Language Selection

பார்த்திபன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

இந்தியா
ராஜீவ் காந்தி கொலையுண்டு சில வருடங்கள் கழிந்து-
வெளியே மத்தியான வெயில் எரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே இருளாயிருந்த அறையில் அவன் பிளேன்ரீ குடித்துக் கொண்டிருந்தான். அதுதான் அவனது மத்தியான உணவு. காலை உணவும் கூட.
மிகவும் சிறிய அந்த அறை எங்கும் தட்டுமுட்டுச் சாமான்களும், கடுதாசிகளும் பரவிக் கிடந்தன. யன்னல்கள் எதுவுமில்லை. பதிலாக கூரையில் இரண்டு கண்ணாடி ஓடுகள். சிதறிக் கிடந்த பொருட்களுக்கிடையில் அவன் இரவு படுத்திருந்த கிழிந்து போன பாய்.
பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அந்த அறையில்தான் அவனது கடந்த இரண்டு வருச சீவியம். சாதாரணமாக படுக்க மட்டும்தான் வருவான். மற்றும்படி கையில் சில்லறை எதுவுமில்லாவிட்டால் மட்டுமே அங்கு அடைந்து கிடந்து வெக்கையில் வெந்துகொண்டிருப்பான்.
இதற்கு முன் அவன் தமிழ்நாட்டு சிறையிலிருந்தான். சிறைப்படுவதற்கு முன் தமிழீழ விடுதலை இயக்கமொன்றிலிருந்தான். இயக்கத்திற்கு வருவதற்கு முன் அம்மா சுட்டுத் தரும் தோசையைச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் போய்க் கொண்டும், அக்கா, அத்தானுடன் எம்.ஜி.ஆர் படம் பார்த்துக் கொண்டுமிருந்தான்.
இயக்கத்தில் சேர்ந்து, ஆயுதப் பயிற்சிக்காக இந்தியா வந்த சில வருடங்கள் வரை அவன் தமிழீழத்திற்காகப் போராடப் போவதாகத்தான் நம்பியிருந்தான். சேர்ந்திருந்த இயக்கமே தனது தோழர்களையே பலி கொண்டபோதுதான் அவனது நம்பிக்கைகள் உடைந்து நொருங்கின. சிங்கள இராணுவத்திற்கு தப்பியது போக இப்போது போராடச் சேர்ந்த இயக்கத்திற்கே தப்பி ஓடி ஒளிக்க வேண்டிருயிருந்தது. அவனது நெருங்கிய தோழர்கள் பலர் கொலையுண்டும் காணாமலும் போயினர்.
வீட்டுக்கு அப்பா, அம்மாவிடம் போக முடியவில்லை. பலர் அவனைத் தேடினார்கள் என்பதுடன் தனது குடும்பத்தையும் ஆபத்தில் மாட்டிவிட அவன் விரும்பவில்லை.
உதவ யாரும் விரும்பவில்லை. அப்படி இரக்கம் வந்தவர்களுக்கும் பயம்.
யாருமில்லை. அவன் சந்து பொந்தெல்லாம் ஓடிக்கொண்டிருந்தான். மனநோய் பிடித்தவன் போல் தெரிந்த தெரியாத தெருவெல்லாம் திரிந்தான்.
பசி... பசி... பசி....
சாப்பிட எதுவும் கிடைக்காத போதெல்லாம் போதை மருந்துதான் கிடைத்தது. அதில் தான் தனிமை, பசி, பயம், எதிர்காலம் எல்லாம் மறைந்தது.
ராஜீவ்காந்தி கொலையின் பின் தமிழ்நாட்டுப் பொலிஸார் தமது பதிவுகளின்படி அவனைப் பிடித்துச் சிறையிலடைத்தனர். இதன்போது தங்க ஒரு இடம் கிடைத்த ஒரு நிம்மதி ஏற்பட்டது உண்மை.
சிறையிலிருந்து வெளியே வந்த பின் மறுபடி அதே பழைய பிரச்சினைகள். தங்க இடம்... பசி... தனிமை..
டெல்லியிலிருந்து பெரிய தலைகள் யாராவது தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் தமிழ்நாட்டுப் பொலிஸார் அவனையும் அவனைப் போன்றவர்களையும் சிறையிலடைத்து நையப் புடைத்து பயங்கரவாதத்தை ஒழித்தார்கள். சிறையென்றால் சிறையென்று அடையாளப்படுத்தப்பட்ட சிறைகள் மட்டுமல்ல. பாழடந்த வீடுகள், இருட்டறைகள்... எல்லாம் அவ்வப்போது தற்காலிக சிறைக்கூடங்களாகின.
எப்படியாவது இந்தச் சிறைகளிலிருந்து விடுபட வேண்டும், அப்பா, அம்மாவை எப்போதாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பி தன்னுடன் படித்த மற்றும் தனது ஊர் நண்பர்களின் விபரங்களைச் சேகரித்தான். இதில் வெளிநாட்டிலிருப்பவர்களுக்கு தனது நிலமையை உருக்கமாக எழுதி உதவும்படி கெஞ்சினான்.
பல கடிதங்களுக்குப் பதிலே இல்லை. வந்த கடிதங்களில் அவனை விட வெளிநாடுகளில் தாங்கள் கூடக் கஸ்ரப்படுவதாகவும், தலைக்கு மேல் கடன் என்றும், படு குளிர் என்றும் எழுதியிருந்தார்கள்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இன்னும் முயற்சித்துப் பார்க்கலாமே என்ற நப்பாசையில் அவன் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.
'இந்தா ஒனக்கு பாரின் கடுதாசி' என்று கீழேயுள்ள பெட்டிக்கடையில் வேலை செய்யும் பையன் வீசிவிட்டுப் போனான். அவர்களின் முகவரியைத் தான் அவன் தனது கடிதங்களில் பயன்படுத்திக் கொண்டான்.
ஜேர்மனியிலிருந்து வந்த கடிதம். ஆர்வமாகப் பிரித்தான். 20 டொச் மார்க் தாளும், ஒரு சின்னத் துண்டும் விழுந்தன. அவனுக்கு உதவ தான் விரும்பினாலும் தற்போது தன்னிடம் பண வசதியில்லையென்றும், தான் அனுப்பியிருக்கும் 20 மார்க்கில் அவனை நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடும்படியும், தான் குறிப்பிடும் ஒரு நபரைப் போய்ச் சந்திக்கும்படியும் அவனது நீண்டகால சிநேகிதன் எழுதியியிருந்தான்.
அவன் போராடப் போனபோது அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். ரியூட்டரி போனார்கள். வீடியோ பார்த்தார்கள். காதலித்தார்கள். வெளிநாடு போனார்கள்.
அவனுக்கு கவலை வந்தது. இந்த நரகத்தைவிட்டு தப்ப வழியேயில்லையா? தெரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் கடிதம் எழுதியாயிற்று. அவனுக்கு உதவ யாருக்கும் வசதியில்லை. எல்லா வழியும் அடைபட்டுக் கொண்டு வருகிறது. அவ்வளவுதான். தற்கொலையைத் தவிர இனி முயற்சிப்பதற்கு வேறில்லை.
20 மார்க் தாளை கண்ணில் ஒற்றி சேட் பொக்கற்றில் வைத்தான். இந்தக் காசை வைத்து அதிகூடிய நாட்களைக் கழிப்பதற்குரிய திட்டங்கள் வகுக்க வேண்டும்.
தலை பாரமாயிருந்தது. முதலில் இன்னொரு பிளேன்ரி தேவைப்பட்டது. நண்பன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபரையும் போய்ப் பார்க்கலாம். சிலவேளைகளில் ஏதாவது வழி பிறக்கலாம்.
வெளியே போக எழுந்தபோது தடதடவென்று பலர் அவன் அறைக்கு ஓடிவந்தார்கள். சாதாரண உடையிலிருக்கும் தமிழ்நாட்டுப் பொலிஸார். யாரோ மந்திரி டெல்லியிலிருந்து வருகிறார் போலும். அல்லது யாராவது யாரையாவது கடத்தியிருக்கலாம்.
அவனை தட்டுத் தட்டி தரதரவென்று படிகளில் இழுத்துக்கொண்டு போய் வெளியே தயாராயிருந்த ஜீப்பிற்குள் வீசினார்கள்.
ஊருக்கு ஒதுக்குப் புறமாயிருந்த ஒரு பாழடைந்த வீட்டிற்குள் அவனது கையையும் காலையும் கட்டிப்போட்டு, இரத்தம் வர அடித்தார்கள்.
'அம்மா' என்ற அவனது அலறல் அந்தக் கட்டிடத்தைத் தாண்டவில்லை.
உக்ரெய்ன்
சோவியத்யூனியன் உடைந்து பல வருடங்கள் கழித்து-
அவள் தெருவில் நின்று பாடிக் கொண்டிருந்தாள்.
பள்ளிக்குப் போகும் வயது. குளிருக்கான தடித்த உடைகள் போட்டிருந்தாலும் அவை கிழிந்தும் அழுக்காயுமிருந்தன. உக்ரெய்ன் மொழியில் அழகாக இராகத்துடன் பாடிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய தம்பி கையில் ஒரு பேணி வைத்திருந்து அக்காவைக் கடந்து போய் வருபவர்களிடம் நீட்டிக் கொண்டிருந்தான். ஒரு பணிஸ் வாங்குமளவிற்கு கூட சில்லறை சேர்ந்திருக்கவில்லை.
பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. கூரைகளில், வாகனங்களில், நடந்து போனவர்களின் உடையில், தரையில்.... எங்கும் வெண்மை. வாகனங்கள் ஓடும் இடங்களில் மட்டும் பனியின் அழகு போய் சேறாகிக் கிடந்தது.
குளிரில் அவள் முகமும் பிஞ்சுக் கைகளும் சிவந்திருந்தன. என்றாலும் அவள் சுருதி பிசகாமல் பாடிக் கொண்டிருந்தாள். யாரும் ஒரு நிமிடமேனும் நின்று அவள் பாட்டை இரசிக்கவில்லையென்றாலும் அவள் பாடிக் கொண்டிருந்தாள். கண்களில் பசியும் சோகமும் தெரிந்தன.
தன்னை ஏசிவிட்டுப் போபவர்களாலும், கவனிக்காமலே போய்க் கொண்டிருப்பவர்களாலும் சோர்ந்து போகாமல் தம்பி தொடர்ந்து பேணியைக் குலுக்கிக் கொண்டிருந்தான். அவனது மூக்கால் ஒழுகிக் கொண்டிருந்தது.
இவர்களுக்கு சற்றுத் தள்ளி குளிரில் விறைத்து ஒரு நாயுடன் சுருண்டுபோய் கிடந்த ஒரு கிழவன் மட்டும் அவள் பாட்டை இரசித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது சத்தம் வராமல் ஏதோ முணுமுணுத்தான். அவனுக்கருகில் பனியில் நனைந்துபோயிருந்த துண்டில் தான் பல நாட்களாய் சாப்பிடவில்லையென்றும் தானும் நாயும் சாப்பிட உதவி செய்யும்படியும் கிறுக்கியிருந்தது. அவனது நெளிந்த தட்டிலும் சில்லறைகள் அதிகமில்லை.
'அக்கா.... குளிர்கிறது. ஏதாவது சூடாக குடித்தால்தான் உயிர்வரும். வா வீட்டுக்குப் போவோம்' தம்பி அக்காவைக் கெஞ்சினான். அவள் அவன் கையிலிருந்த பேணியை எட்டிப் பார்தாள். கவலை வந்தது. போதாதே. ஆனால் அவளுக்கும் பலவீனமாக இருந்தது. சூடாக குடிக்க வேண்டும் போலிருந்தது.
இருவருமாக வீட்டுக்குப் போனார்கள்.
மங்கலான வெளிச்சமும், பனியுமாய் நேரகாலத்தை தெரியாமல் செய்து கொண்டிருந்தன. வாகனங்கள் பனியைச் சகதியாக்கி விரைவாக ஓடமுடியாது தடுமாறிக் கொண்டிருந்தன. கடைகளுக்குப் போய் வருபவர்களைத் தவிர பெரிதாக நடமாட்டமில்லை.
வீட்டில் அம்மா அவர்களுக்கு சூடாக தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். மகன் கொண்டு வந்த பேணியைப் பார்த்த அவளின் முகம் வாடியது.
அப்போது திறந்திருந்த அவர்கள் வீட்டுக்குள் ஒரு பெண் நுழைந்தாள். அவள் வாயில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அவள் வெள்ளிப் பல்லொன்று கட்டியிருப்பது புகைவிடுகையில் தெரிந்தது. ஓரளவுக்கு விலையுயர்ந்த குளிர்கால உடைகள் அணிந்திருந்தாள். தடித்த குதியுயர்ந்த சப்பாத்து போட்டிருந்தாள். தொப்பியும் அவ்வளவு மலிவானதல்ல.
தாயும் பிள்ளைகளும் வந்தவளைத் தெரியாததால் அதிசமாய் பார்த்தார்கள்.
வந்தவளோ நெடுநேரமாக தெருவில் நின்று அந்தப் பெண் பாடுவதை அவதானித்துக் கொண்டிருந்தவள். அக்காவையும், தம்பியையும் பின்தொடர்ந்தே வீட்டுக்குள் வந்திருந்தாள்.
அந்தச் சிறிய வீட்டின் வறுமையைக் கண்களால் மதிப்பிட்டுக் கொண்டே அவள் கதைக்க ஆரம்பித்தாள். ஜேர்மனியில் சிறு பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதற்கு பணிப்பெண்கள் தேவையென்றும், அவள் மகள் சம்மதித்தால் அவர்கள் வறுமை போய்விடும் என்றும் தெரிவித்தாள்.
ஜேர்மனி
கார் நிறுத்தியதற்கான கட்டணத்தைச் செலுத்தும்போதுதான் சட்டென்று ஞாபகம் வந்தது. கார் கதவை சாத்தவில்லை. விரைவாய் காசைப்போட்டு துண்டை மெசினிலிருந்து எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் காரை நோக்கி வந்தபோது பார்த்துவிட்டேன். ஒரு சின்னப் பெண் அரைகுறையாகத் திறந்திருந்த கார்க் கதவை திறந்து உள்ளே ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டாள். பிறகு காணவில்லை. ஒளித்துவிட்டாளோ?
நிறைய யோசனைகளுடன் மிகவும் எச்சரிக்கையாக காரடிக்கு வந்தேன்.
அவள் பின் இருக்கைக்கும் முன் இருக்கைக்கும் இடையிலான சிறிய இடைவெளியில் கீழே படுத்திருப்பது தெரிந்தது.
ஒளித்துத்தானிருக்கிறாள். ஆபத்தில்லை.
என்றாலும் அவதானமாயிருக்க வேண்டும். என்னவும் நடக்கலாம். அவளே ஆபத்தானவளாகவும் இருக்கலாம். அல்லது தன்னுடன் என்னையும் சேர்த்து ஆபத்தில் மாட்டிவிடலாம். முதலில் இந்தக் கார் நிறுத்துமிடத்தைவிட்டு வெளியில் போய்விட வேண்டும். இது நிலத்தின் கீழ் மூன்றாவது தளம். ஆபத்தான இடம்.
எதுவும் தெரிந்து கொள்ளாதவன் போல் சாதாரணமாக காரில் ஏறினேன். முதல் வேலையாக அவள் கதவைத் திறக்க முடியாதபடி கதவுகளுக்குப் பூட்டுப் போட்டேன்.
காரைச் செலுத்தி தரைக்கு மேல் வந்து வெளிச்சம் பட்டபின் கண்ணாடியால் பின்னால் கவனித்தான்.
அவள் சுருண்டுபோயிருந்தாள். கசங்கியும் கிழிந்துமிருந்த உடைகள் விபச்சாரப் பெண்ணுக்கான அடையாளமாகவிருந்தன.
என்ன செய்யலாம்?
பொலிசுக்குப் போகலாமா?
அந்திரியாசுக்குப் போன் பண்ணினேன். என்ன விடயமென்றாலும் அவனைக் கலந்தாலோசிக்காமல் நான் செய்வதில்லை. அவன் தனது தொலைபேசியைப் போட்டிருக்கவில்லை.
என்ன செய்யலாம்?
முதலில் வீட்டுக்குப் போகலாம். அந்திரியாசுடன் கதைத்தபின்தான் எதுவும் செய்வது நல்லது.
இவளால் ஆபத்து வராதா? அப்படி என்னதான் வரப் போகிறது? அதையும் பார்த்துவிடலாமே?
வீட்டடியில் காரை நிறுத்தி கதவுகளைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து பெரிய போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு மறுபடி காரடிக்கு வந்து கதவைத் திறந்து அவளிடம் நீட்டினேன்.
அவள் மிரண்டுபோய் என்னைப் பார்த்தாள். நான் சிநேகமாய் சிரித்தேன்.
பார்க்க பாவமாயிருந்தது. போட்டிருந்த உடைகளுக்கு கொஞ்சமும் பொருந்தாத குழந்தை முகம். கண்களில் நூறுவீத பயம். உடம்பு வியர்த்துப் போயிருந்தது.
வீட்டைக் காட்டி, வந்து கோப்பி குடித்துவிட்டு போகும்படி சொன்னேன். அவள் பதிலேதும் சொல்லாது என்னையே மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பயப்படாதே வீட்டுக்கு வருவதற்குப் பயம் என்றால் வேண்டாம். நீ போகலாம் என்று சொன்னதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. எதுவும் புரியாதவள் போல் பார்த்தாள்.
ஓ... டொச் பெண்ணில்லை. டொச் அவளுக்குப் புரியவில்லை. ரசியாவோ போலந்தோ...
வீட்டைக் கையால் காட்டி குடிப்பது போலவும் கையால் சைகை காட்டினேன்.
அவள் கண்களில் பயம் போகவில்லை. என்றாலும் போர்த்திக் கொண்டு என் பின்னால் வந்தாள். வேறு வழியில்லைப் போலும்.
வீட்டுக்குள் வந்ததும் எல்லா இடத்திலும் அவசரமாய் என்னவோ தேடினாள். யாராவது ஒரு பெண் இருக்கமாட்டாளா என்று பார்க்கிறாள் போலும். நான் தனிக்கட்டை.
இப்போது இன்னும் பயத்துடன் வரவேற்பறை சுவரில் சாய்ந்தபடி தரையில் அமர்ந்தாள்.
'என்ன பெயர்?'
'எங்கிந்து வருகிறாய்?'
'ஏன் எனது காருக்குள் ஒளித்தாய்?'
எல்லாக் கேள்விகளையும் ஆறுதலாகத்தான் கேட்டேன். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆங்கிலத்தில் கேட்டதும் புரியவில்லை. என்னையே மிரள மிரள பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு முன்பாகவே கோப்பி தயாரித்து கொடுத்தேன். வாங்கி மடக்கென்று குடித்தாள்.
இப்போது அவளை நன்றாகப் பார்த்தேன்.
அரைகுறை ஆடையால் உடம்பு அதிகமாகத் தெரிந்தது. தெரிந்த இடங்களிலெல்லாம் தீக் காயங்கள். வெட்டுத் தழும்புகள். வயசு பதினாறுக்குள்தான் இருக்கலாம். முகத்தில் இன்னும் குழந்தைத்தனம். அதையும் தாண்டி கண்களில் நிறையப் பயம். அவளது வயசுக்குச் சற்றும் பொருந்தாத உடையும், பூச்சுகளும். ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. அவளுக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனாலும் அவள் முகத்தைப் பார்க்கையில் அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.
இனி என்ன செய்வது?
பொலிசுக்குச் சொல்லலாமா?
பொலிஸ் என்றதும் திரும்ப அந்திரியாஸ் ஞாபகம். போன் செய்து பார்த்தேன். இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை. வேலையிலிருக்கிறான் போலும். வேலையிடத்துக்கு நான் தொடர்பு கொள்வதில்லை. பொலிஸில் குற்றவியல்பிரிவில் வேலை.
அந்திரியாசுடன் மட்டும்தான் நான் கதைப்பேன். அவனைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. அவனுடன் தொடர்பு கொள்ளும்வரைக்கும் பொறுத்திருப்போம்.
குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து பார்த்தேன். பெரிதாக ஒன்றுமில்லை. நான் தனியாள் என்பதால் அதிகம் வாங்கி வைத்துக் கொள்வதில்லை. பசித்தால் பெரும்பாலும் துருக்கி கடையில் டொனரோ, இத்தாலிக்காரனிடம் பிற்சாவோ சாப்பிட்டுக்கொள்வேன்.
தமிழர்கள் ஒருவருடனும் நான் தொடர்பு வைத்துக் கொள்ளவுமில்லை. அதனால் என்னிடம் விருந்தாளிகள் என்று யாரும் வருவதுமில்லை. எதுவும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய தேவையுமில்லை.
எனது ஒரே ஒரு உறவு அந்திரியாஸ் மட்டுந்தான். அவன்தான் எப்போவாவது என்னிடம் வருவான். கோப்பி அல்லது பியர் குடிப்போம். வெளியில் எங்காவது போய் சாப்பிடுவோம்.
அந்திரியாஸை எப்படிச் சந்தித்தேன் என்பதை இந்தக் கதை முடிவதற்கு முன் சொல்லிவிடுகிறேன்.
இப்போது பசித்தது.
இரவுச் சாப்பாடு தேவை.
சாப்பாடு வாங்கி வருவதாக அவளுக்கு சைகையால் காட்டிவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கடைக்குப் போனேன்.
அவள் எந்த மதமோ? எந்த இறைச்சி அவள் சாப்பிடக்கூடாததோ? கிழங்குப் பொரியலும் சலாட்டும் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தேன்.
ஆர்வமாய் சாப்பிட்டாள். நிறையப் பசி போல.
அழுதிருக்கிறாள்.
எழும்பி வந்து செற்றியில் இருக்கும்படி எத்தனையோ தரம் கையால் காட்டியும் பிடிவாதமாய் தரையிலேயே அமர்ந்திருந்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடிந்ததும் மறுபடி கோப்பி தயாரித்து அவளுக்குக் கொடுத்தேன்.
கொஞ்ச நேரம் ரீ.வி. பார்த்தேன். பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் கொக்காயின் பாவித்ததும் சட்டவிரோதமான விபச்சாரப் பெண்களுடன் ஆடம்பரக் ஹோட்டல்களில் செக்ஸ் வைத்துக் கொண்டது பற்றியும் விலாவாரியாகக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த அறிவிப்பாளர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மற்றவர்களை கூப்பிட்டு அவர்களது பலவீனங்கள், குறைகள், பிழைகளை நார் நாராகப் போட்டுக் கிழித்து மிஸ்ரர் சுத்தம் என்று பேரெடுத்தவர். இப்போது தொலைக்காட்சி கமராக்களுக்கு ஒளித்து தலைமறைவாகிவிட்டார். அடுத்து வந்த விசயம்தான் எனக்கு இன்னும் சுவாரசியமாக இருந்தது. இந்த அறிவிப்பாளரின் நடவடிக்கைகளைப் போட்டுக் குடைந்த அரசவழக்கறிஞர்கள் இதே விபச்சாரிகளுடன் இதே ஹோட்டலில் செக்ஸ் கேளிக்கை நடாத்திய பல பாராளுமன்ற ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலையும் பெற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொங்கியெழுந்த பாராளுமன்றம் அறிவிப்பாளரின் வழக்கு அத்துமீறிப் போவதாகவும் எனவே அந்த வழக்கை மூடிவிடும்படியும் சனனனாயகத்தின் பேரால் கூறினர்...... நிகழ்ச்சி தொடர்ந்து போக எனக்கு சிரிப்பு வந்தது. இலங்கை, இந்தியாவில் அரசியல்வாதிகள் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு செய்யும் அதே அசிங்கங்களை இங்கே கோட்டு சூட்டுப் போட்டுச் செய்து கொண்டிருந்தார்கள். வாழ்க சனனாயகம்....
நித்திரை வந்தது.
அவளைப் பார்த்தேன்.
அப்படியே தரையில் இருந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கான படுக்கையைக் கொண்டுவந்து கொடுத்தேன். எதுவும் சொல்லாமல் பேசாமலிருந்தாள்.
நான் வழக்கமாகப் படுக்கும் செற்றியில் படுத்துக் கொண்டேன். நல்ல தூக்கம் வந்தது.
காலையில் விழித்துப் பார்த்தபோது அவள் இருந்த இடத்திலேயே போர்த்திக் கொண்டு தூங்கிப் போயிருந்தாள்.
முகம் கழுவி, கோப்பி தயாரிக்கும்போது அவளும் விழித்துவிட்டாள்.
துவாயைக் கொடுத்து குளியலறையைக் காட்டினேன்.
அவள் தயாராகி வந்ததும், கோப்பியைக் குடுத்து, மேசையில் பாணும் பட்டர், ஜாமும் இருப்பதைக் காட்டி சாப்பிடும்படி சைகை காட்டினேன்.
அவள் சாப்பிட ஆரம்பித்தபோது வெளியே போய் வருவதாக சொல்லிவிட்டு வெளியே வந்து காரில் ஏறினேன்.
கைத் தொலைபேசி ஒலித்தது. அந்திரியாஸ்.
'நேற்று எனக்கு போன் செய்திருக்கிறாய். நான் வேலையாயிருந்தேன். என்ன விசயம்?'
அவனுக்கு காருக்குள் வந்து ஒளித்த பெண்ணைப் பற்றிச் சொன்னேன். அவன் என்னை நாங்கள் வழக்கமாகக் கோப்பி குடிக்கும் கடைக்கு உடனே வரச் சொன்னான்.
போனேன்.
கடை வாசலில் அந்திரியாஸ் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
கோப்பிக்குச் சொல்லிவிட்டு தனியேயிருந்த மேசையில் அமர்ந்தோம். பெரிதாக ஆட்கள் இல்லை. பணிஸை வெட்டி உள்ளுக்குள் சலாட், சலாமி, கேஸ வைத்து மூடி வைத்தார்கள்.
'அவளை உடனேயே வெளியில் துரத்திவிடு' என்றான் அந்திரியாஸ்.
நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். ஒரு பொலிஸ்காரனா இப்படிக் கதைப்பது.... 'அவளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது'
'இந்த விடயத்தில் இரக்கப்பட முடியாது. நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் அவள் ஏதோ ஒரு விபச்சார கும்பலிலிருந்து தப்பி வந்த வெளிநாட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். ரசியாவோ அல்லது ஏதோ ஒரு கிழக்கைரோப்பிய நாட்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம். இது பயங்கரமான மாபியாக் கும்பல் சம்பந்தப்பட்ட விடயம். உனக்கு ஆபத்தாக முடியும். அதனால் அவளை வெளியில் துரத்திவிடு'
' நீ பொலிஸ்தானே.. அவளை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டுபோய் விசாரித்து அவளது சொந்த நாட்டுக்கே திருப்பியனுப்பிவிடேன்..'
'விபரம் புரியமல் கதைக்காதே. தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்கவேயில்லையா? இந்த மாபியாக்களுடன் பிரபலங்கள், அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தொடர்பிருக்கிறது. பொலிஸ் கூட உடந்தை. இவளை விசாரித்து அதன் மூலம் ஏதாவது உண்மை வெளிவருவதில் யாருக்கும் விருப்பமிருக்காது. நாங்கள்தான் தேவையில்லாமல் ஆபத்தைத் தேடிக் கொள்வோம்'
அந்திரியாஸ் சொல்வதும் உண்மைதான். ஜேர்மனி ஒரு பொலிஸ்நாடு. இடதுசாரித் தீவிரவாதங்களையெல்லாம் வழித்துத் துடைத்துக்கொண்டு வருகிறார்கள். அப்பிடியிருக்கையில் இப்படி மாபியாக் கும்பல்கள் இயங்குவதை நிறுத்துவது பெரிய காரியமல்ல. ஆனால் இது நடக்கவில்லை. பெரிய இடங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. என்னதானிருந்தாலும் அந்தப் பெண்ணை வெளியே துரத்த மனம் ஒப்பவில்லை. அந்த பயந்த குழந்தை முகம் மனதைவிட்டு நீங்கவில்லை.
'இதில் யோசிக்க ஒன்றுமில்லை. உனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அவளாக வந்து ஒளித்தாள். இரக்கப்பட்டு ஒருநாள் இரவு தங்க அனுமதித்தாய். அவ்வளவும் போதும். அவளை வெளியே அனுப்பிவிடு. நீ தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் உனக்கு ஆபத்துதான். பிறகு என்னால்கூட உன்னைக் காப்பாற்ற முடியாது போய்விடும்'
நான் பேசாமலிருந்தேன். அந்திரியாஸே இப்படிச் சொன்னால் யோசிக்கத்தான் வேண்டும். நான் இருக்கும் நகரத்திலேயே சட்டவிரோத விபச்சார விடுதி நடாத்தியதாகப் பிடிப்பட்டவன் பொலிஸ் தலமையதிகாரிதான். யாரையும் நம்பமுடியாது. ஆபத்து எந்த வடிவத்திலும் வரலாம்.
எப்படித்தான் யோசித்தாலும் அந்தப் பெண்ணை வெளியே துரத்த மனம் இன்னும் தயாராகவேயில்லை. அவள் குழந்தை. வெளியே அவளுக்கு என்ன நடக்குமோ... கொலைகூடச் செய்துவிடுவார்கள்.
வெளியே அனுப்பாமல் அவளை எங்கே தங்க வைப்பதென்றும் தெரியவில்லை. நானோ தனியாள். யாருடனும் தொடர்புமில்லை. உதவிக்கு எவரும் வரமாட்டார்கள். நானும் ஆபத்தில் மாட்டிக் கொள்வேன்.
கோப்பி வந்தது.
குடித்தோம்.
அந்திரியாசுக்கு வேலைசெய்யுமிடத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. 'விரைவில் முடிவெடு' என்று சொல்லிவிட்டுப் போனான்.
மத்தியானத்திற்கு வீட்டில் சமைத்து சாப்பிடுவதற்கான பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்தேன்.
இப்போது அவள் செற்றியிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். குளித்திருக்க வேண்டும். தலையிழுத்து முடிந்திருந்தாள். அவளது படுக்கை விரிப்புகளும் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்தன.
என்னைப் பார்த்து முதற் தடவையாகச் சிநேகமாகச் சிரித்தாள்.
சமையலறைக்குப் போய் வாங்கி வைத்த பொருட்களை அடுக்கும்போது மாற்றம் தெரிந்தது. கழுவ வைத்திருந்த பாத்திரங்களை கழுவியிருந்தாள். பரவியிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தியிருந்தாள். எல்லாவற்றையும் பார்க்கும்போது அவளைத் துரத்தப் போகிறேனே என்று கவலை வந்தது.
கோப்பி தயாரித்து அவளுக்கென்று வாங்கிக்கொண்டு வந்திருந்த சொக்கிளேற்றுடன் கொடுத்தேன்.
சந்தோசமாக வாங்கி அவளது மொழியில் ஏதோ சொன்னாள். நன்றி என்பதாக இருக்கலாம்.
சமைக்க ஆரம்பித்தேன்.
அவள் தொலைக்காட்சியையும் என்னையும் பார்ப்பதாக இருந்தாள். நான் சமைக்கும் விதம் அதியசமானதாகத் தெரிகிறதோ.
சமையலை முடித்து, குளித்து, உடை மாற்றிக்கொண்டு நானும் ஒரு செற்றியில் வந்திருந்தேன்.
அவள் என்னைப் பார்த்து திரும்பவும் சிநேகமாய் சிரித்தாள்.
அவளை என்ன செய்வதென்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. திடீரென்று அந்த யோசனை வந்தது. ஒரு வெள்ளைத்தாளையும் பேனையையும் எடுத்தேன். ஜேர்மனி என்று எழுதி கேள்விக்குறி போட்டு அவளிடம் காட்டினேன். பார்த்துவிட்டு புரியாமல் என்னைப் பாத்தாள்.
தாளை வாங்கி ரசியா என்று எழுதி கேள்விக்குறி போட்டு அவளிடம் நீட்டினேன். இப்போது அவள் சிரித்தாள். பேனையை என்னிடமிருந்து வாங்கி எழுதித் தந்தாள். ரசியாவை வெட்டி கீழே உக்ரெய்ன் என்று எழுதியிருந்தாள்.
உக்ரெய்ன் பெண்.
அவளது உடம்பிலிருந்த காயங்களைக் காட்டிக் கேட்டேன்.
அவள் கண்களில் நீர் நிரம்பியது. பழையபடி பயம் வந்தது. வாய்விட்டே அழுதாள்.
கேட்டிருக்கக் கூடாதோ?
நான் கொஞ்சமும் எதிர்பாராமல் தனது ரீசேட்டைக் கழற்றி மேலுடம்பைக் காட்டினாள்.
நான் அதிர்ந்து போனேன். இன்னும் பெரிய காயங்கள். காயங்கள்... காயங்கள்... இன்னும் புண்ணாகியிருந்தன. பார்ப்பதற்கே தாங்க முடியவில்லை.
மறுபடி ரீ சேட்டைப் போட்டுக் கொண்டு சிகரெட் பிடிப்பதுபோல பாவனை செய்து உடம்பில் தீக்காயங்கள் உள்ள இடங்களில் வைத்துக் காட்டினாள்.
பாவிகள்.... உடம்பு முழுக்க சிகரெட்டால் சுட்டிருக்கிறார்கள். நம்ப முடியவில்லை. பார்க்கவே மனசு தீய்ந்தது.
அவள் எழுந்து குசினிக்கு போய் கத்தியொன்று எடுத்துக் கொண்டுவந்து வெட்டுவதுபோல் தனதுடம்பில் காயமுள்ள இடங்களில் வைத்துக் காட்டினாள்.
எனக்குத் தொண்டையை அடைத்தது. சீரணிக்கவே முடியவில்லை. எப்படி..??? எப்படி முடிந்தது?? இந்தக் குழந்தையைப்போட்டு இப்படி மிருகத்தனமாக சித்தரவதை எப்படி முடிந்தது?? என்ன மனிதர்கள்...
அவள் தனக்கு நடந்தவைகளை நினைத்தாலோ என்னவோ அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.
அழுதாள்.
எனக்கும் அவளைப் பார்க்க அழுகை வந்தது. நானும் எத்தனையோ துன்பங்கள் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இப்போது அறிவது புதிது.
எழுந்து குசினிக்கு போய் அவளுக்கும் எனக்கும் கோப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தேன்.
அவள் அநுபவித்து கொடுமைகளை அறிந்தபின் எனக்கு அவள் மீது இன்னும் இரக்கம் வந்தது. இத்தனை செய்தவர்களிடம் அவள் திரும்ப அகபபட்டால் கொலைதான் செய்வார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.
இவளை என்ன செய்யலாம்?
எனது இடம் பாதுகாப்பில்லை. நான் தனியாள். எனக்கு நிறைய வேலைகள். நான் எப்போதும் வீட்டிலேயே இருக்க முடியாது. தவிர எனது வீட்டில் இருப்பது உடனடியாகவே தெரியவந்துவிடும்.
என்ன செய்யலாம்?
பொலிஸ்கூட பாதுகாப்பில்லை என்கிறான் அந்திரியாஸ். அவன் காரணமில்லாமல் சொல்லமாட்டான். ஏதோ அறிந்திருக்கிறான்.
வேறெங்காவது கொண்டுபோய் விடுவதற்கு எனக்கு யாரையும் பழக்கமில்லை. எனக்குத் தெரிந்த ஒரே ஒரு ஆள் அந்திரியாஸ்தான்.
எங்கே கொண்டுபோய்விடலாம்?
பெண்கள் விடுதி? தேவாலயம்??
அந்திரியாஸ் போன் பண்ணினான். 'அவளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டாய் என்று நம்புகின்றேன்'
'இன்னும் இல்லை. இரக்கமாயிருக்கிறது'
'இறுதியாகச் சொல்கிறேன். அவளை வைத்திருந்து ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதே. என்னையும் இதற்குள் இழுத்துவிடாதே. அந்தக் கும்பல் எப்படியும் மோப்பம் பிடித்துவிடும்' அவன் கோபமாகச் சொல்லிவிட்டு துண்டித்துவிட்டான்.
எனக்கும் பயம் வந்தது. இலங்கையிலிருந்து தப்பி வந்து இங்கே அநியாயத்திற்கு சாக வேண்டுமா? அதைவிட அந்திரியாஸ் என்னை வெறுத்தால் எனக்கு இங்கே யாருமில்லை.
அவளை வெளியே அனுப்பிவிடலாம்.
மத்தியானம் சமைத்து அவளுடன் சாப்பிட்டேன். ரசித்து சாப்பிட்டாள். பிறகு செற்றியில் படுத்து அப்படியே தூங்கிப் போனாள்.
பக்கத்து செற்றியிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன செய்யலாம்?
எப்படி வெளியே அனுப்புவது? எங்கே அனுப்புவது?
வெளியே அவளுக்கு என்ன நடக்கும்?
இல்லை. இந்த ரீதியில் யோசித்தால் என்னால் இந்த நூற்றாண்டில் முடிவெடுக்கவே முடியாது. வெளியே அனுப்பிய பிறகு அவளுக்கு என்ன நடக்கும் என்று நான் யோசிக்கவே கூடாது. அது எனக்குத் தேவையில்லாத விசயம். எப்படி அனுப்புவது என்பது பற்றி மட்டும் யோசித்தால் போதும்.
ஆபத்திற்கு உதவாத எனது இயலாமையை நினைத்து எனக்கு என் மீதே வெறுப்பு வந்தது.
அவள் விழித்ததும் கோப்பி தயாரித்துக் கொடுத்தேன். எனது பேர்ஸிலிருந்து நூறு யூறோ எடுத்து அவள் கையில் வைத்தேன்.
அவள் எதுவும் பரியாமல் என்னையே விழித்துப் பார்த்தாள்.
நான் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். அவ்வளவு சுலபமில்லை. கதவருகே போய் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியே கையைக் காட்டி அவளைப் போய்விடும்படி சைகை காட்டினேன். அவளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். என்னால் தாங்க முடியாது.
அடுத்த சில வினாடிகள் எந்த சத்தமுமில்லை. பின்னர் அவள் அழுது கேட்டது.
நான் என்னை இறுக்கமாக்கிக்கொண்டேன். மனசை எதுவோ பிசைந்தது. ஆபத்து. இளகிவிடுவேன் போலிருக்கிறது. வேறெங்காவது மனசைத் திருப்ப வேண்டும். இலங்கையில் நான் பட்ட துன்பங்களை நினைத்துப் பார்த்தேன். ஜேர்மனிக்கு வந்ததை நினைத்தேன். விமானநிலையத்தில் அந்திரியாசுடனான முதலாவது சந்திப்பை நினைத்தேன்.
நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அவள் ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள். கைகளைப் பிடித்து முத்தமிட்டாள். அழுதாள்.
பிறகு வெளியே போய்விட்டாள்.
நான் உடைந்துபோய் அவளைப் பார்க்கும் தைரியமற்று கதவைச் சாத்திவிட்டு செற்றியில் வந்து விழுந்தேன். அழுதேன். உறவில்லாத அவள் முகம் மறைய மறுத்தது. அவளது குழந்தை முகம், பயந்த விழிகள், காயந்து போன தீக் காயங்கள், வெட்டுக் காயங்கள்..... எல்லாம் மாறி மாறி வந்தன. ஏதோ பிழை செய்தது போன்ற குற்ற உணர்வு.
எழுந்து போய் கதவைத் திறந்து பார்க்கலாமா?
கூடாது. அவள் அங்கேயே நின்று அழுதுகொண்டிருந்தால் நான் மனம் மாறிவிடுவேன். பிறகு என்னால் முடிவெடுக்கவே முடியாது.
அவள் எப்பிடியாவது தப்பிவிடுவாள். யாராவது நல்லவர்கள் அவளைக் காப்பாற்றுவார்கள். எத்தனையோ ஜேர்மன் தம்பதிகள் பிள்ளைகள் இல்லாமல் ஏங்குகிறார்கள்.
ஏனோ நிம்மதியில்லாமலிருந்தது.
இரவு சாப்பிடப் பிடிக்கவில்லை. கோப்பி குடித்தபின் வெளியே போக வேண்டும் போலிருந்தது.
பலத்த யோசனைகளுடன் கதவைத் திறந்தேன்.
வெளியே அவள் இல்லை.
வீட்டைவிட்டு வெளியே வந்தேன்.
அவளை காணவில்லை.
தெரு முடிவு வரைக்கும் காலாற நடந்துவிட்டு வந்து படுத்துவிட்டேன்.
அடுத்து வந்த இரணடு நாளும் நான் என்ன செய்தாலும் அவள் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்தது. அவளின் குழந்தை முகத்தை, பயந்த விழிகளை, இரத்தம் வடிந்து காய்ந்து போயிருந்த காயங்களை மறக்கவே முடியவில்லை.
மூன்றாம் நாள் 'அவசரம்' என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு அந்திரியாஸ் வீட்டுக்கு வந்தான்.
'இந்தப் பெண்தான் உன் வீட்டில் இருந்தவளா?' என்று கேட்டு கையில் வைத்திருந்த பத்திரிகையை நீட்டினான்.
பதட்டத்துடன் பிரித்துப் பார்த்தேன்.
முதல் பக்கத்திலேயே அவளது பெரிய படம். முகம் முழுவதும் இரத்தம். கழுத்திற்கு கீழ் வெள்ளைத் துணியால் மூடியிருந்தார்கள். பிணம்.
அவள்தான்.
என்னால் தாங்கமுடியவில்லை. அழுகை வெடித்து வந்தது.
அந்திரியாஸ் முதுகைத் தட்டி ஆறுதல் படுத்தினான். 'நீ காரணமில்லை'
'இல்லை. நான்தான். நான்தான் அவளைக் கொல்லக் குடுத்தேன்'
'முட்டாள்தனமாகக் கதைக்காதே. நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அவளை எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று. உனது வீட்டில் உனது கண் முன்னால் கொல்லவில்லை என்று ஆறுதல்கொள். நான் உன்னைப் பிறகு சந்திக்கின்றேன்' அந்திரியாஸ் போய்விட்டான்.
என்னால் தாங்க முடியவில்லை.
அவள் எனது வீட்டிலிருந்த இடங்களைப் பார்த்தேன்.
வந்தவுடன் இந்தத் தரையில்தான் சுவருடன் சாய்ந்தபடி இருந்தாள். இதிலேயே படுத்தாள். பிறகு செற்றியில் இங்கேயிருந்து ரீ.வி.பார்த்தாள். என்னுடன் இருந்து சாப்பிட்டாள். இதோ, இங்கிருந்துதான் என்னைப் பார்த்துச் சிரித்தாள். தனது உடம்பிலிருந்த காயங்களைக் காட்டினாள்......
நான் அவளைக் கொல்லக் கொடுத்துவிட்டேன்.
அன்றைய நாள் முழுவதும் எந்த அலுவலும் செய்ய முடியவில்லை. திரும்பத் திரும்ப அவள் ஞாபகம்தான்.
இரவு பத்திரிகையை திரும்ப எடுத்து அவள் படத்துடன் வந்த செய்தியையை முழுதாகப் படித்தேன்.
கூரிய ஆயுதத்தால் உடம்பு முழுக்க கொத்திப் பிளந்திருக்கிறார்கள். அவள் உக்ரெய்ன் நாட்டைச் சேர்ந்தவள். வயது பதினாறிற்குள் இருக்கலாம். ஜேர்மனியில் பதிவில்லை. சட்டவிரோதமாக ஜேர்மனிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளாள். ஜேர்மனியில் ஆஸ்பத்திரியில் பணியாளர் வேலை, பிள்ளைகள் பராமரிக்கும் வேலை என்று கிழக்கைரோப்பிய வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆசைவார்த்தைகள் கூறி இளம் பெண்கள், சிறுவர்கள் ஜேர்மனிக்கு மாபியாக் கும்பல்களால் கொண்டுவரப்படுகிறார்கள். இங்கே இவர்கள் பயமுறுத்தப்பட்டும், வன்முறையாலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தப்பியோடுபவர்கள் கொல்லப்படுகின்றனர். அல்லது அவர்கள் குடும்பங்கள் அவர்களது நாட்டில் கொலைசெய்யப்படுகின்றன. மேல்மட்டத்து வக்கிர ஆண்கள் வரும் சிறப்பு விபச்சாரவிடுதிகளிலேயே இந்த சிறுவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இங்கு வருவோர் குறிப்பாக உடல்ரீதியாக சித்திரவதை செய்வதன் மூலம் தங்கள் பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ளுகிறார்கள். சிகரெட்டால் சுட்டும், கூரிய ஆயுதங்களால் வெட்டியும், சவுக்கால் அடித்தும் சாடோமாடோ முறையில் வெறியாட்டம் போடப்படுகிறது. பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால்.....
என்னால் மேற்கொண்டு வாசிக்க முடியவில்லை. நெஞ்சடைத்தது. வாசித்த செய்தி ஒரு கணம் திரைப்படமாய் ஓடியது. அவளை சவுக்கால் அடித்தார்கள். அவள் கதறக் கதற கத்தியால் உடம்பெங்கும் கீறினார்கள். இரத்தம். சிகரெட்டால் சுட்டார்கள். அலறல் சத்தம். அவள் துவண்டு பிணமாய் விழுந்தாள்....
என்ன மிருகத்தனம் இது..... எப்படி மனம் வருகிறது....
எனக்கு உடம்பு நடுங்கியது.
அந்தக் குழந்தையை நான் கொல்லக் கொடுத்துவிட்டேன்.
அவள் உக்ரெய்னில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள்?
காசில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருப்பாளா? அம்மா மடியில் தலை வைத்துத் தூங்கிப் போயிருப்பாளா? தம்பி தங்கையுடன் விளையாடிக் கொண்டிருப்பாளா? நிலவைப் பார்த்துப் பாடுவாளா?
ஏன் அவளுக்கு இப்படி...?
ஏன் அவள் என்னிடம் வந்தாள்...?
ஏன் செத்துப் போனாள்...?
தலை வெடித்தது. பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. குற்றவுணர்வு என்னைக் கொன்றது. சாப்பிட, படுக்க முடியவில்லை. கை நடுங்க, ஊசி எடுத்துப் போட்டுக் கொண்டேன். போதை மட்டும்தான் என்னைக் காப்பாற்றும் வலிமை கொண்டது.
ஞாயிற்றுக்கிழமை.
வழக்கம்போல் தேவாலயத்திற்குப் போனேன்.
ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்தில் நானும், அந்திரியாசும் சந்திப்போம். சந்திக்க வேண்டும். வழக்கமான, ஆட்கள் அருகேயில்லாத, பின் வரிசையில் உட்கார்ந்தோம். சின்னப்பிள்ளைகள் யேசுவைப் பாடிக் கொண்டிருந்தார்கள். பாதிரியார் பியானோ வாசித்துக் கொண்டிருந்தார். உரிய நேரம் வரும்போது தேவாலயத்திலிருந்தவர்களும் இராகம் கலையாமல் சேர்ந்து பாடினார்கள்.
'இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லையா?'
இல்லையென்று தலையாட்டினேன்.
'அதையே நினைத்துக் கொண்டிருக்காதே. எமக்குரிய வேலைகள் இருக்கிறது. நாம் செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் எமக்குப் பிரச்சினைகள் வரும்'
நான் பேசாமலிருந்தேன். அந்திரியாஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் சிந்தனை எங்கெல்லாமோ போய்வந்தது.
'கொலம்பியாவிலிருந்து பொருளுடன் வரும் கப்பல் நாளை கம்பேர்க் துறைமுகத்திற்கு வருகிறது. கப்பலைச் சோதனையிடும் பொறுப்பு எனக்கும் டியேர்க்கிற்கும்தான். நீ செய்ய வேண்டியது.....' அந்திரியாஸ் தனது திட்டத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான்.
எல்லாம் முடிந்து தேவாலயம்விட்டு வெளியே வந்ததும் அந்திரியாஸ் தனது வேலைக்குப் போக நான் என்ன செய்வதென்று தெரியாமல் நடந்து போனேன்.
சிங்கள இராணுவத்தால் எனது அக்காவும், அத்தானும் கொல்லப்பட்டபின் நான் இயக்கத்தில் போய் சேர்ந்தது, காடு மேடெல்லாம் அலைந்தது, இந்தியா போய் பயிற்சி எடுத்தது, கிடைத்ததைச் சாப்பிட்டு, பாம்பு பூச்சிகளுடன் படுத்தெழும்பியது, நான் சேர்ந்திருந்த இயக்கமே நம்பிவந்தவர்களை அழித்தது, அவர்களிடமிருந்து தப்பி ஒளித்துத் திரிந்தது, தமிழ்நாட்டுப் பொலிஸாரால் அடிக்கடி சிறையிலடைக்கப்பட்டது, சித்திரவதைப்பட்டது, கையில் காசில்லாமல், ஒண்ட இடமில்லாமல் குலைப்பட்டினியாய் தெருத்தெருவாய் திரிந்தது, வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களிடம் உதவி கேட்டும் அவர்கள் கைவிட்டது, ஜேர்மனியிலிருக்கும் நண்பன் போதைப் பொருள் விற்பவனுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்தது, போதைப்பொருளுடன் ஜேர்மனிக்கு வந்தது, பிடித்த பொலிஸ்காரன் அந்திரியாஸே அந்தக் கடத்தலுக்குப் பொறுப்பாக இருந்தது, தன்னையும் தொடர்ந்து அவன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தியது, செய்யும் தொழிலின் ஆபத்து காரணமாய் யாருடனும் தொடர்பில்லாமல் தனியே சீவித்தது, உக்ரெய்ன் பெண் வந்தது, அவளுடன் ஒன்றாக சாப்பிட்டது, அவள் அழுதது, அவளை நான் வெளியே துரத்தியது, அவள் இரத்தமாய் இறந்து கிடந்தது.....
சே.. என்ன உலகம் இது...
மிருகங்களைத் தவிர இந்த உலகத்தில் மனிதர்களே இல்லையா?
எனது வழக்கமான பாருக்கு வந்து மூலையில் இருந்தேன். பியர் குடித்தேன்.
மூலையில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ரி.வி.யில் செய்திகள் போய்க் கொண்டிருந்தது.
அமெரிக்கா ஈரரக்கைத் தாக்கியது.
இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களைக் கொன்றது.
லைபீரியாவில் ஆளை ஆள் வெட்டி தலைகைளைக் கையில் கொண்டு திரிந்தார்கள்.
பிராங்பேட்டில் காணாமல் போன ஏழு வயசு சிறுவனும் சிறுமியும் மூன்றுநாள் பாலியல் பலாத்காரத்தின்பின் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள்.
மேற்கொண்டு என்னல் பார்க்க முடியவில்லை.
இந்த உலகம் கெட்டது.
யாராலும் எதுவும் செய்துவிட முடியவில்லை.
அழிந்து போகட்டும்.
கைத்தொலைபேசியில் செய்தி வந்திருந்தது. கொலம்பியா கப்பல் கம்பேர்க் வரும் நேரம்.
(காலம், கனடா, 2005)