண்டும். இது மட்டும் தான் உண்மை! யாராலும் இதை மறுக்க முடியுமா?

 

ஆனால் இதை மறுப்பவர்கள் தான், இன்று முழு சமூகத்தையும் ஆட்டிப்படைக்கின்றனர். மக்கள் சுயமாக சிந்திக்க, செயல்பட அனுமதிப்பதில்லை. புலியொழிப்பு, புலித் தமிழீழம் மட்டுமின்றி, இரண்டுக்கும் இடையில் ஒருமைப்பாடு காணும் சமாதானம் என்று கூறியபடி, முழுச் சமூகத்தையும் இதற்குள் அடிமைப்படுத்துகின்றனர்.

 

மக்கள் தாம் சுயமாக தீர்வு காணும் அனைத்து வழியையும், சிந்தனை முறைகளையும் அடக்குகின்றனர், ஒடுக்குகின்றனர்.

 

ஏகாதிபத்தியமும், பேரினவாதிகளும், குறுந்தேசிய வாதிகளும், புலியொழிப்புவாதிகளும் எந்த முரண்பாடுமின்றி, மக்கள் சுரண்டப்படுவதை ஆதரிக்கின்றனர். அதற்கு துணையான அரசியலையும், நடைமுறையைக் கொண்டு மக்களின் அடிமை வாழ்வை பாதுகாப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். தம்மையும், தமது சந்தர்ப்பவாதத்தையும் மூடிமறைக்க, நயவஞ்சகமாக பிரதான முரண்பாட்டை தீர்த்த பின் மற்றவைகளை தீர்க்க உள்ளதாக கூறி, மற்றவற்றை பின்போடுகின்றனர். இதேபோல் சமூக ஒடுக்குமுறைகளாகவுள்ள ஆணாதிக்கம், இன முரண்பாடுகள், சாதியம், பிரதேசவாதம் போன்றவற்றை, தமது வர்க்க நலனுக்கு ஏற்ப பாதுகாத்தபடி, அதை பேசுவதையே அனுமதிப்பதில்லை. அதை தாம் தமது வழியில் தீhப்பதாக கூறிக் கொண்டு திட்டமிட்ட வகையில் பாதுகாக்கின்றனர்.

 

மக்கள் இதை எதிர்த்து வாழ முடியாது. போராட முடியாது. தம் மீதான சுரண்டலை, தம் மீதான சமூக ஒடுக்குமுறையைப் பற்றி மூச்சுக் கூட விடமுடியாது. புலியொழிப்பு வாதிகளும், புலித் தமிழீழ வாதிகளும், இரண்டுக்கும் இடையில் ஒருமைப்பாடு காணும் சமாதானவாதிகளும், மக்கள் தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைபற்றியும் பேச அனுமதிப்பதில்லை. இதைத் தான் அவர்கள் மனிதனின் சுதந்திரம் என்கின்றனர், மனிதனின் ஜனநாயகம் என்கின்றனர்.

 

இதற்கு வெளியில் மனிதம் தனது ஜனநாயகத்தையும், தனது சுதந்திரத்தையும், தனது சொந்த விடுதலையையும் கோருகின்றது. மக்களின் எதிரியோ, மக்களை ஒடுக்குகின்ற வழிகளில் அதை பாதுகாக்கின்ற அரசியல் வழிகளில் தெளிவாக எம்முன் உள்ளான். அவனை ஒழிக்கும் மக்கள் போராட்டமின்றி, மக்களின் விடுதலை கிடையாது. இது சாத்தியமற்றது என்று கூறுபவன் யார் என்று பார்த்தால், மீண்டும் அந்த எதிரி தான். அவன் வேறு யாருமல்ல, சுரண்டி வாழும் அந்த வர்க்கத்தின் பிரிதிநிதி தான். அவன் கடந்த மூன்று பத்து வருடங்களாகவே, இதைக் கூறிக் கொண்டு ஒரு சுரண்டும் வர்க்கமாகவே வாழ்கின்றான். இதன் மூலம் அந்த வர்க்கம் நடத்துகின்ற சுபீட்சமான வாழ்க்கையின் விளைவுகள் தான், இன்று எம் மக்கள் அனுபவிக்கின்ற மொத்த மனித அவலலுமாகும். இதலிருந்து மீள்வதற்காக சிந்திப்பதும், போராட முனைவதையும் விட மாற்று வழிகள் எதுவும் கிடையாது.

பி.இரயாகரன்
05.08.2007


பி.இரயாகரன் - சமர்