கிரீஸ் நாட்டில் "சூபர் மார்க்கெட்" ஒன்றில் உணவுப்பொருட்களை சூறையாடிய இடதுசாரி இளைஞர்கள் அவற்றை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார். நவீன ராபின் ஹூட்கள் 

 


 

என்றுஉள்ளூர் ஊடகங்கள் வர்ணித்த இந்த சம்பவம், கிரீசின் வடபகுதி நகரமான தெஸ்ஸலொனிகியில் நடந்துள்ளது. உலகில் அண்மைக்காலமாக உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதும், அதன் காரணமாக மக்கள் கலவரங்களில் ஈடுபடுவதும் பல நாடுகளிலும் வாடிக்கையாகி விட்டது. (பார்க்க : "உலக (உணவுக் கலவர) வங்கி") ஐரோப்பாவில் செல்வந்த நாடான கிரீசும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு தப்பவில்லை. அங்கே கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மட்டும் உணவுப்பொருட்களின் விலைகள் ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளன. உலகம் முழுவதும் மக்கள் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு தமது வருமானத்தில் பெரும்பகுதியை ஒதுக்க வேண்டியுள்ளது.


 

கிரீசில் இடதுசாரி அமைப்புகள், விலைவாசி உயர்வை எதிர்த்து போராடுமாறு மக்களை திரட்டி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கடந்த சில மாதங்களில் மட்டும், குறைந்தது ஐந்து தடவைகள் நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளை (சூபர் மார்கெட்) கொள்ளையடித்து மக்களுக்கு இலவசமாக பங்கிட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகவே தெஸ்ஸலோனிகி சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

 

 

குறிப்பிட்ட அங்காடிக்கு முன்னர் விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முகமூடி அணிந்த இளைஞர்கள் குழுவொன்று, கடையின் உள்ளே நுழைந்து அரிசி, பால் போன்ற உணவுப்பொருட்களை மட்டும் சூறையாடி, அவற்றை வெளியே காத்திருந்த ஏழை மக்களுக்கு விநியோகித்தனர். பொது மக்கள் அவற்றை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பெற்றுக்கொண்டனர். கடையின் 
ஊழியர்கள் மீது எந்த வன்முறையும் பிரயோகிக்காமல், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை தொடாமல், உணவுப்பொருட்களை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். போகும்போது "விலைவாசியை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் முதலாளிகளை அம்பலப்படுத்தும்" துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுவரை பொலிஸ் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.