ஆனந்த விகடனை குறை கூறுகிறீர்களே, அந்த இதழ்தானே இன்று பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது?
-சி. சாமுவேல்.

சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து கிசு கிசு பாணியிலே அனைத்து செய்திகளையும் எழுதுகிற ஆனந்த விகடன், கிசு கிசு செய்திகளையும் தாண்டி, ‘அறிவுத்துறை’ சார்ந்தவர்களையும் தன் வாசகர்களாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்,

 

அந்த நோக்கத்தில்தான் சிறுபத்திரிகையுலகில் வஸ்தாதுகளாக விளங்கிய சில இலக்கியவாதிகளை தனது பத்திரிகையில் இலக்கிய சேவை செய்யவைத்தது.

 

விடுதலைப் புலிகளை ஆதரித்து செய்திகள் வெளியிட்டால், அதை வாங்குவதற்கு என்று மிகப் பெரும் வாசகர் கூட்டம் தமிழ் நாட்டில் உண்டு. அதை அறுவடை செய்தவதற்காகத்தான் விடுதலைப் புலி ஆதரவாளர்களை வைத்து தொடர் கட்டுரை எழுது வைக்கிறது, பிரபாகரன் படத்தை அட்டையில் பிரசுரித்து வெளியிடுகிறது, புள்ளி விவரங்கள் வெளியிடுகிறது.

 

செக்ஸ், மருத்துவம், தன் முனைப்பு, சுயதொழில், அரசியல், சினிமா, மதன், சுஜாதா, நாராயண ரெட்டி, கிசு கிசு, வெட்டி அரட்டை, ஊதாரிதனமான செய்திகள், சமையல், அழகு குறிப்பு, பிரபலங்களுடன் பேட்டி என்று எல்லா பத்திரிகைகளையும் போல் இப்படி ஊசிப் போன செய்திகளை விகடன் வெளியிட்டு சாதாரண வாசகர்களை தக்க வைத்து கொண்டாலும்,

 

‘இலக்கியம், முற்போக்கு, சமூக அக்கறை’ போன்ற பாசாங்கு செய்திகளையும் சரியான விகிதத்தில் கலந்து அடிக்கறதானலதான், ஆனந்த விகடன் மற்ற பத்தரிகைளில் இருந்து வேறுபடுகிது. இலக்கியம் மற்றும் முற்போக்களார்களை தனது வாசகர்களாக பெருமளவில் உருவாக்கியிருக்கிறது. அது போன்ற ஒரு முயற்சிதான் பெரியார், அம்பேத்கர் பற்றியான தொடர். இதனால் பலஆயிரம் புதிய வாசகர்களை ஆனந்த விகடனுக்கு உருவாக்கியிருக்கிறார்கள்.

 

(சிறு பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்து, ஆனந்த விகடனில் எழுதி பிரபலமான எழுத்தாளர்கள், மீண்டும் சிறு பத்திரிகைகாரர்கள் தங்கள் இதழுக்கு கட்டுரையோ, கதையோ கேட்டால் - ‘நேரமே இல்லீங்க.. கண்டிப்பா எழுதுறேன்..’ என்று தட்டிக் கழித்துவிடுகிறார்கள். அதுவே ஆனந்த விகடனில் இருந்து ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி கட்டுரை கேட்டால், ராத்திரி எல்லாம் கண் முழுச்சி காலையிலே இவர்களே நேரில் கொண்டு போய் கொடுத்து, ‘கொஞ்சம் லேட்டாயிடுச்சி மன்னச்சிடுங்க…’ என்று பெருதன்மையாக நடந்து கொள்கிறர்கள்.)

 

யாரை வேண்டுமானலும் சகட்டுமேனிக்கு கேலியும், கிண்டலும் செய்கிற ஆனந்த விகடன் - ஜெயேந்திரன் கொலை வழக்கில் கைதானபோது, ‘அந்த ஆளு அவள வைச்சிக்கிட்டு இருந்தான். இவள கைய புடுச்சி இழுத்தான்’ என்று எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது, ஜெயேந்திரனை பற்றி உண்மைகளை கூட எழுதாமல், தன்னிடம் வேலை பார்க்கும் சூத்திரர்களை கொண்டு, பொய்களை துப்பறிந்து, கண்ணியமாக செய்திகளை வெளியிட்டது கிசு கிசு பத்திரிகையான ஆனந்த விகடன்.

 

நீங்கள் சொல்வது போல், பெரியார் மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர் பற்றிய தொடர்களையும் வெளியிட்டு இருக்கிறது.


இந்தத் தலைவர்களின் கொள்கைகள் தமிழ்நாடு முழுக்க பரவி தமிழ் நாடு ஜாதி வேறுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் அற்று, சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற தாளாத சமூக அக்கறையின் பால் அவர்களை பற்றி வெளியிட்டு இருக்கிறதா?


அதற்கு வியாபாரம். பரந்து பட்ட வாசகர் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம்.


‘ பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது?’ என்று நீங்கள் நல் அபிப்பராயம் சொல்கிறீர்கள் அல்லவா? அதுதான் அந்தத் தொடரின் வெற்றி.

 

பெரியார், டாக்டர் அம்பேத்கர் பற்றி தொடர் வந்ததற்காக ரொம்ப பெருமைபட்டுக்காதிங்க, அம்பேத்கரும் - பெரியாரும் யாரை எல்லாம் எதிர்த்து தன் காலம் முழுவதும் போராடினார்களோ, அந்த ராஜாஜியையும், காந்தியையும் பற்றி புகழ் பாடும் தொடரையும் ஆனந்த விகடன் வெளியிடும்.

 

இதுபோன்ற இரட்டை வேடங்கள் ஆவிக்கு சகஜம்தான்.

 

‘பாய்ஸ்’ என்கிற பொறுக்கித்தனமான படம் வந்தபோது, அதை விமர்ச்சித்து ஆன்ந்த விகடன் ‘ச்சீ..’ என்று ஒற்றை வார்த்தையில் ஒரு பக்கத்திற்கு யோக்கியம் மாதிரி வெளியிட்டிருந்தது-. (’ச்சீ..’ ஆனந்த விகடனுக்கும் பொருந்தும்)அந்தப் படத்தின் பொறுக்கித்தனத்திற்கு 99 சதவீதம் காரணமான சுஜாதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கண்டித்து எழுதவில்லை. அதுமட்டுமல்ல, பொறுக்கித்தனமா எழுதுற சுஜாதாதான் ஆவியின் ஆஸ்தான எழுத்தாளர். அந்த ஆளு உயிரோடு இருக்கும்போதும் மட்டுமல்ல, செத்தப் பிறகும் அவனை ஆவியாக கொண்டு வந்து, நம்மள சாவடிக்குது ஆவி.

 

‘செத்தப் பிறகும் கொடுத்தான் சீதக்காதி’ என்று சொல்வார்கள். அதுபோல், ‘செத்தப் பிறகும் கெடுக்கிறான் சுஜாதா.’

 

வர்த்தகமும்-பார்ப்பனியமும் ஆனந்த விகடன் போன்ற பார்ப்பன பத்திரிகைகளுக்கு இரண்டு கண்கள். பார்ப்பனரல்லாத பத்திரிகைகளுக்கு வர்த்தகம் மட்டும்தான் நோக்கம்.


அதனால்தான் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானலும் விமர்சிக்கிற பார்ப்பன பத்திரிகைகள், பார்ப்பனியத்தின் ஜாதி வெறி அதன் ஓழுக்கக் கேடு குறித்து விமர்சிப்பதில்லை.

 

சொந்த புத்தி அற்று பார்ப்பனரல்லாதவர்களால் - நடத்தப்படுகிற பத்திரிகைகள், பார்ப்பன பத்திரிகைகளையே முன் மாதிரியாக கொண்டு நடத்துவதால், இவர்களும் பார்ப்பனியத்தை கேள்வி கேட்பதில்லை.

 

பல நேரங்களில் இந்தப் பார்ப்பனதாசர்கள், பார்ப்பனர்களையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள், பார்ப்பனியத்தை பாதுகாப்பதில்.