இதைக் கோருவதுதான் புலித் தேசியம் என்றால், தமிழ்நாட்டு தமிழ் உணர்வும் இதற்குள் தரங்கெட்டு கிடக்கின்றது. ஒரு இனம் தனக்காக தான் போராடமுடியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. இயக்கங்கள் முதல் இந்தியா வரை, தமிழ்மக்கள் தமக்காக போராடுவதை திட்டமிட்டே தடுத்து நிறுத்தினர்.
இதன் முதிர்வில் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராடுவது, புலிக்கு எதிராக போராடுவதாக கூறி அவர்கள் மேல் புலிப்பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இப்படி ஒரு இனத்தின் மேல் அவலத்தை விதைத்தவர்கள், இன்று அதில் குளிர் காய்கின்றனர். ஒரு இனத்தை எந்தளவுக்கு இழிவுபடுத்தமுடியுமோ, அந்தளவுக்கு மீண்டும் மீண்டும் அதைச் செய்கின்றனர். சமகால அரசியல் நிகழ்ச்சிகள், 1983, 1987 களில் இந்தியா தலையிட்டது போல் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது. 1987 இல் எப்படி இந்தியத் தலையீடு கோரப்பட்டதோ, அதே போன்று ஒரு நிலைமை உருவாக்கப்படுகின்றது.
பேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ வெறிச்செயல், மனித துயரத்தையே ஆறாக பெருக்கெடுக்க வைக்கின்றது. இதை தடுத்து நிறுத்த, இந்தியத் தலையீட்டை முன்வைக்கின்றனர். இதுபோல் 1987 இல் தலையீடு நிகழ்ந்த போது என்ன நடந்தது!?
பல ஆயிரம் தமிழ்மக்களை கொன்ற இந்திய இராணுவம், இலட்சக்கணக்கான மக்களை அகதியாக்கியது. பல நூறு பெண்களின் கற்பையே சூறையாடிவர்கள், பொருளாதாரத்தை சுடுகாடாக்கினர். இதைத்தவிர எதையும், இந்திய ஆக்கிரமிப்பாளன் தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. அன்று தம்முடன் சேர்ந்து நின்ற கூலிக்குழுவான ஈ.என்.டி.எல்.எப், வை இன்றும், இந்தியா பராமரித்து வருகின்றது.
பேரினவாதத்துக்கு இணையான மனித அவலத்தை தவிர, எதையும் இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கு வழங்கமுடியாது. அதையே மீண்டும் கோருகின்றனர். என்ன வக்கிரம்!
இந்தியா ஒரு மக்கள் அரசல்ல. மக்களை ஒடுக்கும் ஒரு அரசு. இப்படியிருக்க அரசியல் கோமாளிகளும், பிழைப்புவாதிகளும் நடத்துகின்ற கூத்து, ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு எதிரானது. ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கே எதிரானது.
பாவம் தமிழ்மக்கள். சொந்த கருத்தின்றி, நடைப்பிணமாகி, வாழவழியின்றி, செய்வதறியாது இவர்கள் நடத்தும் இந்த அரசியல் கூத்தைப் பார்க்கின்றனர்.
புலிகளின்றி விடுதலையில்லை என்றவர்கள், மிக விரைவில் தமிழீழம் என்றவர்கள், தலைவரின் காலத்தில் தமிழீழம் என்றவர்கள், இன்று இந்திய புல்லுருவிகளுக்கு பின்னால் தேசத்தையும் தேசியத்தையும் வழிகாட்டுகின்றனர். காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப கதை சொல்லும் கும்பலின் தயவில், புலித்தேசியம் அம்மணமாகி நிற்கின்றது.
புலிகள் கோருவதும், தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் கோருவதும் ஒன்றைத்தான். அதாவது இந்திய தலையீட்டைத்தான். இந்திய அரசு பேரினவாதத்துக்கு துணையாக நிற்பதற்கு பதில், புலிக்கு துணையாக நில்லுங்கள் என்பது தான். இந்திய தலையீட்டை புலிக்கு சார்பாக நடத்துங்கள் என்கின்றனர். இப்படி தலையீட்டை மாற்றி நடத்தக்கோருகின்றனர். இதுதான் அவர்களின் அரசியல் கோரிக்கை. ஈழத் தமிழ்மக்கள் பற்றி எந்த அக்கறையும் இதில் கிடையாது.
இந்தியாவின் தலையீட்டை எதிர்த்தல்ல. அதன் ஆக்கிரப்பை எதிர்த்தல்ல. மாறாக ஒரு பிரிவுக்கு எதிராக மற்றைய பிரிவை ஆதரிக்க கோருகின்றனர். இதைத் தாண்டி, எந்த அரசியலும் இதற்குள் இவர்களிடம் கிடையாது. இப்படி மானம்கெட்ட புலித் தேசியம் முதல் விபச்சாரம் செய்யும் தமிழ் உணர்வு வரை, குண்டுசட்டிக்குள் குதிரையை ஓட்டுகின்றனர். பாவம் தமிழ் மக்கள், அனைத்தும் அவர்களின் அவலத்தின் பெயரில் அரங்கேறுகின்றது.
ஈழத்தமிழன் முதல் இந்திய தமிழன் வரை, தம் கோவணங்களையே இவர்களிடம் பறிகொடுத்துவிட்டு அம்மணமாக நிற்கின்றனர்.
வேஷம் கட்டியாடும் இந்தியப் புல்லுருவிகள்
ஈழத்தமிழ் மக்களின் துயரத்தின் பெயரால், இந்திய தமிழ் இனத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அற்ப அரசியல் தமிழ் உணர்வாக்கப்படுகின்றது. தமிழ் உணர்வு என்பது, பேரினவாதத்திற்கு இந்தியா உதவுவதற்குப் பதில் புலிக்கு உதவக் கோருவதாகிவிட்டது.
இதைப் போன்றுதான் ஈழத் துரோகக் குழுக்களும் இந்தியாவிடம் கோரின. அதாவது தமக்கு உதவும்படி. இப்படி இந்தியாவின் வளர்ப்பு நாயாக நக்கியவர்கள், இன்று இலங்கை அரசின் கால்களை நக்குகின்றனர். இவ்வாறு தேசியம், ஜனநாயகம் எல்லாம் இந்தியாவின் நலனுக்கு சேவை செய்வனவாகிவிட்டன. இதையே தான் தமிழ் உணர்வாளர்கள் மீண்டும் வாந்தி எடுக்கின்றனர்.
சரி இந்தியாவின் நலன்கள் என்ன? அதனிடம் இருப்பது என்ன மக்கள் நலனா? அதுவோ தென்னாசியாவின் பேட்டை ரவுடி. ரவுடி அரசியலைத் தவிர, அதனிடம் மக்கள் அரசியலா உண்டு!
இந்தியா தன் சொந்த மக்களை ஒடுக்கும் ஒரு அரசு. சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக, குலைக்கும் அரசு. இலங்கையில் உள்ள இந்திய மூலதனத்தின் நலன்களைத் தாண்டி, அதன் அங்கம் அசையாது. எந்தத் தலையீடும் இதற்கு உட்பட்டது. சிங்கள பேரினவாதத்தை அது திருப்தி செய்வதன் மூலம்தான், இலங்கையில் இந்தியாவின் நலனையும் செல்வாக்கையும் நிலைநிறுத்த முடியும். இல்லாது போனால் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் கையில் சிக்கும். இது பொதுவான நிலை. சும்மா குலைப்பதால், இதை மீறி எதுவும் நடவாது. இந்தியக் கொள்கையை விமர்சித்து போராடாத வரை, அவை வெறும் குலைப்புத் தான்.
இந்தியத் தலையீடு அனைத்தும், இதற்கு உட்பட்டுத்தான் அமையும்;. இது நிச்சயமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமையும். அது கூட்டுச் சதியாக, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு ஒடுக்குமுறையாக மாறும்.
இதைத்தான் தமிழ் உணர்வாளர்கள் கோருகின்றனர். இதற்குள் முரண்பாடுகள் விதவிதமான அறிக்கைகள் முதல் கேலிக் கூத்துகள் வரை அரங்கேறுகின்றது. யார் அதிக கவர்ச்சியாக இதை நடித்து ஏமாற்றுவது என்பதில் முரண்பாடு. கருணாநிதி மத்திய அரசு உறுப்பினர்களின் மொத்த ராஜினாமாவை முன்வைத்து, அடுத்த சட்டசபையை வெல்ல கணக்குப் போடுகின்றார். ஊர் உலகத்தை ஏமாற்ற, ராஜினாமா அரசியல்.
சரி அடுத்த தேர்தலில் இலங்கை பேரினவாதத்துக்கு உதவும் எந்தக் கட்சியுடனும் கூட்டமைத்து போட்டியிடமாடோம் என்று அறிவிக்கட்டும் பார்ப்போம்;! தமிழனின் பெயரால், தமிழ் உணர்வின் பெயரால் ஏமாற்றுகின்ற வரலாறுதான், தமிழ் இனத்தை அம்மணமாக்குகின்றது.
பதவியை துறக்கும் நாடகம் வெறும் கண்துடைப்பு. அடுத்த தேர்தலில் தமிழனின் பெயரில் பதவியைப் பிடிப்பதற்கு ஈழத்தமிழனின் அவலத்தை எலும்புத் துண்டாக போடுகின்றனர். பேரினவாதத்தை ஆதரிக்கின்ற மத்திய அரசுடன் சோந்து தான், அடுத்த தேர்தலிலும்; ஆட்சியைப் பிடிப்பார்கள். தமிழ் உணர்வு பேசியவர்கள் அங்கு எலும்புத் துண்டுக்காக குலைத்தபடி கால்களை நக்குவார்கள். இப்படி ஏமாந்து கிடப்பவர்களின் வரலாறு தான், தமிழன் வரலாறு.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இவர்களுக்கு இணையாக, சினிமா கழிசடைகளும் சேர்ந்து ஈழத்தமிழன் என்று ஒப்பாரி வைக்கின்றனர். சினிமா என்றாலே பெண்ணின் உடம்பை கலையாக்கி உரிந்து போடும் இந்த கழிசடைப் பொறுக்கிகளின், ஈழத்தமிழ் இனத்தின் அவலம்; பற்றிய அக்கறை என்பது அதன் சினிமாத்தனத்துக்கு உட்பட்டதே. இதன் சமூக அக்கறை என்பது, பெண்ணை சினிமாவில் காட்டும் ஆபாசத்தின் எல்லைக்கு உட்பட்டதே.
ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை, கண்ட கண்ட தெரு நாய்கள் எல்லாம் மேயும் நிலை. அதற்கு ஏற்ப புலிப் பாசிசம் கம்பளம் விரித்து விடுகின்றது.
இதில் இறால் போட்டு மீன் பிடிக்க முனையும் போலிக் கம்யூனிஸ்ட்டுகள். தமிழ் இனம் ஒடுக்கப்படுவதாக மூக்கால் சிந்திய இந்த கும்பல், காஸ்மீர் மக்களினதும் அசாம் மக்களினதும் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது கிடையாது. அதற்காக கண்ணீர் விடுவது கிடையாது. வலதுசாரி பாசிசப் புலி நடத்தும் எதிர்ப்புரட்சியை, விடுதலைப் போராட்டம் என்று கூறுகின்றனர் போலிகள். அதேநேரம் காஸ்மீர், அசாம் போராட்டத்தை பயங்கரவாதம் என்கின்றனர். இப்படி போலிக் கம்யூனிசம் பேசும் இந்தக் கும்பல், ஈழத்தமிழ் மக்களுக்காக போலியாக நீலிக்கண்ணிர் வடிக்கின்றனர்.
காந்தி வழியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக இந்தியா அளவில் போராட மறுப்பவர்கள். தென்னாசியாவில் தன் மேலாதிக்கத்துக்காக முனையும் இந்தியாவுக்கு துணை நிற்பவர்கள் தான் இந்த போலிகள்.
இலங்கைக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டியதுதானே. ஆயுதத் தொழிற்சாலைகளில் இதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய வேண்டியது தானே. அப்பாவி தமிழ் மக்களை பேரினவாதம் முதல் பாசிசப் புலிகள் வரை எப்படி ஒடுக்குகின்றனர் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியது தானே.
போலித்தனமாக கம்யூனிசம் பேசும் இந்தக் கும்பல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது கிடையாது. அதை ஆதரித்து அரசியல் செய்வது கிடையாது. அசாம், காஸ்மீர் மக்களின் போராட்டத்தை ஆதரிப்பது கிடையாது. தமிழ் இன உணர்வாளர்கள் கூட, அதை ஆதரிப்பது கிடையாது. மொத்தத்தில் சந்தர்ப்பவாதிகள். இந்திய விஸ்தரிப்புவாத அரசுடன் சேர்ந்து இயங்கும் இந்த கும்பல்கள், தமிழ் இன உணர்வை கொச்சைத்தனமாக குறுகிய நோக்கில் மாற்றுகின்றனர்
போலிக் கம்யூனிஸ்டுகள் நாடு தழுவிய அளவில் இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்த்து போராட மறுப்பவர்கள். அதற்கு துணையாக செயற்படுபவர்கள். இந்திய விஸ்தரிப்புவாதத்தை அடிப்படையாக கொண்ட இந்திய நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தில் மூழ்கி எழும் மக்கள் விரோதிகள் தான் இந்தப் போலிகள். இனவுணர்வை அடிப்படை அரசியலாக கொண்டு, ஈழத் தமிழ் மக்கள் என்று பேசுவது சுத்த ஏமாற்று மோசடிகளாகும்.
தமிழ் இன உணர்வு பொங்க, ஈழ தமிழ் இனத்துக்கு எதிராக குப்பை கொட்டும் முற்போக்குகள்
வெறும் இனவுணர்வை அளவுகோலாகக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு களமிறங்குகின்றனர். அனைத்து கட்சிகளும் கூடிச் செய்யும் இந்த மோசடிகளில், இவர்களும் தம் பங்குக்கு பங்கேற்று கருத்துரைக்கின்றனர்.
வேடிக்கை என்னவென்றால் இந்திய தலையீட்டையும், இதன் மேலாதிக்கத்தையும் ஆதரிப்பது தான். இதைக் கண்டித்து, இதை எதிர்த்து போராட மறுப்பது, ஈழத் தமிழ் மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்;. இந்தியத் தலையீடு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். 1983, 1987 தலையீடுகள் தான், ஈழத் தமிழ் மக்களின் துயரத்துக்கு அடிப்படையாக உள்ளது. மீண்டும் அதே பல்லவி.
அத்துடன் பேரினவாதத்தை மட்டும் எதிர்க்கின்ற குருட்டுப்பார்வை. புலியை விமர்சிக்காது, கண் மூடித்தனமாக தமிழ் மக்களின் கண்ணில் குத்துகின்றனர். பேரினவாதம் என்பது, அதன் கோரமுகம் என்பது வெள்ளிடைமலை. தமிழ் இனத்தில் உரிமைகள் எதையும் வழங்கத் தயாரற்ற, ஒரு பாசிசக் கும்பல் தான்.
யுத்தத்தை புலிகளின் பெயரில், தமிழ் இனத்துக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இந்த யுத்தத்தை வெற்றிகரமாக நடத்துமளவுக்கு, யார் காரணமாக இருந்தனர். தமிழ் இனம் இந்த நிலையை சந்திக்கும் அளவுக்கு யார் துணையாக இருந்தனர். ஒரு போராட்டம் மக்களை சார்ந்து முன்னேற முடியாது போன வரலாற்றுக் காரணமென்ன? இதிலிருந்தல்லவா தமிழ் மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்க முடியும்.
ஒருபுறம் பேரினவாத பாசிசம், மறுபுறம் புலிகளின் பாசிசம், தமிழ் மக்களின் துயரத்துக்கு காரணமாகும். தமிழ் மக்கள் மேல் அக்கறை உள்ள ஒவ்வொரு உணர்வாளனும், இந்த இரண்டையும் விமர்சிப்பதன் மூலம்தான், தமிழ்மக்களை உணர்வு பூர்வமாக நேசிக்கவும் நெருங்கவும் முடியும்.
ஆனால் தமிழ்நாட்டு இனவுணர்வாளர்கள் என்ன செய்கின்றனர். மானம்கெட்ட வகையில் இன உணர்வுக்குள், தமிழ் பாசிசத்தை நியாயப்படுத்துகின்றனர். தமிழ்மக்களுக்கு எதிரான இந்த தமிழ் பாசிசத்ததை ஆதரிக்கின்ற வெற்றுவேட்டுத்தனத்தையே ஈழத் தமிழ் உணர்வாக்குகின்றனர். இதன் மூலம் தமிழக மக்களை மோசடி செய்கின்றனர்.
வேடிக்கை என்னவென்றால் கருணாநிதி சகோதாரப் படுகொலை பற்றி குறிப்பிட்டதும், ஜெயலலிதா புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்றும் குறிப்பிட்டனர். அவர்கள் தத்தம் அரசியல் நிலைக்கு ஏற்ப இதை கூறிய போதும், இதில் ஒரு உண்மையும் எதார்த்தமும் உண்டு. அதைத் தான் அவர்கள் தம் அரசியல் நிலைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.
தமிழ் உணர்வாளர்கள், முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், இந்த உண்மையையும் எதார்த்தத்தையும் கண்டு கொள்ளாது கருத்துரைப்பது, செயல்படுவது எப்படி ஈழத்தமிழ் மக்களுக்கான உண்மையான உணர்வாக அமையும். இவை எல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக அல்ல. மாறாக சொந்த குறுகிய அரசியலுக்காக, கும்பலுடன் கும்பலாக போடும் கோசங்கள் தான். இதில் எந்த சமூக நேர்மையும், சமூக அக்கறையும் கிடையாது.
ஈழத் தமிழ் மக்களின் துயரம் இதனால் பெருகுமே ஒழிய குறையப்போவது கிடையாது. ஈழத் தமிழ்மக்கள் தம் சொந்த போராட்டத்தை நடத்தாதவரை, அதை அரசியலாக முன்னிறுத்தாத வரை, அதற்கு தடையான காரணத்தை விமர்சித்து போராடுவது மட்டும்தான், நேர்மையான அரசியல். இதற்கு உதவுவதுதான், இதை வலியுறுத்துவது தான் ஈழத் தமிழ் மக்கள் பாலான உண்மையான அக்கறையாகும்.
இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்தும், ஈழத்தமிழ் மக்கள் தம் சுயநிர்ணயத்துக்காக போராடுவதற்க்கு எதிரான சக்திகளை (புலிகள் உள்ளிட்ட) எதிர்த்தும், குரல் கொடுப்பது தான் ஈழத்தமிழ்; மக்களின துயரத்துக்கு விடிவை வழங்கும்.
பி.இரயாகரன்