சோறு ஆக்கி முடித்து சமையலறையை விட்டு சின்னமணி வெளியில் வந்தபோது தபாற்காரன் சுத்தமாகப் பொறுமையிழந்திருந்தான். சைக்கிள் மணிச்சத்தத்தில் அவனுடைய ஆத்திரம் வெளியிடப்பட்டது.
சின்னமணி அருகில் வந்ததும் கடிதத்தை எறியாத குறையாக நீட்டிவிட்டு, தனக்குள் திட்டியபடி அடுத்த வீட்டுக்குப் போனான்.
நீலக்கடிதம். இரண்டாவது மகன் தாசன் மேற்குயேர்மனியிலிருந்து அனுப்பியிருந்தான். ஈரக்கையை சேலையில் துடைத்துவிட்டு, கடிதத்தைப் பிரித்தபடி சின்னமணி வீட்டுக்குள் வந்தாள்.
அன்புள்ள அம்மா,அண்ணாவில் ஆரம்பித்து, நலமறிய அவாவி, இறைவனை வேண்டி, தொடர்ந்த கடிதத்தில், சிலபுதினங்களும் இருந்தன.
....நாட்டு நிலமைகளை வீரகேசரியில் பார்த்தேன். போகிற போக்கில் சுமுகமான நிலமை வரலாம் போலிருக்கிறது. இனி இங்கே அரசாங்கம் மறுபடி எங்களுடைய பிரச்சனையை கிளறப் போகிறார்கள். பிரச்சனை முடிந்துவிட்டது. ஆகவே தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் கதைக்க இருப்பதாகப் பலர் பேசிக்கொள்கிறார்கள். எனக்கு இப்போதுதான் வேலை கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இப்படியான செய்திகளைக் கேட்க கவலையாக இருக்கிறது. இங்கேயுள்ள நீதிமன்றத்தில் எனது அரசியல் தஞ்சத்தை விசாரிக்க திகதி தந்துவிட்டார்கள். இதனால் பக்கத்து வீட்டு பரமேசக்காவின் உடைந்த வீட்டின் கலர்ப்படமொன்றும், வேலுப்பிள்ளையைச் சுட்டுக் கொன்ற பத்திரிகைச் செய்தியையும், உடனே எனக்கு அனுப்பி வையுங்கள்.
முதற் கடிதத்திலும் இதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்னும் பதிலே வரவில்லை. எங்கட சித்தப்பாவிற்கும் பெயர் வேலுப்பிள்ளை என்றபடியால், ஒரு மாதிரிச் சரிக்கட்டலாம். எனவே உடனே அனுப்பி வையுங்கள்.
அண்ணா வீட்டுப் பக்கம் வாறவரே? சந்திச்சா கவனமாய் இருக்கச் சொல்லி சொல்லுங்கோ. அவற்ற இயக்கத்திற்கு இப்ப டிமாண்ட் இல்லாதபடியால் வேறை ஆக்களால பிரச்சனை வரலாம்.
வேற என்ன? நான் கேட்டதுகளை உடனே அனுப்பிவையுங்கோ..... "என்று கடிதம் போய் இப்படிக்கு தாசன் என்று முடிந்திருந்தது. முதல் கடிதம் வந்த போதும் சின்னமணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. இப்போதும் ஒன்றும் புரியவில்லை. குழம்பினாள்.
அவன்ர அரசியல் தஞ்சத்திற்கும் பக்கத்து வீட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஊர்த் தொங்கலில் இருக்கும் ரக்ரரர்காற வேலுப்பிள்ளை செத்த செய்தி உவனுக்கேன்? சிலவேளை இதுகளைக் காட்டி யேமன் கவுண்மேந்தில் இருந்து உதவி வாங்கி பரமேசின்ர வீட்டை திருத்திக் கட்டப்போறானோ?
வேலுப்பிள்ளையின்ர குடும்பத்திற்கு நிதி உதவி செய்யப் போகிறானோ? உவனுக்கேன் ஊர்த் துளவாரம் எல்லாம்? இஞ்ச இருந்து போய் நாலு வருசமாச்சு. பயணத்துக்கு கடன் வாங்கினதுக்கு நான் வட்டி கட்டி கொண்டிருக்கிறன். போய் இந்த நாலு வருசத்தில் ஒரு சதம் கூட அனுப்பலே. ஊர் அலுவல கவனிக்க வெளிக்கிட்டிட்;டான்.
கண்டறியாத அரசியலும் தஞ்சமும். இஞ்ச இப்படி கூத்தடிப்பானெண்டு வெளிநாட்டிற்கு அனுப்பினா அங்கேயும் அரசியல் தொடங்கிற்றான்.
சின்னமணிக்கு குழப்பம் போய் கோபம் வந்தது. கடிதத்தை தாறுமாறாக மடித்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.
அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ராசன். எண்பத்தி மூன்றாம் ஆண்டு கலவரத்தின்போது திடீரெனக் காணாமல் போய்விட்டான். சின்னமணி கலங்கிப் போனாள். இராணுவத்தால் பிடிக்கப்பட்டு விட்டானோ? என்ற பயத்தில் விதானையைப் பிடித்து விசாரித்தும் உருப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. சில மாதங்களின் பின் இயக்கமொன்றில் இணைந்து கொண்ட கதைதான் ஊரில் பரவியது.
சின்னமணி தொடர்ச்சியாக சில வாரங்களுக்கு குமுறினாள். "படிப்பை நாசமாக்கினாலும் பரவாயில்லை. என்னை விட்டிட்டுப் போட்டானே.. பூச்சியைக் கண்டால் கூட விழுந்தடிச்சு ஓடுறவன் துவக்கு பிடிக்கிறானோ? " என்று நெஞ்சிலடித்து அழுதாள்.
படிப்பை எப்போதோ நிறுத்திக் கொண்ட தாசன் சாப்பிடவும், படுக்கவும் மட்டும்தான் வீட்டுக்கு வருவான். இதனால் அவனின் இல்லாமை சின்னமணியைப் பெரிதும் பாதிக்கவில்லை. மகன் தன்னோடு இல்லாமல் போய்விட்டானே அவனுக்கு என்ன ஆகுமோ என்றுதான் பயந்தாள்.
ராசன் இப்படி நடந்து கொண்டபின் சின்னமணி உசாரானாள். இரண்டாவது மகன் தாசனின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். அவனிலும் வித்தியாசம் தெரிவது போலிருக்கவே எச்சரிக்கையாகிவிட்டாள்.
விட்டால் இவனும் தமையனோடு போய்ச் சேர்ந்து விடுவான். பிறகு எனக்கு கொள்ளி வைக்க ஊரில்தான் ஆக்களைத் தேட வேணும் என்ற யோசனைக்குப்பின் ஊரில் காசு மாறி அவசர அவசரமாக தாசனை மேற்குயேர்மனிக்கு அனுப்பி வைத்தாள். தாசனாவது தனக்கென்று இருக்க வேண்டுமென்ற ஆசை அவளுக்கு.
ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, தாசன் நடந்து கொண்டான். போன புதிதில் கிழமைக்கு இரண்டாக அவனிடமிருந்து வந்த கடிதங்கள், மாதங்கள் செல்லச் செல்ல மாதமொன்றாகி, பின் காலாண்டாகி இப்போது வருடத்திற்கு இரண்டாகி வெளிவந்து கொண்டிருக்கிறது.
சின்னமணி தலையில் கைவைத்துக் கொண்டாள். அவசரப்பட்டுக் கொண்டதற்காக தன்னை நொந்தாள். தனக்கு யாருமில்லையே என்று தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு சின்னமணி யன்னலை விட்டு எழுந்தபோது, பாலன் உள்ளே வந்தான்.
பாலன் சின்னமணியின் சகோதரனுடைய மகன். தங்கச்சி பாவம் என்பது மட்டுமல்லாமல், சாப்பாட்டுக்கு ஒரு பிரசை குறைவதன் மூலம் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்கலாம் என்ற யோசனையிலும் பெற்றோர்கள் பாலனை சின்னமணியிடம் ஒப்படைத்தனர்.
சின்னமணி தனக்கென்று ஒரு துணை தேவைப்பட்டதால் பாலனை பொறுப்பேற்றுக் கொண்டாள். தலைக்கு எண்ணெய் தேய்த்து விடுவதிலிருந்து, அழுக்கு உடைகளை சலவை செய்வது வரை பாலனை அக்கறையாக கவனித்துக் கொண்டாள்.
பிள்ளைகள் கைவிட்ட சோகத்தை அவள் பாலனுக்குத்தான் சொல்லி அழுவாள். அவர்களின் பொறுப்பின்மையைப் பற்றி திட்டிக் கொள்ளுவாள். தனக்கு யாருமில்லையென்று அங்கலாய்த்துக் கொள்ளுவாள். இந்த நேரங்களில் பாலன் ஏதாவது தாளில் ஏதாவது படம் கீறிக்கொண்டிருப்பான்.
சின்னமணி பாலனுக்கு சாப்பாடு போட்டு, அவனை விளையாட அனுப்பி விட்டு, பின் வீட்டு சரோசாவிடம் வந்தாள். சின்னமணிக்கும் சரோசாவிற்கும் ஒரே முதிய வயது.
அதனால் நிறைய கதைப்பார்கள். தொடர்பில்லாமலும், சம்பந்தமில்லாமலும், நீளமாகவும், கூடுதலாகவும்.
இருவரும் வீட்டு விறாந்தையில் உட்கார்ந்து பாக்கு, வெற்றிலைகளை மென்றபடி தமது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார்கள். அவர்களுடைய உரையாடலில் மங்கையர் மஞ்சரி, நேயர்விருப்பம், செய்தியின் பின்னணியில் போன்ற பல அம்சங்கள் இடம்பெறும்.
'லெக்சன் வருதெண்டு சனங்கள் கதைக்குது. என்னவாம்? " சரோசா ஆரம்பித்தாள்.
'இஞ்ச இல்லையாம்" அங்காலப்பக்கங்களிலை தானாம்" சின்னமணி சொல்லிவிட்டு, சிவப்பு சாயத்தைத் துப்பினாள்.
'லெக்சன் முடிஞ்சாப் பிறகு இந்தியனாமி வெளிக்கிடுமோ? " சரோசா குதப்பியபடி விசாரித்தாள்.
'ஆருக்குத் தெரியும்? எங்களுக்கு விளங்கிற மாதிரி ஏதேனும் நடக்குதே? அல்லாட்டி ஆரேன் எங்களிட்ட அபிப்பிராயம் கேக்கினமோ? அததது தன்ர பாட்டில் நடக்குது. குண்டு போடேக்க ஒடித் தப்பிறகுதான் எங்கட வேலை" சின்னமணி அலுத்துக் கொண்டாள்.
பிறகு ஊர் விவரங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது சின்னமணிக்கு மகனின் கடிதம் ஞாபகத்திற்கு வந்தது.
அதன் சாரரம்சத்தை மட்டும் சரோசாவிடம் சொன்னாள்.
'எனக்கெண்டா பெடியன் என்ன எழுதியிருக்கிறானெண்டு ஒண்டுமா விளங்கேல. அங்க என்ன செய்றான் எண்டும் ஒன்டும் தெரியல" சின்னமணி சலித்துக் கொண்டாள்.
இப்போது சரோசா சிவப்புச்சாயத்தை துப்பினாள்.
'உது விளங்காட்டி பிறகென்ன? உன்ர மூத்தவன் மாதிரி இளையவனும் அரசியலிலை இறங்கயிட்டான். அது தான் அரசியல் தஞ்சமெண்டெல்லாம் விளக்கமா எழுதிப்போட்டானே? நீ குடுத்து வைச்சனி. நாட்டுக்கு சேவை செய்யவெண்டே பிள்ளையளை பெத்திருக்கிறாய்"
இதை கேட்டபோது சின்னமணிக்கு முதலில் பெருமையாக இருந்தாலும், பழைய சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு வருடத்திற்கு முந்தி ஒரு நாள் இரவு சின்னமணியின் வீட்டுக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. கதவைத் திறக்கலாமா விடலாமா என்று அவள் யோசித்தாள். பக்கத்தில் பாலன் உறக்கத்தின் உச்சத்தில் இருந்தான்.
வீட்டில் களவு போகக்கூடிய பொருட்கள் தன்னையும், பாலனையும் தவிர வேறு எதுவும் இல்லையென்று தெரிந்ததால் தைரியமாகக் கதவைத் திறந்தாள்.
வெளியே நின்றிருந்த சந்திரன் படாரென உள்ளே வந்து கதவைத் தாளிட்டான்.
அவனையும், அவனுடைய வேகத்தையும் பார்த்த சின்னமணி திடுக்கிட்டுப் போனாள். சந்திரன் அதே ஊரிலிருக்கும் சாரதாவின் மகன். ராசனின் நெருங்கிய தோழன். சின்னமணியிடம் பலமுறை சாப்பிட்டிருக்கிறான்.
ராசன் திடீரென மறைந்த நாட்களின் பின் இவனும் மறைந்தான். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக பின்னர் தகவல் வந்தது.
அப்போது காணாமல் போன சந்திரன் இப்போதுதான் வந்திருந்தான். அதுவும் வித்தியாசமான கோலத்தில்
'மாமி காப்பாத்துங்கோ" சந்திரனின் வாயிலிருந்து வார்த்தைகள் சிரமமாக வந்தன. தலை கலைந்து, உடைகள் கசங்கியிருந்தன. உடல் ஆடியது.
'என்ன? என்ன? " சின்னமணி விளங்காதவளாய் பரபரத்தாள்.
'மாமி காப்பாத்துங்கோ. அவன் தேடிக் கொண்டு வாறான்" சந்திரனால் தொடர்ந்து கதைக்க முடியவில்லை.
அவன் ஏதோ ஆபத்திலிருந்து தப்பி வருகிறான் என்று மட்டும் அவளுக்குத் தெரிந்த போது கதவு மறுபடியும் தட்டப்பட்டது.
'திறக்காதைங்கோ. அவன்தான் வாறான்" என்று சந்திரன் கூக்குரலிடும்போதே, சின்னமணி கதவைத் திறந்துவிட, ராசனும் இன்னும் இருவரும் கையில் பாரங்களுடன் தடதடவென்று உள்ளே வந்தனர்.
'ராசன்" நிலமையை மறந்து சின்னமணி கத்தினாள். எத்தனை வருடங்களுக்குப் பிறகு மகனை மறுபடியும் முழுசாகப் பார்க்கிறாள். பாசம் பீறிட்டு வந்தது.
சந்திரனைப் பார்த்த ராசன் அவளை லட்சியம் செய்யவில்லை. ஓட முயற்சிக்கையில், சந்திரனை மற்ற இருவருடன் சேர்ந்து மடக்கிப் பிடித்தான்.
பிறகு எல்லோருமாகச் சேர்ந்து அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தார்கள்.
'ராசன்.... என்னடா இது?" திக்பிரமையடைந்த சின்னமணி கேட்டாள்.
'அம்மா. நீ இதில தலையிடாத. இது அரசியல். உனக்குத் தேவையில்லாத விசயம். சொன்னாலும் விளங்காது" ராசன் ஆணித்தரமாக சொல்லிவிட்டுப் போனான்.
அடுத்த நாள் சாராதாவின் ஒப்பாரியுடன் காலை புலர்ந்தது.
பாதையின் அருகே, பற்றைகளுக்குள் சந்திரன் ரத்தமாக இறந்து கிடந்தான். கண்கள் விரியத் திறந்திருந்தன.
சாரதா அருகிலிருந்து அழுது கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்தது. சேர்ந்த கூட்டம் சிறிது நேரம் மௌனமாக அஞ்சலி செலுத்தியது. பின்னர் வழமை போல் தமது அரசியல் ஞானத்தை ஆளுக்காள் அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்தார்கள்.
சின்னமணியைக் காட்டியும் சனம் கதைத்தது. அவைகளில் சில அவளின் காதுகளிலும் விழுந்தன.
'உது ராசன்ர ஆக்களின்ர வேலையாம்"
'ரண்டு பேரும் நல்லா பழகினவங்களெல்ல"
'சினேகிதம் வேற, அரசியல் வேற. அவன் செய்ததும் சரிதான். உவைதரவளிக்கு உது வேணும். சொல்லி விளங்கப்படுத்த ஏலாது"
அவர்களின் கதையிலிருந்து சின்னமணிக்கு கொஞ்சம் புரிந்தது. அவளால் அதை சீரணிக்க முடியவில்லை.
சாரதாவைப் பார்த்தாள். சந்திரனைக் கட்டிப் பிடித்து அழுது தன்னுடைய உடம்பிலும் ரத்தத்தைப் பூசிக் கொண்ட சாரதா சின்னமணியைப் பார்த்த பார்வையில் நெருப்பெரிந்தது.
சின்னமணி குறுகிப் போனாள். ஊர்ச் சனங்கள் தன்னை என்ன செய்யப் போகுதோ எனப் பயந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது.
பலர் அவள் காதுபட 'நீ யோசியாதை. அரசியல்ல இது சகசம். உன்ர பெடியன் சரியான வேலையைத்தான் செய்து இருக்கிறான்." எனச் சொல்லிவிட்டுப் போனார்கள்.
சில மணித்தியாலங்களில் சாரதாவையும், உதவியாளர்களையும் தவிர கூட்டம் கரைந்து விட்டது.
சின்னமணி கனத்த நெஞ்சுடன் வீட்டுக்கு வந்தாள். அதன் பின் கொஞ்ச நாட்கள் அவள் வெளியில் தலை காட்டவில்லை.
'என்ன நித்திரை கொள்ளுறாய்?" சரோசா தட்ட சின்னமணி பழைய ஞாபகத்தை கலைத்துக் கொண்டாள்.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, நடந்து முடிந்தது. தான் கேட்டவற்றை அனுப்பாததால், தாசன் கோபமாக கடிதம் போடடிருந்தான்.
தேர்தல் முடிவுகள் ஊரில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் வழமை போல் தேங்காய் விலை ஏறிவிட்டதாகத் திட்டி, கோவில் திருவிழா சிறப்பாக நடக்கவேண்டுமெனக் கவலைப்படடு;, திருமண வயதில் வீட்டிலிருக்கும் மகளை நினைத்து ஏக்கப்பட்டு......
வழமை போல் வாழ்ந்தார்கள்.
பாடசாலை விடுமுறை விட்டிருந்தது. பாலன் பெற்றோரிடம் போயிருந்தான். சின்னமணி வேலியோடிருந்த புற்றில் சாம்பலைக் கொட்டிக் கொண்டிருக்கும் போது, தெருவில் பலர் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சாம்பலைக் கொட்டி முடித்த பின் சின்னமணியும் தெருவுக்கு வந்தாள். பலர் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். ஏதோ தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
கூட்டமாக இருந்த இடத்திற்கு சின்னமணி வந்த போது எல்லோரும் வழி விட்டார்கள்.
ஒரு வருடத்திற்கு முன் சாரதாவின் மகன் சந்திரன் உடல் கிடந்த அதே இடம். அதே பற்றை. இப்போது உடலில் பல பொத்தல்களுடன் ராசன் பரவியிருந்தான்.
சின்னமணி விறைத்துப் போனாள். அழுகை உடனே வரவில்லை. ரத்த ஓட்டம் நின்று விட்டது போன்ற உணர்வு.
சுற்றி நின்றவர்கள் தங்களது மௌன அஞ்சலியை முடித்துவிட்டு, வாயைத் திறந்த போது சின்னமணி ராசனின் சடலத்தில் விழுந்து புரண்டாள்.
அடிவயிற்றிலிருந்து தாய்ப்பாசம் அழுகையாக வெடித்து கிளம்பியது.
கூடியிருந்தவர்கள் தங்களது விமர்சனத்தை ஆரம்பித்தார்கள்.
'விடியத்தானாம் வானிலயிருந்து கொண்டு வந்து போட்டவங்கள்"
'சாரதாவின்ர பெறா மகனும் வந்தவங்களில் ஒருதனாம்"
'அப்ப சந்திரன்ர கொலைக்கு இப்ப பழி வாங்கியிருக்கிறான்கள்"
'அவங்கள் செய்ததும் சரிதான். இவையின்ர ஆட்டத்திற்கும் முடிவு வேண்டாமே"
'அரசியல் எண்டா இப்படித்தான்."
சின்னமணி சடாரென்று நிமிர்ந்தாள். ஒரு வருடத்திற்கு முன்னால் சந்திரன் கொலை செய்யப்பட்ட போது, அதனை நியாயப்படுத்தி சொல்லப்பட்ட அதே வார்த்தைகள்.
இப்போது ராசனின் கொலைக்கும் அதே வார்த்தைகள்தான். வார்த்தைகள்தான் ஒன்றாகவே இருந்தன. ஆனால் சடலம் மாறியிருந்தது.
சின்னமணி அழுகையை மீறிவந்த ஆத்திரத்துடன் எழுந்தபோது, கூடியிருந்த கூட்டம் கரைந்திருந்தது. அவளுடைய அண்ணனின் குடும்பம் மட்டுமே அருகில் நின்றது.
'நாசமாய்ப் போன அரசியல். கோதாரி விழுந்த அரசியல். ஐயோ என்ர பிள்ளையை கொண்டு போட்டாங்களே" என்று சின்னமணி மறுபடி ராசனின் பிணத்தைக் கட்டிப் பிடித்தும், வயிற்றில் அடித்தும், மண்ணிலே புரண்டும் அழுது கொண்டிருந்தபோது.......
ஊரவர்கள் வழமை போல் தேங்காய் விலையேற்றத்திற்காக திட்டி, கோயில் திருவிழாவிற்காகக் கவலைப்பட்டு, திருமண வயதில் வீட்டிலிருக்கும் மகளை நினைத்து ஏக்கப்பட்டும் வழமைபோல் வாழ்ந்துகொண்டிருக்கும் போது.......
வேறிடத்தில் சாரதாவின் பெறாமகனை சிலர் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார்கள்.
- பார்த்திபன் (1989)
பிரசுரித்தவை:
"சிந்தனை", ஜேர்மனி, 1989
"ஆதவன்", இலங்கை, 2000