Language Selection

பார்த்திபன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

புகை மூட்டமாகக் கவிந்திருந்தது. சுருள் சுருளாக, வளையம் வளையமாக புதிய புகைகள் வந்துகொண்டிருந்தன. இந்தக் கரும்புகைகள் எல்லாம் மேலே போய் மழையானால் அவ்வளவுதான். உலகமே வெள்ளத்தினால் மூச்சுத்திணறும்.
இல்லாவிட்டால் இருமும். சூழலை மாசடைவது பற்றியோ, தங்கள் சோர்ந்த நுரையீரல்களைப்பற்றியோ எந்த அக்கறையுமின்றி அவர்கள் தங்களால் முடிந்தளவு ஊதித்தள்ளியதைப் பார்த்து கவலையில் நானும் ஊதினேன். எல்லோர் வாயிலும் வாழைப்பழத்தில் சாம்பிராணிக் குச்சி குத்தியிருப்பதுபோல் வேறுவேறு விதமான சிகரெட்டுக்கள் சொருகியிருந்தன.
மிஹெல் ஒன்றைப் பூரணமாக சாம்பலாக்கி, அடுத்ததை புகையிலை வைத்து சுருட்டிக் கொண்டிருந்தான். விரல்களெல்லாம் மஞ்சள். சுருட்டி எச்சில் பூசி ஒட்டி, நுனியைக் கிள்ளி எறிந்துவிட்டு வாயில் வைத்துக் கொண்டு என்னிடம் நெருப்புக் கேட்டான். கொடுத்து, வாங்கிக் கொண்டேன். நான் சீவிப்பதே இழுப்பதற்குத்தான் என்பது போல் ஆழமாக நிக்கொடினை உள்வாங்கிய மிஹெல் விட்ட இடத்தில் தொடர்ந்தான். நாங்கள் நீண்ட நேரமாக விவாதித்துக் கொண்டிருந்தோம். இடையிடையே சிகரெட் வேளை.
''இவர்கள் இப்படியே தொடர்ந்து பிடிக்கப்பட்ட வீடுகளிலிருந்து ஆட்களை மிருகத்தனமாக வெளியேற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுவார்கள். வெளியேற்றப்பட்டவர்களுக்கு வேறு வீடு கொடுக்க மாட்டார்களா?' இரண்டாவது தடவையாக கேட்டுவிட்டேன் போலிருந்தது. மிஹெல் என்னை முறைத்தான்.
எனக்கு டொச் சரளமாக இல்லாவிட்டாலும் மிஹெல் புரிந்து கொள்வான். அப்படி என்னுடைய பாசைக்கு அவனை நானும், அவனுடைய பழக்க வழக்கங்களுக்கு அவன் என்னையும் பரஸ்பரம் மாற்றுவதில் வெற்றியடைந்து வருகிறோம்.
´'நல்ல உத்தியேகம்பார்ப்பவர்களே வீடு தேடி அலையாக அலைகிறார்கள். இதில் இவர்களுக்கு வீடு கொடுப்பதாவது! அதுவும் அரசாங்கமாவது!!'
கிழக்கு யேர்மனியில் கைவிடப்பட்ட வீடுகளைக் கைப்பற்றி, அதைத் தங்களுக்கு ஏற்றதாக அமைத்து, குடியும், குடியில்லாமலும் குடித்தனம் செய்துகொண்டிருந்தார்கள் இடது சார்புடையவர்களும், தீவிரமானவர்களுமான யேர்மனியர்கள். இப்படியான வாழ்க்கை யேர்மனியின் வேறு சில பகுதிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்ற மாதமளவில் கிழக்கு யேர்மனியில் கைப்பற்றப்பட்ட வீடுகளமைந்த ஒரு தெருவுக்கு வந்த பொலிசார் துப்பாக்கி, கவசவாகனம், நாய்கள் என்றும், வேறு பலமான ஆயுதங்களுடனும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இந்த வீடுகள் மீது தாக்குதல் நடத்தி, வசித்தவர்களைக் காயப்படுத்தி சிறையில் அடைத்துவிட்டார்கள். இதைப்பற்றித்தான் நானும் மிஹெலும் விவாதித்துக்கொண்டிருந்தோம்.
இந்த நடவடிக்கையை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?' என்று கேட்டுவைத்தேன்.
இப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் கண்டிக்கத்தான் பலர் இருக்கின்றார்கள். அப்படியிருந்தும் சிலர் கண்டித்தார்கள். சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தார்கள். ஊர்வலம் செய்தார்கள். ஆனால் இவை யாருக்கும் தெரியவராது மறைக்கப்பட்டுவிடும்.'
நான் நாங்கள் இருந்த பெட்டியை நோட்டம் விட்டேன். யாராவது எங்களது உரையாடலை காதில் வாங்கி முகம் சுழிக்கின்றார்களா என்று கவனிக்க. அப்படி நடக்கவில்லை.
வயது போனவர்களுக்கு தேவாலயமும் சுடலையும். இளசுகளுக்கு மைக்கல் ஜக்சன், மடோனா அல்லது புண்டஸ்லீகா (நிச்சயமாக தூசணமில்லை) சுவாரஸ்யம் இருந்தது. நாடு, அரசு, மக்கள், அரசியல்.. . இப்படி எதிலும் கவனம் செலுத்த விடாமல் அவர்களுக்கு வேறு திசைகளைக் காட்டிக்கொண்டிருப்பதில் இந்த அரசாங்கங்கள் கெட்டித்தனமானதுகள்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
இப்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க என்ன காரணம்?'
பல. ஓன்று பயம். இரண்டாவது அதன்பலம். சட்ட விரோதங்களுக்கு எதிராக தங்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதில்லை என்று காட்ட. இதனால் திருட்டுத்தனமாக இரசாயன ஆயுதங்கள் விற்பதைக் காப்பாற்றி விடலாம் என்று. இப்படி நிறைய.. முக்கியமாக ஒழுங்கை நிலைநாட்ட'
ஒழுங்கா..? ஒழுங்கை நிலைநாட்டுவதென்றால் நல்லதுதானே?' கேள்வி மோசமென்று எனக்கே தெரிந்தது. மிஹெல் எரிப்பதைப் போல பார்த்தான். நான் எரியவில்லை. பார்வை எப்படி எரிக்கும்.
இங்கே ஒழுங்கு என்பது யாருக்குத் தேவைப்படுகிறது என்று நீ கவனிக்கவில்லையா? அரசு ஒழுங்கை நிலைநாட்டுகிறதென்றால் அது அரசின் நன்மைக்கே. அரசின் நன்மை மக்களின் நன்மையாகாது. மக்களின் நன்மை அரசின் நன்மை ஆகாது'
மிஹெல்லைப் பார்ப்பவர்கள் யாரும் அவன் இப்படியெல்லாம் கதைப்பான் என்று நம்பமாட்டார்கள். அவனது கூட்டத்திற்கேயுரிய பிய்ந்த, தடித்த இராணுவச் சப்பாத்து, கிழிச்சல் உள்ள கறுப்பு ஜீன்ஸ், கறுப்புப் புல்லோவர் (இரண்டையும் ஊறப் போட்டால் தாராளமாக அழுக்குப் பெற்றுக் கொள்ளலாம்) கறுப்பு ஜக்கற் பல சுலோகங்களுடன், கழுத்தில் இரும்புச்சங்கிலி. ஒரு காதில் தோடு. கோணல் மாணலாக கத்தரிக்கப்பட்ட தலை மயிர். வலது கை மணிக்கட்டில் கறுப்பு நூல். மஞ்சள் விரல்களில் சிகரெட். அருகில் அமர்வதற்கு யோசிப்பார்கள்.
ஆனாலும் எங்கள் நாட்டைவிட உங்கள் நாட்டில் ஓரளவு ஜனநாயகம் இருக்கிறது. இப்படியான நிலைமையென்றால் அங்கே சிறையிலடைப்பது, விசாரிப்பது எல்லாம் காலாவதியாகிப் போய்விட்டது. டயர் போட்டு கொழுத்துதல் அல்லது தலையைச் சீவுதல், சித்திரவதைசெய்து, கொல்லுதல்தான் இப்ப அரசாலும், இயக்கங்களாலும் அங்கிகரிக்கப்பட்ட நடவடிக்கைகள். இங்கே சிறையிலடைத்து விடுவதால் விடுதலையானபின் திரும்பவும் வேறு ஏதாவது வீடுகள் பிடிக்க சந்தர்ப்பம் இருக்கின்றதல்லவா?' இலங்கையையும், யேர்மனியையும் ஒப்பிட்டுக் காட்டினேன். மடக்கிவிட்டேன் என்று சின்னத் திருப்தியும் வந்தது.
மிஹெல் எதற்கும் அடங்குவதாயில்லை.
உன்னுடைய நாட்டு நிலமை பயங்கரம்தான். அதற்காக இங்கே ஜனநாயகம் பூசிக்கப்படுகிறதென்று கருதிவிடாதே. வீடில்லாப் பிரச்சினை என்று ஒருபுறம் கூப்பாடு போட்டுக்கொண்டே மறுபுறம் தங்களுடைய பாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மீது குறுக்கிட்டு அவர்களது சுயாதீனத்தில கைவைத்து அவர்களை நடுத்தெருவுக்கு விரட்டியிருக்கிறது அரசு. இந்தக் குளிரிலும், மழையிலும் கடும் பனியிலும் அவர்களை அலைய விட்டிருப்பது தான் சனநாயகமா?'
அப்படியென்றால் இங்கு ஜனநாயகம் இல்லையென்றால் முன்னாள் கிழக்கு ஜேர்மனியிலிருந்து மக்கள் விழுந்தடித்து வந்திருந்தார்களே? அது ஏன்?"
" அப்படி விழுந்தடித்தவர்களுக்கு இப்போ பதில் கிடைத்துக் கொண்டிருக்கிறது"
" நாங்கள் இங்கு அகதிகளாக வந்தவர்கள். எங்களுக்கே இந்த அரசு தங்க இடம் தந்திருக்கிறது. சிறிய இடத்தில் பலரை ஒன்றாக அடைத்து வைத்திருந்தாலும் அப்படி ஏன் உங்களைப் போன்றவர்களுக்கு தங்க இடம் தரவில்லை. இதனை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை"
" நீ விளங்கிக் கொள்ள மாட்டாய். உனக்கு எல்லாமே ஜனநாயகமாகத் தெரிகிறதே. நான் முதலிலேயே சொன்னேன் அரசாங்கம் ஒழுங்கை நிலை நாட்டவே விழும்புகிறதென்று. இந்த ஒழுங்குக்கு எங்களால் கட்டுப்பட முடியாது . இந்த ஒழுங்கு எங்களைக் கட்டிப்போடப் பார்க்கிறது. அரசு எங்களை உற்றுக் கவனிக்க, தனது கண்காணிப்பில் எப்போதும் வைத்திருக்க, தான் விரும்பியபடி எம்மீது நடவடிக்கை எடுக்க ... இப்படிப் பல வழிகளில் இந்த ஒழுங்கு அரசுக்கு நன்மையளிக்கிறது. எங்களுக்கு எதிராக இருக்கிறது. எங்கள் மீது யாரும் அதிகாரம் செலுத்த முடியாது. எங்களை யாரும் கண்காணிக்க முடியாது. கட்டுப்படுத்த முடியாது. எங்கள் சுயாதீனத்தைப் பேணவே நாங்கள் ஒழுங்குக்குள் போக விரும்பவில்லை. ஒழுங்காக இல்லாவிட்டால் அரசின் சலுகைகள் கிடைக்காது. இதனாலேயே எமக்கு வீடுகள் தரப்படவில்லை. அதனால் நாங்களாகவே எடுத்துக்கொள்கிறோம். இப்போதாவது ஒழுங்கென்றால் புரிகிறதா?"
தலையாட்டினேன். எனக்கென்னவோ நானும் மிஹெலும் கதைப்பது கணேகலிங்கம் மான் விழிக்கோ, குந்தவிக்கோ எழுதின கடிதங்கள் மாதிரியிருந்தது. நேரம் கிடைக்கும்போது இவற்றைத் தொகுத்து எழுதி இங்கு வெளிவரும் சஞ்சிகைகளுக்கு அனுப்பி வைக்கலாம். பிள்ளை இல்லாததால் காதலியின் பெயரைப் போட்டு வனஜாவுக்கு லெற்ரர் என்று எழுதலாம். காதலும் கெட்டியாகும். மறுபிரசுரங்கள் செய்து கொண்டிருப்பவர்கள் கட்டாயம் பிரசுரிப்பார்கள். தவிர ஏராளமான சஞ்சிகைகள்!
எனக்குத் தெரிந்த பல மாதிரி யோசித்தும் ஒழுங்குபற்றி அவ்வளவாக பிடிபடவில்லை. யேர்மனிபற்றி நான் போட்டிருந்த படங்களையெல்லாம் மிஹெல் இப்படி அடிக்கடி பொய்ப்பித்து வருகிறான். கூடிய சீக்கிரத்தில் இவன் என்னையும் ஒழுங்கற்றவனாக்கிவிடுவான்.
அவ்வளவு இலேசில் நடக்கிற காரியமா இது? நாங்கள் எப்படியெல்லாம் ஒழுங்குக்குட்பட்டிருக்கிறோம். வீட்டில் அப்பா, அம்மா, அப்பம்மா, அம்மம்மா, மாமா, மாமி... பள்ளிக்கூடத்தில் அதிபர், ஆசிரியர், வயசால் பெரியவர்கள் பிறகு தெரிந்தவர்கள்..
ஒவ்வொருத்தரையும் ஒழுங்காக்குவதில் இப்படி எத்தனை பேர் சிரத்தை எடுத்திருக்கிறார்கள். இதை அவ்வளவு சீக்கிரம் மிஹேலால் குலைத்து விட முடியுமா?
றெயினைவிட்டிறங்கியதும் சினோ(பனி என்ற மொழிபெயர்ப்பு அவ்வளவு நன்றாக இல்லை) நனைத்தது. நாலுமணிக்கே இருட்டியிருந்தது. மார்கழி அப்படித்தான். கிறிஸ்மஸ் நெருங்குவதால் கொள்வனவுகளுக்காக பலர் பிரயாணம் செய்தார்கள்.
புகையிரத நிலைய வாசல்வரையும் வந்து நின்றுவிட்டோம்.
வெளியே சினோ மோசமாக இருந்தது.
என்னிடம் தொப்பியோ, குடையோ இல்லை. ஸ்ரைலுக்கு இழுக்கு என்று நான் உபயோகிப்பதில்லை. பலன் மூக்கு முட்டச் சளி.
மிஹேலிடம் பொயிலையைத்தவதிர வேறெதுவுமில்லை. குடை பிடிப்பது ஒழுங்கானது என்றல்ல. அவனிடம் பணமில்லை. மாதத்தில் ஆகக்கூடியது எட்டுப்பத்து நாள் வேலை தான். மிகுதி நாட்களில் வீதியில் நின்று ஒரு மார்க் பிச்சை நண்பர்கள் உபயம். அவன் சீவியம் இப்படி.
நானோ அல்டியில் நிற்க வெட்கம். அல்லது பஞ்சிப்பட்டு கோர்ட்டன், கில்லிதான் நுகர்வேன்.
மிஹேலுடன் தொடர்பு வைத்திருந்தால் விரைவில் கெட்டுவிடுவேன். எனது பாசையில்!
எங்களைப்போல இன்னும் ஒன்றிரண்டு பேர் புகையிரத நிலையத்திற்குள் நின்றார்கள். சினோ குறைவதை எதிர்பார்த்து.
இரண்டு வாங்குகள் காத்திருந்தன. ஒன்றில் ஒருவன் மூட்டையாகச் சுருண்டிருந்தான். தலைமாட்டில் வைன் போத்தல். சுற்றிவர பேப்பர்த்துண்டுகள். மிக மிக அழுக்காயிருந்தான். குளிருக்கு நடுங்குவது தெரிந்தது. அவனுக்கு அருகிலேயே மற்றைய வாங்கும் இருந்ததால் யாரும் அதில் அமர விரும்பவில்லை. அவர்கள் அணிந்திருந்த மடிப்புக் கலையாத உடைகளுக்கும், அந்த அழுக்கான குடித்திருப்பவனுக்கும் பக்கத்தில் அமர்வது பொருத்தமில்லைப் போலும்.
மிஹேலும் வாங்குகளைப் பார்த்துவிட்டான். 'வா அமர்வோம்' இருவரும் அமர்ந்தோம்.
மூக்குச்சளி தடைமுகாங்களையும் தாண்டி மணத்தது புளித்த வைனா? அவனா? என்று என்னால் மட்டுக்கட்ட முடியவில்லை. சில நிமிடங்களின் பின் அந்த மணம் பழகிப் போய் விட்டது.
அவனை நான் பெரும்பாலும் புகையிரத நிலையத்தில் தான் பார்த்திருக்கிறேன். குடித்தபடியோ குடித்துவிட்டோ இங்கேயே வாங்கிலில் படுத்துக்கிடப்பான். மிஹெலினைப் போல ஒழுங்குக்கு எதிரானவன் போலும். ஓரளவுக்கு பரவாயில்லை. தாங்களாகவே வீ டு பிடித்தவர்களைத்தான் பொலிஸ் விரட்டியது. இவன் திறந்து கிடக்கும் புகையிரத நிலையத்தில் தானே கிடக்கிறான். இங்கே யாரும் தரிக்கலாம். விரட்ட முடியாது.
"அரசின் ஒழுங்குக்கு கீழ்ப்படிந்து தங்க இடத்தைப் பெற்றுவிட்டு பிறகு அரசின் கவனிப்பிலிருந்து தப்பி வாழலாமே?" மறுபடி தொடங்கினேன்.
மிஹெல் என்நை ஒரு முட்டாளைப் பார்ப்பது போல் பார்த்தான் என நானாக ஊகித்துக் கொண்டேன்.
" நீயே யோசித்துப்பார். உங்கள் எல்லோரையும் தனிக் கட்டிடத்தில் தங்க விட்டிருப்பதற்கும், ஜேர்மனியருடன் கலந்து விடுவதற்கும் வேறுபாடுகளை நீ காணமாட்டாயா? "
நிச்சயம் காணுவேன். விடியச் சத்தம் போடக் கூடாது. இரவு சத்தம் போடக்கூடாது. வெளியாட்கள் அடிக்கடி வர முடியாது. தொடர்ந்து தங்க முடியாது. அப்பப்பா .. எவ்வளவு சட்டங்கள். மிஹெலின் பாவையில் ஒழுங்குகள். இவைகள் எமக்குச் சரிவருமா என்ன? மத்தியானம் துயில் கலையிறதும், சாமத்தில் உலை வைப்பதும் எப்போதும் பலர் கூடி சந்தோசமாகயிருக்க முயற்சிக்கிறதும்.. எங்கள் வாழ்க்கையே வேறு. இந்த ஒழுக்குகளுக்குக் கட்டுப்பட முடியுமா? தனிமையிலும், விரக்தியிலுமே செத்துப் போவோம். இந்த ஒழுங்குகள் எங்களுக்குச் சரிவராது.
யோசிக்கும் போது ஏதோ தடக்கியது. ஒழுங்கு!
நாங்கள் கூட இங்குள்ள ஒழுங்கை மீறுகிறோம். வேறு விதத்தில். இப்படிப்பார்த்தால் நாங்களும் மிஹேல் கட்சிதான். உடுப்பும், இரண்டு நாளைக்கொரு குளிப்பும் தான் வித்தியாசமோ?
யோசனையை சீரான சப்பாத்துச் சத்தம் குழப்பியது. மூன்று பொலிசுக்காரர்கள் வெளியிலிருந்து வந்தார்கள். வாங்கில் முடங்கிக் கிடந்தவனுக்கு அருகில் வந்து 'எழும்பு' என்றார்கள்.
அவன் அசைவதாக இல்லை.
தங்கள் யக்கற்றுக்குள் இருந்து கையுறைகளை எடுத்து அணிந்துகொண்டு அவனைத் தொட்டு உசுப்பினார்கள். அந்தச் செய்கையைக் கண்டதும் எனக்குத் தீண்டாமை ஞாபகம் வந்தது.
'எழும்பு... எழும்பு..'
அவன் எழும்பாமல் போகவே வலுக்கட்டாயமாக தூக்கி நிறுத்தினார்கள். அவன் தள்ளாடினான்.
'உனக்கு எத்தனை நாட்கள் சொல்லியிருக்கிறோம். இப்படி புகையிரத நிலையத்திற்குள் வந்து படுக்க வேண்டாமென்று" பொலிசுக்காரர்கள் அவனை நிறுத்திவைத்துக்கொண்டே உசுப்பினார்கள.
அவன் தள்ளாடினான். எனக்குப்பக்கத்தலிருந்த மிஹெலின் உடம்பு துடிப்பதை என்னால் உணர முடிந்தது.
'பொலிசு..... அப்பால் கெட்ட வார்த்தைகள் சொன்னான். கட்டப் பொம்மனாகிக் கொண்டிருக்கிறான். விட்டால் தூக்கு மேடை அவனுக்கு பஞ்சு மெத்தையாகி பொலிசில் கை வைத்துவிடுவான். அவனைத்தட்டிப்பேசாமல் இருக்கச் சொன்னேன்.
பொலிசுக்காரர்கள் அவனுக்குத் தாராளமாக அறிவுறுத்தி மிரட்டிவிட்டு அம்புலன்சு அழைக்க வேண்டுமா என்று கேட்டார்கள். அவன் வேன்டாம் என்று தலையாட்டி முனகினான்.
இரண்டு பொலிசுக்கார்கள் அவனது இரண்டு பக்கத்திலும் தாங்கிப்பிடித்துக் கொண்டு புகையிரத நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்று படியில் இருத்திவிட்டார்கள். மறுபடியும் உள்ளே போய்ப் படுக்கக்கூடாது என்று எச்சரித்துவிட;டு தங்களுக்குள் கதைத்துச் சிரித்தபடி வானில் ஏறிப் போய்விட்டார்கள்.
அவன் சினோவில் நனைந்தபடி ஈரத்திலிருந்து நடுங்கிக்கொண்டிருந்தான். பற்கள் கிடுகிடுப்பதைப் பார்கக் முடிந்தது. அவன் போட்டிருந்த கந்தலும் குளிருக்கு ஏற்றதல்ல.
பார்த்தாயா, பொலிசு செய்த வேலையை. புகையிரத நிலையத்திற்குள்ளிருந்து அவனை விரட்டுவது அவர்களுக்கு ஒழுங்கை நிலைநாட்டுவதாகும். இப்படி அவனைத் துன்புறுத்துவதினால் அவன் ஒழுங்காகிவிடுவான் என்பது அரசின் கோட்பாடு. இங்கே ஜனநாயகம் என்றாயே. மனிதனை மதிக்காமல், அவனைப் புறக்கணித்து ஒழுங்கைக் காப்பாற்றுவதுதான் ஜனநாயகம் என்றால் அது இங்கே தாராளமாக இருக்கிறது. நாங்களேன் சுயாதீனமாக வாழ விரும்புகிறோம் என்று தெரிகிறதா?"
எங்களுக்கு மனிதர்கள், மனிதத்தன்மை முக்கியம் . ஒழுங்குகள் எங்களுக்கு பிடிப்பதில்லை. இன்னொன்றையும் கவனி. இங்கு நிற்கும் யாரோ ஒரு ஆள்தான் பொலிசுக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இப்படிப் பட்ட ஒழுங்கானவர்களுடன் வாழ முடியுமா? அதனால்தான் நாங்கள் இவர்களை ஒதுக்கிவிட்டு, எங்களுக்கென்று ஒரு உலகை அமைத்து வாழ்கிறோம். அதையும் இந்த அரசு ஜீரணிக்க முடியாமல்தான் எங்களை எப்படியாவது நிர்ப்பந்தித்தும், பயப்படுத்தியும் தாக்குதலை மேற்கொண்டும் ஒழுங்கான வாழ்கைக்குள் தள்ளி விட முயன்று கொண்டிருக்கிறது. எங்களைப் பார்த்துப் பயப்படுகிறது. கோபப்படுகிறது'" சொல்லிவிட்டு மிஹெல் தனக்கு முன்னால் எச்சில் துப்பினான். ஆத்திரத்தின் வெளிப்பாடு.
என்னைத்தவிர அங்கிருந்தவர்கள் அருவருத்தார்கள். எனக்கோ அந்த எச்சில் மேற்கு நாடுகள் மீதும், அவற்றின் ஜனநாயக ஒழுங்கின் மீதும் துப்பியதாகத் தோன்றியது.
அமைதியாக மிஹெலிடம் பேப்பரும் போயிலையும் வாங்கிச்சுருட்டி, ஒட்டி வாயில் வைத்துக்கொண்டு கேட்டேன்.
"நெருப்பு"
(களம் புதிது, இந்தியா, 19??)