09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

குஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!

மாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.


"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது'' என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.


ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. "கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்' என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.


"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, "ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்'' என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.


சென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, "மதச்சார்பின்மையின் வெற்றி' என்று கூறிக்கொண்ட காங்கிரசு, "மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்' என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது. பார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் "பயங்கரவாதத்தைத் தடுக்கும்' செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.


தற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.


வர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை. மக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.


இந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன. ராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது, மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.


சங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். சென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் "நீ முசுலீமா' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு. வட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கிளப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.


டெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு. வழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் "இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது. காங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.


பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து "தீவிரவாதிகளை' கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை. கான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்கும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர். ஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.


சங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை. பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள். இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர். அவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.


இவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர். 92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர். முதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.


2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது. காங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.


அதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான். ஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள். மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. "குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்'' என்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.


இந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி. மும்பை ராதாபாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள். ஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் "பதிலடி' கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.


" வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்'' என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் "கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்' என்று கூறி "பதிலடி' கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல். இப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.


பார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி. மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும். சமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும். அவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.


இந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்றியிருக்கின்றார்கள். இப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.


இந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன. ஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எந்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை. மாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள். இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி. அவ்வாறு வெல்ல வேண்டுமென்றால் சிறுபான்மை மக்கள் மதச்சார்பற்ற அமைப்புகளின் கீழ் திரளுவதற்கு முன்வர வேண்டும்.


தமிழகத்தில் பார்ப்பன மதவெறியர்கள் காலூன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரின் பணி. கடந்த இரு பத்தாண்டுகளில் எமது அமைப்பினர் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் மக்கள் இசைவிழா, தில்லை சிதம்பரம் கோவிலில் தமிழுக்காக நடந்த போராட்டம் முதலானவையும், இந்து மதவெறியர்களுக்கு எதிரான நேரடியான மோதுதல்களும் இந்து மதவெறியர்களைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தியிருக்கின்றன.


இருப்பினும், மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுரம் மதமாற்றம், புளியங்குடி தென்காசி கலவரம், கோவை கலவரம், தற்போது கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுதல் என அவர்கள் தமிழகத்தில் காலூன்ற தொடர்ந்து முயன்றவாறுதான் இருக்கின்றார்கள். இந்தச் சூழலில் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான போராட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இது சாதி, தீண்டாமை, மொழி, பண்பாட்டு அடக்குமுறை, மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் சித்தாந்தம் என்று பார்ப்பன பாசிசத்தைப் பெரும்பான்மை மக்களிடத்தில் விளங்க வைக்காத வரை அவர்களை ஒழிக்க முடியாது.


அந்தப் போராட்டம் ஒன்றுதான் இந்து மதவெறியர்களைத் தனிமைப்படுத்தும். அந்தப் போராட்டம்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரி என்பதை மக்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் விளங்கச் செய்யும். கடினமென்றாலும் இது ஒன்றே வழி.


· சாத்தன்