ஒரு பெண் தான் தாய்மை அடைந்து விட்டதை அறியும் போது அவளுக்குள் எவ்வளவு பேரானந்தம் பிறந்து விடுமோ அதைப் போல, இந்த நாட்டில் நாளை வெய்யிலாக இருக்கும் என்ற அறிவித்தலைக் கேட்டவுடன் நந்தகோபாலனுக்கும் போரானந்தம் பிறந்துவிட்டது.
நாளை சூரியன் நகைத்தபடி வருவான். அவனுக்குத் தலை இடித்து நடக்கலாம். குமரேசன் வீடுவரை ஓர் உல்லாச நடைகட்டித் திரும்பி விடலாம். அந்தக் குடாவுக்கு அருகிலுள்ள சிவப்புக் கட்டிட நிழலோரமாய் இருந்து கொண்டு அந்த இயற்கைக் காட்சிகளை எல்லாம் ரசித்து மகிழ்ந்து விடலாம். இவையெல்லாம் எவ்வளவு ஆனந்தமான விடயங்கள்.

அந்தக் ஆழிக் கடலிலே கலக்கும் குடா நீரில் அலைகள் எழும்பாது, தந்திக் கம்பியில் நடக்கும் ஓர் குமரிப் பெண் போல அதன் நீரோட்டம். நீண்ட பசும் புல் விரிப்பில் அசைபோட்டுப் தூங்கிக் கிடக்கும் எருதுகள் போல அந்த மலைகள். குளக்கரையில் வெளுத்துத் தொங்கவிடும் பல வர்ண ஜவுளித் துணிகள் போல அந்தக் கட்டிடங்கள் காட்சி தரும். பொதிசுமந்து நிற்கின்ற ஒரு கழுதையைப் போல் தூரத்தே அந்தத் தொழிற்சாலை தோன்றிவிடும். 'சோ' வென அங்கு ஒற்றையாகக் குதித்துக்கொண்டிருக்கும் அந்த அருவியின் அழகிலே அவன் தன்னை மறந்து கிடப்பான்.
அந்த அருவியைப் பார்க்கும் போதெல்லாம் நந்தகோபாலனுக்கு தனது தாயின் ஞாபகம் வந்துவிடும். அவளின் அடர்ந்த கருங்கூந்தலிலே நரை விழுந்த போது அதன் அழகும் இவ்வாறுதான் தோன்றியது அவனுக்கு.
நந்தகோபாலனின் தாய் பொன்னுத் தங்கம், அவள் ஒரு தெய்வப் பிறவி!
நந்தகோபாலன் பிறந்த வீட்டிலேயே அவன் தகப்பனும் இறந்து விட்டார். ''தகப்பனைத் தின்டவன்'' என்ற ஊராரின் பழிச் சொல்லையும் தாங்கிக் கொண்டு, தனது மகன் நந்தகோபாலனையும், மகள் காந்தரூபியையும் வளர்க்க அவள் எவ்வளவு பாடுபட்டிருப்பாள். அவள் தனியே ஒரு வாழ்க்கபை; போராட்டமே நடத்தி யிருந்தாள். தாலி அறுத்த விதவை ஆனாலும் பொன்னுத்தங்கத்தை ஆரும் விதவைக் கோலத்தில் கண்டதில்லை. வெள்ளைச் சீலை வாங்கி உடுத்த முடியாத அளவு வறுமை இதற்கு காரணமாக இருந்தாலும், நாளும் பொழுதும் அந்த மண்னுடனே உறவாடிக் கிடக்கின்ற பொன்னுத் தங்கத்திற்கு - அந்த செம்பாட்டு மண்ணுடனான அவளின் உறவுக்கு - இந்த வெள்ளைச் சீலை தோரான கலாச்சாரமா என்ன?
ஒரு முழத் துண்டைத் தலையிலே சுற்றி, அதை நீண்ட கூந்தலுடன் பின்னி முடிந்து விட்டு, ஒரு மண்பொம்மை மாதிரி அவள் தருகின்ற கோலம் யார் மனதைத் தான் உருக்கிவிடாது. பசளை பரப்பி, கொத்திப்பிரட்டி, இடவன் அடித்து, சாறி, வரம்பிழுத்து, வாய்க்கால் கீறி, நனைத்து, நடவுநட்டு, தண்ணீர் கட்டி, களை பிடிங்கி, மருந்தடித்து, காவல் காத்து, அறுத்து விற்பது வரைக்கும் அவள் தனி ஒருத்தியின் உழைப்பே பெரும் பகுதி. ஒரு கமக்காரனுக்கு நிகரான ஒரு கமக்காரச்சி அல்லவா அவள்! அவளின் இந்த நிகரான உழைப்புக்கு, மண்ணுடன் ஒட்டுண்டுபோன அவளின் உறவுக்கு இந்த வெள்ளைத் துண்டு தாங்காது என்றுதான் அந்தக் கலாச்சாரமும் மௌனமாகி இருந்ததோ என்னவோ.
பொன்னுகத்தங்கத்திடம் அவ்வளவு வசதிகள் எதுவுமில்லை. கால் பரப்பு கலட்டிக் காணி. அதில் நாலு காலில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஓர் ஓலைக் குடிசை. தன் கணவன் விட்டுவிட்டு போன இரண்டு கறவைப் பசுக்கள். இரண்டு மறியாட்டுக் குட்டிகள். இவ்வளவும் தான் அவளின் சொத்து. காலை எழுந்தவுடன் ஆட்டடி மாட்டடி பெருக்கி, சாணம் கரைத்து நிலம்பெருக்கி, பால்கறந்து விற்றுவிட வேணும். அதிலும் எவ்வளவு பொல்லாப்பு. ''என்ன பொன்னு மடியைக் கழுவிவிட்டு மீதித் தண்ணியையும் பாராமல் பால் கறந்து விட்டாயோ? இந்த மனிசன் சொன்னாலும் கேட்குதில்லை. பொன்னு பாவமென்டு சொல்லி சும்மா தண்ணிக்கு காசையெல்லே கரைக்குது.'' பால்கார அம்மாள் எரிந்து விழுவதை யெல்லாம் பொன்னுத் தங்கத்தால் எதிர்த்து நிற்க முடியுமா? பிறகு யாரிடம் பாலை விற்கிறது.. தனது கோபத்தை எல்லாம் முந்தானைச் சீலையை நாரியில் செருகுவதில் தான் தீர்த்து விடுகிறாள் பாவம்.
ஓர் இடத்தில் நிற்பதற்குக் கூட அவளுக்கு நேரம் மிஞ்சுகிறதா என்ன. சமையல் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மாடுகளைச் சாய்த்தபடி தோட்டத்துக்கப் போய் விட வேணும். போகும் வழியிலே மாடுகள் போட்டுவிடும் சாணத்தையும் பொறுக்கிச் சேகரிக்க வேணும். மாடுகளை நல்ல மேச்சல் பார்த்து கட்ட வேணும். இப்படி அவளுக்குத் தலைதெறித்த வேலைகள்.
மொட்டு மொட்டாய்ப் பனித் துளிகளை ஏந்தி, நிறங்களாகக் குழைத்து ஓவியம் தீட்டுகின்ற தூரிகை போல நிற்கின்ற தன் பயிர்களின் அழகையெல்லாம் வரப்பிலே நின்று கண்ணயரக் காணவேணும் அவளுக்கு. அல்லது அவளுக்குப் பொழுதே விடியாது. அந்தத் தோட்டத்துக் கமக்காரர்களுக்குத் தொட்டாட்டு வேலை செய்யும் கமக்காரச்சிகளை விடவும் பொன்னுத் தங்கத்துக்குகே அந்த ஊரில் மதிப்பு அதிகம். பெண்ணாய் பிறந்தவள் உழைக்கிறாள் என்பதே அவளின் மதிப்புக்கு ஒரே ஒரு காரணம். சூரியன் உச்சிக்கு வந்தவிட்டதும், மாடுகளைச் சாய்த்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுவாள். மாடுகளுக்குத் தண்ணி காட்டிவிட்டு, மரவள்ளிக் கிழங்கோ அல்லது அவித்த மாப்பிட்டும், தக்காளிக் குழம்புமோ ஆக்குவாள். அல்லது கீரைப்பிட்டு. அல்லது இலைக்கறிப்பிட்டு. இதுவே அவர்களின் அன்றாட ஆகாரம். மிஞ்சி மிஞ்சிப் போனால் சூடைத் தீயலோ, நெத்தலித் தீயலோ எப்போதேனும் அவர்கள் சட்டியில் நனையும். இறச்சி என்பது அவர்களுக்கு பணக்கார ஆகாரம். கொண்டாட்ட நேரங்களில் தாங்கள் வளர்த்த கிடாயை இறச்சிக்கு விற்றால் மட்டுமே அதில் ஒரு பங்கு வாங்கி உலை ஏற்றி விடுவாள் பொன்னுத்தங்கம்.
சமையலை இறக்கி வைத்துவிட்டு, முந்தானைச் சீலையை ஒரு கையால் இழுத்துக் கொண்டு கண்ணகி சிலையை பாட்டிலே போட்டாற் போல் குட்டித் தூக்கம் போடுவாள். நந்தகோபாலனும், காந்தரூபியும் பாடசாலையால் வந்ததும் எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். பொழுது கொஞ்சம் தாழ எல்லோரும் மாடுகளைச் சாய்த்துக் கொண்டு மீண்டும் மண்ணோடு உறவாடப் போய் விடுவார்கள்.
அது சிறீமாவின் காலம் -
மண்ணிலே ஓரளவு பொன்விளைந்த சந்தோச ரேகைகள் கமக்காரர்களின் முகங்களில் தோற்றிய காலம். காந்தரூபியின் இதழ்கள் மதாளித்து மகரந்தம் சேர்வையாகிய காலம். இடை சிறுத்தகன்று பின் பிருஷ்டங்கள் கோவா போல் பூத்து மதமதப்பாகத் தோன்றிய காலம். பெண்ணின் வளர்ச்சிக்குப் போட்டி போட்டு பொன் சேர்க்க முடியுமா பொன்னுத்தங்கத்தால். மண்ணை நம்பிப் பிழைக்கின்ற சீவன் அல்லவா அவள்! அவளால் என்னதான் செய்ய முடியும்? தன் மகளுக்காகக் காப்பாற்றி வைத்த ஒத்தைச் சோடி கம்பி வளையலையும் அடகு வைத்து மண்ணிலே போட்டு விட்டாள். போட்ட முதலைப் பிரட்டி, அதைத் திரும்பவும் போட்டுப் பிரட்டி.... இப்படியாக ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன.
அவள் நம்பிக்கையும் உழைப்பும் வீண் போகவில்லை. கொஞ்ச முதலைக் கையிலே பிடித்து விட்டாள்! வேய்சலுக்குப் பனையோலை, மாட்டுக் குடிலுக்கு அனிஞ்சில் தடி, தும்புக் கயிறுகள், மண்வெட்டி, உழவாரம், பால் கறப்பதற்கு செப்பு, பாய்- கடகம். நீத்துப்பெட்டி- இளைப்பதற்கு சார்வு, பன்னச் சத்தகம், ஒர் அரிக்கன் லாம்பு, இரண்டு கறவைப் பசு, மகளுக்குக் கவுண், மகனுக்கு உடுப்பு, இரண்டு சோடி பாட்டா செருப்பு போன்றவற்றை எல்லாம் கொள்வனவு செய்தும் கையில் கொஞ்ச முதல் மிச்சமாக இருந்தது அப்போது..
இந்தக் காலத்தில் அவர்கள் திருந்தாதி அடிக்க முன்னரே எழுந்து விடுவார்கள். காந்தரூபி சங்கக்கடையில் முன் வரிசைக்கு ஓடிவிட வேணும். சீத்தைத் துண்டுக்கோ, பானுக்கோ, மண்சீனிக்கோ ஓடினால் தான் கிடைக்கும். நந்தகோபாலனும் சாரத்தால் கூதல் போத்துக் கொண்டு; அக்காளுடன் போவான். அந்தச் சாமன்களை விற்று சேர்த்தாலும் அவர்களின் வறுமையில் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. மற்றும்படி வழமைபோல மண்ணுடன் கிடந்து மாய வேண்டித்தான் இருந்தது. ஆனாலும் அதில் ஒருவித சந்தோசம் இருக்கத்தான் செய்தது.
அடுத்து வந்த காலங்கள் பெரிய ஏமாற்றங்களைக் கொண்டு வந்திருந்தது. மண்னைக் குளிர வைப்பதற்கே காசைக் கரைத்து ஊத்த வேண்டி இருந்தது. அவ்வளவுக்கு எண்ணை விலையேற்றம். விதைபொருளோ பசளையோ விளைச்சலுக்கு மேல் விலையேறிக் கிடந்தன. மண்ணை நம்பிக் காசைப் போட்டு வயிற்றைக் கழுவுவதே கஸ்டமாக இருந்தது. பொன்னத்தங்கத்தின் கையிருப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது. இவ்வளவு கஸ்டத்தில் பொன்னுத்தங்கம் ஒருத்தியாகவே மூன்று உயிருக்கும் மாய அவளால் முடியவில்லை.
தனது மகளின் முருங்கை வளர்த்தியைக் கண்டு அவள் மனசாரப் பூரித்தாலும், அவளுக்கென்று நாலுகாசு தேடமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவள் மனதைப் புளியாகக் கரைத்தது. மாரிகாலத்து நுளம்புத் தொல்லையைப் போல நாலு பக்கத்தாலும் வறுமையின் தொல்லைகள் அவள் மனதை அரிக்கத் தொடங்கிவிட்டன.
''உவள் பொன்னுத்தங்கம் புது மாப்பிளையெல்லே புடிச்சிட்டாளாம். குந்திய குமரிருக்க.. கூதலுக்கு துணை பிடிச்சிட்டாள், துணை!''
''அவளும் பாவம்தானே. மண்ணோட மாஞ்சு மாஞ்சு என்ன சுகத்தைத்தான் கண்டிட்டாள். அவளுக்கும் இடை சுகத்துக்கு ஆள் தேவைதானே?''
ஊரிலே பலவிதமான கதைகள். ஊர் வாயை மூட உலைமூடி காணுமா? பொன்னுத்தங்கத்தின் கஸ்ட நஸ்டம் அவளுக்குத்தான் தெரியும். மண்ணோடு மாய அவளாலும் ஏலாது. அவளுக்கும் தென்பு குறைந்து விட்டது. தன்னுடைய உடல் சுகத்தை விடவும், உழைப்புக்கு ஓர் ஆளைச் சேர்க்க வேண்டும் என்பதாகவே பொன்னத்தங்கத்தின் இந்தக் காரியமும் இருந்தது.
பொன்னுத்தங்கத்தின் மனிசன் ராமு வாட்ட சாட்டமாக 'மைன'ரைப் போலத் தான் இருந்தான்.
காந்தரூபிக்கு இப்பொழுது நான்கு கவுண்கள் வந்துவிட்டன. எல்லாம் நிலவொளி போல வெள்ளை வெளீரெண்டு இருந்தன. சுருக்குவைத்த சட்டைகள். அயன் போட்டுப் பாடசாலைக்குப் போகிறாள். முன்பெல்லாம் ஒரே ஒரு கவுண் தான் இருந்தது. அதன் நிறம் வெள்ளையென்று யாரும் சொல்ல மாட்டர்கள். அவ்வளவுக்குப் பளுப்பேறி இருந்தது. சுருக்குக் கூட இல்லை. சுருக்குவைத்துத் தைத்தால் துணி செலவாகும் என்பதால் அதை பொன்னுத்தங்கம் தவிர்த்தே இருந்தாள்.
முன்பெல்லாம் அவளது சிலுப்பர் வேலிக் கம்பிகளையும் அடியிலே பிணைத்து விடும். நடக்கும் போது பாதத்தை அவை அண்டும். அது குதி பிய்ந்து இத்துப்போய் இருக்கும். அந்தக் கிறவல் றோட்டு வெப்பமும், தார் உருகும் கொதிப்பும் அவளின் கால்களில் தான். ஆனாலும் பரவாயில்லை. இவையெல்லாம் அவளுக்கு வேதனையாகத் தெரியவில்லை. சிலுப்பர் இல்லாமல் பாடசாலைக்குப் போகிற கௌரவக் குறைச்சலை விட இந்த வேதனைகள் அவளுக்குத் தூசுதான்.
இப்பொழுதென்ன அவள் செல்லப் பிள்ளை! மடிப்புக் கலையாத கவுண், புது பாட்டா, புது கொம்பாஸ் பெட்டி, பிறவுண் உறை. சைனீஸ் மகசீன் உறைகள் போட்ட கட்டுக் கொப்பிகள், சீ எல் பேனா, வீனஸ் எஸ்.எஸ் பென்சில் என்று அவள் சந்தோசமாக துள்ளிக் குதித்து ரவுன் பாடசாலைக்கு அல்லவா போய் வருகிறாள்.
நந்தகோபாலனுக்கும் புது ஏசியா சைக்கிள் வந்து விட்டது. விதம் விதமான உடுப்புகள். அவர்களின் வீடுகூட அடையாளம் காண முடியாதபடி உருமாறி விட்டன. பனையோலைக் கூரை இருந்த இடத்தில் ஓடுகள் அமர்ந்திருந்தது. மண் சுவர்கள் அகற்றப்பட்டு, செங்கட்டிச் சுவர்கள் எழும்பி இருந்தன. சாணம் மெழுகிய தரை சீமெந்துத் தரையாகி விட்டது. சொகுசான கட்டில், அயன் சேவ், பிரம்புக் கதிரைகள், பூவாஸ், ஜன்னல் சீலைகளென்டு வீடு அலங்காரமாய் இருந்தது. இவ்வளவுக்கும் ராமுதான் காரணம். இவையெல்லாம் அவனின் சொத்துக்கள். அவன் தனது கராச்சையும் ரைக்ற்ரரையும் விற்று இந்த நிலையை உருவாக்கி கொடுத்து இருக்கிறான்.
இதுவரையும் ஏனென்றும் எட்டிப்பாக்காத பொன்னுத்தங்கத்தின் உறவுகள் எல்லாம் லேசாகத் தலைகாட்ட ஆரம்பித்து விட்டன. அவளின் தங்கை புவனம் அடிக்கடி வருவாள். சமையலுக்கு உதவுவாள். தமைக்கைக்குக் 'கிடைத்த கிடைப்பென்று' மனதுக்குள் புளுங்கு வாள். அவள் இன்னும் கலியாணம் ஆகாதவள். சுமாரான அழகென்றாலும் அவளின் உடல்கட்டோ வாலிபமுறுக்கை ஏற்றிவிடும்.
''ராமு புவனத்தையும் தூக்;கிப் போட்டான். அங்க பெரிய சண்டை நடக்குது.''
ஊரே தெருவில் வேடிக்கைக்குக் கூடிவிட்டது.
புவனத்தின் தமையன் தேவனோ ஒரு கோடரியோடு படலைக்குள் நிற்கிறான்.
''டேய் அவளை வெளிய விடடா'' தேவன் படலையை உதைந்தவாறு கத்தினான்.
''இங்சை ஒரு பு.........ஆண்டியும் வரப்படாது. வளவுக்கை கால் வைச்சாச் சரிப்பன்.'' சாரத்தைச் சிரைத்தபடி நிறை வெறியிலை தள்ளாடிக் கொண்டு நின்றான் ராமு.
''டேய் நீ ஒரு தேப்பனுக்குப் பிறந்தா. வாடா வெளியில.'' தேவன் கத்திக் கொண்டு படலையைத் தாண்டி உள்ளே போகிறான். பொன்னுத்தங்கம் புவனத்தை இழுத்து வந்து வெளியிலே விடுகிறாள். சண்டை ஒருவாறு ஓய்ந்து போகிறது. ஊhச்சனங்கள் வேடிக்கை கலைந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று திருந்தாதி அடிக்கவும் பொன்னுத்தங்கம் முற்றத்துக்கு வரவும் சரியாக இருந்தது. இன்றிரவு அவளுக்கு தூக்கம் கெட்டியாக இருக்கவில்லை மாசிப் பனியில் அந்த ஊரே மங்கலாக தெரிந்தது. கூதல்பனி அவளின் உடலை மொயத்;துக் கொண்டிருந்தது. தலைப்புச் சீலையால் உடலைப் போர்த்துக் கொண்டு, ஊமல் கரியை வாயிலே சொதப்பி குந்தியிருந்து பல்லைத் தீட்டிக் கொண்டிருந்தாள்.
அடுத்த வளவில் உயர்ந்து நின்ற வேப்பம் மரத்தில் இரண்டு கிளிகள் கொண்டைகளில் கொத்தி செல்லங் கொளிப்பது அந்த மங்கலான பனி மூட்டத்துக்குள்ளாலும் தெரிந்தது. காந்தரூபியின் உச்சந் தலையில் ஆசையோடு அழுத்தி முத்தங் கொடுக்க தாய்மை உணர்வுகள் லேசாகச் சுரந்தன. அப்பொழுதுதான் மரத்திலிருந்து குதித்துவிட்ட பெட்டைக் கோழி ஒன்று செட்டையடித்து சோம்பல் முறித்து ஒரு நடை நடந்துவிட்டு பேன் கோதும் அதன் சடசடப்பைக்; கேட்டவளாகத் திரும்புகின்றாள் பொன்னுத் தங்கம். அவளின் உள்மனதிலும் ஒருவிதமான சடசடப்புத் தோன்றுகின்றது.
பொன்னுத்தங்கம் கம்பி வாளியில் இருந்த தண்ணீரை மூஞ்சியைச் சிலாவும் பன்றியைப் போல கைகளால் அலசி அள்ளி முகத்துக்கு எத்துகின்றாள். சில்லிட்டது. வாயிலே கொஞ்சம் விட்டு அலசித் துப்பிவிட்டு அவிழ்த்த கொண்டையை எட்டுப் போட்டு முடிந்தாள். தலைப்புச் சீலையால் முகத்தைத் துடைத்து அதை எக்கத்தில் செருகியவளாக வீட்டுக்குள் நுளைகிறாள்.
ராமு அப்பொழுதுதான் எழும்பியவனாக பின்னுக்குக் கைகளைக் கோர்த்து வளைத்து சோம்பல் முறித்துக் கொண்டான். நந்தகோபாலனும், காந்த ரூபியும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பொன்னுத்தங்கம் தீக்குச்சியைக் கிழித்து, எண்ணை தெளித்த பனம் சிராய்கள் செருகிய அடுப்பிலே போடுகிறாள். வேதனையும் துயருமாக நனைந்து கிடந்த அன்றைய இரவின் ஈனச் செயல்களின் நினைவுகளின் மீது ராமுவின் முகம் பட்டதும் அவளின் வயிறும் பற்றி எரிவதைப்போல் அது குப்பென்று பற்றியது.
''என்ர மகளோட உந்தச் சேட்டைகளை இனியும் வைச்சிருக்காதை'';.
தான் எங்கே அப்பன் ஸ்தானத்தில் இருந்து செய்ய நினைக்கிற லீலைகளுக்குக் குறுக்கே இவள் கத்தி நீட்டுகிறாள் என்பதை அறிந்ததும் அவன் ஒரு முறை தடுமாறிப் போனான்.
''இனியும் என்ர குமர்கிட்ட தொட்டுக் கட்டிற சடைமாடைகளைக் கண்டா வெட்டிப் போடுவன் வெட்டி. மரியாதையா இருக்கிறதொண்டா இரு. இல்லையெண்டா மூட்டையைக் கட்டிக்கொண்டு போ. பொட்டப் புள்ளை கொன்ற பாவம் எனக்கு வேண்டாமெண்டு பாக்கிறன். ஓ!''
தோட்டத்தில் ஒரு கமக்காரனுக்கு சரிசமனாக இடவன் அடிப்பவள் பொன்னுத்தங்கம். அவள் ஆணுக்குச் சளைத்தவளல்ல. இந்த யுகத்துக்கே சவால் விடக்கூடிய விவசாயி அல்லவா அவள்! அவளின் தோற்றத்திலும் அது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கிடையில் பிள்ளைகளும் எழுந்து விட்டார்கள். அவன் எதுவும் பேசவில்லை சாப்பிட்டு விட்டு வெளியே போய் விட்டான்.
வழமைபோல தோட்டவேலைகளால் வந்த பொன்னுத்தங்கத்துக்கு தலையிலே இடிவிழுந்து கிடந்தது. அவளது வீடு நெருப்பிலே எரிந்து கொண்டிருந்தது. ஊரார் கூடிநின்று அணைத்துக் கொண்டிருந்தனர். ரவுன் பள்ளிக்கூடத்தால் காந்தரூபி இன்னும் வந்திருக்கவில்லை. நந்தகோபாலன் வழமைபோல அவன் சாமத்துக்குத் தான் இனி வருவான். பொன்னுத்தங்கம் தலையிலும், மார்பிலும் அடித்துக் கதறினாள். ஆனாலும் மண்ணிருக்கென்ற துணிவும், மன வைராக்கியமும் அவளை அடுத்த நிமிடமே ஆம்பிளையாக்கி விட்டது.
தோளிலே மண்வெட்டியோடு வரப்பிலே நின்றாள் பொன்னுத்தங்கம். மகாராணியை வரவேற்பது போல முற்றி விளைந்து நின்ற பயிர்கள் தலைசாய்த்து நின்றன. முதல் இரவில்; நாணத்தோடு பார்க்கும் புதுப் பெண்னைப் போல நாற்றுக்களுக்கு இடையால் அவளைப் பார்த்தது அந்த மண். அவள் ஒரு ராஜநடையோடு வரப்பிலே நடந்தாள். அவள் உழைப்பிலே மீண்டும் உறுதி பிறந்தது.
''நந்தகோபாலா நீ இயக்கத்தை விட்டுட்டு என்கூட தோட்டத்துக்கு வாவன் இருவரும் சேர்ந்து உழைப்பம்.''
''முடியாது அம்மா. நான் மண்ணை மீட்கப் போராடுறன். இயக்கத்தில எவ்வளவோ வேலைகள் கிடக்கு!''
''போராடு! வேண்டாமெண்டு ஆர் சொன்னா? என்கூட வேலையையும் செய்!''
''அம்மா உனக்குப் விளங்காதம்மா. அது எவ்வளவோ கஸ்டம். தோழரைச் சேர்க்கவேணும்... ரெயினிங் குடுக்கவேணும்... காம்பில எவ்வளவோ வேலையிருக்கம்மா. தோழர்களை விட்டிட்டு என்னால வரேலாது. தோழமை உணர்வைப் பற்றி உனக்குத் தெரியாதம்மா.''
பொன்னுத்தங்கத்தின் உதட்டோரமாக அதட்டுச் சிரிப்பொன்று கோடிழுத்து விட்டு மறைந்தது.
''ஏனம்மா சிரிக்கிறாய்''
''இல்லை இந்த மண்னை எப்படி மீட்கப் போறாய்?''
''ஆமிக்காரனை அடிச்சு விரட்டி. தமிழன் ஆளுற மாதிரிச் செய்தால் சரி.''
''.... அப்ப இந்த மண்ணை தரிசா மீட்க்கப் போகிறேன் எண்டு சொல்லுறாய். சாதி, மதம், பெண்ணடிமை, நிலத் திமிர், இனப்புழுக்கம், ஏழை, பணக்காரன், பசி, பட்டினி, நான், நீ... எண்று நெஞ்சு பிளந்து கிடக்குது பார் இந்த நிலம். அதை அப்பிடியே தரிசாக மீட்கப் போறியா?
நந்தகோபாலனுக்கு எதுவும் புரியவில்லை. அம்மா பழஞ்சலிப்புக்கு புலம்புகிறாள் என்று இருந்துவிட்டான். ஆனால் பொன்னுத்தங்கமோ விடுவதாக இல்லை. தம்பி நந்தா, உனக்கு விவசாயி பற்றி என்னதான் தெரியும்? அவன் தோழமை பற்றி உனக்கென்ன தெரியும்? இந்தத் தோழமையை நீ உங்கள் காம்பில கூட கண்டிருக்க முடியாது. அவள் நெஞ்சிலிருந்து எழுந்த அந்த பெருமூச்சு. சோளகக் காற்றில் கலந்த பனைமரத்தின் நெடுமூச்சைப் போல இருந்தது.
தம்பி, கமக்காரன் புளைப்புக்காக மட்டும் நடத்தலை விவசாயம். தினமும் அவன் போராட்டமே நடத்துகின்றான். சரி, எங்கட வீட்டில எத்தனை ஜீவன்கள் இருக்கு சொல்லுப் பாப்பம்?
''நான், நீ, மற்றது எங்கட அக்கா''
அருவி ஒன்று குதிப்பதைப் போலச் சிரித்தாள் பொன்னுத்தங்கம்.
''விவசாயிகள் இப்பிடி பாக்கிறதில்லை.
இந்த ஆடு, மாடு, உழவாரம் மண் வெட்டி, கலப்பை.... இந்த மண், எல்லாமே அவன் உயிர்தான். அவன் மண்ணேடு மாயிறது இதுகளையும் மறு உற்பத்தி செய்யத்தான். இதுகளுக்கும் அவனுக்கும் இருக்கிற உறவிருக்கே அதை நீ எந்தப் புத்தகத்திலும் படிச்சுப் பார்க முடியாது!
பொன்னுத்தங்கம் இன்று இவ்வாறு பேச்செடுப்பதன் சமாச்சாரம் சாடை மாடையாக நந்தகோபாலனுக்கும் விளங்கி விட்டது. பொன்னுத்தங்கத்தின் மூளையிலே மொசுறாகக் கடித்து ஊரும் அந்த விடயத்தை அவளும் தடல் புடலாகப் போட்டுடைக்க விரும்பவில்லை. தான் பெத்த மகனிடம் குற்றங்காண அந்த ஏழை மனசுக்கும் முடியவில்லை. பெற்ற பாசத்தில் தள்ளாடும் ஏழைக் குடியானவள் அல்லவா பொன்னுத்தங்கம்.
நந்தகோபாலன் நிலைமையைச் சமாளிக்க முனைந்தவனாக."அம்மா! நான் அவசரமாய்ப் போகவேணும்" என்று மெல்லமாக நளுவப் பாத்தான். பொன்னுத்தங்கத்தின் வயிற்றில் பிறந்தவனல்லவா இவன். மகனைப்பற்றி இவளுக்குத் தெரியாதா என்ன?
"இஞ்சை கொஞ்சம் நில்லு ராசா"
பொன்னுத்தங்கம் அதட்டவில்லை. பாசமிகுதியால் குழைந்த வியாகூலப் பார்வையால் அவனைப் பார்த்தாள். அவன் கண்களுக்குள் எதையோ தேடினாள். நந்தகோபாலனால் அந்தப் பார்வையை தரிசிக்க முடியவில்லை. எண்ணை வற்றிய திரியில் ஆடும் ஒளியைப் போல அவன் விழிகள் அங்கலாய்த்தன..
அந்தக் கதிரைமலை மாதா கோவில் நவநாட்கள் முடிந்த கையோடு, தோழர்கள் இருவரோடு வீட்டுக்கு வந்திருந்தான் அன்று நந்தகோபாலன். பொன்னுத்தங்கமும் அவர்களுக்கு அன்று புட்டோடு வாளைமீன் தீயலையும் அன்போடு ஊற்றி கொடுத்திருந்தாள். சாப்பிட்டு முடிந்த கையோடு அவசரமாக அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
அடுத்த ஊர் சந்தியை அண்டியதும் மெதுவாக சயிக்கிளை நிறுத்தினான் நந்தகோபாலன். ஏற்கனவே இருந்த இரசியத் திட்டத்தின்படி மற்றவன் அந்தத் தோழனை கெட்டியாகப்பிடித்து தள்ளி, அருகிலிருந்த மின்கம்பத்துடன் அழுத்திப்பிடித்திருந்தான். நந்தகோபாலன் அவன் கைகளை மின்கம்பத்துடன் இறுகக்கட்டினான்..
பலிக்களத்துக்கு இழுத்துச் செல்லப்படும் ஆடுகளுக்குக் கூட தமது மரணத்தை முன்கூட்டியே உணரக்ககூடியதாக இருந்தது. ஆனால் ஒன்றாக உண்டு படுத்து உறவாடித்திரிந்த இந்த பாழாய்போன தோழமை உணர்வுக்கு மட்டும் இது புரிந்திருக்கவில்லை. நாடிக் குருத்திலிருந்து மரண பயம் அவனின் தேகமெல்லாம் ஒடிப் பரவியது. ஓடிக்களைத்த நாயின் நாக்குத் தொங்குவதைப் போல, அவன் பயந்து துவண்டு பாதிச் சீவன் அறுந்து துடிதுடித்துக் கொண்டிருந்தான்;. அவன் கண்களிலோ சவக்களை குடிகொண்டிருந்தது.
நந்தகோபாலன் அவனின் கண்களை துணி ஒன்றினால் இறுகக்கட்டினான். அவன் கன்னத்திலே முத்தமிட்டுத் திரும்பிய நந்தகோபாலனால் ஒரு இடத்தில் நிற்கமுடியாது நின்றான். கூட்டுக்குள் அலையும் பசித்த புலியைப்போல அங்குமிங்கும் அலைந்தான் நந்தகோபாலன்.
சைக்கிளில் வேகமாக வந்த வேறு இருவர் அவனின் நெற்றிப் பொட்டை ஊடுருவ சடசடவென சுட்டுவிட்டு அகன்றனர். பாரவண்டியை இழுக்கும் உன்னலாக அந்த உடல் எப்பி சர்வமும் அடங்கிக் கிடந்தது. நந்தகோபாலன் "துரோகி" என்று எழுதிய அட்டை ஒன்றை அவன் கழுத்தில் மாலையாகப் போட்டுவிட்டு அங்கிருந்து அகன்று விட்டான்.
நந்தகோபாலனின் இந்த ஈனச் செயலை பொன்னுத்தங்கத்தால் பொறுக்க முடியவில்லை. பெத்த மகனென்றாலும் அதட்டிக் கேட்பதால் எந்தப்பலனும் இல்லை என்று அவள் நன்கு உணர்ந்திருந்ததால். ஐந்தறிவு ஜீவன்களோடு உறவாடி வருபவளல்லவா அவள். இவளுக்குப் புரியாதா இந்த ஆறறவு ஜீவனை? அதனால் தான் என்னவோ இந்த ஏழைமனம் தன் அனுபவத்தால் புகட்ட எண்ணியதோ..
விவசாயிகள் வீட்டில ஒரு மாட்டுக்குப் பிரசவமெண்டால்.. அதைச் சுத்தி எல்லா உயிரினமும் நிக்கும் தம்பி, கண்முழிச்சு. அந்தக் கன்றுக் குட்டியை எப்படி வளப்பாங்கள் செல்லமாய். குளிப்பாட்டுவாங்கள். கைத்தீன் கொடுப்பாங்கள்... அது ஒரு குழந்தைக்குச் சமன்! அதுகள் மட்டும் என்ன? வாயில்லா ஜீவன்கள்தான். ஆனாலும் இரண்டுகாலிலை குதிச்சு... தீவனங் குடுக்க பிறங்கையை நக்கி... தலையை ஆட்டும் பாரு! அந்த அர்த்தம் விவசாயிக்குத் தான் புரியும். கமக்காரன் வயலால வந்தாக் கத்தும். சினைப்படக் கத்தும், பாலூட்டக் கத்தும், நோயிலே கத்தும்.. இது விவசாயிக்குத் தான் புரியும் தம்பி..
ஏரிலே மாட்டைப் பூட்டினால் தீட்டுலக்கை மாதிரி குதிபோட்டுக் காட்டும் தங்கள் புளுகத்தை. ஏரிலே கையை வைச்சாலே தலையை ஆட்டிக்கொண்டு, வாலைச் சுத்திச் சுழட்டி ரெடியா என்று கேக்கும் அந்த ஜீவன். இப்பிடி கூட்டுழைப்பில் மனிதப் பூச்சிக்கும் இந்த வாயில்லா ஜீவன்களுக்குக்கும் இடையிலுள்ள உறவும், உணர்வும் இருக்குதே! அது இப்பத்தே மனிசருக் கிடையில இல்லை. சேத்தில மிதிக்காதவனுக்கு இந்த உறவு தெரியாது. கடலிலை குதிக்காதவனுக்கு அதன் உறவுகள் தெரியாது. தொழிலிலை மாயாதவனுக்கு தொழிற்சாலை உறவு புரியாது. மலையில கொழுந்தை இனுங்காதவனுக்கு அந்த உறவுகள் தெரியாது. வெறும் ஏட்டுப் படிப்பும் வெறும் உணர்வுகள் மட்டும் மண்ணை மீட்காது! அது தரிசைத்தான் மீட்கும்.
பொன்னுத்தங்கம் படிச்சவள் அல்ல. வாழ்க்கை அனுபவத்தால் படிமாகிவிட்டவைதான் இந்தத் தங்கச் சுரங்கம். ஆயிரம் புத்தகங்களைப் படித்து முடித்தாலும் அவை இந்தச் சுரங்கத்தின் முன் குப்பை மேடுகளே! நந்தகோபாலனுக்கு முன்னர் இவைகள் விளங்கவில்லை. இந்த வெளிநாட்டின் அமைதி வாழ்வில் ஆறுதலாக அசைபோட்டுப் பார்த்தபோதுதான் இந்த உண்மைகள் பளீச்சென்று மின்னுகின்றன.
முன்பு நந்தகோபாலனும், காந்தரூபியும் எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்து விட்டார்கள். பொன்னுத்தங்கம் வெளிநாட்டுக்கு அசைவதாக இல்லை. அவள் சொன்னாள்-
என்னை அந்த மண்ணில இருந்து பிரிச்சிட்டாங்க அந்தப் படு பாவிகள். அப்பவே என் இதயத்தை ஆரோ அறுத் ததுபோல இருந்தது. பழந்திண்டு கொட்டை போட்டுப் போறது மாதிரியா இருந்தது எனக்கும் இந்த மண்ணுக்கும் ஆன உறவு? அது என்ர உயிரப்பா உயிர்! என்னை புதைச்சுப் பாருங்கள்! அது உறிஞ்சி அணைச்சிக்கும். பிறகு முளையாகத் தள்ளி உயிராக்கும். எரிச்சுப்பாருங்கள் காற்றிலே கலந்து புழுதியாப் படர்ரப்போ நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளும். பிறகு மணமாக்கி காற்றோடு வீசும்.
அம்மாவின் இந்த நின்மதியை ஒருநாள் இரவோடு கெடுத்துவிட்டார்கள் இனி அம்மா நடைப்பிணந்தான். அவ என்னபாடு படுகின்றாவோ? என்று நினைத்தபோது நந்தகோபாலனின் அடிவயிற்றில் ஆரோ பாரத்தைக்கட்டி இறக்குவதைப் போல இருந்தது. அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. யன்னல் சீலைகளை பிரித்து வெளியே வெறித்துப் பார்த்தான். நிலவின் கப்பி ஒளியையும், விடியலின் தலைப்பாலையும் வானம் தெளித்துக் கிடந்தது. அவனால் அந்தக் காட்சியை ரசிக்க முடியவில்லை. ஏதோ பிணத்தை மூடிக்கிடக்கும் வெள்ளைத் துணியைப் போல அது அவனுக்குக் காட்சியளித்தது. அவனுக்குள் வலி பிறந்தது. கிழவியின் கன்னச் சுருக்கங்கள் போலக் கிடந்த அந்த மெத்தையில் பொத்தொன உடல் முழுவதையும் தூக்கிப் போட்டான். தூங்க முடியவில்லை. அங்கும் இங்கும் புரண்டு பார்த்தான் பயனில்லை. அதன் பின் அவன் எப்பொழுது தூங்கினானோ அவனுக்கே நினைவில்லை.
நினைவு கலைந்து சித்தப் பிரமை பிடித்தவன் போல எழுந்து கட்டிலிலே உட்காhந்தான் நந்தகோபாலன். வெளியே திருவிழாக் கோலமாக இருந்தது. திரைச் சீலையை விலக்கிப் பார்த்தான். பூமரங்களும், புற்களும், பூண்டுகளும், ஓராயிரம் பொண்வண்டுகளைச் சுமந்து கூத்தாடுவதைப் போல கூத்தாடின. அவன் வெளியே வந்து சூரியனைப் பார்த்தான். அது முள்ளம் பன்றியைப் போலத் தோன்றியது அவனுக்கு. களத்து மேட்டிலே தனதம்மா பொன்னுத்தங்கம் போர்க்கோலம் பூண்டு நின்றதைப் போலவும் அது இருந்தது ¡
 -வயவைக்குமரன்