Language Selection

பார்த்திபன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

1987, மே.22, வடமாராட்சி
ஊர் அமைதியாக இருந்தது.
விலங்குகளும் சத்தம் போடவில்லை.
பாதை விளிம்புகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உறக்கத்திலிருந்தன.
எந்த வீடும் வெளிச்சமாயிருக்கவில்லை.
பாடசாலையிலிருந்து 3 வீடுகள் தள்ளியிருந்த அந்த வீடும் அமைதியாயும், இருளாயும் இருந்தது.
வீட்டினுள் உருவங்கள் சத்தமின்றி நடமாடின. பழகிப் போய்விட்டதால் இருளில் நடமாடுவதற்கு அங்கு உருவங்கள் தடுமாறவில்லை.
'அம்மா பயமாயிருக்கம்மா' மிக மெதுவாக அந்தச் சிறுவன் பயப்பிட்டான்.
'உஷ். பயப்பிடாத. ஒண்டும் நடக்காது.' அவன் அருகிலிருந்த அம்மாவின் குரலிலும் கலக்கம் கலந்திருந்தது.
கடிகாரம் பெரிதாகச் சத்தம் போடுகிறதோ என்று நினைக்கவைத்தது.
'அப்பா எங்கேம்மா?' மீண்டும் மெல்லிதாகச் சிறுவனின் குரல் கேட்டது.
'மெல்ல. அப்பா இப்ப வந்திடுவார்.'
நேரம் நீஈஈஈஈஈஈமாய்ப் போய்க்கொண்டிருந்தது.
எங்கும் அமைதி.
எங்குமே அசைவில்லை.
வீடுகளுக்குள் பதுங்கியிருந்த மனிதர்கள் எதையோ எதிர்பார்த்து பயப்பட ஆரம்பித்தார்கள். பயந்தார்கள். பயந்து வியர்த்தார்கள்.
'பயம்மாயிருக்கும்மா' சிறுவன் மறுபடியும் பயப்பட்டான்.
சிறுவனுக்குப் பத்திற்குள்ளிருக்கலாம். பெயர் கணேசமூர்த்தி. கணேசன் என்றுதான் கூப்பிட்டார்கள். முதலாம் வகுப்புவரை மட்டுமே ஒழுங்காகப் படித்திருந்தான். இராணுவ அட்டகாசங்கள் அவன் பாடசாலைக்குப் போய் படிப்பதை தடைசெய்திருந்தன.
அதனால் அவனுக்கு பொது அறிவு போதுமானதாக இருக்கவில்லை.
அவனுக்கு எதுவும் புரியவில்லை.
ஏன் பயப்பிடவேணும்?
ஆருக்குப் பயப்பிடவேணும்?
ஏன் ஆட்களை சாக்கொல்லுறாங்கள்?
எதுவும் அவனுக்கு தெரியாது.
யாரும் அவனுக்கு இந்த விபரங்களைத் தெரிவிக்கவில்லை. தானாக அறிவதற்கும் வயது அவனுக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை.
அவனுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து பயம் ஒன்றைத்தான் அவன் பரிபூரணமாக அறிந்திருந்தான்.
'கவனமாகய் போ'
'ஆமிக்காறங்கள் வருவாங்கள்.'
'ஆமிக்காறங்களை கண்டா ஓடி ஒளி'
'கெலிக்கொப்ரர் வந்தா மரங்களுக்குக் கீழ போய் நில்'
'றோட்டில ஆக்கள் ஒருத்தரும் இல்லாட்டி பக்கத்தில இருக்கிற வீடுகளுக்குள்ள போய் நில்'
பாடசாலைக்குப் போகும்போது அல்லது வெளியே போகும் ஒவ்வொரு தடவையும் இப்படியான எச்சரிப்புகள். கவனங்கள். கவலைகள்.
எவ்வளவுதான் வீராப்பாகப் போனாலும் பாதையில் காணப்படும் அசாதாரண நிலமையும், பெற்றோரின் எச்சரிப்புகளும் கணேசனில் பயத்தை உண்டாக்கிவிடும்.
உடனே திரும்பி வந்துவிடுவான்.
இந்தப் பயம் சில நாட்களில் நிரந்தரமாகவே மனதைப் பற்றிக் கொண்டுவிட்டது.
வீட்டில், பாதையில், பாடசாலையில், கடையில், படுக்கையில்.
எப்போதும் பயம். பயம். பயம்.
இந்தப் பயத்தினால் விசேட ஜாக்கிரதைகள்.
பழைய அம்புலிமாமா, ரத்னமாலாக்களில் தேவன், அசுரன் சண்டைகளைப் பற்றி கணேசன் எழுத்துக்கூட்டி வாசித்திருக்கின்றான்.
ஆனால் இப்போது நடக்கும் சண்டை யாருக்கிடையில் என்பதை உண்மையாகவே அந்தச் சிறுவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஆமிக்காரங்கள் பொல்லாதவங்கள்
ஆக்களைக் கண்டால் சுட்டுப்போடுவாங்கள்
ஆக்களைக் கண்டபடி வெட்டுவாங்கள்
இவை மட்டுமே கணேசனுக்குத் தெரியும்.
ஆமிக்காரங்களின் கண்ணில் படாமல் தான் தப்பிக் கொள்ளவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும்.
ஆனால் இன்றுவரை ஒரு ஆமியையும் அவன் தன் கண்னால் பார்க்கவில்லை. தங்களைப் பயப்பிடுத்துபவர்கள் எப்படியிருப்பார்கள் என்றே அவனுக்குத் தெரியாது. புராணக் கதைகளில் வரும் அசுரர்களைப் போலவே ஆமிக்காரங்களின் உருவத்தையும் தற்காலிகமாக அவன் கற்பனை செய்துவைத்திருந்தான்.
திடீர் திடீரெனத் தெருக்களில் சனங்கள் ஓடுவதையும், திடீர் திடீரென்று பிரேத ஊர்வலங்கள் போவதையும் வீட்டிற்குள் இருந்தவாறே கணேசன் பார்த்துக்கொண்டிருபான்.
அப்போதெல்லாம் அவனுக்குப் பயமாயிருக்கும்.
'நாங்களும் செத்துப்போவமோ?'
தனியே இருக்கப் பயந்து ஓடிவந்து அப்பாவையோ, அம்மாவையோ கட்டிப் பிடித்துக்கொள்வான். உடல் நடுங்கும். வியர்க்கும்.
பிரேத ஊர்வலங்களைப் பார்த்து இரவு பயங்கரக் கனவெல்லாம் வரும்.
சிலவேளைகளில் நித்திரையிலேயே கத்திவிடுவான்.
விழித்துக் கொண்டபின் தூக்கமே வராது.
படிப்பில்லை.
நண்பர்களுடன் விளையாட்டில்லை.
வெளியே போய் வர துணிவுமில்லை. அனுமதியுமில்லை.
கணேசனுக்குச் சீ என்றிருக்கும்.
வேலைக்குப் போவதற்கு அப்பா வெளியே புறப்படுகையில் அவனுக்கு பீதியாயிருக்கும்.
'அப்பா போகாதையுங்கோ. ஆமிக்காரங்கள் சுட்டுப்போடுவாங்கள்' என்று ஒருநாள் சொல்லி அம்மாவிடமிருந்து நன்றாக அடிகள் வாங்கிக்கொண்டான்.
'சனியனே.. வெளியில போகேக்க இப்பிடியே சொல்லுறது.'
இதன்பின் கணேசன் வாய்விட்டு எதுவும் சொல்லாவிடினும் அப்பா வெளியே போகும் ஒவ்வொரு தடவையும் மனதுக்குள் பயந்து கவலைப்படுவான்.
அப்பா திரும்பி வரும்வரையும் வெளிக் கதவருகே காவல் இருப்பான்.
அவனைப் பயப்படாதே என்று சொல்லுமளவிற்கு அம்மாவுக்குத் தைரியமில்லை. அப்பாபாவுக்கு நேரமில்லை.
'அப்பா எங்கேம்மா?' கணேசன் மறுபடியும் கவலைப்பட்டான்.
'வந்திடுவார்' அம்மா சுருக்கமாகப் பதிலளித்தாள்.
எங்கும் நிசப்தம்.
அசாரதாரண அமைதி.
எல்லா வீடுகளிலும் எல்லோரும் ஒரேமாதிரியாக பயந்துபோயிருந்தார்கள். கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
நேரம் போய்க்கொண்டிருந்தது. கணேசன் மீண்டும் ஏதோ கேட்க முயற்சிற்பதற்குள் அவனைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்துவிட்டு காதைக் கூர்மையாக்கினாள்.
தூரத்தில் மிக மெல்லிதாக அந்தச் சத்தம் ஆரம்பித்தது.
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சத்தம்.
அம்மா பரபரத்தாள். கணேசனை ஒரு கையால் இறுகப் பிடித்தாள். இருளில் அங்குமிங்கும் மோதியபடி வெளிக் கதவைத் திறந்து ஓடினாள்.
கணேசனும் இழுபட்டான்.
வேலியோடிருந்த வேப்பமரத்தின் அருகே வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் அம்மா குதிக்க, தொடர்ந்து கணேசனும் விழுந்தான்.
"உஸ்" மெதுவா முனைகிறான்.
"நோகுதே?' அம்மா பரிவோடு கேட்டாள்.
முழங்காலில் வந்திருந்த சிராய்ப்பு காயத்தை கைகளால் தடவியபடியே இல்லையென்றான்.
சிறிது நேரத்தில் காதைச் செவிடாக்கும் ரீங்காரம்.
இராட்சதப் பறவைகள் மிகத் தாழ்வாகப் பறந்து திரிந்தன. குண்டு முட்டைகள் போட்டன.
அக்கம் பக்கத்து வீடுகளில் ஆட்கள் பரபரப்பாய் ஓடும் சத்தங்கள். பதுங்கு குழிகளுக்குள் குதிக்கும் சத்தங்கள்.
திடீர் திடீரென பெரிய சத்தங்களுடன் நிலம் அதிர்ந்தது.
கணேசன் பயத்துடன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.
கண்ணைப் பறிக்கும் வெளிச்சங்கள்.
யார் யாரோ அழும் சத்தங்கள்.
மீண்டும் மீண்டும் வெடிச்சத்தங்களும் நில அதிர்வும்.
கணேசன் கண்ணை மூடிக்கொண்டான். அப்போது பயம் இன்னும் அதிகரிக்க உடனே கண்களை திறந்துகொண்டான்.
நேரம் போய்க்கொண்டிருந்தது.
இருள் முற்றாகப் பரவியிருந்தது.
காலில் ஊர்ந்த ஏதோ ஒன்றை கணேசன் உதறினான்.
பூச்சியா?
மட்டத்தேளா?
பாம்பும் வருமா?
பயப்படாமல் இருக்கவேமுடியாதா?
வியர்வையில் மண் ஒட்டி உடம்பு முழுவதும் பிசுபிசுத்தது. கற்கள் குத்தி வலித்தன.
நன்றாக இருக்கவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் அவர்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
1997. மே. பதுங்கு குழி
வெளிச்சம் தயங்கியபடி பிரவேசித்தது.
தூங்காத கண்களுடன் கணேசனும் அம்மாவும் கூசினார்கள்.
'அப்பா எங்கேம்மா?' அன்றைய முதற் கேள்வியைக் கேட்டான் கணேசன்.
'மாமா வீட்டிலை நிண்டிருப்பார். இண்டைக்குக் கட்டாயம் வருவார்' மகனுக்குச் சமாதானம் சொன்னாலும் அவர் எங்கே என்ற கேள்வி அவளைக் கலங்க வைத்தது.
'வீட்டுக்கு போவமே?' கணேசன் கேட்டான்.
'கொஞ்சம் பொறு' என்று அம்மா காதை கூர்மையாக்கினாள்.
வித்தியாசமான சத்தங்கள் எதுவும் கேட்காததால் 'எழும்புவோம்' என்றாள்.
முதலில் அம்மா பலமுறை சறுக்கியபின் வெளியே வந்தாள்.
சற்றுத் தூரத்தில் குவியல்களாகக் கிடந்த கடுதாசிகள் அவளைக் கவர, அவற்றை நோக்கிப் போனாள்.
'அம்மா என்னத் தூக்கிவிடுங்கோ' கணேசன் பதுங்கு குழிக்குள் இருந்து குரல் கொடுத்தான்.
குவியல்களிலிருந்து ஒன்றை எடுத்து படித்துப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.
நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், வெளியே நடமாடுவோர் சுடப்படுவர் என்றும் சுத்தமான தமிழில் எழுதியிருந்தது.
மறுபடியும் வானத்தில் ஆரவாரம்.
விமானங்கள் தெரிய ஆரம்பித்தன.
அம்மா திரும்பவும் பதுங்கு குழிக்குள் இறங்கினாள்.
'என்னம்மா?' கணேசன் பதட்டத்தோடு கேட்டான்.
'ஒருத்தரையும் வெளியில திரியவேண்டாமாம். கண்டாச் சுட்டுப்போடுவாங்களாம்.'
கணேசனுக்கு ஏன் என்று கேட்கத் தோண்றவில்லை.
இருவரும் அப்படியே இருந்தார்கள். விமானங்கள் வந்தன. குண்டுகள் போட்டன. பறந்துபோயின.
விமானங்கள் வந்தன. குண்டு...
1997. மே. 24. பதுங்கு குழி
கணேசனும் அம்மாவும் சோர்ந்து போயும், களைத்துப் போயுமிருந்தார்கள்.
தூங்காத கண்கள் சிகப்பாயிருந்தன.
எறும்புகள் கடித்ததால் உடம்பில் ஆங்காங்கே பரவலாக மேடுகள் உண்டாயிருந்தன.
கணேசன் கொட்டாவிட்டான். இது எத்தனையாவது என்று அவனுக்கு மறந்துபோய்விட்டது.
அவனுக்குப் பசித்தது. மிகவும் நன்றாகப் பசித்தது. தலையைச் சுற்றியது. தூக்கம் வந்தது.
இவையெல்லாவற்றையும் மீறி பயம் நிறைந்திருந்தது.
அம்மாவுக்கு அவனைப் பார்க்கப் பாவமாகவிருந்தது. அவளால்தான் என்னசெய்யமுடியும்?
வெளியில் போனால் சுட்டுக் கொன்றுவிடுவார்களே.
கவச வாகனங்களின் இரைச்சல் கூட மிக துல்லியமாக கேட்டது.
இராணுவம் அருகாமையில் வந்துவிட்டதை அவள் அறிந்துகொண்டாள்.
யுத்த ஆரவாரங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன.
இராணுவத்தின் பிடிக்குள் தாம் சிக்கிக்கொண்டதாக எல்லோரும் அனுமானித்துக் கொண்டார்கள்.
கணேசனுக்கு பசி வயிற்றைப் பிராண்டியது.
உடம்பெங்கும் எரிந்தது.
தலை சுற்றியது.
அம்மா அவனைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
பகல் போய் இரவு வந்தது.
அவர்கள் அப்படியே இருந்தார்கள்.
1997. மே.25. பதுங்கு குழி
வெடிச் சத்தங்களுடன் விடிந்தது.
கணேசன் சுருண்டு படுத்திருந்தான். கண்கள் அரைகுறையாக மூடியிருந்தன.
அம்மா அவனைப் பரிவுடன் தடவினாள்.
உடம்பு மிக வெப்பமாக இருந்தது.
நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
அங்கும் இதே வெப்பநிலைதான்.
காய்ச்சலா?
அவன் தலையைத் தூக்கி மடியில் வைத்தாள்.
'என்ன செய்யிது ராசா?'
'பசிக்குதம்மா' கணேசன் மெல்லிதாக முனகினான்.
அம்மா கொஞ்ச நேரமே யோசித்தாள்.
அவனை மெதுவாக தூக்கி, மெதுவாக மண்ணில் படுக்கவைத்துவிட்டு பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்தாள்.
யாரும் இல்லை.
வேகமாக வீட்டிற்குள் ஓடினாள்.
சமையல் அறையில் புகுந்து சாப்பாடு தேடினாள். அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டாள்.
படுக்கை அறையில் புகுந்து பரபரப்பாகத் தேடினாள்.
கொஞ்சத் தாமதத்தின் பின் டிஸ்பிரின் அகப்பட்டது.
எல்லாவற்றுடனும் வெளிவாசலுக்கு வரும்போதுதான் அவள் கவனித்தாள்.
சின்ன இடைவெளிக்கு அப்பால் நீட்டிய துப்பாக்கிகளுடன் இராணுவம் வந்து கொண்டிருந்தது.
கணேசனுக்கு நா வறண்டது.
தலை பாரமாக இருந்தது 'அம்மா' என்று முனகினான்.
சிரமப்பட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தான்.
அம்மாவைக் காணவில்லை.
'அம்மா' என்று கூப்பிட்டான். அவனுடைய குரல் அவனுக்கே கேட்கவில்லை.
கண்களை நன்றாகத் திறக்கமுடியவில்லை.
உடம்பு முழுவதும் கொதித்தது.
உடம்பில் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன.
அம்மா எங்க?
அவனுக்குப் பயமாகவும் கவலையாகவும் இருந்தது.
அம்மாவுக்காக் காத்திருந்தான்.
அம்மா வரவில்லை.
பயம் அவனைக் கலவரப்படுத்தியது.
அம்மாவை ஆமிக்காறன் பிடிச்சுக்கொண்டு போட்டானோ?
இனி நான்தானே. அடுத்ததாய் என்னைத்தான் பிடிப்பாங்கள். பிடிச்சா சுட்டுப்போடுவாங்களோ?
பயம்.
பயம்.
அழுகையும் வந்தது.
இந்த இடம் போதுமான பாதுகாப்பாக இல்லை என்று கணேசன் நினைத்தான்.
வெளியில போகேலாது. அங்க கட்டாயம் ஆமிக்காரங்கள் நிற்பாங்கள்.
அப்ப என்ன செய்யலாம்?
இன்னும் கீழ ஆழத்துக்குப் போகவேணும்
நல்ல ஆழத்துக்குப் போவேணும்
கணேசன் தன்னைச் சுதாகரித்துக்கொண்டான்.
சின்னக் கைகளால் மண்ணைத் தோண்ட ஆரம்பித்தான்.
தலை கனத்தது.
கண் எரிந்தது.
பசித்தது.
ஆனாலும் கணேசன் மண்ணை தோண்டிக்கொண்டிருந்தான்.
அவன் தப்பியாக வேண்டும்.
சின்னக் கைகளில் மெல்ல மெல்ல இரத்தம் கசிந்தது.
('அம்மா', பிரான்ஸ், 1997)