தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ நிறுவனம். இந்திய மருத்துவத்தின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதையும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் இலட்சியமாகக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனம். இந்த நிறுவனம்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தரும் டாலருக்காக பிஞ்சுக் குழந்தைகள் மீது, புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகளை நடத்தி, இதுவரை 49 குழந்தைகளைக் கொன்றுள்ளது.

 


 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கேட்டிருந்த தகவல் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 4,142 குழந்தைகள் மீது, அதிலும் பெரும்பான்மையாக (2,728) ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீது இந்த நிறுவனம் சோதனைகளைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகளின் போது 49 குழந்தைகள் இறந்துள்ளன.

கடந்த 30 மாதங்களில் 42 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், வெளிநாடுகளில் தயாரான 5 மருந்துகள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டச் சோதனை செய்யப்பட்டுள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், இறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. ஆனால், புதிய மருந்துகளால் ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகள் பற்றியோ, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றியோ எவ்விதத் தகவலும் இல்லை. இது பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என்று எய்ம்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. அதாவது, மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சிறிது காலம் வரை மட்டுமே அந்த குழந்தைகளின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டுள்ளது. பின்பு அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.

 

இந்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு, குழந்தைகளின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கியே இந்தச் சோதனைகளைச் செய்வதாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவ வசதிகோரி எய்ம்ஸ் நிறுவனத்திற்கு வருபவர்களில் பெரும்பான்மையினர் ஏழை எளிய மக்கள்; படிப்பறிவில்லாதவர்கள். இவர்களது குழந்தைகள் மீதுதான் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தங்களது குழந்தையின் மீது இப்படி ஒரு சோதனை நடத்தப்படுகிறது என்பதும், இதனால் தங்களின் குழந்தைகளின் உயிருக்கே கூட ஆபத்து உண்டாகும் என்பதும், அவர்களுக்குப் பெரும்பாலும் தெரியாது. குழந்தைக்கு நோய் குணமாக ஏதோ புதிய மருந்தை மருத்துவர் இலவசமாகத் தரப்போகிறார் என்றே பலரும் நினைத்தனர். அதன்படியே, மருத்துவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்தும் போட்டுள்ளனர்.

 

இந்தச் சோதனையில் குழந்தை இறந்தாலோ, அல்லது பக்க விளைவுகளுக்கு உள்ளானாலோ முறையான இழப்பீடும் கிடையாது. இது போன்ற சோதனைகள் தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

 

திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட புற்று நோய்க்கான புதிய மருத்துவ ஆராய்ச்சி முதல் ஆந்திராவில் பில் கேட்சின் உதவியுடன் செயல்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைடிஸ் பி) தடுப்பூசி சோதனை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பல வகையான புதிய மருந்துகள் இந்திய மக்களின் உடலில் செலுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றன.

 

அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றில், மனிதர்கள் மீது மருத்துவச் சோதனைகள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட சில மேலை நாடுகளில் கூட சட்டதிட்டங்கள் கறாராக இருப்பதாலும், ஆய்வுக்கான செலவும் மிக அதிகமாய் இருப்பதாலும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்துள்ளன. இதற்காக ஆகும் செலவில் 10 சதவீதத்திலேயே இந்தியாவில் சோதனையைச் செய்துவிட முடியும். 

 

பன்னாட்டு மருந்து நிறுவனங்களான நோவோ நார்டிஸ்க், அவென்டிஸ், நோவார்டிஸ், கிலாக்ஸோ ஸ்மித் கிலைன் மற்றும் ஃபைசர் ஆகியன தங்களது மருந்துச் சோதனைக் கூடங்களைப் பல இந்திய நகரங்களில் நிறுவி வருகின்றன. 2010ஆம் ஆண்டுக்குள் 20 இலட்சம் இந்தியர்களின் மீது புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

 

கடந்த ஆண்டு முதல் இத்தகைய ஆய்வுகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் மருந்துச் சோதனை வழியாக 20 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி வந்து குவிந்துள்ளதாகக் கணக்கு காட்டும் நிதித்துறை, 2010ஆம் ஆண்டுக்குள் இதனை 50 கோடி டாலராக உயர்த்தப் போவதாகக் கூறுகிறது. 

 

இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தப்படும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது என்பதுதான்!

· செல்வம்