தமிழில் ஒரு கோட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொருள்

மரபான சுரண்டல் முறைகளுக்கு மேலதிகமாக, புதுப்புது வழிமுறைகளையும் கண்டுபிடிப்புக்களையும் கையிலெடுத்துக்கொண்டு மற்றவரையும் இயற்கையையும் சுரண்டிப்பிழைப்பவர்கள் தம்மால் நிறுவப்பட்ட அதிகார அமைப்புக்களின் துணையுடன் எம்மை நோக்கி வந்தவண்ணமே இருக்கிறார்கள்.

 


 

நிலம், நீர், அறிவு இவற்றை வணிகப்பண்டங்களாக மாற்றிக் கைப்பற்றிச் சுரண்டும் மிகத் திறமையான வியூகங்களை வகுத்துக்கொண்டு தற்போது (1994 வாக்கில் இருந்து) இவர்கள் எம்மிடம் வருகிறார்கள்.

 

இப்புதிய வியூகங்களை எதிர்கொள்வதற்கான மக்கள் சார்புக் கோட்பாடுகளும் செயற்பாடுகளும் ஒன்றிலிருந்தொன்று தம்மை உற்பத்தி செய்துகொண்டு போராட்டக்களத்தில் இறங்கவும் தொடங்கிவிட்டன.

 

இந்தப்புறநிலையில் மின்னணுத்தொழிநுட்பம் உலகின் எல்லா இயக்கங்களிலும் தன்னைப்புகுத்தி வியாபித்து வரும் நேரத்தில், தகவற் தொழிநுட்பம் தகவல் தொடர்பாடல் யுகத்தினை நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கும் வேளையில் மின்னணுத்தொழிநுட்ப உலகில் நிகழும் சுயநலச்சுரண்டல் போக்குகளுக்கெதிரான கோட்பாடுகளும் இயக்கங்களும் தம்மைக் காலத்தேவைகளின் உந்துதலில் உற்பத்தி செய்துகொண்டுள்ளன.

 

இப்புதிய போக்குகள் முற்போக்காளர்களால் கண்டெடுக்கப்பட்டு தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டே வந்துள்ளன.

 

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பெரும் பகட்டான வணிக ஜாலங்களாகவே இளைஞர்களுக்கும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் முற்றிலும் வணிகமயப்படுத்தப்பட்ட நசிவுச்சூழலில் இத்தகைய முற்போக்கான கோட்பாடுகள் கண்டெடுக்கப்படுவதும் புரிந்துகொள்ளப்படுவதும், அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான அடிப்படையாகக்கொள்ளப்படுவதும் மிக அரிதானதே.

 

அதீத சுயநலச்சுரண்டலை எதிர்த்து உருவான க்னூ/லினக்ஸ் போன்ற கட்டற்ற மென்பொருட்கள், விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் போன்றன மிகப்பெருமளவானவர்களால் பயன்படுத்தப்பட்டும் விருபப்பட்டும் வருகின்றபோதும், அவற்றின் பின்னாலுள்ள கோட்பாடு, அரசியல் பற்றிய அறிவு மிகச்சிறிதளவானவர்களிடமே இருக்கிறது.

 

கட்டற்ற மென்பொருட்களை மிகவிரும்பிப்பயன்படுத்தும் நண்பர்கள் எத்தனையோ பேருக்கு தாம் பயன்படுத்தும் பொருட்களின் பின்னாலுள்ள அரசியல் தெரிந்திருப்பதில்லை. அரசியல் பற்றிய அக்கறை இல்லாதபோது அவர்களைச் சுரண்டலாளர்கள் இலகுவில் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

 

இவ்வாறான சூழலில் என்னுடைய வயதொத்தவராக கட்டற்ற மென்பொருட்களின் கோட்பாட்டுத்தளத்தினை, அரசியலினை நன்கு புரிந்துகொண்டு, அது சார்ந்த இயக்கத்திற்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தமிழகத்தில் இயங்கிவரும் ஆமாச்சு என்று நாம் செல்லாமாக அழைக்கும் ம. ஸ்ரீ ராமதாஸ் மிகுந்த நிறைவையும் பெருமையையும் தருகிறார்.

 

அவரது பெரும் உழைப்பில் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் முதன்மைக் கோட்பாட்டாளரான ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களின் முக்கியமான கட்டுரைகள் சில தமிழாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

மிகச் சிறப்பான வடிவமைப்புடன் இந்நூலினை ஆழி பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இந்நூல் கொண்டுள்ள கட்டுரைகள் அனைத்தும் கட்டற்றது.

 

இணையத்தில் நீண்டகாலமாக கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான கோட்பாட்டு விஷயங்கள் பலராலும் எழுதப்பட்டே வந்துள்ளது, அவ்வபோது சிறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.

 

ஆனாலும் நூலுருவில், கட்டற்ற மென்பொருள்களின் பின்னாலுள்ள கோட்பாட்டு விளக்கத்தினை அளிக்கக்கூடிய வகையில் முழுமையான ஆவணமொன்று கிடைப்பது மிக மிக இன்றியமையாதது.

 

கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய நூலொன்றின் தேவை கொதிநிலையை அடைந்துவிட்டிருந்தது. ஆமாச்சு தனது உழைப்பினைச்சரியான நேரத்தில் செலுத்தி அத்தகைய நூலினைக்கொண்டுவரும் தனது கடமையை நன்கு செய்து முடித்திருக்கிறார்.

 

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் நூலொன்று, அதிலும் கோட்பாட்டு விடயங்களடங்கிய நூலொன்று கொஞ்சம் இடக்கு முடக்கான இயல்பற்ற மொழிநடையைக் கொண்டிருப்பது தவிர்க்கச் சிரமமானதே.

 

ஆமாச்சு கூடியவரை இத்தகைய இயல்பற்ற மொழியைக் களைய முயன்றிருக்கிறார், கூடவே தமிழ்ச்சூழலோடு ஒத்திசையக்கூடிய வகையில் மொழியாக்கத்தினை செய்ய முயன்றிருக்கிறார்.

 

எடுத்துக்காட்டாக ஸ்டால்மனின் வரிகளை இவர் மொழியாக்கியிருக்கும் சில பகுதிகளைப்பாருங்கள்,

 

proprietary software rejects their thirst for knowledge: it says, “The knowledge you want is a secret—learning is forbidden!”

 

தனியுரிமை மென்பொருட்கள் இவர்களின் அறிவுப்பசிக்குத் தடை போடுகிறது., "தாங்கள் கோரும் அறிவு இரகசியமானது; கசடறக் கற்பது தடை செய்யப்பட்டுள்ளது" எனக் கூறிகிறது. 

 

This line of persuasion isn't designed to stand up to critical thinking; it's intended to reinforce a habitual mental pathway.

 

தாஜா செய்யும் இப்போக்கானது கூர்ந்த சிந்தனையின் முன் நிற்பதற்குத் திராணியற்றது. பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட மனம்போன பாதைகளை மீண்டும் சுமத்த முற்படுகிறது. 

.

நூலெங்கும் இவ்வாறான பயன்பாடுகள் விரவிக்கிடக்கின்றன.

 

சாதாரண வாசகருக்கு பெருமளவில் உறுத்தலில்லாத மொழிநடையிலேயே இந்நூல் அமைந்திருப்பது நிறைவளிக்கிறது.

 

க்னூ வலைத்தளத்தில் காணப்படும் ஆமாச்சுவின் மூல மொழிபெயர்ப்புக்கும் நூலின் பகுதிகளுக்குமிடையில் நிறைய திருத்தங்களும் வித்தியாசங்களும் காணப்படுகின்றன.

பார்த்துப்பார்த்து திருத்தங்கள் செய்து நுலினை எளிமைப்படுத்தவும் சீர்படுத்தவும் உழைத்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

 

ஸ்டால்மனின் பெரும்பாலான கட்டுரைகள் மேடைப்பேச்சு வடிவத்திலேயே அமைந்திருப்பதால், அவற்றுக்கு தனித்துவமான எள்ளலும் எளிமையும் கலந்த மொழிநடை வாய்த்திருக்கிறது. அதைத் தமிழாக்கும்போது அப்பண்புகள் சிதையாமற்காக்கும் சிக்கலான வேலையை ஆமாச்சு எதிர்கொண்டு கடந்திருக்கிறார்.

 

இத்தமிழாக்கத்துக்கு ரிச்சர்ட் ஸ்டால்மன் தனியான குறிப்பொன்றை அனுப்பி வைத்திருப்பது சிறப்பு. 

 

 

"கேரளத்தின் அரசுப்பள்ளிகளில் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதே வழியில் தமிழகமும் செல்வதற்காக எடுக்க வேண்டிய முன் முயற்சிகளுக்கு இந்த நூல் உறுதுணை புரியும் என்று நான் நம்புகிறேன்" என்கிறார் ஸ்டால்மன்.

 

இணைய வாசகர்களைத் தாண்டி மற்றவர்களுக்கு, இணைய வாசகர்களுக்கும்கூட, அச்சுவடிவில் கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான கோட்பாடுகளை அறிமுகப்படுத்தும் நூற்கள் எழுதப்பட வேண்டும்.

இதற்கான நல்ல தொடக்கமாக இம்மொழியாக்க நூல் அமையும்.

 

தற்போது வீரமணி நமக்கெல்லாம் செய்த நன்மையின் ;-) விளைவாக தமிழ் எழுத்துலகில் பதிப்புரிமை, புலமைச்சொத்து தொடர்பான உரையாடல்கள் திடீரென அதிகரித்திருக்கின்றன. சிலர் க்னூ/லினக்ஸ், கட்டற்ற மென்பொருள் குறித்தெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர். ஆரம்ப நிலையில் பல போதாமைகளுடனேயே இவ்வாறான அறிமுகங்கள் அமைகின்றன. துறை சார்ந்தவர்களால் கொண்டுவரப்படும் இவ்வாறான நூல்கள் இத்தகைய போதாமைகளைக் களைந்து தமிழ்ச்சூழலில் கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான தத்துவப்பின்னணிகளை தெளிவாக அறிமுகம் செய்ய உதவக்கூடும்.

 

இதுவரை இணையத்தில் வெளியான கட்டற்ற மென்பொருட் கோட்பாடுகள் சார்ந்த எழுத்துக்களை எவராவது தொகுத்தளிக்க முன்வந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

 

ஆமாச்சு உபுண்டு தொடர்பான அடுத்த தமிழ் நூலினை தொகுக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

 

கட்டாயம் இந்த நூலினை வாங்கிப்படியுங்கள். இணையத்தில் இவ்வலைப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு மின்னணுவியல் செல்வாக்குக்கு நீங்கள் உட்பட்டிருக்கும் இந்நிலையில் இந்நூல் உங்களுக்கு அவசியமானதே.

 

ஆமாச்சுவின் இத்தகைய பயன்மிகு உழைப்பினை மதித்து ஊக்கப்படுத்தவேண்டியது எம் கடமை.

 

ஆமாச்சு ஒரு வலைப்பதிவாளர். வலைப்பதிவாளர் நூல்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் தமிழமணம் இந்நூலினையும் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறேன். 

 

நூல்விபரம்: கட்டற்ற மென்பொருள் 

தமிழில் ம. ஸ்ரீ ராமதாஸ். 

முதல் பதிப்பு: செப்டெம்பர் 2008 

ஆழி வெளியீடு எண்: 11 

எல்லாத் தொடர்புகளுக்கும்: 

ஆழி பப்ளிஷர்ஸ் 

12, முதல் பிரதான சாலை,

யுனைட்டட் இந்தியா காலனி,

கோடம்பாக்கம், சென்னை 600 024, 

அழைக்க: 044 43587585 

வலை: http://www.aazhipublishers.com/

மின்னஞ்சல்: aazhieditor(at)gmail(dot)com 

அச்சாக்கம்: மணி ஆஃப்செட், சென்னை

பக்கங்கள்: 104 

விலை 60 (இந்திய ரூபாய்)