நவீன கால அரசு, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொதுவிவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறில்லை." - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)
முதலாளித்துவம் அழியவில்லை. கடைசியில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், பொதுமக்களின் வரிப்பணத்தை கொட்டி, அழிவில் இருந்த வங்கிகளை ஒருவாறு காப்பாற்றிவிட்டனர். தானே ஏற்படுத்திய நிதிநெருக்கடிக்குள் சிக்கிக் கொண்ட முதலாளித்துவம், அரசாங்கத்தால் அழிவில் இருந்து மீட்கப்பட்டுவிட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் ஜனநாயக அரசுகள் மக்களை மீளாத்துயருக்குள் தள்ளிவிட்டன. சுருங்கக் கூறின்: ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தால் அதனை முதலாளிகள் தமது தனிச்சொத்து என்று உரிமை கொண்டாடும் அதேநேரம், அந்த நிறுவனம் நட்டமடைந்தால் அதனை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.
அமெரிக்க அரசு வழங்கிய 700 பில்லியன் டாலர் மீட்புநிதி, முதன்மைப் பங்குதாரரின் ஆதாயப்பங்கு(டிவிடென்ட்) பட்டுவாடா செய்யவும், நிர்வாகிகளின் சம்பளங்களை (குறைந்தது US $ 30,000), போனஸ்களை (லட்சக்கணக்கில்) கொடுப்பதற்கும் செலவிடப்படாது என்பது என்ன நிச்சயம்? அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையுமில்லை. அதே நேரம் இந்த மீட்புநிதியை வீட்டுக்கடன் கட்ட முடியாத பொது மக்களுக்கு வழங்கி, அவர்கள் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். அமெரிக்க அரசு எப்போது தனது மக்களைப்பற்றி கவலைப்பட்டது? மீட்புநிதி பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தது என்பதால், வருங்காலத்தில் பொதுநல செலவினங்கள் குறைக்கப்படும். இதனால் அநேகமான பொது மக்கள், வறிய நாடுகளில் உள்ளது போல தப்பிப்பிழைக்கும் வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதே 700 பில்லியன் டாலரை கொட்டியிருந்தால், பரிதாபகரமான பொதுநல மருத்துவ துறையை சிறப்பாக நடத்தியிருக்கலாம். இதற்கிடையே இந்த தொகை, அமெரிக்க அரசு பாதுகாப்புக்கு (ஆப்கன், ஈராக் போர்கள்) செலவழிப்பதை விட குறைவு, என்று பெருமை வேறு.
"Laissez Faire"(பிரெஞ்சு மொழியில் : செய்ய விடு)முதலாளித்துவம் இது, என்று சொல்லி அரச தலையீடற்ற பொருளாதாரம் நடத்திய, அகங்காரம் கொண்ட தாராளவாத சந்தை விற்பன்னர்கள் தற்போது, "தவறு செய்து விட்டு தந்தைக்கு பின்னால் ஒளிக்கும் குழந்தைகளைப் போல" நடந்து கொள்கிறார்கள். இதே நிதி நெருக்கடி மூன்றாம் உலக நாடொன்றில் ஏற்பட்டிருந்தால், அந்நாட்டு அரசு இது போன்று மீட்புநிதி வழங்கி நிறுவனத்தை அழிவில் இருந்து காப்பாற்றக் கூடாது என்று, அமெரிக்க அரசு மட்டுல்ல, உலகவங்கி, ஐ.எம்.எஃப்., எல்லாமே ஆலோசனை வழங்கியிருப்பார்கள். அதற்கு உடன்படா விட்டால், கடனுதவிகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அந்த உபதேசமெல்லாம் உலகிற்கு மட்டுமே, அமெரிக்காவுக்கு இல்லை.
நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை சீனா வாங்க வேண்டும் என்று, சில சீன பொருளியல் நிபுணர்களும், மற்றும் சர்வதேச பெருமுதலாளிகளும் கேட்டுள்ளனர். ஆனால் சீன அரசு தயங்குகின்றது. ஏனெனில் லாபம் வரக்கூடிய நிறுவனங்களிலேயே யாரும் முதலீடு செய்ய விரும்புவர். அதன் அர்த்தம், அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது சீனா உட்பட பலரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஐரோப்பாவும் தனி வழியில் செல்ல விரும்புகின்றது. அனேகமாக அதிக தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஜெர்மனி, ஐரோப்பிய பொருளாதாரத்தை தலைமை தாங்கலாம்.
கடன் நெருக்கடிக்குள் சிக்கி திவாலான ஐரோப்பிய வங்கிகள் சில அவை பிரதிநிதித்துவப் படுத்திய நாடுகளை விட அதிக பணபலம் கொண்டிருந்தமை அவற்றின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. உதாரணத்திற்கு, மூன்று லட்சம் பேர் சனத்தொகையை கொண்ட சிறிய ஐஸ்லாந்து நாட்டு வங்கிகள், அகலக்கால் வைத்ததன் விளைவாக இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அது ஐஸ்லாந்து என்ற ஒரு தேசமே திவாலாகும் நிலைக்கு இட்டுச்சென்றது. வடதுருவ தீவுநாடான ஐஸ்லாந்து பொருளாதாரம், ஒரு காலத்தில் மீன்பிடித் துறையை மட்டுமே நம்பி இருந்தது. கடந்த தசாப்தங்களாக ஏற்பட்ட வங்கித் துறையின் பகாசுர வளர்ச்சி ஐஸ்லாந்தை செல்வந்த நாடாக்கியது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வங்கிகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாங்கிக் குவித்தன, பெருமளவில் முதலீடு செய்தன. இறுதியில் அமெரிக்க கடன் பிரச்சனைக்குள் அகப்பட்டு, அனைத்தையும் இழந்து நிற்கின்றன. பேராசை பெருநஷ்டம் என்றொரு பழமொழி உண்டு.
ஐஸ்லாந்து அரசு, வங்கிகளை தேசியமயப்படுத்த தேவையான பணமின்றி தவித்தது. அதற்காக "தனது நண்பர்களிடம்" உதவி கேட்டும் கிடைக்காத நிலையில், தற்போது ரஷ்யா நான்கு பில்லியன் யூரோ கடன் வழங்க சம்மதித்துள்ளது. சர்வதேச நிதிநெருக்கடிக்குள் ரஷ்ய பங்குச்சந்தையும் மாட்டிக் கொண்டு நஷ்டமடைந்துள்ளது. இருப்பினும் அங்கே வலிமையான அரசாங்கம் இருப்பதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது நாணயமான ரூபிளை சர்வதேச பரிவர்த்தனைக்கு விரிவுபடுத்தப் பார்க்கின்றது. அதனோடு நெருங்கிய உறவைப் பேணும் பெலாரஸ், வாங்கும் எண்ணைக்கு ரூபிளில் பணம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது. இது பின்னர் பிற நாடுகளுடனும் விரிவுபடுத்தப்படலாம்.
நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சிறந்த வழி உண்டு. லாபவெறி பிடித்தலையும் வங்கிகள் எமக்கு தேவையில்லை. சேமிப்பு வங்கி, கூட்டுறவு வங்கி, விவசாய வங்கி, தபால் வங்கி போன்றன, அவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசத்தின் பொருளாதா ரத்துடனும், மக்களுடனும் ஒன்றிணைந்து இருந்தன. அவை மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருப்பதால், நிதிநெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் அபாயம் குறைவு. முன்பெல்லாம் அமெரிக்காவிலும், மேற்கு-ஐரோப்பாவிலும் அப்படியான வங்கிகள் இருந்தன. அனால் Laissez Faire முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக, பெருமளவு நிதி கொண்ட வர்த்தக-முதலீட்டு வங்கிகள், அவற்றை பிடித்து தின்று விழுங்கி விட்டன. அன்றைய பேராசை, இன்றைய பேரழிவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இன்று மக்கள் வங்கிகளைக் கண்டு பயந்தோடும் நிலைமை உருவாகி விட்டது.