Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈரானின் அணு உலைகளை, இஸ்ரேல் நவீன போர்விமானங்கள் கொண்டு தாக்கியழிக்க தீட்டியிருந்த திட்டம், அமெரிக்க அனுமதி கிடைக்காததால் நிறைவேற்றப்படவில்லை. அதேநேரம் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் சமயம், அமெரிக்காவே ஈரானை மீது தாக்குதல் நடத்தலாம், என்று பல அனுமானங்கள் எழுந்துள்ளன. இஸ்ரேலிய அரச மட்டத்திலும் அவ்வாறான எதிர்பார்ப்பு வலுத்து வருகின்றது.

 

 

ஏற்கனவே சதாம் காலத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஈராக்கின் அணு உலையை இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசி அழித்த வரலாற்று முன்னுதாரணத்தை உலகம் கண்டுள்ளது. அதுபோன்றே தற்போது சர்ச்சைக்குரிய, ஏறக்குறைய முடியும் தருவாயில் இருக்கும் ஈரானின் அணு உலைகளை, இஸ்ரேல் தாக்கியழிக்கும் நடவடிக்கையில் இறங்கலாம், என்று பலராலும் ஊகிக்கப்பட்டது. அண்மையில் இஸ்ரேலின் பிரபல தினசரியான "ஹாரெட்ஸ்" அந்த திட்டம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

 

ஈரான் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு, இஸ்ரேல் அமெரிக்காவிடம் நவீன ஆயுத தளபாடங்களை கேட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அரசு இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன், ஈரான் பிரச்சினையில் இன்று வரை ராஜதந்திர வழிமுறைகளையே நம்பியிருப்பதாக வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் ஒருவேளை ஈரான் இஸ்ரேலை ஏவுகணை கொண்டு தாக்குமாகில், அவற்றை 2000 கி.மி. தூரத்திற்குள் கண்டறியும் நவீன ராடர் கருவிகளை இஸ்ரேலின் நாகேவ் பகுதியில் பொருத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதனை இயக்குவதற்கும், பராமரிக்கவும் அமெரிக்க இராணுவ தொழில்நுட்ப நிபுணர்களும் கூட வருவார்கள்.

 

மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி புஷ் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த போதும், பின்னர் ஜுலை மாதம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பராக் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த போதும், "ஈரான் தாக்குதல்" பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. இஸ்ரேல் வகுத்திருந்த தாக்குதல் திட்டம் பின்வருமாறு: இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈராக் வான்பரப்பை கடந்து ஈரான் அணுஉலைகள் மீது சக்திவாய்ந்த பங்கர்-தகர்க்கும் குண்டுகள் போடும். தாக்குதல் இலக்கு இஸ்ரேலில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதாலும், இந்த நடவடிக்கைக்கு ஈடுபடுத்தப்படும் விமானங்கள் பறப்பதற்கு தேவைப்படும் எரிபொருளை, வானத்தில் நின்று எரிபொருள் நிரப்பு நிலையமாக செயற்படும் விமானமொன்றில் இருந்தே நிரப்பப்பட வேண்டும்.

 

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சில குறைபாடுகள் உள்ளன. முதலில் அதீத பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ள அணுஉலைகளை ஊடுருவ தேவைப்படும் பங்கர் தகர்க்கும் குண்டுகள். GBU-28 என்ற இரண்டு தொன் நிறையுடைய குண்டு ஆறு மீட்டர் கொன்க்ரீட் கட்டிடத்தை துளைத்து சென்று வெடிக்கக் கூடியது. இந்த ரக குண்டுகள் சிலவற்றை ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியிருந்த போதும், அதிகளவில் கொடுக்க மறுத்து விட்டது. அதே போன்று Boeing 767 ரக எரிபொருள் நிரப்பு விமானமேதும் இஸ்ரேலிடம் இல்லாத நிலையில், அந்தக் கோரிக்கையையும் அமெரிக்கா மறுத்து விட்டது. மேலும் தாக்குதலின் போது ஈராக் வான்பரப்பு பாவிக்கப்படும் என்பதால், அங்கிருந்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உறுதிமொழியை, ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படைகள் வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக்கொண்டது. ஆனால் அது பற்றி ஈராக்கிய பிரதமரிடம் கேட்குமாறு அமெரிக்கா நழுவிக்கொண்டது.

 

மேற்குறிப்பிட்ட காரணங்களால் இஸ்ரேலிய தாக்குதல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் அமெரிக்காவே ஈரானை தாக்க திட்டமிடலாம் என்று நம்பப்படுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூட இதுபற்றி அரச மட்டத்தில் கதைத்துள்ளார். புஷ்ஷின் கொள்கைகளை பின்பற்றும் குடியரசுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மக்கைன் தேர்தல் வெற்றிக்காக, ஈரான் தாக்குதல் இடம்பெறலாம் என்று ஊகிக்கப்படுகின்றது. ஆகவே தேர்தல் நடக்கவிருக்கும் நவம்பர் மாதத்திற்கு முதல் ஈரான் தாக்கப்படலாம். ஈரானை ஆக்கிரமிக்கும் நோக்கம் தற்போது அமெரிக்காவிடம் இல்லை என்று பரவலாக நம்பப்படுகின்றது. குறுகிய காலத்திற்குள், குறிப்பிட்ட இராணுவ, பொருளாதார இலக்குகளை மட்டுமே தாக்கி அளிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கலாம்.

http://kalaiy.blogspot.com/2008/09/blog-post_12.html