காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).
எல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ISC3 மாடல் வழி, ஒரு இடத்தில் மாசு வெளிவந்தால்,வேறு இடத்திற்கு பரவி எந்த அள்வில் செல்லும் என்பதை கணக்கிட தமிழில் ஒரு மென்பொருள் உருவாக்கி இருக்கிறேன். அதன் screenshot கீழே.

நீங்கள் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதை பயன்படுத்த டாட் நெட் (.NET Framework version 2.0) என்ற மென்பொருள் தேவை. இது ஏற்கனவே உங்கள் கணினியில் இல்லாவிட்டால், மைக்ரோசாஃப்ட
தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் (.NET Framework version 2.0)செய்யலாம். அதன் அளவு, சுமார் 22 MB ஆகும்.

இந்த மென்பொருளை பயன்படுத்தினால் எனக்கு (அ) இந்த மென்பொருளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் உங்கள் கணினியில் சரியாகத் தெரிகிறதா என்பதையும் (ஆ) இந்த மென்பொருளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பதையும் தெரிவிக்கவும்.

இங்கு கவனிக்க வேண்டியவை சில.

  • இந்த மென்பொருளின் மூலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாசு சேர்க்கும் பொழுது, வேறு இடத்தில் அது பரவும் விதத்தை கணிக்கலாம். இந்த மாசுக்கள் தொழிற்சாலையில் புகைபோக்கி வழியே வரும். இவை point source எனப்படும்.
  • வாகனங்கள் புகை கக்கிக்கொண்டே செல்லும்பொழுது , மாசு பல இடங்களில் சேர்க்கப்படுகிறது. இவை line source எனப்படும். இவற்றால் விளையும் பாதிப்பை இந்த குறிப்பிட்ட மென்பொருளில் கணக்கிட முடியாது. (நான் இன்னமும் அதை தமிழில் எழுதவில்லை)
  • ஒரு பெரிய பரப்பில் இருந்து வரும் புகையானது area source எனப்படும். அதுவும் இந்த மென்பொருளில் கணக்கிட முடியாது



இதைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள்.

  1. புகைபோக்கியின் உயரம்: இது அதிகமானால், மாசு தரையில் வரும்பொழுது நன்கு பரவி விடும். அதனால், அதன் அளவு எந்த ஒரு இடத்திலும் குறைவாக இருக்கும்.
  2. புகைபோக்கியின் விட்டம்: இது காற்றின் போக்கை பாதிக்கும். (தரையில்) மாசின் அளவு இதனால் கொஞ்சம் பாதிக்கப்படும்
  3. புகையின் வெப்பனிலை: இது அதிகமானால், புகையின் ‘அடர்த்தி' (density)குறையும். அதனால், புகை மேலே செல்லும். அப்பொழுது, தரையில் அதன் அளவு குறையும்
  4. புகை வெளிவரும் வேகம்: புகை வேகமாக மேல்நோக்கி வந்தால் அதன் அளவு தரையில் குறையும்
  5. மாசு வெளிவரும் அளவு: இது தொழிற்சாலையிலிருந்து ஒரு நொடிக்கு எவ்வளவு கிராம் மாசு காற்றில் சேர்க்கப்படுகிறது என்ற அளவு.
  6. உங்கள் வீட்டிலிருந்து புகைபோக்கி இருக்கும் தொலைவு: X மற்றும் Y (மீட்டரில்). இதில் X என்பது கிழக்கு-மேற்கு. புகைபோக்கி மேற்கில் இருந்தால் -1000 மீ என்று நெகடிவ் எண் கொடுக்க வேண்டும். கிழக்கில் அரை கிலோ மீட்டரில் இருந்தால், 500 மீட்டர் என்று கொடுக்க வேண்டும். Y என்பது வடக்கு-தெற்கு.
  7. புகை போக்கி வடகிழக்கில் இருந்தால்? X = 1000, Y = 800 என்று தகுந்த அளவில் கொடுக்க வேண்டும்
  8. தட்ப வெப்பம்: காற்றின் வேகம் மற்றும் திசை. காற்று வடக்கிருந்து தெற்காக வந்தால் (வாடைக்காற்று) 0 டிகிரி. கிழக்கிருந்து மேற்காக சென்றால், 90 டிகிரி
  9. காற்றின் வேகம் அளக்கப்பட்ட உயரம். புகைபோக்கியானது 50 மீட்டர் உயரத்தில் இருக்கலாம். ஆனால் காற்றின் வேகம் 2 மீ. உயரத்தில் அளக்கப்பட்டு இருக்கலாம். இந்த விவரம் சொன்னால், மென்பொருளானது, ”புகைபோக்கியின் உயரத்தில் காற்றின் வேகம் என்ன” என்பதை கணித்து விடும்
  10. காற்றின் வெப்ப நிலை: இதை மாற்றினால்,தரையில் மாசின் அளவு, நிறைய மாறாது.
  11. கலக்கும் உயரம். ஆங்கிலத்தில் mixing height எனப்படும். இதைப்பற்றி தனிப்பதிவுதான் எழுத வேண்டும். இப்போதைக்கு 1 கி.மீ என்று வைத்துக் கொள்வது போதும். பெரும்பாலும் இது சரியாக இருக்கும்.
  12. பகல்/இரவு: பகலில் சூரிய வெளிச்சத்தின் அளவைப்பொறுத்தும் , இரவில் மேக மூட்டத்தைப் பொறுத்தும் தரையில் மாசின் அளவு நிறைய மாறுபடும். இதற்கு காரணம், மாசு பரவும் விதத்தையும், காற்றோட்டத்தையும் இவை மிகவும் மாற்றுகின்றன.
  13. மாசு decay coefficient: சில மாசுக்கள் காற்றில் சிதைந்து விடும். பெரும்பாலான் மாசுக்கள் அப்படியே இருக்கும்.
  14. உங்கள் வீட்டில் மாசின் அளவை கணிக்க, வீட்டின் உயரம் தேவை.
  15. சுற்று வட்டாரம்: கிராமமா அல்லது நகரமா என்பதைப் பொறுத்து தரையில் வரும் மாசு மிகவும் மாறுபடும். இதற்கு காரணம், காற்று செல்லும் விதம் இந்த இரண்டு இடங்களிலும் வேறுபடும்.

http://fuelcellintamil.blogspot.com/2008/06/5-air-pollution-control-dispersion.html