Language Selection

இந்த அறிக்கையில் எனது பெயரும் (அடைமொழியுடன்) வந்திருக்கிறது. அறிக்கை இணையத்தளத்தில் வெளிவந்த பின்னரே அதை நான் வாசித்தேன். இதற்கு முன்னர் இது எமக்கு மின்னஞ்சல்மூலம் வந்திருந்தபோதும் இதை நான் வாசித்திருக்கவில்லை. அனுமதியின்றி எனது பெயரைப் போட்டது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

 

 

இருந்தும், அக்கறைகொள்ள வேண்டிய ஒரு பிரச்சினையேயல்ல என்றவகையிலான சகிப்புக் கருத்துகளுடனும், பாவஞ்செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்றவகையிலான தகுதிகாண் கருத்துகளுடனும் உடன்பட ஏதுமில்லை. மிக விலாவாரியாக நோக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினையின் ஒரு பின்னூட்டம்போல இந்த அறிக்கை ஆகியிருப்பது இதன் முக்கிய குறைபாடு. அது இணையத்தளங்களின் தொடர்ச்சியான வாசிப்புகளினூடாகவோ, புகலிட -குறிப்பாக பாரிஸ் அரசியல் இலக்கியச்- சூழலின்மீதான அவதானிப்புகளினூடாகவோ அது பயணிக்கவில்லை. உடனடி அணுகலாக அந்த அறிக்கை பிரசவித்திருக்கிறது. இவ்வகை விமர்சனங்களை அல்லது குற்றச்சாட்டை இணையத்தளங்கள் ஒரு சுயநோக்கல் அடிப்படையில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். இப்படியொன்று இல்லை என்று வாதிடுவது எம்மை நாம் ஏமாற்றுவதாகும்.

 

எமக்குப் பாதிப்பு ஏற்படும் அல்லது எம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மட்டும் மற்றவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று ஆதங்கப்படுவதில் எந்தவகை ஜனநாயக உணர்வு இருக்கிறது. இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டு தமக்கு மாற்றான கருத்துகளை வைப்பவர்களுக்கு கல்வெட்டுப் பாடியதை நாம் பார்த்திருக்கிறோம். அதோழமையுடன் (தோழமையின் எதிர்ச்சொல்) என்று விழித்து எழுதுவதை நாம் பார்த்திருக்கிறோம். பல மொட்டைப் பிரசுரங்களை புகலிடத்தில் நாம் பார்த்திருக்கிறோம். நாட்டாண்மை, யன்னல்களைத் திறவுங்கள் என்றெல்லாம் வெளியீடுகளாகவும் இந்தக் கசடுகளை நாம் பார்த்திருக்கிறோம். ஒன்றுகூடல்களில் பேசப்பட்ட விடயங்கள் தொடக்கம் அங்கு நடந்ததாக வெளிக்கிளம்பும் சம்பவங்கள்வரை முரண்பாடான செய்திகள் வெளிவருவதே தொடர்கின்றன. எத்தனை ஆண்டுகளாகியும் விடுபட முடியாத புதிராய் இன்றும் சில சம்பவங்கள் மனக்கிடப்பில் இருக்கின்றன.

 

ஆரோக்கியமான முறையில் சகதோழர்கள் நண்பர்கள் மீதான விமர்சனங்கள் என்ற வகையில் எத்தனை எழுத்துகளை நாம் பார்த்திருக்கிறோம் என்றால் பதில் கிடையாது. தனிநபர் தாக்குதல்கள் அவரவர் சொல்லாளுமை தத்துவ ஆளுமைகளின் பின்னால் மறைக்கப்பட்டு எழுதப்பட்டதையும்தான் நாம் பார்த்திருக்கிறோம். உண்மையில் சந்திப்புகள் ஒன்றுகூடல்கள் எல்லாம் விமர்சன சுயவிமர்சன முறையை வளர்ப்பதாயில்லை. படிப்பு… விவாதம்… பரிமாற்றம்… என்ற அடிப்படையில் விரிவடைந்த ஒரு விமர்சன இயக்கமாக புகலிட அமைப்பில் சந்திப்புகள் மேற்கொள்ளப்படுவது தேவையெனப் படுகிறது. இதனூடாக இவ்வாறான வளர்ச்சியைச் சாதிக்கமுடியுமோ என்னவோ கையெழுத்து வேட்டையால் ஒருபோதும் சாதிக்க முடியாது என்று மட்டும் சொல்லலாம். புகலிடத்தின் அரசியல் இலங்கைக்குள்ளும் நீண்டிருக்கும் ஒரு நிலையில் (நாளை தலித்தியமும் நீளலாம்) இந்த விமர்சன இயக்கத்தின் தேவை இன்னும் அதிகமாகிறது.

 

தனிநபர்களைத் தாக்கும் நோக்கம் கொண்ட எழுத்துகள் மட்டுமல்ல தனிநபர்களை நியாயப்படுத்தி அல்லது புழுகி எழுதும் பதில் எழுத்துக்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இதில் சத்தியக்கடதாசி, தேசம் என்பன விதிவிலக்காய்ச் செயற்பட்டதே கிடையாது. யமுனாவைக் காணவில்லை என்று சத்தியக்கடதாசி எழுப்பிய கூக்குரலும் ரயாகரனுக்கான கல்வெட்டும் தனிநபர் தாக்குதலின் இன்னொரு பரிமாணம்.

 

தேனீ அதிரடி விழிப்பு போன்ற இணையத்தளங்கள் புலியெதிர்ப்புக்கு அப்பால் சென்று எதையும் பேசியது கிடையாது. தனிநபர் தாக்குதல்களை நடத்தியவர்கள் இவர்களும்தான். தலித் மீதான ஆதிக்கசாதி மனோபாவம், பெண்கள் மீதான ஆணாதிக்க மனோபாவம் என்பனவெல்லாம் தேனீயில் புலியெதிர்ப்பு கவசத்தின்பின்னால் வெளிப்படுத்தப்பட்டவை. தேசம் இணையத்தளத்தில் பேச்சு எழுத்துச் சுதந்திரம் என்ற பேரில் இந்த மனோபாவங்கள் வெளிப்படுத்தப்பட்டதை அண்மைய பதிவுகள்வரை (அனுமதிக்கப்பட்ட சில பின்னூட்டங்களிலும்) பார்க்கலாம். 80 களின் நடுப்பகுதியிலிருந்து ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராக கடுமையாக புகலிட சஞ்சிகைகள் போராடிப் பெற்ற பெறுபேறுகளை தம்போன்ற புலியெதிர்ப்பாளர்களின் வரலாற்றிலிருந்து தொடங்கப்பட்டதாய் தேனீ ரிபிசி மட்டுமல்ல தேசம் இணையத்தளமும்தான் படம்காட்டின, வரலாற்றை அறுத்தெடுக் காட்டின.

 

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தேசத்துக்கு மணிகட்ட இந்த அறிக்கை புறப்பட்டது இதன் பலவீனம். இவளவு குறுகிய கால இடைவெளியில் இவளவு பின்னூட்டங்களை பொரிக்கும் ஆற்றல் இந்த சிறிய அறிக்கைக்குள் இருந்ததாக நாம் எடுத்துக் கொண்டால் அது பேச முனைந்த பிரச்சினைப்பாட்டின் மீது நாம் கவனம் செலுத்தியாகவேண்டும். இல்லை இந்தப் பொரிப்பு எமது குசும்பு மனோபாவத்தின் சூட்டில் நிகழ்ந்தது என்றால் இந்த மனோபாவத்தை நாம் கேள்விகேட்டாக வேண்டும்.

 

தனிநபர் தாக்குதல் கலாச்சாரம் ஒன்றும் புதிதான விடயமல்ல. அதற்காக அதை நாம் சகித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பதாய் வாதிடுவது அல்லது அதைச் சுட்டிக்காட்டுபவரின் தகுதியைக் கேட்பது பதிலாய் ஒருபோதும் இருக்க முடியாது. அதேபோல் இவ்வாறான பிரச்சினைகளுக்கு கையெழுத்து வேட்டை நடத்துவது ஒரு அணுகுமுறையாகவும் இருக்கமுடியாது.


-ரவி

தேசம்நெற் வாசகர்