Language Selection

மக்கள் சட்டம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தோழர்களே! இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா உரை ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது நல நோக்கத்தையே முக்கியமாகக் கருதி துவக்குவதாகவும் சொன்னார்.

 

இதைக் கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பணியாற்றுகிறவர்கள் நமது நாட்டில் இதுவரை எங்கும் துணிந்து இம்மாதிரி முன் வந்தததில்லை; முன் வந்தாலும் இலாபத்துக்காக அதாவது, ஏதாவது ஒரு இயக்கத்துக்காகவாவது ஏதாவது ஒரு கொள்கைக்காவது, ஏதாவது ஒரு மனிதனுக்காவது செல்வாக்கு ஏற்பட்டால் அந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டு, அந்தக் கொள்கையைச் சொல்லிக் கொண்டு, அந்த மனிதனைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க முன் வருபவர்களும், தன் வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் அந்த இயக்கத்தை, கொள்கையை, மனிதனை வைவதில் செல்வாக்கு ஏற்பட்டால் உடனே வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை நலத்துக்குமாக அவைகளை வைத்துக் கொண்டு வயிறு பிழைப்பவர்களும் அல்லது இந்தக் காரியங்களுக்குக் கூலி பெற்றுக் கொண்டு தொண்டர்களாக இருப்பவர்களும் எங்குமுண்டு என்றாலும் நம்நாட்டில் அதிகம். ஏனெனில், இங்கு மனிதத் தன்மையை உணர்ந்த மனிதத் தன்மையில் கவலைகொண்ட மக்கள் அரிது. அதாவது தங்களுடைய சுய இலாப நஷ்டம், பெருமை, சிறுமையே இலட்சியமென்பதில்லாமல் பொதுநலக் கொள்கைகளுக்காக என்று வெளிவந்து தொண்டாற்றும் மக்கள் மிக மிக அரிதாகும்.

-ஈரோட்டில் 22.1.1947 ல் நடந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்க விழாவில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு

உலகமயமாக்கல் என்னும் வர்த்தக கருத்தாக்கம் இந்தியாவில் WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தால் (WORLD TRADE ORGANISATION) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல துறைகளை சார்ந்த ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள இந்தியா இத்தகைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் பல சட்டங்களை இயற்றியும், மாற்றியும் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

 

இவ்வாறு தொடர்ச்சியாக பல புதிய சட்டங்கள் இந்தியாவில் இயற்றபட்டு வருகின்றன. அவற்றில் பலவகையில் மாற்றப்பட்டு்ம், புதிதாக உருவாக்கபட்டும் வந்துள்ள சட்டங்கள் என அறிவுச் சொத்துரிமை சட்டங்களை (INTELLECTUAL PROPERTY LAWS) குறிப்பிடலாம். உலக நாடுகளிடையே வர்த்தகம் பெருகவும், இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கவும், அறிவு சொத்துரிமை சட்டங்கள் அவசியமானது என்று கூறப்படுகிறது. மேலும், ஏழை நாடுகளில் தொழில் நுட்பம் பெருகவும், சமூக-பொருளாதார தளங்களில் முன்னேற்றம் அடையவும், மற்றும் போலி பொருட்களின் உற்பத்தியை தடுக்கவும் அறிவு சொத்துரிமை அவசியம் என்று உலக வர்த்தக நிறுவனம் கூறுகிறது.

அதே நேரத்தில் அறிவு சொத்துரிமை சட்டங்களால் இந்தியா போன்ற ஏழை நாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்ற அபாயமும் நிலவுகிறது. குறிப்பாக இச்சட்டங்களால் மருந்து மற்றும் உணவு பண்டங்களின் விலை ஏற்றம், பாரம்பரிய செல்வங்களான விதைகள், தாவரங்கள் போன்ற இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளையிடப்படுதல், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் போன்றவை நேரலாம்.

 

இந்நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பு" என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை ஏட்டில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளிட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்தனையும் அவரால் 1935-ல் உருவாக்கப்பட்டு, 1952-ல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடைமைகளாகும் - சொத்துகளாகும். இவற்றை அச்சில் வெளியிட்டு விளம்பரமும் வருவாயும் தேடத் தனிப்பட்ட சிலரும் சில இயக்கங்களும் பதிப்பகங்களும் முயலுவதாகத் தெரியவருகிறது! அப்படிச் செய்வது சட்ட விரோதமாகும். மீறி அச்சிட்டு நூலாகவோ, மற்ற ஒலிநாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் மீது திராவிடர் கழகம் தொடர்ந்துள்ள அறிவு சொத்துரிமை மீறல் வழக்கு தமிழகத்தில் பெரியார் பற்றாளர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியை சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே உரிமையானது என்ற பார்ப்பனீய கருத்துகளை எதிர்கொண்டு அழித்த பெரியாரின் கருத்துகளுக்கு பார்ப்பனீய தொனியிலேயே சிலர் உரிமை கோருவதும், பிறர் அதை வெளியிடக்கூடாது என்று தடுப்பதும் தமிழ் உணர்வு கொண்டோரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சமூக பொருளாதார ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமூகம் படைக்க தடையாக உள்ள சாதியம், மதவாதம் போன்றவற்றை உடைத்தெறிய வேண்டும் என்பதையே பெரியாரிய பார்வையாக கொள்ளலாம். உலகமயமாக்கலில் சமூக பொருளாதார ஏற்ற தாழ்வு அபாயகரமான நிலையை எட்டியுள்ள சூழலில் பெரியாரிய பார்வையில் இத்தகைய சட்டங்களை பற்றி ஆராய வேண்டியுள்ளது.

 

ஏனென்றால் சமூக பொருளாதார ஏற்ற தாழ்வுகளை நியாயப்படுத்தும் மதரீதியான தத்துவங்களை மட்டுமல்ல; சமதர்மத்திற்கு வழிவகுக்காத இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும்கூட பெரியார் தீவிரமாக விமர்சிக்கவே செய்தார். அதனால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தமே ஏற்பட்டது. எனவே சட்டத்தில் இருக்கிறது என்பதற்காக எதையும் ஏற்காமல், அது மக்களின் நலனுக்கு ஏற்புடையதா என்ற பெரியாரிய பார்வையின் அடிப்படையில்தான் இந்த அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.

 

அறிவு சொத்துரிமை என்றால் என்ன ?

 

மனித மூளையில் இருந்து தோன்றும் எண்ணங்களை சொத்தாக கருதலாம் எனவும், அவ்வாறு எண்ணங்கள் கண்டுப்பிடிப்புகளாக, கலை படைப்புகளாக செயல்வடிவம் பெறுகின்ற போது அவற்றை சட்டத்தின் மூலம் பாதுகாக்கலாம் எனவும் அறிவு சொத்துரிமை சட்டங்கள் கூறுகின்றன. அறிவு சொத்துரிமை சட்டங்களை மூன்று முக்கிய கூறுகளாக பிரிக்கலாம்:

 

<!--[if !supportLists]-->· <!--[endif]-->கண்டுபிடுப்புகளுக்கு கொடுக்கப்படும் காப்புரிமை (PATENT RIGHT)

<!--[if !supportLists]-->· <!--[endif]-->கலைப்படைப்புகளுக்கு கொடுக்கப்படும் பதிப்புரிமை (COPYRIGHT)

<!--[if !supportLists]-->· <!--[endif]-->நிறுவனங்களின் வணிக குறீயீட்டுக்கான உரிமை (TRADE MARK)

 

அறிவு சொத்துரிமை என்பது ஒருவகையான எதிர்மறை உரிமையாகும் (NEGATIVE RIGHT), அதாவது இவை உரிமை பெற்றவரை தவிர்த்து மற்ற அனைவரையும் சில/பல செயல்களை செய்ய தடைவிதிக்கிறது. அறிவு சொத்துரிமை என்பது அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற வாதத்தின் மூலம் அறிவு சொத்துரிமை வழங்கப்படுவது நியாயப்படுத்தப் படுகிறது.

அதாவது, ஒரு பொருளுக்கு அறிவு சொத்துரிமை பெற்ற ஒருவர், பிறர் அந்த பொருளை உற்பத்தி/விற்பனை செய்வதை தடுக்கும் உரிமையை பெறுகிறார். இதன் மூலம் மக்களிடையே போட்டி உருவாகும் என்றும், அதன் மூலம் புதிய பொருட்களை கண்டுபிடிக்க மக்கள் போட்டியிடுவர் என்றும், அதன் பயனாக அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் என்றும், இதற்கு அறிவு சொத்துரிமை வழி செய்யும் என்றும் வாதிடப்படுகிறது. இவ்வாறு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அறிவு சொத்துரிமை வழிவகுத்ததாக எந்தவித நடைமுறை ஆதாரமோ புள்ளி விவரமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அறிவு சொத்துரிமை என்கிற கருத்தாக்கம் உருவாவதற்கு முன்பாக காப்புரிமை மற்றும் வணிக குறியீடு ஆகியவை தொழில்வள சொத்துகள் (INDUSTRIAL PROPERTY) என்று அழைக்கப்பட்டு வந்தன. பின்பு பதிப்புரிமையும் அவற்றோடு சேர்த்து அறிவு சொத்துரிமை என்று வழங்கப்படலானது.

 

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கபட்டதன் பயனாக புத்தக தொழில் விரிவு அடையவே பதிப்பாளர்களின் உரிமையை காக்க பதிப்புரிமை (COPYRIGHT) சட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் இயற்றப்பட்டன. பின்பு தொழில் புரட்சியின் காரணமாக உருவான தொழிற்சாலை முதலாளிகளின் உரிமையை காக்க காப்புரிமை (PATENT RIGHT) சட்டங்கள் தொடர்ச்சியாக பல நாடுகளில் இயற்றப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டிலேயே காப்புரிமைக்காவும் பதிப்புரிமைக்காகவும் தனிதனி மாநாடுகளை மேலை நாடுகள் நடத்தியுள்ளதை வைத்து அறிவு சொத்துரிமையின் வளர்ச்சியை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இப்படி நமக்கு முற்றிலும் அந்நியமான அறிவு சொத்துரிமை சட்டங்களின் வரலாறு இந்தியாவில் 1856-ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள், தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க காப்புரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தினர். பின்பு இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்தது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் 1970ல் அறிமுகமானது. அதே போல பதிப்புரிமைக்கான சட்டம் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களால் 1914ல் கொண்டுவரப்பட்டது பின்பு பலமாற்றங்களுடன் தற்போதைய பதிப்புரிமை சட்டம் 1957ல் இயற்றப்பட்டது.

 

பெரியார் பணியும், பதிப்புரிமையும்

 

கதை, கவிதை, நாடகம், ஓவியம், பாடல் போன்ற கலை தொடர்பான படைப்பாளிகளுக்கு கொடுக்கப்படுவதே பதிப்புரிமை (COPYRIGHT) எனப்படுகிறது. அவ்வாறு பதிப்புரிமை பெறத்தக்க படைப்புகள் என்று கீழ்கண்டவற்றை பதிப்புரிமை சட்டம் 1957 கூறுகிறது.

 

<!--[if !supportLists]-->· <!--[endif]-->உண்மையான இலக்கிய, நாடக, இசை மற்றும் கலை படைப்புகள்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->திரைப்படங்கள்

<!--[if !supportLists]-->· <!--[endif]-->இசை பதிவுகள்

புகைப்படங்கள், தொலைகாட்சி ஒலி/ஒளி பரப்பு, SOFTWARE PROGRAMME போன்றவை கூட பதிப்புரிமை பெறத்தக்கவை.

 

ஒரு நபர் பதிப்புரிமை பெறுவதற்கு காப்புரிமை போல பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய படைப்புகளை பொதுமக்கள் தொடர்புக்கு கொண்டுச் சென்றாலே போதும் அந்த நபர் அப்படைப்புக்கு பதிப்புரிமை பெற்றவராவர். இப்படி பதிப்புரிமை பெற்ற படைப்பை உரியவர் அனுமதியின்றி வெளியிடவோ, மொழிமாற்றம் செய்யவோ இச்சட்டம் தடை செய்கிறது.

 

உதாரணத்திற்கு ஒரு கதாசிரியர் கதை ஒன்றை வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரே அக்கதைக்கு பதிப்புரிமை பெற்றவர் ஆவார். அக்கதையை அவர் அனுமதியின்றி வேறுயாரும் வெளியிடவோ மொழிமாற்றம் செய்யவோ அல்லது அக்கதையை தழுவி திரைப்படம் தயாரிப்பதையோ இச்சட்டம் தடை செய்கிறது. இவ்வாறு பதிப்புரிமை மீறுவோர் இச்சட்டத்தின் மூலம் நஷ்ட ஈடு கோரலாம், அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பொருட்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

 

இத்தகைய பதிப்புரிமை மேலே கூறிய எல்லா கலைப்படைப்புகளுக்குமே பொருந்தும். மேலும் இந்த பதிப்புரிமையை பதிப்புரிமை பெற்ற நபர் தன் வாழ்நாள் முழுக்கவும் அவர் இறந்த பின் அவருடைய வாரிசுகளுக்கு 60 ஆண்டுகளும் பயன்படுத்திக் கொள்ள இச்சட்டம் அனுமதியளிக்கிறது.

 

பெரியார் தன்னுடைய அரசியல் நுழைவு காலம் தொட்டு பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக பேசியவையும் எழுதியவையும் பதிப்புரிமைக்கு உரியவைதான். பெரியார் தன்னுடைய பெயரிலான சொத்துகளை சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் பெயரில் எழுதி வைத்து விட்டு மறைந்ததால், அவருடைய வாரிசான சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே பதிப்புரிமை சட்டப்படி அவருடைய பேச்சுகளை எழுத்துகளை வெளியிடுவதற்கு உரிமை உள்ளது என்று திராவிடர் கழகம் கூறுகிறது. இதன்படி பார்த்தால் பெரியார் இறந்து 60 ஆண்டுகள் கழித்து அதாவது 2033-ல்தான் பெரியாரின் படைப்புகளை சுயமரியாதை நிறுவனம் தவிர்த்து வேறுயாரும் வெளியிட முடியும். அதற்குள் பெரியாரின் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டால்தான் அவரின் படைப்புகள் விடுதலை பெறும்.

 

பதிப்புரிமை சட்டப்படி முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லாதபோது பத்திரிகையில் எழுதியவைகளுக்கு அதன் ஆசிரியரே பதிப்புரிமை உரியவர். தற்போதைய நிலையில் பத்திரிகைகள் தங்கள் பத்திரிகையில் வெளியான அனைத்து படைப்புகளுக்குமான பதிப்புரிமையை தங்களிடமே வைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. குடியரசு இதழுக்கு இப்படி பதிப்புரிமைக்கான ஒப்பந்தங்கள் இல்லாதபோது குடியரசு இதழில் எழுதியவர்களே பதிப்புரிமைக்கு உரியவர்கள். அந்த வகையி்ல் பெரியாரின் எழுத்துகளுக்கு பதிப்புரிமை பெற சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு உரிமை உண்டு.

 

1983ம் ஆண்டில் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் திருச்சி பெரியார் மணியம்மை இல்லத்தில் சில அறிஞர்களால் தொகுக்கப்பட்ட பெரியார் கருத்துகளைத்தான் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதாக கூறப்படுகிறது. அப்படி தொகுக்கப்பட்டவைக்கு எந்த ஒரு பதிப்புரிமை தொடர்பான ஒப்பந்தம் இல்லாதபோது அதற்கு பதிப்புரிமை பெற அந்த அறிஞர்களுக்கே உரிமை உண்டு. ஆனால் தொகுக்கப்பட்டவையில் கூடுதலாக பல ஆயிரம் பக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது; எனவே இது புதிய படைப்பு என்று பெரியார் திராவிடர் கழகம் வாதிடுகிறது.

 

இப்படி சட்ட சிக்கல் பல உள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றத்திடமே விட்டுவிட்டு அறிவு சொத்துரிமையின் அரசியல் என்ன? பெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை யாருக்கானது? என்று பார்ப்போம்.

 

-மு. வெற்றிச்செல்வன்

(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)