உலகில் அபிவிருத்தியடைந்த, பணக்கார நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து என்ற தேசமே திவாலாகும் நிலையில் உள்ளது. அதேநேரம் பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற நாடுகள் ஐஸ்லாந்துடன் பொருளாதார யுத்தம் ஒன்றை தொடுத்துள்ளன. அதற்கு காரணம் இந்நாடுகளின் லட்சக்கணக்கான பிரசைகள் ஐஸ்லாந்து வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் தற்போது மாயமாக மறைந்து விட்டது தான்.அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை அதிர்ச்சி, இன்று பல்வேறு நாடுகளிலும் நடுக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. 

 


 

அமெரிக்க, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்கண்டிநேவிய தீவுநாடு, ஐஸ்லாந்து. எரிமலைகளையும், வெந்நீர் ஊற்றுகளையும், பனிப்பாறைகளையும், சூழவுள்ள கடலையும் தவிர வேறு எந்த இயற்கை வளமுமற்ற ஒரு சிறிய நாடு, 20 ம் நூற்றாண்டில் ஒரு பணக்கார நாடாக முடிந்ததென்றால், அதற்குகாரணம் Kaupthing, Landsbanki, Glitnir ஆகிய வங்கிகளின் அபார வளர்ச்சி ஆகும். இந்த மூன்று பெரிய வங்கிகளும், கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி விட்டதால், அரசாங்கத்தால் தேசியமயப்படுத்தப்பட்டு விட்டன. நெருக்கடி காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த கடன், ஐஸ்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மிஞ்சியுள்ளது. பங்குச்சந்தை மூடப்பட்டு, வர்த்தகம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து தேசிய நாணயமான குரோனா பெறுமதி வீழ்ச்சியடைந்து(1 யூரோ =340 குரோனா) வருவதால், இறக்குமதிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.

 

 

ஐஸ்லாந்து ஒரு ஐரோப்பிய யூனியனில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. இது நெருக்கடிக்கு முன்னர் ஒரு நல்ல விடயமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் சேமிப்பு வைப்புக்கு வட்டியாக, ஐரோப்பிய மத்திய வங்கி நியமித்த 5% என்ற எல்லையை ஒன்றிய அங்கத்துவ நாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஐஸ்லாந்து அதனை பயன்படுத்தி கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தது. Landsbanki என்ற வங்கி, தனது வங்கியில் வைக்கப்படும் வெளிநாட்டு சேமிப்பு கணக்கிற்கு 5.25% வட்டி வழங்குவதாக அறிவித்தது. வெளிநாட்டவர்களின் சேமிப்பு திட்டத்திற்கு "Icesave" என்று பெயரிட்டு, இன்டர்நெட் மூலமாக கணக்கை தொடங்கவும், பணம் அனுப்பவும் வழி வகுத்தது. அதிக வட்டி கொடுக்கிறார்கள் என்பதால், லட்சக்கணாக்கான வாடிக்கையாளர்கள் Icesave கணக்கை திறந்தனர். அனேகமாக கோடிக்கணக்கான யூரோக்கள், இவ்வாறு பிரித்தானியா, நெதர்லாந்து சேமிப்பாளரிடமிருந்து ஐஸ்லாந்து போய் சேர்ந்தது. ஐரோப்பிய நிதி சட்டங்களில் இருந்து தப்புவதற்காக பல பணக்காரர்கள், ஐஸ்லாந்து வங்கிகளில் தமது கறுப்புபணத்தை போட்டனர். தற்போது Landsbanki யும் திவாலாகி விட்டதால், ஐஸ்லாந்து அரசாங்கம் Icesave பணம் குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல மறுக்கிறது. அனேகமாக அந்தப்பணம் காற்றில் கரைந்து விட்டிருக்கலாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டவர்கள், இன்று அனைத்தையும் இழந்து கையைப்பிசைகிறார்கள்.

 

சாதாரண மக்களின் சேமிப்பு மட்டுமல்ல, பணக்காரரின் கருப்புபணமும் ஐஸ்லாந்தில் மாட்டிக்கொண்டுள்ளதால், பிரித்தானிய, நெதர்லாந்து அரசாங்கங்கள் தலையிட்டு ஐஸ்லாந்து அரசுடன் கதைத்து பணத்தை மீளப்பெற முயன்றன. ஆனால் ஒரு சதம் கூட இதுவரை திரும்பக்கிடைக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த பிரிட்டிஷ் பிரதமர் பிரௌன், ஐஸ்லாந்து நாட்டை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி பிரித்தானியாவில் ஐஸ்லாந்துக்கு சொந்தமான சொத்துகள், பணம் யாவும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. 2001 ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் முதன்முறையாக ஒரு ஐரோப்பிய நாட்டிற்கெதிராக பயன்படுத்தப்படுகின்றது. ஐஸ்லாந்து தலைநகர் ரைக்யாவிக், தமக்கெதிரான பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

 

நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, எதிர்காலத்தில் ஐஸ்லாந்து தனது தேசிய நாணயமான குறோனாவை கைவிட்டு விட்டு, யூரோவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியான உடன்பாடுகள் எதுவும் ஏற்படின்,ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். அது தனித்துவம் பேண விரும்பும், ஆளும் கட்சியின் அரசியல் தற்கொலையாக அமையும். ஏனெனில் ஆழ்கடல் மீன்பிடி உரிமை குறித்து, ஏற்கனவே ஐரோப்பாவுடனான சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மீன்பிடித்துறை ஐஸ்லாந்தின் முக்கிய வருவாய் ஈட்டித்தரும் முதன்மை தேசிய உற்பத்தியாகும்.

http://kalaiy.blogspot.com/2008/10/blog-post_11.html