Language Selection

புதிய ஜனநாயகம் 2008

ஒரிசா, பார்காரா மாவட்டத்திலுள்ள பாதம்பூரில் தொழுநோயாளிகளுக்கான சேவை மையம் மற்றும் ஒரு அனாதை இல்லத்தையும் பாதிரியார் எட்வர்டு சீகொய்ரா நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி அவரது மையத்தின் கதவு வேகமாகத் தட்டப்படுகிறது. யாரோ உதவி கேட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்த பாதிரியார் உடனே கதவைத் திறக்கிறார். வெளியே ஆயுதங்களுடன் இந்து மதவெறிக்கூச்சலோடு ஒரு கும்பல் உள்ளே நுழைகிறது.

 சுமார் 45 நிமிடம் அந்தக் கும்பல் அவரை அடித்து நொறுக்குகிறது. தோளிலும், கையிலும் , மண்டையிலும் அடிபட்ட பாதிரியார் சுயநினைவற்று வீழ்கிறார். அவரை குளியலறையில் அடைத்த கும்பல், இல்லத்தில் இருக்கும் ரஜ்னி மஜ்கி எனும் 19 வயதுப் பெண்ணை உயிரோடு கொளுத்துகிறது. "ஃபாதர், என்னைக் கொளுத்துகிறார்கள்; எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்று அந்தப் பெண் கத்துவது அரை நினைவோடு மயக்கத்திலிருக்கும் பாதிரியாரின் காதில் மெல்லக் கேட்கிறது. இறுதியில் அந்தப் பெண்ணைக் கொன்ற கும்பல் சேவை மையத்தை தீ வைத்துக் கொளுத்துகிறது. தற்போது உடலில் பல எலும்பு முறிவுகளுக்காக மும்பையில் சிகிச்சை பெறும் இந்தப் பாதிரியார், உதவி கேட்டு அந்த இளம் பெண் கதறியது தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும் என்று வருந்துகிறார். 

 

பெற்றோராலும், பின்னர் வளர்ப்பு பெற்றோராலும் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் தஞ்சம் புகுந்து இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட அந்தப் பெண், உண்மையில் ஒரு இந்துப் பெண். ஒரிசாவில் இந்து மதவெறியர்கள் தற்போது நடத்திவரும் கலவரங்களின் ஒரு கதைதான் இது. ஒவ்வொரு கதையும் 2002 குஜராத்தை நினைவுபடுத்துகிறது. குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் புகட்டி விட்டோம், தற்போது ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்று சங்கபரிவாரக் குண்டர்கள் திட்டமிட்ட முறையில் கலவரங்களையும், படுகொலைகளையும் ஒரிசாவில் நிகழ்த்தி வருகிறார்கள். 

 

ஆகஸ்டு 23ஆம் தேதி காந்தமால் மாவட்டத்திலுள்ள ஜலஸ்பாட்டா ஊரிலிருக்கும் ஆசிரமத்தில் லக்சுமானந்தா சரஸ்வதி எனும் பிரபலமான 81 வயது விஸ்வ இந்து பரிஷத் தலைவரும், அவரது நான்கு சீடர்களும் இரவு எட்டு மணிக்கு ஆயுதம் தாங்கிய கும்பலால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதை மாவோயிஸ்ட்டு கட்சியினரின் வேலை என போலீசு தெரிவிக்கிறது. அக்கட்சியும் இம்மாவட்டத்தில் மதவெறியைத் தூண்டி மக்களை பிரித்து வந்த சரஸ்வதியின் கொலைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்து மதவெறி அமைப்புக்கள், ஆயுதங்தாங்கிய கிறித்தவர்கள்தான் இந்தக் கொலையைச் செய்தனர் என அறிவித்து விட்டு மாநிலம் முழுவதும் கலவரத்தில் இறங்கின. கிறித்தவ சமயத் தலைவர்களோ இந்தப் பழியை மறுத்துவிட்டு சி.பி.ஐ புலனாய்வு செய்யவேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரிசா அரசு, இந்த வேண்டுகோளை மறுத்துவிட்டது. 

 

அடுத்து வந்த சில நாட்களில் மாநிலம் முழுவதும் 30 பேர் இந்துமதவெறியர்களால் கொல்லப்பட்டனர். காந்தமால் மாவட்டத்தில் மட்டும் பதினாறு பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான கிறித்தவ பழங்குடி, தலித் மக்களின் வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டன. பல்லாயிரம் கிறித்தவ மக்கள் காடுகளிலும், அகதி முகாம்களிலும் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ஆகஸ்டு 25ஆம் தேதி நூற்றுக்கணக்கான கிராமங்களின் வழியே சென்ற சரஸ்வதியின் இறுதி ஊர்வலத்தின் போதே இந்த வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேற ஆரம்பித்து விட்டன. பல பாதிரியார்கள், பெண்துறவிகள் நிர்வாணமாக்கப்பட்டு கொடுரமாக தாக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டன. 

 

ஒரிசாவின் மையத்தில் மலைகள் காடுகள் இருக்கும் காந்தமால் ஒரு பின்தங்கிய மாவட்டமாகும். இங்கு இருப்புப் பாதைகளோ, தொழிற்சாலைகளோ எதுவும் இல்லை. பேருந்துப் போக்குவரத்தும் வெகு அபூர்வம்தான். 2515 கிராமங்கள் கொண்ட இம்மாவட்டத்தில் சுமார் எட்டு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் காந்தா எனும் பழங்குடி மக்களாவர். இவர்கள் இந்து மதவெறி அமைப்புக்களுக்கு ஆதவராக இருக்கின்றனர். இதற்கடுத்து கணிசமாக வாழும் பானோஸ் எனும் தலித் மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவி வாழ்கின்றனர். மதரீதியாக எடுத்துக் கொண்டால் மாவட்டத்தில் 25 சதவீதம்பேர் கிறித்தவர்களாகவும் மீதிப்பேர் இந்துக்களாகவும் இருக்கின்றனர். ஆனால் ஒரிசா மாநிலத்தில் 2.5 சதவீதம் பேர்தான் கிறித்தவர்களாக வாழ்கின்றனர். இந்துக்களின் சதவீதமோ 95 ஆகும். இந்தியாவிலேயே இந்துக்கள் அதிகமாக வாழும் மூன்றாவது பெரிய மாநிலம் ஒரிசாவாகும். 

 

காந்தாஸ் பழங்குடி மக்கள் எம்மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பில் பழங்குடி பிரிவினருக்குரிய இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் பானோஸ் தலித் மக்கள் கிறித்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு தலித்துக்களுக்குரிய இட ஒதுக்கீடு கிடைக்காது. இதனால் இம்மக்கள் தங்களையும் பழங்குடி மக்கள் என்று போலிச் சான்றிதழ் கொடுப்பது நடைமுறையில் உள்ளது. அடுத்து, இம்மாவட்டத்தில் நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. பழங்குடி மக்களின் குழப்பமான சமூக அமைப்பினால் நிலம் விற்பதில்வாங்குவதில் குழப்பம் உள்ளது. இதிலும் இரு பிரிவு மக்களுக்கும் முரண்பாடு உள்ளது. இரு மக்களும் குயி எனப்படும் ஒரே மொழி பேசினாலும், இவர்களுக்குள்ளே உள்ள முரண்பாட்டை இந்துமதவெறியர்கள் மதச்சாயம் பூசி வளர்த்து குளிர் காய்கின்றனர். 

 

ஒரிசாவிலும், காந்தமால் மாவட்டத்திலும் கிறித்தவ மிஷனரிகளின் சேவை 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கிறது. மலேரியா முதலான தொற்று நோய்களாலும், கல்வி அறிவு கிடைக்கும் வாய்ப்பு அற்றும் வாழ்வும் சாவுமாக இருந்த மக்களை கிறித்தவ மிஷனரிகள்தான் காப்பாற்றினர். இப்போது இம்மக்களுக்கு முறையான கல்வியும், சுகாதாரமும் கிடைப்பதற்கு கிறித்தவமே காரணமாகும். இதனால் இம்மக்கள் இயல்பாக கிறித்தவ மதத்திற்கு மாறுவது நடக்கிறது. மேலும் ஒரிசாவில் மதம் மாறுவதற்கு அந்த மாவட்டத்தின் மாஜிஸ்ட்ரேட் அனுமதி தேவைப்படுகிறது. எந்த உள்நோக்கம், பண ஆதாயமின்றித்தான் மதம் மாற்றம் நடக்கிறது என்பதை உறுதி செய்துதான் அவர் அனுமதி அளிப்பார். ஒரு வகையில் இங்கே மதமாற்றத் தடைச்சட்டம் உள்ளது என்றே சொல்லலாம். 1967 சட்டப் பிரிவுதான் மதம் மாறுவதற்கு மேற்கண்ட நடைமுறையை வைத்திருக்கிறது. பல மாநிலங்கள் வைத்திருக்கும் மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஒரிசா சட்டம்தான் முன்மாதிரி.

 

ஒரே மொழி பேசும் இம்மக்களிடையே உள்ள சில முரண்பாடுகளைப் பயன்படுத்தித்தான் சங்க பரிவாரங்கள் காந்தமால் மாவட்டத்தில் வன்முறையை அரங்கேற்றி வருகின்றன. கிறித்தவ மக்களை இந்து மதத்திற்கு மாற்றுவது என்பதை இந்து மதவெறியர்கள் பல ஆண்டுகளாகவே செய்து வருகின்றனர். விசுவ ஹிந்து பரிசத், பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ், வனவாசி கல்யாண் கேந்திரா என்று பல பெயர்களில் இவர்கள் செய்வதெல்லாம் மதமாற்றமும், பசு வதையை எதிர்ப்போம் என்ற பெயரில் கிறித்தவ மக்களை தாக்குவதும்தான். சுதீர் பிரதான் எனும் தாலுகா ஆர்.எஸ்.எஸ் செயலாளர் கூறுகிறார், ""ஒன்று கிறித்தவர்கள் இந்துக்களாக மதம் மாறவேண்டும்; இல்லையென்றால் அவர்கள் ஒரிசாவை விட்டு வெளியேற வேண்டும்''.

 

மலைவாழ் மக்களிடம் உள்ள எளிய மூடநம்பிக்கைகளை வைத்து சில முட்டாள்தனமான சடங்குகளை நடத்தி, இந்து மதவெறியர்கள் அம்மக்களை இந்துமதத்திற்கு மாற்றுகின்றனர். கிறித்தவ அமைப்புகள் அம்மக்களுக்கு சேவை புரியும் போது, சங்கபரிவாரங்கள் மதமாற்றுவதையும் அதற்கு இணையாக கலவரம் செய்வதையும் நடத்துகின்றன. ஒரிசாவில் பல ஆண்டுகளாகவே கிறித்தவர்களும், மிஷனரி நபர்களும் பஜ்ரங்தள் குண்டர்களால் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்றனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற மிஷனரி நபர் தனது இரு மகன்களுடன் 1999ஆம் ஆண்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்த படுபாதகச் செயலுக்கு தலைமை வகித்து தற்போது ஆயுள் தண்டனை பெற்ற தாரா சிங்கை, இந்து மதவெறியர்கள் ""ஹீரோ''வாக கொண்டாடுகின்றனர். 

 

ஒரிசாவில் தற்போது நடக்கும் கலவரத்திற்கும் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. கோத்ராவின் எதிர்வினையை மோடி நியாயப்படுத்தியது போல முதல்வர் நவீன் பட்நாயக், சரஸ்வதியின் கொலைக்கான எதிர் கலவரத்தை நியாயப்படுத்துகிறார். அப்படி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், அதிகார வர்க்கம் அப்படித்தான் நடந்து கொண்டது. இந்து மதவெறியர்கள் கிறித்தவ தேவாலயங்களை எரிப்பதையும், வீடுகளைச் சூறையாடுவதையும் போலீசு வேடிக்கை பார்த்தது. கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட மத்திய துணை ராணுவப் படைகளெல்லாம் பல மணிநேரம் கழித்துத்தான் இலக்கை அடைந்தன. பாதைகளில் மரங்களை வெட்டிப் போட்டு பல்வேறு தடைகளை இந்து மதவெறிக் குண்டர்கள் ஏற்படுத்தியிருந்தனர். கலவரம் நடக்கும் எனத் தெரிந்தும், சரசுவதியின் இறுதி யாத்திரைக்கு அரசு அனுமதி அளித்தது. 

 

மற்ற கட்சித் தலைவர்களுக்கெல்லாம் ஊரடங்கு சட்டத்தைக் காட்டி காந்தாமால் செல்வதற்கு அனுமதி மறுத்த அரசு, விசுவ இந்து பரிசத்தின் வெறிபிடித்த தலைவரான பிரவீன் தொகாடியா முதலான இந்து மதவெறி அமைப்புத் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது. இவர்களின் சுற்றுப் பிரயாணங்களும் ஆவேசப் பேச்சுக்களும் எரியும் தீயில் எண்ணெயை வார்த்தன. பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் பிஜூ ஜனதா தளம், இந்தக் கலவரத்தை வைத்து இந்துமதவெறியை எழுப்பி வரும் தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்கலாம் என்பதற்கேற்பவே அதன் அணுகுமுறைகள் இருந்தன. சங்க பரிவாரங்கள், சரசுவதியின் கொலையை வைத்து அரசியல் மேலாண்மையைப் பெறுவதற்கு திட்டமிட்டவாறு கலவரங்கள் புரிந்தன. ஆயுதங்கள், ஆட்கள், வண்டிகள் சேகரிப்பு எல்லாம் கச்சிதமாக நடந்து, ஒரிசாவின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு கலவரங்கள் நடந்தன. உள்ளூர் நபர்களின் ஆதரவுடன் கிறித்தவ மக்களின் வீடுகள் குறிவைத்துக் கொளுத்தப்பட்டன.

 

இந்துத்துவத்தின் இரண்டாவது சோதனைச்சாலையாக மாறிவரும் ஒரிசா மறுகாலனியாக்கத்தின் சோதனைச்சாலையாகவும் இருக்கிறது. பல பகாசுரக் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்றி வருகின்றன. தம் வாழ்வுரிமையும், நிலங்களும் பறிக்கப்படுவதை எதிர்த்து ஒரிசா பழங்குடி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அப்போராட்டங்களில் பலர் உயிரிழந்துமிருக்கின்றனர். இத்தகைய போராட்டங்களையெல்லாம் இந்து மதவெறி அரசியல் ரத்து செய்து மக்களின் போக்கை மடைமாற்றி விடுகிறது. மக்களின் எதிர்ப்புணர்ச்சியை மதவெறியாக மாற்றி ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று இந்து மதவெறியர்கள் திட்டமிடுவதற்கு இச்சூழல் தோதாக இருக்கிறது. அவ்வகையில் குஜராத்தின் பரிசோதனை ஒரிசாவிலும் அரங்கேற்றப்படுகிறது. 

 

இந்தக் கலவரத்திற்கு காரணமான சரசுவதி கொலையை மாவோயிஸ்ட் கட்சியினர் செய்ததாக வைத்துக்கொண்டால், அக்கட்சியையும் நாம் விமரிசிக்க வேண்டியிருக்கிறது. இக்கொலையை செய்து விட்டு கிறித்தவ மக்களை நிராயுதபாணியாக இந்து மதவெறியர்களின் கையில் ஒப்படைப்பதற்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருந்திருக்கின்றனர். உழைக்கும் மக்களிடம் இந்து மதவெறியர்களை எதிர்த்து எந்த வெகுஜனப் போராட்டமும் நடத்தாமல், அப்படி ஒரு ஒற்றுமையை அரசியல் அரங்கில் ஏற்படுத்தாமல் இந்து மதவெறியை வீழ்த்த முடியாது. சில தலைவர்களைக் கொன்றதோடு தனது பணி முடிவடைந்து விட்டதாக மாவோயிஸ்ட்டுகள் கருதினால், அது சிறுபிள்ளைத்தனமாகும். என்னதான் ஆயுதப்படை வைத்திருந்தாலும் இந்து மதவெறியர்களால் கிறித்தவ மக்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லையே?

 

இசுலாமிய தீவிரவாதிகளால் வைக்கப்படும் குண்டுகள் வெடிப்பை ஒட்டி அரசு எந்திரம் எடுக்கும் எதிர் நடவடிக்கைகள், கைதுகள், அடக்குமுறைகள் எதுவும் இந்து மதவெறியர் நடத்தும் கலவரங்களின் போது அரசுகள் எடுப்பது கிடையாது. ஒரிசாவிலும் இந்து மதவெறி அமைப்புகள் துப்பாக்கிகள், குண்டுகள் முதலான அயுதங்களை வைத்தே கலவரம் செய்தன. விசுவ இந்து பரிசத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் தனது உறுப்பினர்களுக்கு வெளிப்படையாகவே ஆயுதப் பயிற்சிகள் துப்பாக்கி சுடுவது உட்பட கொடுக்கிறது. கான்பூரிலும், மராட்டியத்திலும் இதன் உறுப்பினர்களும் குண்டு தயாரிக்கும் போது விபத்து நடந்து இறந்திருக்கின்றனர். இந்த இடங்களில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வெடிப்பதற்கு திட்டமிட்டிருந்த ஆதாரங்கள் பல கிடைத்திருக்கின்றன. இவ்வளவு இருந்தும் இந்த சங்கபரிவாரங்களை அரசு தடை செய்யவில்லை. அவற்றின் தலைவர்கள் கலவரத்தின் போது கூட கைது செய்யப்படுவதில்லை. மொத்தத்தில் இவை எதுவும் ஒரு பயங்கரவாதமாக ஆளும் வர்க்கத்தால் கருதப்படுவதில்லை. உண்மையில், அரசு அனுமதியுடன் நடக்கும் இத்தகைய பயங்கரவாதம்தான் நாட்டு மக்களுக்கு பெரும் ஆபத்தைத் தருகிறது. 2002இல் குஜராத், 2008இல் ஒரிசா என ஆர்.எஸ்.எஸ்.இன் நிகழ்ச்சி நிரல் அடுத்தடுத்து நடைமுறைக்கு வருகிறது. இந்த பயங்கரத்தை காங்கிரசின் மிதவாத இந்துவாதம் வளர்க்கவே செய்கிறது. உழைக்கும் மக்கள் உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளில் ஒன்று திரண்டு இந்து மதவெறியை கருவறுப்பது முன்னெப்போதையும் விட அவசியமாக இருக்கிறது. 

 

ஒரிசாவுக்கு அடுத்து தற்போது கர்நாடகத்திலும் கிறித்தவ மக்களையும், தேவாலயங்களையும் இந்து மதவெறியர்கள் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆளும் இம்மாநிலத்தில் குஜராத்தின் வழியைப் பின்பற்றி சில பகுதிகள் இந்துவத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்படும் போலத் தெரிகிறது. இங்கும் அரசும், போலீசும் வேடிக்கை பார்க்க சங்கபரிவாரத்தின் கலவரம் வெகுவேகமாகப் பரவி வருகிறது. 

 

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கலவரம் செய்து இந்து மதவெறியை தூண்டிவிடுவதும், சிறு பான்மை மக்களைக் கொல்வதும், ஆட்சியில் இருக்கும் போது மறுகாலனியாக்க கொள்கைகளை அமெரிக்க விசுவாசத்துடன் அமல்படுத்துவதுமான இந்து மதவெறி பாசிசத்தின் இருமுகங்களை வெட்டி வீழ்த்தாத வரை இந்திய உழைக்கும் மக்களுக்கு விடுதலை இல்லை.