அரசியல் ஈடுபடுபவர்கள் அனைவருமே, மக்கள் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துகின்றனர். இதே போல் சமூகம் சார்ந்து தன்னார்வமாக செயல்படுபவர்களும் கூட, தாமும் மக்களுக்காக செயல்படுவதாக கூறுகின்றனர்.

 இப்படி மக்களுக்காக தாம் செயல்படுவதாக காட்டிக் கொள்வதன் மூலம், மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே இன்றைய அரசியலாகிவிட்டது.

 

இதற்காக சலுகைகள், ஆசைகாட்டுதல், மோதவிடுதல், எதிரிகளை கற்பித்தல், வன்முறைக்கு ஏவுதல் என்று பலவிதமான அற்பமான இழிவான உத்திகளை கையாளுகின்றனர். உள்ளொன்றும் புறமொன்றாகவும் செயல்படுவதே, நாகரிகமான மக்கள் செயல்பாடாகி விடுகின்றது. இதையே ஜனநாயகம் என்கின்றனர்.

 

இது இலங்கை முதல் உலகம் வரையிலான, பொதுவான ஒன்றாகிவிட்டது. மக்கள் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதுமே பொதுத் தொண்டாகவும், என் அதுவே ஜனநாயக அரசியலுமாகிவிட்டது. இது இயல்பான ஒன்றாகவும், இது இன்றி இவையில்லை என்ற நிலைக்குள், மனித உணர்வுகளை சிதைத்துவிட முனைகின்றனர்.

 

உண்மையில் இவர்கள் உருவாக்கும் சமூக விளைவுகளை பொறுப்பு ஏற்பது கிடையாது. அதற்காக மனம் வருந்துவதும் கிடையாது. மனித சிதைவுகளையும், மனித அவலங்களையும் உருவாக்குகின்ற ஒழுங்கில், மக்கள் பற்றிய பொய்மையான கபடத்தனமான ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

இதன் பின்னணியில் அவர்களுக்கு என்று சொந்த வர்க்க நலன்கள் உண்டு. இதை பாதுகாக்கவே, இதைப் பெறவே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். மக்களின் அடிமை நிலைதான், இவர்களிள் வாழ்வாகின்றது. இது இந்த அரசியல் அரங்கில் வெளிப்படையானது. மக்கள் எந்தளவுக்கு அடிமையாக்கப்படுகின்றனரோ, அந்தளவுக்கு சிலருக்கு மேலானதும் உயர்வானதுமான வாழ்வு கிடைக்கின்றது. இதுவே எதார்த்த உலக உண்மை.

 

ஆகவே இவர்களுக்கு மக்கள் தேவைப்படுகின்றனர். இதனால் மக்கள் என்ற பதத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில், இவர்கள் வெட்கப்படுவது கிடையாது. எந்த சுய கழிவிரக்கம் கூட கொள்வது கிடையாது.

 

மக்களை இனமாக, மதமாக, சாதியாக, மொழியாக, நிறமாக, பாலாக, பிரதேசமாக பற்பல விதத்தில் பிளப்பதில், மக்கள் என்ற பதத்தை குறுகிய எல்லையில் குறுக்காக பிளக்கின்றனர். இதற்கு அவர்கள் இயற்கை சார்ந்த பிளவுகளை, நீண்ட வாழ்வு சார்ந்த வாழ்வியல் பிளவுகளை, மனித முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, மனித குலத்தை பிளந்து ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்திவிடுகின்றனர். ஒரு கூட்ட மக்களை மற்றொரு கூட்டத்துக்கு எதிராக நிறுத்திவிடுகின்றனர். இதற்கு அமைவாகவே மக்கள் என்ற சொல்லை, மிக இழிவாக கேடுகெட்ட வகையில் பயன்படுத்துகின்றனர்.

 

ஒரு பகுதி மக்களுக்கு எதிராக, தன் தரப்பு மக்களை வெறி ஊட்டி விடுகின்றனர். இதன் மூலம் தமது வர்க்க நோக்கில், சுரண்டுவதே அன்றாட நிகழ்ச்சியாகிவிடுகின்றது. இந்த எல்லைக்குள் உணர்வுபூர்வமான தலையீட்டை, அணிதிரட்டலை உருவாக்குவதன் மூலமே, அரசியல் முதல் தன்னார்வ நிறுவனங்கள் வரை மக்களை பிளந்து இயங்குகின்றன.

 

மக்கள் இப்படி இதற்குள் பந்தாடப்படுகின்றனர். மக்கள் சாதியாக, மதமாக, இனமாக, மொழியாக, நிறமாக மோதவிடப்படுவதன் மூலம், தமக்குள் உள்ள வர்க்க ரீதியான மோதலை மறைக்க முனைகின்றனர். அதாவது மற்றொரு சமூகம் மீதான சமூக மோதலாக மாற்றிவிடுகின்றனர். இப்படி இரண்டு மக்கள் கூட்டத்தை மோதவிட்டு, மக்களின் பின் சுரண்டும் வர்க்கம் குளிர்காய்கின்றனர்.

 

மக்கள் கூடிவாழ்வதை மறுத்து, மக்களை பிளந்து அவர்கள் தமக்குள் முரண்பாடுகளுடன் வாழவைப்பதை பாதுகாக்கின்ற அரசியலைத் தான், ஜனநாயகம் என்கின்றனர். ஜனநாயகம் என்பது மக்கள் பிளவுக்குள்ளாக்கி வாழ்வதையும், அதைப் போற்றிப் பாதுகாப்பதுமே என்றாகிவிட்டது. மக்கள் என்ற பதத்தை இதற்குள் பயன்படுத்துவதில் உள்ள மோசடித்தனம் தான், பொதுவான வாழ்வியல் சமூக ஒழுங்காகிவிடுகின்றது.

 

சமூகத்தை தனிமனிதனுக்கு எதிராக நிறுத்தி தனிமனிதன் சமூகத்தை சுரண்டுவது போல், மக்கள் கூட்டத்தை மற்றொரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக நிறுத்தி சிலர் சுரண்டுகின்றனர். சமூகத்தையும், மக்கள் கூட்டத்தையும் எதிராக நிறுத்துவதில் தான், சுரண்டும் வர்க்கத்தின் வாழ்வும் அதன் ஜனநாயகமும் உள்ளது.

 

இதற்கு மாறாக மக்கள் என்பவர்கள் தாம் பரஸ்பரம் இணங்கி சமூகமாக வாழ்வதையே அடிப்படையாக கொண்டவர்கள். மக்கள் கூட்டம் என்பது, தமக்கு இடையில் உள்ள மனித முரண்பாடுகளை களைந்து, பிரிவுகளை கடந்து, பிளவுகளை நீக்கி வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. இப்படி சக மனிதனை சுரண்டுவது, இழிவுபடுத்துவது, அடக்குவது, ஒடுக்குவது என அனைத்தும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே மனிதத் தன்மை.

 

இதற்காக அவற்றை இனம் கண்டு போராடுவது, இந்த வகையில் மக்களை அணிதிரட்டுவதில் தான், மக்கள் என்ற பதம் உண்மையானது, நேர்மையானது. அதாவது மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, அவர்கள் தாமே போராட வேண்டும். இதை வழிகாட்டும் நடைமுறைகள், கோட்பாடுகளே உண்மையானது நேர்மையானது.

 

சமூகத்தில் நிலவும் எந்த சமூகப்போக்கிலும், எந்த சூழலிலும் இந்த முழுமையைக் கவனத்தில் கொண்டு போராட மறுக்கின்ற அனைத்தும், பிற்போக்கானது. உண்மையில் மக்களை பிளந்து மோதவிடுகின்ற சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. எந்த முரண்பாட்டையும் முழுமையில் காண மறுக்கின்ற முயற்சிகள் அனைத்தும், நிச்சயமாக அந்த மக்களுக்கே எதிரானது.

 

இப்படி மக்கள் கூட்டத்தை எதிரியாக பிரிக்கின்ற கோடு, எதிரியை மக்களுக்கு எதிராக பிரிப்பதில்லை. இப்படி எதிரியை மிகப் பாதுகாப்பாக வைக்கின்றது. மக்கள் வேறு, எதிரி வேறு என்று தெரிந்து கொள்ள முடியாத சூக்குமத்தில், மக்களின் எதிரி பாதுகாப்பாக இருக்க முனைகின்றான்.

 

சக மனிதனை சுரண்டுதை, அடக்குவதை, ஒடுக்குவதை, இழிவுபடுத்துவதை தமக்குள் உள்ளடக்கியபடி வாழ்வதும், அந்த மக்களை மக்கள் என்று விழிப்பது பொய்யானதும், போலியானதுமாகும். தனக்குள், தனது சொந்த மக்களுக்குள் சமூக ஒடுக்குமுறையை களைய மறுத்தபடி, மற்றவன் பற்றியும் மற்றைய மக்கள் கூட்டம் பற்றியும் பேசுவது என்பது, சொந்த மக்களை ஏமாற்றுகின்ற கபடத்தனமாகும்.

 

தான் செயல்படும் சொந்த அரசியல் தளத்தில், சொந்த நடைமுறை தளத்தில், அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைய மறுக்கின்றவர்கள், அதை முன்வைத்து போராடாதவர்கள் அனைவரும் மாபெரும் அரசியல் போக்கிரிகளாவர்.

 

சமூக ஒடுக்குமுறைகளை சொந்த அமைப்பில், சொந்த கோட்பாட்டில், சொந்த பிரச்சாரத்தில் முன்வைக்க மறுத்து, அதை பிரச்சாரம் செய்ய மறுப்வர்கள், அதை காலத்தால் பின்போடுபவர்கள் எல்லோரும் கடைந்தெடுத்த மக்கள் விரோதிகளாவர்.

 

இவர்களே இன்று மக்கள் என்று கூறிக்கொண்டு, மக்களின் முதுகில் குத்துகின்ற அரசியல் அரங்கில் ஆதிக்கம் வகிக்கின்றனர். இவர்களை மனித குலம் இனம் கண்டு போராடாத வரை, உலகில் எந்த சமூகத்திலும் எந்த பிரச்சனைக்கும் தீர்வுகளை அந்த மக்கள் கூட்டம் கண்டறிய முடியாது. மாறாக சமூகம் கையாலாகாத்தனம் கொண்ட, சுரண்டும் வர்க்கத்தின் அடிமைகளாகவே வாழ்வர்.

பி.இரயாகரன்
02.08.2007