05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

நாடு தாண்டித் துருக்கிய இனவாதம்…

பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சி: துருக்கியப் பாசிஸ்டுக்களின் குர்தீஸ் இனமக்கள்மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்.

கடந்த புதன் 15.10.2008 இல் இருந்து வரும் ஞாயிறு 19.10.2008 வரை அறுபதாவது புத்தகக் கண்காட்சி பராங்பேர்ட்பெருநகர்-ஜேர்மனியில் நடந்து வருகிறது.

 

 

(BUCHMESSE: Angriff auf drei kurdische Stände durch türkische Nationalisten
Kurdischer Stand auf Frankfurter Buchmesser von türkischen Nationalisten angegriffen -

http://www.stattweb.de/baseportal/NewsDetail&db=News&Id=3878

இவ்வாண்டுக்கானப் புத்ததகக்கண்காட்சிக்குக் கௌரவ விருந்தினராகத் துருக்கிய நாடு அந்தப் புதத்ததக் கண்காட்சியரங்கில் வீற்றிருக்கிறது.ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்புக்கும்,கைத்தொழில் உறவுக்கும் துருக்கி முக்கியமானவொரு இடத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறது.எனினும்,துருக்கிய அரசும்,அதன் குடிகளும் இன்னும் பழமைவாதப் பொற்காலக் கனவுகளுக்கும்,இன-மத வாதத்துக்குள்ளும் கட்டுண்டே கிடக்கிறது-கிடக்கிறார்கள்!


இத்தகைவொரு நாட்டை முன்னிலைப்படுத்தி அதைக் கௌரவ விருந்தினராகக் கௌரவப்படுத்திய ஜேர்மனிய நலன்கள் வெவ்வேறு நோக்குக்குட்பட்டது.

 

இந்தத் துருக்கிய தேசத்தினது,பழமைவாதப் போக்கில் சிக்குண்ட துருக்கியர்கள் மிகவும் கீழ்த்தரமாகச் சிதைந்து இனவாதிகளாகவே இருக்கிறார்கள்.இத்தகைய இனவாதம் துருக்கியில் மேலோங்கியிருப்பதற்கான காரணம் என்னவென்பதைக் குறித்து யோசிக்க வைத்த நிகழ்வொன்று நேற்று 16.10.2008 பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியரங்கு -5 இல் நடந்தேறியுள்ளது.

 

 

இதே அரங்கத்தில் குர்தீஸ் மக்களின் இலக்கிய மற்றும் பண்பாட்டு நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வாங்குகள் உலகத்தின் பல்வேறு நாடுகளைப்போலவே மிடுக்கோடு நூல்களைத் தாங்கி இருக்கிறது.இது,ஜனநாயகபூர்வமானவொரு செயற்பாடு.ஜேர்மனியப் புத்தகக் கண்காட்சியில் குர்தீசியப் பண்பாட்டு மற்றும் இலக்கிய நூல்களைக் கண்காட்சிக்கு வைப்பதைத் தடைசெய்யும்படி துருக்கிய அரசும் அதன் தூதுவராலாயமும் கேட்டும், ஜேர்மனியத் தேசம் அதைப் பொருட்படுத்தித் தடை செய்யவில்லை.இது,துருக்கியத் தேசத்தின் ஜனநாயக விரோதத்தனமான வேண்டுகோள் என்பதை எல்லோருமே அறியமுடியும்.


இனவாதிகளாகச் சீரழிந்த துருக்கிய அரசும் அதன் மக்களும் எனக்கு இலங்கையச் சிங்கள அரசையும் அதன் பெரும்பகுதி இனவாதிகளையும் கண்முன் நிறுத்துகிறது.எந்தத் தேசத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு நிலவுகிறதோ அங்கே,வாழ்கின்ற ஒவ்வொரு குடி-மகளும்,மகனும் இனவாதத்தீயில் எரிந்து மனித முகத்தைக் கருக்கியே வைத்துள்ளார்கள்.இன்று, இடம்பெறும் பற்பல இனவாதச் செயற்பாடுகளும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான வாழும் தகமையை இத்தகைய இனக் குழுக்களிடம் விட்டுவைக்கவில்லை-இஃதை,இத்தகைய மூடர்கள் அறியவுமில்லை!

 

துருக்கியத் (வி)தேசியவாதம் என்பது துருக்கியில் சிறுபான்மை இனங்களை வேரோடழிக்கும் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக்கொண்டியங்குவதாகவே இன்றந்தத் தேசத்துள் இருக்கிறது.இது,அப்பாவிக் குர்தீஸ் மக்களின் புத்தகக்கண்காட்சி அரங்கைச் சிதறடித்து,நூல்களைக் கிழித்தெறிந்து,அந்த மக்களின் கல்வியாளர்களை-பார்வையாளர்களைத் தாக்கி அவமானப்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் பெரும்பான்மையாக வாழும் வெளிநாட்டார்களில் துருக்கியே முதலிடத்தில் இருக்கிறது.இந்தவினம் ஜேர்மனியில் தாம் நாளாந்தக் காரியமாற்றத் துருக்கிய மொழியை இரண்டாவது நிர்வாக மொழியாக்கவும்,தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கவும்,ஜேர்மனியக் காரியலாயங்களில்,பாடசாலைகளில்-பல்கலைக்கழகங்களில் மொட்டாக்குப்போட்டபடி முகத்தைப் புதைக்கவும் உரிமைகேட்டபடித் தமது தேசத்தில் குர்தீஸ் மக்களை இவற்றையெல்லாம் அநுபவிக்கத் தடுத்துப் பலாத்தகாரஞ் செய்கிறது.இது, கொடுமையிலும் கொடுமை.இலங்கை இனவாத அரசின் அத்தனை கோர முகத்தையும் இந்தத் துருக்கியும் தாங்கியுள்ளது!

 

துருக்கிய இனவெறியர்கள்,தமது “தாயகத்தை” இரண்டாகப் பிரிக்கும் குர்தீஸ் பண்பாட்டு மற்றும் சிந்தனைகளை அநுமதிக்க முடியாதென்று ஜேர்மனியிலேயே இத்தகைய ஒடுக்குமுறையில் இறங்குகிறார்களென்றால் துரக்கியில் எத்தகைய நிலைமைக்குள் குர்தீஸ் இனமக்கள் வாழ்கிறார்கள் என்பதை நாம் இலகுவாக அறியமுடியும்!

 


சிங்கள அரசு தமிழர்களைப்படுத்தும் பாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளும் உள்ளடக்கமாகவே நிகழ்ந்ததென்பதற்கு யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராட்சி மாநாட்டையும்,ஆசியாவின் தலை சிறந்த நூல்நிலையமான யாழ்பாண நூல் நிலையத்தையும் விழிமுன் நிறுத்திப் பார்க்கிறேன்.இனவாதத் தேசங்களின் அடிப்படையொற்றுமையானது கிட்லரின் 1938 ஆம் ஆண்டு நூல் எரிப்புப் போராட்டத்தோடு மிகவும் நெருங்கிவருவது என்பது உண்மையாகவே விரிகிறது.இத்தகைய பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட துருக்கிய இனவாத அரசு, எந்தவொரு பொழுதும் ஜனநாயகத்தைச் சுவாசித்ததே கிடையாது.இந்தத் தேசத்தில் உழைப்பவர்களையும்,அவர்களது தொழிற் சங்க உரிமைகளையும் இஸ்லாத்தின் பெயரால் காவு கொள்ளும் இந்தத் துருக்கி உலகத்தின்முன் அம்மணமானவொரு தேசம்.இந்தத் தேசம் இத்தைகய இழி இனவாதத்தை அரசியல் நாகரீகமுள்ள சமுதாயத்தில் கட்டவிழ்த்து விடுவதை உலகத்தின் திறந்த சமுதாயமாகக் காட்டிக்கொள்ளும் ஜேர்மனிய அரசு திட்டமிட்டு மறைத்துவிட்டது.(Die deutschen Medien, die anscheinend sonst über alles was der Partner Türkei auf der Buchmesse zu präsentieren hat berichtet ignoriert diesen Übergriff. Dieses Schweigen sollte nicht hingenommen werden. -http://de.indymedia.org/2008/10/229752.shtml)அதன் மகாப்பெரிய ஜனநாயக் குரல்களான வர்த்தக ஊடகங்களும் மறைத்துவிட்டன.

 

எங்கேயும்,என்ன விரோதம் நிகழினும்,அது பொதுவாக மக்கள் விரோதமாக இருக்கும் எல்லாச் சந்தர்ப்பத்திலும், இத்தகைய ஊடகங்கள் மௌனமாக அடக்கி வாசிக்கின்றன.இதைத் தமிழகத்து ஊடகங்களிலிருந்து ஐரோப்பிய ஊடகங்கள்வரை இனம் காணத் தக்கதாகவே இருக்கிறது.அப்பாவித் தமிழ்பேசும் மக்களின் பேரழிவைக்கண்டும் மௌனம் சாதித்த தமிழக ஊடகங்கள்போலவேதான் இன்றைய மேற்குலக ஊடகங்களும் இந்தப் பாசிசத் தாக்குதலை மறைத்துள்ளார்கள்.

 

என்றபோதும்,எங்கேயும் மாற்றுக் கருத்துகளுக்காகத் தமது உயிரையே தாரவார்க்கும் ஊடக நாணயத்தைக் கொண்டியங்கும் இடதுசாரிகள் இந்தப் பாசிசத்தாக்குதலையும், அதன் மக்கள் விரோதப் போக்கையும் கண்டித்துச் செய்தி வெளியுட்டுள்ளார்கள்.இடசாரிய-மாற்றூடகங்களில்மட்டுமேதான் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது!

 

இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கும் புல(ன்)ம்பெயர்”தமிழ் மாற்றுக்கருத்து-இடது-வலதுகள்”எல்லாம் இலங்கையின் இதே பாணியிலான அனைத்துவகைக் கடந்தகால அட்டூழியத்தையும் மண்ணால் மறைத்துத் தமது நியாயங்களை அடுக்கும்போது,குர்தீஸ் மக்களின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட துருக்கிச் சர்வதிகாரத்தைத் தோலுரித்துக்கொண்டிருக்கும் ஜேர்மனிய இடதுசாரிய ஊடகங்களை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.

 


இத்தகைய நிலைமைகள் எங்கெங்கு நிலவுகிறதோ அங்கே,இனங்களுக்கிடையிலான சகோதரத்துவம்,சமவுரிமையும் கிடையவே கிடையாதென்பதற்குத் துருக்கிய இனவாத நாடு மட்டுமல்ல இலங்கையும் நமக்கு நல்ல சான்றே!

 

நாடு தாண்டித் துருக்கிய இனவாதம் துருக்கியச் சிறுபான்மைக் குர்தீஸ் மக்களை வேட்டையாடுவதுபோல், இலங்கையின் இனவாதமானது நாடுகள்,கண்டங்கள் தாண்டி இலங்கைச் சிறுபான்மை இனமான தமிழ்பேசும் மக்களையும் வேட்டையாடி வருகிறது.இரண்டும் ஒவ்வொரு முறைமைகளோடு இச் சிறுபான்மை இனங்களை வேட்டையாடும்போது உலகமே வேடிக்கைபார்க்கிறது!

 

இந்த நிலையில் போராடும் சிறுபான்மை இனங்கள் மீளவும்,மீளவும் இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஆயுதத்தை எடுப்பதைத்தவிர வேறுவழியில்லை!இத்தகைய பண்பை வளர்ப்பதே இத்தகைய இனமேலாதிகச் சர்வதிகாரமே.இலங்கையே இனமேலாதிகத்தைச் சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்களிடம் மிகச் சாதுரியமாகத் திணித்படி, அவர்களது சுயநிர்ணயப்போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப் புலிகளும் தமது தவறுகளால் ஏதோவொரு வழியில் உடந்தையானர்கள்.குர்தீஸ் மக்கள் இதிலிருந்துவிடுபட்டு, ஓரணிக்குள் திரள்வதுபோன்று தமிழ்பேசும் மக்கள் திரளும் நிலையுருவாகுமென்று நாம் கனவே காணமுடியாதுள்ளது.இது, நமது அழிவின் காலம் நெருங்கிவிட்டத்தைக் காட்டுகிறது.

 

குர்தீஸ் மக்களைத் துடைக்க முனையும் துருக்கிய இனவாதம், அவர்களுக்கானவொரு தேசத்தை இந்த நூற்றாண்டில் துருக்கியில் பிரசவிக்கும் என்பது உண்மையானது-நமது இலங்கையில்… நிச்சியம் நாம் காட்டிக்கொடுக்கப்ட்டு இலங்கைச் சிங்கள மேலாத்திகத்தால் பூண்டோடு அழிக்கப்படுகிறோம். :-

 

உடைப்புக்காக,
ஸ்ரீரங்கன்
17.10.2008


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்