எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. “தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்” என்று கொக்கரிக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகா.
இராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து மவனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.
ஆனால் ராஜபக்ஷே ஆர்ப்பட்டமாய் முழங்குகிறார், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா சொல்லவில்லை என்று ! அரசாங்ககளுக்கிடையில் இப்படி புரிந்துணர்வு வெளிப்படையாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மீண்டும் ஈழம் குறித்த கவலை - முன்பு போல இல்லையென்றாலும் - எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதம், வைகோவின் ஆர்ப்பாட்டம், திரையுலகின் ராமேஸ்வரத்து கூட்டம், தி.மு.கவின் மனித சங்கிலி, அப்புறம் கருணாநிதியின் ராஜினாமா மிரட்டல்….தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஈழத்தின் அலறல் தமிழகத்தை இலேசாக உலுப்பியிருப்பது உண்மைதான்.
எழும்பியிருக்கும் இந்த உணர்வு உண்மையிலேயே ஈழத்தின் அவலத்தை துடைக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும், தமிழின ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘இந்தியா தலையிடவேண்டும், போரை நிறுத்த வேண்டும்’ என்பதே! ஈழத்துப் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமை வகிப்பது போலவும் இக்கோரிக்கையை வற்புறுத்தினால் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலளிக்கலாம் என்பதும்தான் இந்த கோரிக்கையின் உட்கிடை.
இந்தியா அல்லது இந்திய அரசு என்பது என்ன? இது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் அல்லது முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தின் நலனைத்தான் இந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் கோரும் நலன்தான் இந்தியாவின் அயுலறவுக் கொள்கைகளை வழிநடத்தும். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பதோ, ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதோ, அணு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாகத் நெளிவதோ இப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் ஆசியுடன் தெற்காசியாவின் பிராந்திய வல்லராசகத் திகழவேண்டும், அதை ஒரு பொருளாதார வர்த்தக வலையமாக மாற்றி சந்தையை இந்திய தரகு முதலாளிகளுக்கு திறந்துவிடவேண்டுமெ என்பதுதான் இந்தியாவின் இலக்கு. இந்த நோக்குதான் இந்திய இலங்கை உறவை வழிநடத்துகிறதேயன்றி அடிபட்டுச் சாகும் ஈழத் தமிழ் மக்களின் அவலமல்ல. ஒரு ஐம்பதாண்டு இந்திய இலங்கை உறவின் வரலாற்றைப் பார்க்கும்போது இந்த ராஜாங்க ரகசியம் புலப்படும்.
60களில் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தப்படி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களை உழைத்தும் உயிரைக்கொடுத்தும் உருவாக்கிய தொழிலாளிகள் ஒரிரவில் அனாதைகளாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கு விரட்டப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்மக்களின் நலனுக்கு ஆதரவாக இந்தியா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? பாகிஸ்தான், சீனப்போர்களைத் தொடர்ந்து அன்று இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவு தேவைப்பட்டதால் இந்த அநீதியான கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்தியாவின் நலனுக்காக தமிழனின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இதுதான் மலையக இந்தியத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட கதை!
70களில் இலங்கையில் இப்போது சிங்கள இனவெறிக் கட்சியாக சீரழிந்துபோன ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி கட்சி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்தியபோது அதை அடக்குவதற்கு இந்தியா படையும், ஆயுத உதவியும் செய்தது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது “இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்யமாட்டோம்” என்று காங்கிரசு கட்சி அறிவிக்கிறதே அப்போது மட்டும் இந்தத் தலையிடாமைக் கொள்கை எங்கே போயிற்று? இலங்கையை தொடர்ந்து தனது செல்வாக்கில் வைத்திருக்கவே இந்திய அரசு இந்த உதவியைச் செய்தது.
அதன் பிறகு பாகிஸ்தானைத் துண்டாடி வங்கதேசத்தை உருவாக்க இந்திய இராணுவம் தலையிட்டது. அன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசைச் சரிக்கட்டிக் கொள்வதற்காக கச்சத்தீவு இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். பெரிய தீவை தனது செல்வாக்கில் வைக்க சிறிய தீவு தாரைவார்க்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவருகே மீன் பிடிக்கும் தமிழகத்து மீனவர்கள் காக்கை குருவி போல இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுதானே அச்சாரம்?
83 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு ஈழத்தில் போராளிக் குழுக்கள் தலையெடுத்த போது அந்தக் குழுக்களுக்கு இராணுவப்பயிற்சி அளித்து, ஆயுத உதவியும் செய்து ஆதரித்தது இந்திரா அரசாங்கம். இதையும் ‘ஈழ விடுதலைக்கு இந்தியா செய்த உதவி’ என்று இன்றைக்கும் உளறுபவர்கள் இருக்கின்றனர். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஈழம் விடுதலை அடைந்திருக்கும் என்று பேசித்திரியும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.
கச்சத்தீவைக் கொடுத்ததும், மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்ததும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைகள். 83 இல் போராளிகளை ஸ்பான்சர் செய்தது மிரட்டல்!
இரண்டு எதிரெதிதர் நிலைகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான். அன்று ரசிய ஆதரவு முகாமில் இந்தியா இருந்ததும், இலங்கை அமெரிக்க ஆதரவு முகாமிலும் இருந்தது. உலகு தழுவிய பனிப்போர் சூழலில்தான் இந்த ‘ஸ்பான்சர்ஷிப் முடிவு’ எடுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
இலங்கையை மிரட்டி தனது செல்வாக்கில் வைத்திருக்கும் பொருட்டே இந்திரா காந்தி போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தார். நிச்சயமாக இது ஈழத்தமிழரின் விடுதலைக்காக செய்யப்பட்டதில்லை. மேலும் இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றமுடியாத வடுவாய் பதிந்திருக்கும் பல சீரழிவுகளுக்கும் இந்திராவின் இந்த ஸ்பான்சர் புரட்சி வழி ஏற்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் விடுதலையை சாதிக்கலாம் என்ற பிரமையை ஈழத்தின் இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த இந்திய உளவுத் துறை, அதன் பொருட்டு பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் கடத்துவது, சக குழுக்களை அழிப்பது போன்ற சதிகளையும் சொல்லிக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் தமது இருப்பை மட்டும் உறுதி செய்வதற்கு மற்ற குழுக்களை ஈவிரக்கமின்றி துடைத்தழித்தனர். இப்படியாக தனது தெற்காசிய மேலாதிக்க நோக்கத்துக்காக இந்திய ஆளும் வர்க்கம் நடத்திய சூதாட்டத்தில், ஈழத்தின் எதிர்காலம் பகடைக்காய் ஆக்கப்பட்டது.
ஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும். அன்றைக்கு ஈழத்தின் போராளிக்குழுக்களை இந்திய உளவுத் துறைகள்தான் வழிநடத்தின என்பதிலிருந்து அந்தக்குழுக்களின் அரசியல் தரத்தை புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாக சொந்தநாட்டின் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் தேவையை, நிர்ப்பந்தத்தை இந்த குறுக்கு வழி ரத்து செய்து விட்டது.
இப்படி இந்தியாவால் மிரட்டப்பட்ட இலங்கை, அன்று ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவும் தொலைநோக்கில் இந்தியாவை ஈழ விடுதலைக்கு எதிராக நிறுத்துவதற்கு உதவும் என்று ஜெயவர்த்தனே-பிரேமதாசா கும்பல் புரிந்து கொண்டது. இந்திராவின் மரணத்திற்கு பிறகு இந்தி சினிமா ஹீரோவைப் போல வந்திறங்கிய ராஜீவ், ஈழத்தமிழர்கள் சார்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டார். அதை வைத்து இலங்கையை நிரந்தரமாக இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ளலாம் எனவும் இந்திய ஆளும் வர்க்கம் கணக்குப் போட்டது. இதே ஒப்பந்தத்தை வைத்து ஈழவிடுதலைக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் வழியை யோசித்தார் ஜெயவர்த்தனே.
திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் - ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. அதை அமல் படுத்தும் சாக்கில் தெற்காசிய நாட்டாமையின் இராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதோடு ஆதரித்து ஈழமக்களுக்கு துரோகமிழைத்தன. ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இந்தியாவின் தலையில் கட்டியதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை திருப்புவதில் வெற்றிபெற்றது இலங்கை அரசு.
இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போர் துவங்கியது. சில நாட்களில் புலிகளை முடித்துவிடலாம் என்று அதிகரா வர்க்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய ராணுவம் 1500 வீரர்களைப் பலி கொடுத்தது. போரில் வெல்ல முடியாத ஆத்திரத்தை அப்பாவி தமிழ் மக்களை கொல்வதிலும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதிலும் தீர்த்துக் கொண்டது. இறுதியில் மூக்கறுபட்ட இந்திய ராணுவம் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா திரும்பியது. அதன் பின் ராஜிவ் கொலை செய்யப்பட்டார். இதை வைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்து தமிழ் நாட்டில் ஈழம் என்று சொன்னாலே கைது செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டது.
ராஜிவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிரான நிலைக்குச் சென்று விட்டதாகப் பலரும் பேசுகின்றனர். இது கடைந்தெடுத்த பொய்யாகும். சோ, சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கூட்டமும் ஊடகங்களும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ராஜீவின் மரணத்தை மிகப்பெரிய தேசிய அவமானமாக சித்தரித்துக் குமுறுகிறார்கள்.
இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். அதுவும் கூட கொலை முயற்சிதான். இதற்காக இந்தியா இலங்கை மீது படையெடுத்ததா என்ன? அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா? இரண்டுமில்லை. அந்த சிப்பாய் தண்டனைக்காலம் முடிந்து தற்போது வெளியே வந்துவிட்டான். ராஜீவ் கொலை செய்யப்படாவிட்டாலும் புலிகள் விசயத்தில் இந்தியா இதே நிலையைத்தான் எடுத்திருக்கும்.
“தமிழர்கள் படற துன்பத்தைப் பார்த்து, ஏதோ நல்லது பண்லாம்னு எங்க ராஜீவ் காந்தி முயற்சி பண்ணாரு. அவரையே கொன்னுட்டீங்க, இனிமே நீங்க எக்கேடு கெட்டுப் போங்கப்பா. உங்க சங்காத்தமே வேணாம்” என்று இந்தியா மனம் வெறுத்து ஒதுங்கி விட்டதைப் போல காங்கிரஸ்காரர்கள் பேசுவதைக் கேட்கையில் ரத்தம் கொதிக்கிறது. “ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை மனசுல வச்சுக்காதீங்க, நீங்க தலையிட்டு பாத்து செஞ்சாதான் உண்டு” என்ற பாணியில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இந்திய அரசிடம் மன்றாடுவதைப் பார்க்கும் போதோ குமட்டுகிறது.
அப்படியெல்லாம் ‘மனம் நொந்து’ இந்தியா எந்தக் காலத்திலும் ஒதுங்கி விடவில்லை. எனவேதான் அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதையும், ஆயுதங்கள் தருவதையும் இந்தியா தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு அது அவசியம்.
காஷ்மீரிலும், வடகிழக்கிலும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்குமா? தனது மேலாதிக்க நலனுக்காக தமிழக மீனவர்களை ஆண்டு தோறும் இலங்கைக் கடற்படைக்கு காவு கொடுத்து வரும் அரசு, ஈழத்தமிழனின் உயிரைக் காப்பாற்றுமா?
புலிகள் ஈழம் கேட்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கமோ தெற்காசியாவைக் கேட்கிறது. இதில் எந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் மன்மோகன் சிங்? சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அவர் பேசியதைப் படித்துப் பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் அனைத்தையும் சேர்த்து தெற்காசிய சுதந்திரப் பொருளாதார மண்டலமாக்கி, எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே நாணயத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மன்மோகன் பேச்சின் மையப்பொருள்.
உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகப் பணக்கொழுப்பு பெருகி ‘சந்தை … சந்தை’ என்று தினவெடுத்துத் திரியும் அம்பானிக்கும், டாடாவுக்கும், மித்தலுக்கும் தெற்காசியாவை வாங்கித் தருவதற்கு இந்திய அரசு வேலை செய்யுமா, தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்கு வேலை செய்யுமா?
“வங்காளிகளுக்கு பங்களாதேஷ் வாங்கிக் கொடுக்கவில்லையா?” என்கிறார் கருணாநிதி. “அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே?” என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது. அன்றும் வங்காளிகளுக்கு தனி நாடு பெற்றுத்தருவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. பாகிஸ்தானை உடைப்பதுதான் அன்று இந்தியாவின் நோக்கம். நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பொசிந்தது - வங்காள தேசம் பிறந்தது. புல்லுக்கு நீர் இரைப்பது இந்தியாவின் நோக்கமாக அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை.
“இலங்கைக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் கொடுக்கிறார்கள். அதைத் தடுத்து இலங்கையை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரவேண்டுமானால், நாம் ஆயுதம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்பதுதான் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்வைக்கும் வாதம். “அப்படி நீங்கள் கொடுத்தாலும் எசமானே, சிங்களவன் உங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டான். தமிழன்தான் விசுவாசமாக இருப்பான். பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையில் இறங்கிவிட்டால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காகவாவது தமிழ் ஈழத்தை ஆதரியுங்கள்” என்பது இங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் எதிர்வாதம். இது எதிர்வாதமல்ல, அதே வாதம்தான் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. சிங்கள அடிமைத்தனத்துக்கு மாற்றாக இந்திய அடிமைத்தனத்தை சிபாரிசு செய்யும் இந்தக் கோரிக்கை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது என்பது உரைக்கவுமில்லை.
“இதெல்லாம் ஒரு தந்திரம். நாங்கள் இந்திய அரசிடம் ஏமாந்து விடுவோமா என்ன” என்று இந்தப் புத்திசாலிகள் நம்முடைய காதில் கிசுகிசுக்கிறார்கள். இதே வசனத்தைத் தான் இந்திய உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகள் 1983 இல் பேசினார்கள். கேட்டோம். தந்திரத்தில் வென்றது யார் என்பதையும் அனுபவத்தில் கண்டு விட்டோம். மறுபடியும் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் அதே தந்திரம்!
நம்முடைய தமிழ் உணர்வாளர்களுக்குக் கம்யூனிசத்தைக் கட்டோடு பிடிக்காது என்பது தெரிந்த கதை. இருந்தாலும் தொடர்ந்து வங்காளதேசத்தை உதாரணம் காட்டும் அவர்கள் ஒரு மாற்றத்துக்கு நேபாளத்தைப் பார்க்கலாமே! ‘நேபாளத்தில் மன்னராட்சி தொடரவேண்டும்’ என்பதற்காக இந்தியா செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. நேபாளத்துக்கு ஆயுத சப்ளை இந்தியாவும், அமெரிக்காவும்தான். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஆன உதவிகளையெல்லாம் இந்தியா செய்தது. பிறகு ‘மாவோயிஸ்டுகளுடன் சேராதீர்கள்’ என்று ஏழு கட்சிக் கூட்டணியை மிரட்டியது, தாஜா செய்தது. கூட்டணி அமைந்த பிறகு அதனை உடைக்க கொய்ராலாவைத் தூண்டி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்திலும், முன்னாள் காஷ்மீர் மன்னர் கரண்சிங்கை அனுப்பி, மன்னராட்சியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. பிறகு தேர்தலில் மாவோயிஸ்டுகளைத் தோற்கடிக்க தெராய் பகுதியில் தனிநாடு கோரிக்கையைத் தூண்டி விட்டு அவர்ளுக்கு ஆயுதமும் கொடுத்தது.
ஜனநாயகத்துக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கூறிய விளக்கம் என்ன? “நாம் மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், நேபாள மன்னர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவார்”. இந்த விளக்கத்தின் சொற்களை மட்டும் மாற்றிப் பாருங்கள். “நாம் சிங்கள அரசை ஆதரிக்காவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்”.
இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிக்கும் மேலாதிக்கக் கண்ணோட்டம் இப்படித்தான் தனது விளக்கத்தைக் கூறி வந்திருக்கிறது. இந்த விளக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமானால், உடம்பில் ஜனநாயக ரத்தம் ஓட வேண்டும். வெறும் தமிழ் ரத்தம் மட்டும் ஓடும் தமிழர்களால் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது.
“எங்களை ஆதரியுங்கள். மன்னரைக் காட்டிலும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்கிறோம்” என்று நேபாள மாவோயிஸ்டுகள் தமது நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிடம் இறைஞ்சவில்லை. புலிகளைப் போல நவீன ஆயுதங்கள், விமானப்படை, புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி, வானொலி, வானொளி .. எதுவும் அவர்களிடம் இல்லை.
“ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை, இத்தகைய ராஜ ‘தந்திரங்கள்’ தெரியாத காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்களோ!
தந்திரங்களால் எந்த நாடும் விடுதலை அடைய முடியாது. அப்படி அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டாலும் அது விடுதலையாக இருக்காது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.
குறிப்பு:
‘இலங்கையில் இந்தியாவின் நலன்கள்’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை. இலங்கையில் டாடாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு, டி.வி.எஸ், மகிந்திரா, பஜாஜ் வாகனங்களின் சந்தை எவ்வளவு, எண்ணெய்க் குதங்கள் எத்தனை, இன்னும் தனியார் துறை-பொதுத்துறை நலன்கள் என்னென்ன என்ற விவரங்களை ஈழத்தமிழ் வாசகர்கள் அறியத் தந்தால் இந்தியத் தமிழர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க உதவியாக இருக்கும்.
இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆற்றிய அமைதிப் பணிகள், இந்திய உளவுத் துறையால் சீர்குலைக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் கதைகள் ஆகியவற்றையும் நினைவு படுத்தினால், பாரத மாதா பக்தர்கள் கொஞ்சம் புத்தி தெளியக்கூடும்.
“நேபாள மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவைத் தொழில் தொடங்க அழைக்கவில்லையா?”
என்பன போன்ற கேள்விகளுடன் எதிர்வாதத்துக்கு சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும். முதலில் கூரையேறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம். ‘வானமேறி வைகுந்தம் போகும் வழி’ பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.