அவளைக் கண்டேன்.
கட்டைக் கரிய கூந்தல்.
வட்டக் கருவிழியா என்று சொல்ல முடியாதபடிக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள்.
அரைக்கை போன்ற வெயில் கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம்! சில விளக்கமில்லாததுகள் கறுப்பு என்று என்னைச் சொல்வதை காதில் வாங்குவதில்லை.
அவளைச் சுற்றி டொச் இளசுகள். மாணவர்கள் என்பதை அலட்சியமாகத் தெருவில் போடப்பட்டிருந்த பாரிய பைகள் காட்டின. இரண்டு, மூன்று சிகரெட் பற்ற, சிலது ஓடிப்பிடித்து விளையாட(பெரியபிள்ளைகள் விளையாட்டு), ஆங்காங்கே ஒன்றை ஒன்று அணைத்து உதடுகளால் காதலித்துக் கொண்டிருந்தார்கள். இவள் ஒருவள்தான் மாநிறமும், கறுப்புக் கூந்தலும். ஆனால் எல்லோருடனும் சகஜமாய் இருந்தாள். என்ன
கதைக்கிறாள் என்பதைத் தான் என்னால் கேட்க முடியவில்லை. தூரம்.
யார் அவள்?
ஆசியாவாத்தானிருக்கும்!
இலங்கையோ? இந்தியாவோ?
இலங்கையாய்தானிருக்கும் !
தமிழோ? சிங்களமோ?
தமிழாய்த்தானிருக்கும்!!
ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொஞ்சுவோமோ? சாத்துத்தான் விழும். என்னுடைய கஸ்ரம் எனக்குத்தானே தெரியும். வந்து மூன்று மாதமாக ஒரு தமிழரையும் காணாத எனக்கு இன்று முதல் முதலாய் ஒரு தமிழை அதுவும் தமிழ் பெட்டையைக் கண்டால் எப்படியிருக்கும். காய்ந்த மாடும் கம்பும் மாதிரி.
எப்படி அவள் தமிழ்ப் பெண்தான் என்று முடிவு கட்ட முடிந்தது? ஏதோ உள்ளுணர்வு. அவள் தமிழ்ப்பெண்ணாயிருக்க வேண்டுமென்ற என் ஆசை.
அவள் திரும்பினாள்......
இலங்கை முகந்தான். ஆனால் தமிழோ, சிங்களமோ என்று சொல்லவியலாத குழப்பமான கலவை. அநேகமாகத் தமிழ்ப் பெண் தான். வடிவாயிருந்தாள். தமிழ்ப் பாரம்பரியம் எதுவுமில்லாமல் டொச் ஸ்ரைலில்….
கிட்ட போய்க் கதைப்போமோ? ஆளையே தெரியாது. டொச்காறருடன் நிற்கிறாள். நான் போய் கதைக்கிறது பிடிக்குமோ தெரியாது.
அவளுக்குத் தெரியத்தக்கதாய் நின்று பார்ப்போம். கண்டு கதைக்க வருகிறாளா என்று பார்க்கலாம். கொஞ்சம் அண்மையாக நடந்தேன். கவனித்தேன். அவள் பார்க்கவில்லை. இன்னும் கிட்டப்போனபோது, பஸ் வர அவள் ஏறிப் போய்விட்டாள்.
ஏமாற்றம். சீ.. இனி எப்படி அவளைச் சந்திப்பது? இவ்வளவு நாளாய் அலைந்துவிட்டு இப்போது கிடைத்த ஒருத்தியையும் விட்டிட்டு நிக்கிறேனே! சலித்துப் போய் அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லாமல் அறைக்கு வந்து விட்டேன்.
தபாற்பெட்டி காலி. பாஸ்கரனிடமிருந்து இன்றும் கடிதமில்லை. ஆஸ்பத்திரியைவிட்டு இன்னும் வெளியேறவில்லைப் போலும்.
ஜேர்மனி வந்து மூன்றாவது மாதம். ஆச்சரியமாகவே இருக்கிறது. எல்லாம் திடுதிப்பென்று நடந்து முடிந்து விட்டது. பிராங்பேட்டில் வந்திறங்கினால் கள்ளனைப் பிடித்த மாதிரிக் கொண்டுபோய் கேள்விகள் கேட்டு, கையடையாளம் பதிந்து, முகத்தையும் பல கோணங்களில் பதிந்து, ஒரு முகாமில் கொண்டு போய் விட்டு, பின்னர் இந்த நகரத்திற்கு அனுப்பி…. பதினைந்து நாட்களாகிவிட்டன. எந்தத் தமிழரையும் காண முடியவில்லை. இருக்கும் கட்டிடத்திலும் லெபனான், லைபீரிய, ரோமா, போலந்த்… குடும்பமாயும், தனியாயும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாசை, சமயம், பழக்கம். எல்லாம் சாம்பாராய் கலந்து தவிர்க்கவியலாத ''யாதும் ஊரே யாவரும் கேளிர்''. அவ்வப்போது சண்டையும், சமாதானமும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. புரிந்து கொள்ளுமளவிற்கு இன்னும் மனம் விடவில்லை. ஆங்கிலம் எல்லோருக்கும் அப்பிடி. இப்பிடித்தான்..
வீட்டுக்குக் கடிதம் எழுதலாமா? எல்லாம் கொட்டியாயிற்று. புதிதாய் எதுவுமில்லை. பசித்தது. சமையலறைக்கு வந்தால், இருந்த நிலையைப் பார்த்ததுமே பசி போய்விட்டது. ஊர்ச் சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம்தான்! யாரும் பெரிய மனது பண்ணி கக்கூசுக்கு மட்டும் இருக்கவில்லை. தேத்தண்ணி போட்டுக் குடித்துவிட்டு வந்து படுத்தேன்.
மறுநாள் சாமான் வாங்கப் போகும் போதுதான் அவள் ஞாபகம் வந்தது. இன்றும் அதே இடத்தில் காணலாமோ? போனேன்.
அதே பஸ் ஸ்ரான்ட். அவளும் பட்டாளங்களுடன் நிற்கிறாள். இன்று வேறு உடுப்பு. எதைப் போட்டாலும் பாவி அழகாய்த்தானிருக்கிறாய்.
ஒரு ஆச்சரியத்தைக் கவனித்தேன். ஆண் நண்பர்களுடன் தொட்டு, முட்டி நெருக்கமாகக் கதைத்துக் கொண்டிருந்தாள். பரவாயில்லையே! யேர்மனிக்கு வந்து முன்னேறித்தானிருக்கிறாள். அல்லது இங்கேயே பிறந்து வளர்ந்தவளோ? வயது பதினெட்டுக்குள்தான். பெரும்பாலான தமிழர்கள் எண்பத்தி மூன்றுக்குப் பிறகு தானே வந்தார்கள். ஆனபடியால் சிலோனிலைதான் பிறந்திருக்கிறாள்.
தமிழ் பண்பாட்டு மொட்டாக்குகளை கழட்டுறளவுக்கு, டொச் நாகரிகங்களை ஏற்கிற அளவுக்கு ஆளிட்டை மனத் தைரியம் இருக்கு. நல்ல விசயம் தான். தாய் தகப்பனும் தாராளவாதிகளாயிருக்கக்கூடும்.
சடக்கென்று பொறி தட்டியது. தாய், தகப்பன்! அப்படியென்றால் ஒரு தமிழ்க் குடும்பம் இங்கே இருக்கவேண்டுமே? கண்ணில் இதுவரை தட்டுப்படவில்லை. நான் இங்கு வந்து கொஞ்ச நாள் தானே! முழு இடமும் இன்னும் சுத்தவில்லை. கடைகளுக்கும், நகர சபைக்கும் போய் வருவதுடன் சரி. தாய் தகப்பன் இருக்கட்டும். இப்ப இவளோடை கதைக்க வேணுமே?
தன்னுடைய டொச் சிநேகிதர்களுக்கு முன்னால் என்னோடு கதைக்க விரும்புவாளோ?
என்னதான் இருந்தாலும் எங்கட நாட்டு ஆள்தானேயெண்டு கதைக்கமாட்டாளா?
கதைப்பதா?
வேண்டாமா?
என்ன கதைப்பது?
நான் முடிவெடுப்பதற்குள் பஸ் வந்து, அவள் ஏறிப் போய்விட்டாள். இன்றும் கோட்டைவிட்டாச்சு. என் வெட்கமும் நானும் ஒழிக!
சாமான்களை வாங்கிக்கொண்டு திரும்பினேன். தபாற்பெட்டி காலி. பாஸ்கரன் எழுதவில்லை. எப்பதான் ஆஸ்பத்திரியை விட்டு ஆள் வெளிக்கிடப்போகுதோ!
சமையலறையைச் சகித்து, சமையல் பண்ணி சாப்பிட்டாயிற்று. இங்கிலிஸ் நன்றாகக் கதைக்கக்கூடிய ஆப்பிரிக்கா ஒன்றுடன் உலகம் பற்றி தெரிந்தளவுக்கு அளவளாவிவிட்டு, அறைக்கு வந்தால் அலுப்புத் தட்டியது.
புத்தகங்கள் இல்லை. ரி.வி. கிடையாது. றேடியோவும் இல்லை. மனம் விட்டுக் கதைக்க எந்த இலங்கையரும் இல்லை.
ஜெயில் என்றால் விசிலடிக்க எழும்பி, எக்ஸஸைஸ் செய்து, விசிலடிக்க கல்லுடைத்து, விசிலடிக்கச் சாப்பிட்டு, விசிலடிக்க ஒண்டுக்குப் போய்.. (ஆதாரம் தமிழ்ப்படங்கள்)
இங்கு விசில் ஊதவில்லை. அவ்வளவுதான். எப்படிச் சுத்தினாலும் சுப்பற்றை கொல்லையைத் தாண்ட முடியவில்லை.
எப்படியாவது நாளை அவளுடன் கதைத்து, அவளையும், அவள் குடும்பத்தையும் பழக்கப் படித்து…. இல்லாமல் இப்படியே தனிமையில் இருந்தால் தலையைப்பிய்க்க வேண்டியதுதான்.
மறுநாள்-
அதே பஸ் ஸ்ரான்ட்.
அவள்.
பட்டாளம், கும்மாளம்.
நிறைய யோசித்து, தைரியத்தை செயற்கையாக ஏற்படுத்திக் கொண்டு அவளை நெருங்கினேன்.
என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
''ஹலோ'' என்றேன்.
அவள் திரும்பி என்னைப் பார்த்து, புரியாமல் என்ன என்பது போல முகத்தைச் சுருக்கினாள்.
''நீங்கள் சிலோன்தானே? தயக்கத்துடன் கேட்டேன்.
''வஸ்..?"" என்றாள்.
டொச்சில் கேட்கிறாள். எனக்கு ஆத்திரம். கொழுப்புத்தானே!
''நான் சிலோன்தான்'' என்றேன் மறுபடியும்.
''வஸ்..'' தொடர்ந்து இஸ்புஸ்ஸென்று டொச்சிலேயே கதைத்தாள். எனக்கு ஒரு வசனமும் விளங்கவில்லை. ஆத்திரத்துடன் திரும்பி நடந்தேன். பின்னால், அவள் ஏதோ சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். அவமானம்.
தனக்கு டொச் சிநேகிதிகர் எண்ட கொழுப்பு அவளுக்கு. வேண்டுமென்றே டொச்சில் கதைச்சு அவமானப்படுத்திப் போட்டாள். அல்லது டொச் சிநேகிதர் இருக்கும் பொழுது என்னுடன் தமிழில் கதைப்பது சரியல்ல என்று நினைத்தாளோ? அதையாவது தமிழிலை சொல்லியிருக்கலாம் தானே? தான் பெரிய டொச்காறியெண்ட நினைப்பு.
சில வேளை தமிழ் தெரியாதோ? இங்கேயே பிறந்து வளர்ந்த பிள்ளையென்றால் சொல்லலாம். இவளின் வயதிற்கு இவள் இலங்கையில் தான் பிறந்திருக்க வேண்டும். ஏன், சிலவேளை எண்பத்தி மூன்றுக்கு முதல் வந்த குடும்பமாயுமிருக்கலாம் தானே? எப்பிடியும் வீட்டில் தமிழ்சொல்லிக் கொடுக்காமலா இருக்கப்போகிறார்கள்? பிள்ளையை நல்ல வளர்ப்புத் தான் வளர்த்திருக்கினம். சில வேளை தாய் தகப்பனும் திமிர் பிடித்த ஆக்களோ? கொழும்பில் சீவிக்கிறவைக்கு யாழ்ப்பாணம் வந்தால் தமிழ் மறக்கிற மாதிரி!
ஆகக் கடைசி அவள் கதைக்காமல் சும்மா சிரித்தாவது இருக்கலாம். நான் தமிழில் கதைக்க, டொச்சில் பதில் சொல்லி அவ்வளவு பேருக்கு முன்னாலும் அவமானப் படுத்திப்போட்டாளே! எங்கே போனாலும் நாய்க்குணம் போகாது. அவளுக்கு தெரியேலை. தான் டொச் கதைத்தாலும் தன்னுடைய கறுப்பு நிறத்தை மாற்ற முடியாதென்று.
மனசுக்குள் எரிச்சல் பட்டுக்கொண்டே திரும்பியும் பாராமல் அறைக்கு வந்து விட்டேன். பாஸ்கரனின் கடிதம் இல்லை.
படுக்கும் போது ஒரே யோசனை. நாளைக்கு அவளைப் பின் தொடர்ந்து போய், வீட்டைக் கண்டுபிடித்து, வேற சகோதரங்களைச் சந்தித்தால் என்ன? அவள் இல்லையென்றால் அவளின் தமக்கை, தங்கையாவது பழக்கம் பிடிக்கலாம். பிறகு இவளைக் கவனிக்கலாம்.
மறுநாள் பஸ்ஸில் அவளுடன் நானும் ஏறினேன். அவள் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். கண்களில் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பயமாக இருக்கலாம்.
நான் தன்னுடைய அப்பா அம்மாவைச் சந்தித்துச் சொல்லிவிடப்போகிறேனோ என்று பயப்படுகிறாள் போல. பயப்படட்டும். இப்பவாவது வந்து கதைக்கலாம் தானே.
அவள் அவள் இறங்க நானும் இறங்கினேன். புத்தகப்பையை இறுகப் பிடித்தபடி நடந்தாள். தொடர்ந்தேன்.
அடிக்கடி திரும்பி என்னைப் பார்த்தாள். சிரிக்க மாட்டாளா? அந்தப் பிரதேசமே பணக்காரத்தனமாயிருந்தது. தனித்தனி வீடுகள் முன்னால் பெரிய பூந்தோட்டங்கள். நாய்கள் உலாவின. பென்ஸ்,. பி.எம்.வேக்கள்.
அவள் ஒரு வீட்டின் முன் கேற்றைத் திறந்து உள்ளே போனாள். திரும்பி என்னைப் பார்த்தாள். திரும்ப வந்து சரியாகப் போடப்படாத கேற் கொழுவியை போட்டு விட்டுப் போனாள்.
எனக்கு மண்;;டைக்குள் கொதித்தது. திரும்பவும் அவமானம். வீட்டுக்குள் வராதேயென்கிறாள். மதியாதோர் கேற்றைத் திறவாதே.
திரும்பி பஸ் தரிப்புக்கு நடந்து வந்து காய்கிறேன்;. அழுகை வந்தது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல்….. சும்மா ஒரு பேச்சுத் துணைக்காக அலைந்தால் இப்பிடி லெவல் காட்டுறாயோ? பிறகேன் இவளுக்குப் பின்னால் அலைய வேண்டும். சீ….
கொஞ்ச நாட்கள் அவளை மறந்து வேறு பக்கம் திரிந்தேன். பாஸ்கரனின் கடிதம் வந்தது. அடுத்;த கிழமையளவில் ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டி விடுவதாகவும், நேரில் வருவதாகவும்.
மறபடியும் தனிமை சித்திரவதை செய்தது. அவள்தான் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாள்.
அவளைக் கணக்கிலெடுக்காமல்; அவள் என்ன விதமாக அவமானப்படுத்தினாலும் பொருட்படுத்தாமல் அவள் குடும்பத்தைச் சந்திப்பது என்று தீர்மானித்து விட்டேன்.
இரண்டு நாள் கழித்து அவளுடன் பஸ் ஏறினேன். கேள்வியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார். எப்பிடியும் இன்று இரண்டிலொன்று.
பஸ்;ஸிலிருந்து இறங்கிநடந்து போகும் போதும் திரும்பித் திரும்;பிப் பார்த்தாள். கேற் வரை போய் நின்றும் பார்த்தாள்.
நான் தீர்மானகரமாய் அண்மையாகப்; போனேன். டொச்சில் ஏதோ கேட்டாள். புரியவில்லை. திரும்பக் கேட்டாள்.
""உம்மடை அம்மா அப்பாவைச் சந்திக்க வேணும்"" என்றேன்.
அவள் தன்னுடைய தலையைக் கோதிக்கொண்டு யோசித்தாள். பிறகு ஆங்கிலத்தில் கேட்டாள். ""நீ ஆங்கிலம் பேசுவாயா?""
இப்பாதுதான் என்னால் ஒத்துக் கொள்ள முடிந்தது இவளுக்கு உண்மையில் தமிழ் தெரியாதென்று. மனதுக்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ""ஓரளவு தெரியும்""
""என்ன உனக்கு வேண்டும்? ஏன் என்னைத் தொடர்கிறாய்?""
""நானும் இலங்கைதான். உம்;முடைய குடும்பத்தைச் சந்திக்க விரும்புகிறேன்"" ஒரு தமிழ்ப் பெண்ணேடு ஆங்கிலத்தில் கதைக்க நேர்ந்த கஸ்டத்தை எண்ணிச் சிரிப்பு வந்தது. அப்போதுதான்; ஒரு சந்தேகம் தட்டியது. சில வேளை இவள் சிங்களப் பெட்டையோ? அல்லது கேரளாவோ?
இவ்வளவு தூரம் வந்து இந்த முறையும் சும்மாத் திரும்பிப் போக முடியாது. வந்தது வந்தாயிற்று. எதற்கும் ஒரு கை பார்த்து விடுவோம்.
""இலங்கை..?"" என்று கேட்டு நெற்றியைச் சுருக்கினான். இலங்கை மறந்து போயிற்றா? அடிச்சுச் சொல்லலாம் இவள் இலங்கைதான்;.
""உள்ளே வா கதைப்பம்"" பின் தொடர்ந்தேன். வாசலில் அழுத்த உள்ளே ஒலித்தது.
கதவைத் திறந்து டொச் வயோதிப மாது. நான் குழம்பிவிட்டேன். என்னைப் பார்த்து அவளும் புருவம் நெரித்தாள். அவர்கள் இருவரும் டொச்சில் கதைத்தார்கள் அவர்களின் கதையில் ""சிலோன்;"" என்பது மட்டும் விளங்கியது.
இப்போது அம் மாது என்னைப் பார்த்துச் சிரித்தாள். உள்ளே வரும்படி ஆங்கிலத்தில் அழைத்தாள். எனக்குள் சிறிது தைரியம் நிரம்பியது.
என்னை இருத்தி குடிக்க தோடம்பழ யூஸ் தந்தாள். அப்போதுதான் கேட்டாள் ""நீ ஏன் என்னுடைய மகளைப் பின் தொடர்ந்தாய்?""
அவளுடைய மகள் தமிழ்ப் பெட்டை என்று நினைத்தது முதல் கடைசி குடும்பத்தையாவது சந்திப்போம் என்று வந்ததைச் சொன்னேன். என்; கற்பனையையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். கேலியில்லாததால் நானும் பங்கெடுத்தேன்.
இலங்கையில் நான் எந்தப் பகுதியென்று தாய் கேட்டாள். சொன்னேன். தான் வடபகுதிக்கு வரவில்லையென்றாள்.
வீட்டிலும், பாடசாலையிலும் குட்டு வாங்கிப் படித்த ஆங்கிலம் இப்போதுதான் கை கொடுத்து உதவியது.
நீண்ட நேரம் தயங்கியபின் கேட்டேன். "" உங்கள் கணவர் இலங்கையரா?""
அவர் பதில் சொல்லவில்லை. மகள் ஏதோ கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டே என்னைப் பார்த்துச் சிநேகிதமாய் சிரித்தாள். இதற்காகவே காத்திருந்தது போல் நானும் சிரித்தேன்.
எனக்கு நேரமிருந்தால் நாளை பகல் வரும்படி தாய் சொன்னாள். சிறிது நேரம் இருந்து என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அறைக்கு வந்த போது பெருமிதமாயிருந்தது. தமிழ்க் குடும்பத்தைத் தேடிப் போய் டொச் குடும்பத்தையே பிடித்தாயிற்று.
நான் கேட்ட கேள்விக்குத் தாய் ஏன் பதில் சொல்லவில்லை? ரகசியமோ? மகள் இருந்தபடியாலோ? அப்படியென்றால் பிள்ளை அப்பிடி இப்படிப் பிறந்ததோ? மகளுக்குத் தகப்பன் இலங்கையன். தாய்க்குப் புருசன் டொச் காரனோ? ஏன் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். நாளைக்கு சந்திப்பது தானே!
எப்போது விடியும் என்று பார்த்து குளித்து நால்ல உடைகள் போட்டுக் கொண்டு போனேன்.
தாய் என்னை வரவேற்றாள். சாப்பாட்டு நேரம். எனக்கும் பாண் பூசித் தந்தாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.
அவள் இலங்கை பற்றி விசாரித்தாள். சொன்னேன். ஆவல் முழுக்க அவள் மகளைப் பற்றி என்ன சொல்லப் போகிறாள் என்பதிலேயே இருந்தது. பொறுமை போய்விடக் கேட்டே விட்டேன்.
""அவள் எங்கள் மகள்தான். ஆனால் நான் அவளைப் பிரசவம் செய்யவில்லை" சுவாரசியமாகக் கேட்டேன்.
""எங்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைகள் இல்லை. மருத்துவ பரிசோதனையில் எங்களுக்குப் பிள்ளை பிறக்கும் சாத்தியம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. எனக்கும் கணவருக்கும் பிள்ளைகளில் பிரியம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் குழந்தைகளை வாங்கலாம் என்று வந்த செய்தி கிடைத்தது. நானும் கணவரும் இலங்கை போய் வாங்கி வந்து வளர்ந்து வரும் பிள்ளைதான் நீ பார்த்த எனது மகள்.""
நான் திடுக்கிட்டுப் போயிருந்தேன். பிள்ளையை வாங்குவதா? காசுக்காகத் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே தாய் தகப்பன் விற்கிறார்களா? வெளிநாட்டுப் பத்திரிகைகளில் செய்தி வருகின்றளவுக்கு இந்த வியாபாம் பிரபலமாகியிருக்கிறதா?
அவள் தொடர்ந்து சொன்னாள். ""ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசையிலும், சுலபமாக ஒரு குழந்தையை எங்களுடையதாக்கிக் கொள்ளக்; கூடியதாயிருந்ததாலும் சில பிரச்சினைகளை நாம் முதலில் ஆலோசிக்கவில்லை. இப்போது அவை மெது மெதுவாகப் பெரிதாகின்றன.""
நான் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். குழந்தை வியாபாரம் எனக்குப் புதிய செய்தி. அதிர்ச்சி.
""இப்போது இங்கே வளர்ந்து வரும் வெளிநாட்டவர் எதிர்ப்பால் எனது மகளும் பாதிக்கப்படுகிறாள். நிறப்பாகுபாட்டை அவளும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. எல்லோரும் வெள்ளை நிறமாக இருக்கும் போது நான் மட்டும் ஏன் கறுப்பாக இருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். உன்னைச் சந்தித்தது முதல் அவள் இன்னும் குழம்பிவிட்டாள். தான் அந்நியள் போலவும் சமயத்தில் அவள் உணர்கிறாள். அவளிடம் நான் உண்மையைக் கூற வேண்டித்தான் வரும். எப்போது எப்படி என்பதுதான்; தெரியவில்லை.""
அவள் இரண்டு கண்ணடி ரம்ளர்களில் தோடம்பழ யூஸ் நிறைத்து ஒன்றை எனக்குத் தந்தாள். உறிஞ்சினேன். என்னால் இன்றும் பூரணமாய் நம்ப முடியவில்லை. குழந்தையை விற்கிறார்களா? சொந்தத் தாய் தகப்பனா? இருக்காது. பிள்ளை பிடிகாரர்கள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள் போல..
""என்னுடைய கவலை நாங்கள் அவளை விலைக்கு வாங்கி வளர்த்து வரும் உண்மையை அவளுக்குச் சொல்ல நேரும் போது அவள் எப்படி அதை எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்பது பற்றியது தான். எங்களை விட்டு அவள் போய் விடுவாளோ என்று பயமாக இருக்கிறது.""
சந்தித்த இரண்டாம் நாளே அவள் இப்படி மனம் விட்டு என்னுடன் கதைப்பது ஆச்சரியமாயிருந்தது. இப்படிக் கதைக்க அவளுக்கு யாரும் கிடைக்காமலிருந்திருக்கலாம். அல்லது மகள் பற்றிய உண்மையை வேறு ஆட்களுக்குத் தெரிவிக்க விரும்பாமலிருந்திருக்கலாம். இப்போது என்னிடம்; கொட்டுகிறாள்
அவள் உள்ளே போய் பழையகால அல்பம் கொண்டு வந்தாள். அவர்கள் இலங்கையில் நிற்கும் போது எடுத்த படங்கள். மிருகக்காட்சிச்சாலை, காலிமுகத்திடல், பேராதனைப் பூங்கா…… சொந்தத் தாய் தகப்பன் எந்தப் படத்திலும் இல்லை. ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறார்கள்.
கடைசிப் பக்கத்தில் ஒரு பழைய பத்திரிகைத் துண்டு. அம்பது டொலர்களில் உங்களுக்கு குழந்தை என்று தலைப்பு. உடல் ஆரோக்;;கியமான இலங்கைக் குழந்தைகள் எண்ணாயிரம் டொலர்களிலிருந்து ஐரோப்பாவில் விற்பனையாகின்றன. இக் குழந்தையை விற்பதற்காகத் தாய்மார்களுக்குக் கிடைக்கும் தொகையோ அம்பது டொலர்கள் மாத்திரமே…. மிகுதியை தொடர்ந்து வாசிப்பதற்கு அவள் அதை வாங்கிவிட்டாள்.
""இது எப்படி இதற்குள் வந்தது? நான் இதை வேறிடத்தில் ஒளித்து வைத்திருந்தேனே! யார் கண்டு பிடித்தார்கள்? மகளா? அப்படியென்றால்.. அவள் தன்னை அறியத் தொடங்கிவிட்டாள்..!"" அவள் தடுமாறினாள். அதற்குமேல் அங்கிருக்க எனக்;குக் கஸ்ரமாக இருந்தது. விடைபெற்றுக் கொண்டு வந்து விட்டேன்.
அறைக்கு வந்து தனியே இருந்து யோசித்தபோது ஏராளமான கேள்விகள். அந்த அம்பது டொலர் பெண் தன்னை இனி எப்படி உணர்வாள். ஜேர்மன் சமூகத்துடன் இணைத்துக் கொள்வாளா? இவர்களால் புறக்கணிக்கப்பட்டால் எங்கு போவாள்? தன்னுடைய சொந்தத் தாய் தகப்பனை இனி அவள் சந்திக்கவே முடியாதா?
இவளுடைய சொந்தப் பெற்றோர்கள் யார்? சிங்களமா? தமிழா? முஸ்லீPPமா? எப்படி இதைக் கண்டு பிடிக்கலாம்?
இதைக் கண்டுபிடித்து என்ன பிரயோசனம்? அவளை விற்றாயிற்று. பெற்றோர் யாராயிருந்தால் தான் என்ன? பெற்ற மகளை ஏன் விற்றார்கள் என்று யோசிக்கலாம். இலங்கையில் வாழ்பவர்கள் பெற்ற பிள்ளைகளை விற்கவும், மேற்கு நாடுகளில் வாழ்பவர்கள் விளம்பரங்களைப் படித்து பிள்ளைகளை வாங்கவும் கூடியதான நிலைமை எப்படி உருவானது என்று பார்க்கலாம். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்; என்;று கண்டு பிடிக்கலாம்.
எதைக் கண்டுபிடிப்பது? பாஸ்கரனுக்கு மனைவியாயிருக்க என்னை இங்கே எனது குடும்பம் அனுப்பி வைத்திருக்கிறது. ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டியபின் பாஸ்கரன் எந்நேரமும் வந்து என்னைக் கூட்டிப் போகலாம். திருமணம் நடக்கும். அதன்பின் பாஸ்கரனுக்குச் சமைத்துப் போட, வீட்டைக் கவனிக்க, கூடப்படுக்க…. என்று நேரம் போகப் போகிறது. இனி எனது விருப்பங்களில் தீர்மானங்களில் பாஸ்கரனின் ஆதிக்கம்தானே இருக்கும்.
வாழ்க்கையே ஒவ்வொருவரும் தங்களை வேறு யாருக்கோ அல்லது ஏதோ ஒன்றிற்கு விற்கும் வியாபாரமாய்த்தானே இருக்கிறது. ஒன்றிலும் உண்;மையில்லை. எல்லாமே பண்டமாகி.. எல்லாவற்றிற்கும் பெறுமதி குறிக்கப்பட்டு..
தலை வலித்தது. சமையலறைக்குப் போய் தேநீர் தயாரித்தேன். சமையலறை அசிங்கங்களும் நாற்றங்களும் இத்தனை நாளில் பழகிப் போய்விட்டது. இப்போது பாதிக்கவில்லை. எல்லாம் கண்றாவிகளுக்கும் பழகி சுரணை போய்விட்டதால்தான் நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதில்லைப் போலும்.
தேநீர் குடிக்கிறேன்;.
நாளை பாஸ்கரன் வரலாம்.
- பார்த்திபன் (1991)
பிரசுரித்தவை:
"சக்தி", நோர்வே, 1991
"புதிய கலாச்சாரம்", இந்தியா, 1992