புலியல்லாத கொலைகளுக்கு உடந்தையாக இருத்தலே புலியெதிர்ப்பின் ஜனநாயகமாகும். இதை ஒரு தலையங்கமாக இட்டு, அதைக் குறித்து எழுத வேண்டிய அளவுக்கு அரசியல் விபச்சாரம் எங்கும் அரங்கேறுகின்றது. புலிகள் செய்யாத கொலைகள், புலியெதிர்ப்புப் பாசிசக் கும்பலால் ஆதரிக்கப்படுகின்றது.

 ஒன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கானவர்கள் மீது, இந்த கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டுவிட்டது. இந்த மனித அவலத்தை மூடிமறைக்க, இனம் தெரியாத கொலைகள் என்ற சூக்குமத்துக்குள் வெறியாட்டம் செய்கின்றனர். மாறாக புலிகளை மட்டும் கொத்திக் கிளறுகின்றனர். இப்படி இந்த புலியெதிர்ப்பு நரிகள் மனித அவலத்தையே ருசிக்கின்ற இழிபிறவிகளாகி இருப்பதையே, முற்போக்கு என்கின்றனர்.

 

புலிகள் மட்டுமா வகைதொகையின்றி துரோகியாக, சமூக விரோதியாக கொல்லமுடியும்! எம்மாலும் அதை மிஞ்சி செய்ய முடியும் என்பதை பேரினவாதமும், கைக்கூலி கும்பல்களும் செய்து காட்டுகின்றனர். இங்கு ஜனநாயக மீட்பு, பாசிச ஒழிப்பு என்ற பெயரில் இவை செய்யப்படுகின்றது.

 

புலிகள் செய்தால் அது ஜனநாயக மீறலாக பாசிசம் என்பவர்கள், புலி அல்லாதோர் செய்தால் அது பாசிச ஒழிப்பு என்கின்றனர். அரசியல் ரீதியாக இது ஒரு வேடிக்கை தான். ஆனால் இதுவே, மக்களின் வற்றாத கண்ணீர் காடாகின்றது. தமது குழந்தைகளும், கணவர்களும் கேட்பாரின்றி கொன்று குதறப்படுவதைக் கண்டு, கதறுகின்றனர். தாய்மையின் வலி உருவாக்கும் அவலமான துயரத்தை சிலுவையாக சுமந்தபடி, இராணுவ முகாங்களின் முன் தமது குழந்தைக்காக ஏங்கி நிற்க, அவர்களின் கருப்பைகள் அறுத்தெறியப்படுகின்றது. நாளொரு தோறும், பொழுதொரு தோறும் பிணங்களே தேசமெங்கும் மிதக்கின்றது. அனாதைகளாக மரணித்துப் போகும் அவலத்தை ஜனநாயகத்துக்கான மீட்பு என்கின்றனர். கிழக்கு இராணுவ சூனிய பிரதேசமாகிவிட்டது. வன்னியில் இருந்து மனித அவலங்கள் தகவல்களாக கசிகின்ற நிலமைகள் இருக்கும் போது கூட, கிழக்கில் மனிதம் நலமடிக்கப்படுகின்ற ஒரு நிலையில், அவை தகவலாக கூட வரமுடியாத அவலம்.

 

இதை செய்கின்ற அரசையும், அந்த இராணுவத்தையும் போற்றுகின்ற அரசியல் தான், புலிக்கு மாற்று அரசியல் என்கின்றனர். இதற்கு வெளியில் இவர்களின் அரசியலை பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும், எதையும் கண்டறிய முடியாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கண்டறிவதை தீவிரமாக எதிர்க்கின்றவர்கள் இவர்கள்.

 

இனம்தெரியாத கடத்தல், காணாமல் போதல், இனம் தெரியாத கொலையை செய்தல் என்பதை, புலிகளிடம் இருந்து பேரினவாதம் கையேற்றுள்ளது. இந்த வகையில் புலிகள் ஒருதலைப்பட்சமாக இராணுவம் மீது தாக்குதலை தொடங்கிய பின்பாக, அதாவது 1995 டிசம்பர் முதலாக குறைந்தபட்சம் 2000 க்கு மேற்பட்டவர்கள் இப்படி கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் யுத்த முனையில் அல்ல, வீதிகளிலும் வீடுகளில் வைத்தும் இல்லாததாக்கப்படுகின்றனர். புலிகளின் கடந்தகால நடப்பு பாசிச கொலைகார வரலாறு இதற்கு முன்னால் மண்டியிட்டு பிச்சை வாங்க வேண்டும். மிக குறுகிய காலத்தில், எந்த எதிர்ப்புமின்றி, இவை மூடிமறைக்கப்பட்ட ஒரு நிலையில் தான் இவை நடந்தேறியுள்ளது, நடந்தேறுகின்றது.

 

புலியெதிர்ப்பு அரசியல் இதை ஆதரிப்பதும், இதைச் செய்ய துணை போவதன் மூலமும் நாடு இரத்த ஆறாகின்றது. புலிகள் செய்தால் அதை வைத்து நக்கிப் பிழைப்பதும், புலியல்லாத கொலைகளை இட்டு கள்ளமௌனம் சாதிப்பதும் இவர்களின் அரசியல் பிழைப்புத்தனமாகும். புலிகள் நடத்தும் பாசிசக் கொலைகளை வெட்டிப் புடுங்கி பிணப்பரிசோதனை செய்வதை ஜனநாயகம் என்பவர்கள், புலியல்லாத இன்றைய கொலைகளை இட்டு கள்ள மௌனம் சாதித்து ஆதரிப்பதே இவர்களின் கடைந்தெடுத்த பாசிச ஜனநாயகமாகும. இந்த மனித அவலத்தை கண்டு காணாமல் மூடிமறைப்பது வெக்கக்கேடு.

 

இவர்களின் ஜனநாயக அரசியல் எப்படி புலிப் பாசிசத்தை ஒழிக்கும்? இது போன்ற கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் ஆதரிப்பதன் மூலமே தான் என்பது தான் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியலாகும். இதற்கு வெளியில் புலிப் பாசிச ஒழிப்புக்குரிய, வேறு எந்த வேலைத்திட்டமும் அரசியல் வழியும் இந்தக் கும்பலிடம் கிடையாது. நடந்துவரும் ஒரு பாரிய படுகொலையை புலியெதிர்ப்பு கும்பல் ஆதரித்து மூடிமறைக்கின்றனர்.

 

மறுபக்கம் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போன புலிகள், இதை அம்பலப்படுத்த முடியாது மலடாகிக் கிடக்கின்றனர். இதில் தான் புலியெதிர்ப்புக் கும்பல் மிதக்கின்றது. புலிகள் ஹீரோத்தனமான தாக்குதல் மூலமே அரசியல் செய்கின்ற இழி நிலைக்கு நாயிலும் கீழாக தாழ்ந்து, இந்த மனித படுகொலைக்கு அரசியல் ரீதியாக துணையாக நிற்கினறனர்.

 

புலிகள் என்ற பெயரிலும், புலிப் பாசிச ஒழிப்பு என்ற பெயரிலும், மக்களை புலியிடம் இருந்து விடுவித்தல் என்ற பெயரிலும் நடக்கின்ற இந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் என்ற வக்கிரம் அரங்கேறுகின்றது. மனித உரிமைவாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்வோரும், ஜனநாயகத்தின் வாலில் தொங்குபவர்களும் இதற்கு கம்பளம் விரிக்கின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், அவர்களை விடுவிக்க பிறந்தாக கூறிக்கொண்டு குத்தகைக்கு எடுத்த அவதார புருசர்கள், தமது கையேலாத்தனத்தை தமது மலட்டுதனமான ஹிரோ நடத்தைகள் மூலம் பீற்றிக் கொள்கின்றனர்.

 

தேசிய விடுதலை என்ற பெயரில், பாசிச மீட்பு என்ற பெயரில், திருடப்படும் தமது குழந்தைகளை மக்கள் பலிக்கொடுக்கின்றனர். இதன் மூலம் மக்கள் பெற்றவை எவை? பெறப் போவது எவை? உயிர் துடிப்பையே இழந்த, அடிமைகளை கொண்ட வெற்றிடமும் சூனியமுமே.

பி.இரயாகரன்
01.04.2007