சென்னை, தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதால்தான் தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை என்று தீயணைப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ் கடை மட்டுமன்றி தி.நகரில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை விதிகளை மீறித்தான் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களினால் பொதுமக்களின் உயிருக்கு எப்போதும் ஆபத்துதான். ஆனால், இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து கவலைப்படுவதே இல்லை. பொதுமக்கள் நலனில் சிறிது கூட அக்கறையில்லாத, லஞ்ச பணத்திற்கு எளிதில் விலை போகக்கூடிய, இப்படிப்பட்ட அதிகாரிகளை நம்பித்தான் இந்த அரசு சென்னை நகரத்தை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியமைக்கப் போகிறதாம். இதற்கென சென்னை மாநகரப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்தத் திட்டத்தின்படி, சென்னையைத் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதலீட்டாளர்களைக் கவரும் நகரமாக மாற்ற உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள், தடையற்ற மின்சார விநியோகம், நல்ல தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை ஏற்கெனவே ஏற்ப டுத்தப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அவை மேலும் அதிகரிக்கப்படும். சென்னையில் இன்னும் இரண்டு இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் வகையில் விளைநிலங்களை அரசே கையகப்படுத்தி பன்னாட்டு, தரகு நிறுவனங்களுக்குக் கொடுக்கும். ஏற்கெனவே உள்ள தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளுக்கும், இனி புதிதாக வரப்போகும் கம்பெனிகளுக்கும், ஒரு நாளைக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதுமட்டுமில்லாது நகரைச் சுற்றிலும் புதிது புதிதாக ஏற்பட்டு வரும் குடியேற்றங்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனை ஈடுகட்ட ஐரோப்பிய பாணியில், குடியிருப்புகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படவிருக்கிறது. மேலும் அனைத்து குடியிருப்புக்களுக்கும் நீர்மானி (மீட்டர்) பொருத்தப்படும். இதன் மூலம் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் செலவும், நீருக்கான விலையும் மக்கள் தலையில் சுமத்தப்படும். இத்திட்டத்தின் முதல்படியாக 400 சதுர அடிக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட பொதுக்குழாய்கள் ஒழிக்கப்பட்டு, குடிநீர் இணைப்புக்கு 100 ருபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், சென்னை நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 320க்கும் அதிகமான ஏரிகள் புதுப்பிக்கப்பட்டு அவை குடிநீர் ஆதாரமாக மாற்றப்படும். இதன் மூலம் அந்த ஏரிகளை நம்பி விவசாயம் செய்து வருபவர்கள் விவசாயத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.
ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயத்துக்கு நீர் தருவதை விட, சென்னை நகருக்கு வரப்போகும் பன்னாட்டு நிறுவனங்களின் கழிவறைகளுக்கு நீரை விநியோகிப்பதுதான் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கவலையாக இருக்கிறது.
மருத்துவத் துறையில், தனியார் மற்றும் பொதுத்துறையின் கூட்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் அளிப்பதென்றும், இத்துறையில் தனியாரின் பங்கீட்டை அதிகரித்து சுகாதார உள்கட்டமைப்புத் திட்டம் ஒன்றைத் தீட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு இலவச மருத்துவ சேவையளிக்கும் பொறுப்பை மாநகராட்சி தட்டிக்கழிக்கப் போகிறது.
ஆலந்தூர் நகராட்சியில் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படும் திடக் கழிவு மேலாண்மை, சென்னை முழுக்க விரிவாக்கப்படும். ஏற்கெனவே ஓனிக்ஸ் நிறுவனம் குப்பைகளை அள்ளாமல் பாதியில் விட்டுச் சென்ற போது, சென்னை நகரில், ஒரு வாரம் வரை குப்பைகள் தேங்கி நகரமே நாறியதும், பின்பு போலீசுத்துறையைக் கொண்டு குப் பைகளை அள்ளச் செய்ததும் நாம் அறிந்ததே. தனியாரின் பொறுப்பற்ற தன்மையின் பலனை அனுபவித்த பிறகும், தற்போது திடக் கழிவு மேலாண்மை முழுவதையும் தனியார் வசம் ஒப்படைக்கப் போகின்றனர்.
சென்னை நகரில் பன்னாட்டு நிறுவனங்களால் வந்து குவிக்கப்படும் பயன்பாடு முடிந்த கணிணி போன்ற மின்னணு கழிவுப் பொருட்களால் உருவாக்கப்படும் மாசு பற்றியோ, அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றியோ மாஸ்டர் பிளானில் எத்திட்டமும் கிடையாது. பாதரசம், காட்மியம் போன்ற நச்சுப்பொருட்களை உமிழும் இக்குப்பைகளால் சென்னை நகரம் ஏற்கெனவே உலகின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டு வருகின்றது.
பேரிடர் மேலாண்மை எனும் திட்டப்படி இனி தீவிபத்து, நிலநடுக்கம் போன்றவற்றால் நகரம் பாதிப்புற்றால் தன்னார்வ நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டர்படை அடங்கிய குழு ஒன்று அதனைச் சமாளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். நகரமே நாசமானாலும் இடர்ப்பாட்டை இனி அரசுத்துறை சமாளிக்காது.
சுற்றுலா மேம்பாட்டுக்கென பக்கிங்காம் கால்வாயைச் சுத்தம் செய்து அதில் படகு விடுதல், சென்னை நகரில் உள்ள ஏரிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காக்கள், படகுச் சவாரி எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடற்கரையை அழகுபடுத்தி நட்சத்திர விடுதிகளுக்குக் கொடுத்திடவும் திட்டமுள்ளது. கிழக்குக் கடற்கரை சாலைக்கு இணையாக கடற்கரையோரமாக படகுப் போக்குவரத்தின் மூலம் சாலை வழி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் திட்டமுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது கடற்கரை எங்குமே மீனவர்கள் குடியிருக்க முடியாத நிலை உருவாக்கப்படும். படகுப் போக்குவரத்தினால் மீன்பிடித்தொழிலே முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும்.
நகரை அழகுபடுத்திட கூவத்தின் கரைகளிலும், கடற்கரையிலும், ஏரி குளங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி, ஏழை உழைக்கும் மக்களின் குடிசைகளை அகற்றி, அவர்களை நகரத்தை விட்டு வெளியே துரத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கென சமீபத்தில் அவசரச் சட்டம் ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது. நீர் நிலைகளின் கரைகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் போது எதிர்ப்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் அந்த சட்டம் வழி செய்கிறது.
இதேபோல் பாண்டிபஜார் போன்ற இடங்களில் நடைபாதை, சாலையோர பிளாட்பாரக் கடைகளைக் காலிசெய்து, கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றும் வரப்போகிறது. ஆனால், இதே பாண்டி பஜார் போன்ற பகுதிகளில் கார் நிறுத்த வழியில்லாமல் "மிகவும் சிரமத்துக்குள்ளாகும்' மேட்டுக்குடியினருக்கு உதவும் வகையில் பல மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடங்களை நகரம் முழுவதும் அரசே தனது சொந்த செலவில் கட்டிக் கொடுக்கும்.
வெளிநாட்டு முதலாளிகள் வந்து போக வசதியாக ஸ்ரீபெ ரும்புதூரில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இந்தப் புதிய விமான நிலையத்திற்கும், மற்றும் சென்னையிலும் புற நகரிலும் உள்ள அவர்களது நிறுவனங்களுக்கு அவர்கள் தடங்கலின்றிப் போய்வரும் வகையில் உலகத் தரத்தில் சாலகள், மேம்பாலங்கள் கட்டப்படும். மீனம்பாக்கம் விமான நிலையத்தின் தேவை இனி இல்லை என்பதால் விமானங்கள் தரை இறங்குவதற்கான இடைஞ்சல் இனி இல்லை. இதனையே காரணமாக்கி 100 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்டிக் கொள்ளலாம் என விதிமுறை திருத்தப்பட்டு விட்டது. உல்லாச அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அந்நிய மூலதனம் வந்து குவிந்து நிலத்தரகர்களும் கட்டிடத் தொழில் தாதாக்களும் கோடிக்கணக்கில் புரள வழி செய்யப்பட்டு விட்டது. அவ்வாறு செய்யும்போதே ஏழைகளுக்கும் அக்குடியிருப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நலிந்தோருக்குக் கருணையும் காட்டி இருக்கிறது மாஸ்டர் பிளான். இது காகிதத்தில் எழுதி நக்கச் சொல்லப்படும் சர்க்கரைதான் என்பதற்கு ஏற்கெனவே இப்படிப்பட்ட உத்தரவுகள் கடைப்பிடிக்கப்பட்ட லட்சணமே சாட்சி.
மாஸ்டர் பிளான் என்பது யாரால் யாருக்காகத் திட்டமிடப்பட்டது என்பதும் மாஸ்டர் பிளான் திட்டத்திலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உலகமயமாக்கலுக்கு ஏற்ற வகையில் சென்னையை நவீன காலனியாக மாற்றி அமைத்து பன்னாட்டு நலன் காத்திட உலக வங்கி தீட்டித் தந்த திட்டமே இது. இதற்குரிய நிதி ஆதாரத்தையும் தந்து திட்டங்களில் தனியாரைப் புகுத்தி நிர்வாகத்தையே மறுசீரமைத்துள்ளனர். இத்திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் மீனவர்களும், குடிசைவாழ் மக்களும் கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறியப்பட்டுத்தான் மாஸ்டர் பிளான் நிறைவேற்றப்பட உள்ளது.
· அழகு