Language Selection

அவர்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றார்கள் என்றால், ஏன் எதற்காக? இதன் பின் எந்த காரணத்தையும் அவர்கள் முன்வைக்க முடியாது. எப்போதும் காரணத்தை முன்வைக்க முடியாத ஒரு பாசிச வழிப் போராட்டத்தை நடத்துபவர்கள். எந்த விளக்கத்தையும் முன்வைக்கவோ,

 செயலாற்றவோ வக்கற்றவர்கள், தோற்றுக் கொண்டிருப்பதை இப்படித்தான் பரிதாபகரமாக கூறமுடியும்.

 

சரி நீங்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றீர்கள் என்றால், ஏன் பெரும் தொகையான ஆயுதங்களை கைவிட்டு விட்டு ஒடுகின்றீர்கள். அதற்கும் இது போன்ற ஒரு குருட்டு விளக்கம் வைத்து இருப்பீர்களே. உலகெங்கும் மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பெற்ற பணத்தில் வாங்கிய ஆயுதங்கள். எத்தனையோ உயிர்களைப் பலியிட்டு பெற்ற ஆயுதங்கள், கேட்பாரின்றி கிழக்கில் விட்டுவிட்டு ஒடுகின்றனர். மக்கள் மேலான பாசிசம், மக்களின் எதிரியுடனான யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்கின்றது. புலிகள் என்ற பிசாசை மக்கள் தோற்கடிக்கின்றனர். அந்த வெற்றிடத்தில் மற்றொரு பாசிசப் பேய் குடிகொள்கின்றது. இது அந்த சிங்கள பேரினவாத பேய்களின் வெற்றியல்ல. இங்கு யாரும் அந்த மக்களை வெல்லவில்லை. மக்களின் எதிரிகள் யாரும், அவர்களை வெல்ல முடியாது.

 

இங்கு புலிகளின் எந்த பின்வாங்கலும் நிகழவில்லை. மாறாக புலிகள் மக்களிடம் தோற்றதன் விளைவாய் எதிரியுடன் தோற்றுக்கொண்டு இருக்கிறார்கள். மக்களையே சொந்த எதிரியாக கருதி அவர்களை அடக்கியொடுக்கி வைத்திருந்த ஒரு இயக்கத்தின் முடிவு என்பது, காலத்தால் செல்லரித்து நிர்ணயமாகின்றது. மக்கள் மேல் நீடிக்கும் பாசிச கட்டமைப்பு ஒருநாள், பொலபொலவென திடீரென உதிரும். அந்தக்கணம் வரை பாசிசமே அதன் சமூக இருப்பாகும் அந்த பாசிச சமூக தகர்வை நோக்கி தலைமை வேகமாக உருண்டோடுகின்றது. துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் எதிரி அதைப் பயன்படுத்தி, தனது சொந்த வெற்றியாக காண்பிக்கின்றான். அதன் பின்னால் புலியெதிர்ப்பு அன்னக்காவடிகள் அரோகரா போடுகின்றனர்.

 

சர்வதேச வலைப்பின்னலைக் கொண்ட உளவுப்பிரிவையும், ஆயுத ஏந்திய குண்டர்களையும் கொண்ட புலிகள், தமிழ் மக்களுடனான அரசியல் உறவு என்பது மாபியாத்தனமாகும். இவ் மாபியா இயக்கம் அனைத்தையும் தழுவிய ஒரு பாசிச இயக்கம், மக்களின் வாழ்வுசார் போராட்டத்தில் தங்கியிருக்க முடியாத, முரண்நிலையை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். தமிழ் தேசியம் என்பது அதன் உள்ளடகத்தில் இந்த பாசிச கும்பலிடம் அறவே இல்லாமல் போன நிலையில், மக்கள் எதைத்தான் கொண்டு புலிகளை ஆதரிக்க முடியும்.

 

புலிகளிடம் தேசியத்தின் எந்தக் கூறும், அரசியல் ரீதியாக கிடையாது. வெறும் கோசம், மற்றும்படி அவர்களின் இயங்குதளம் பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் அடிப்படையாக கொண்ட இராணுவ வாதமாக மட்டும் உயிர்வாழ்கின்றது.

 

இதுவும் அம்பலமாகி, திவாலாகி, திக்குத் தெரியாத நடுகாட்டில், அனாதையாக தனது சொந்த மரணத்தை நோக்கி அலைகின்றது. இதில் இருந்து மீள, புலிகள் அதிரடியான தாக்குதல் மூலம், ஒரு மாயையை உருவாக்க முனைகின்றனர். உருவேற்றப்பட்ட மாயையில் காரியத்தை சாதிக்கும் பிரபாயிசம், இந்த எல்லைக்குள் மலினப்பட்ட நிலையில் அதற்காக குலைக்கின்றது. மாயையை உருவாக்கும் முயற்சிகள் கூட வெற்றிகரமாக்க முடியாத ஒரு நிலையில், அவை கூட முறியடிக்கப்படுகின்றது. எங்கும் நம்பிக்கையீனங்கள். அவமானங்கள், அனாதைகளின் நடமாட்டம். எதையும் சொல்ல முடியாதபடி, சொல்வதற்கு எதுவுமின்றி வெறித்துப் பார்க்கின்றது. புலிப்பினாமி ஊடகவியலோ அடிவாங்கிய சாரைப் பாம்பு போல், உயிருக்காக துடிக்கின்றது.

 

இந்த நிலையில் தான் கட்டுநாயக்க விமானத்தளம் மீதான விமானத்தாக்குதலை புலிகள் நடத்தினர். உயிர் மீண்ட யேசுவின் கற்பனைக் கதை போல், புலிகளும் உயிர்தெழுந்துள்ளதாக காட்டவே உருவாடினர். ஆகாகா அற்புதம், புலிகள் பலம் பெற்று வரலாறு மீண்டுவிட்டது என்றனர். இது தென்னாசிய சமநிலையையே தகர்த்துவிட்டது என்றனர். வயிற்றுக் குத்து வந்தவன் போல் அங்குமிங்கும் புரளும், பற்பல உப்புச் சப்பில்லாத ஆய்வுகள், இதை புலி புத்துணர்ச்சிக்கான ரொனிக்காக (குளிசையாக) கடை விரித்தனர். சிலருக்கு கண நேர அரிப்பு சார்ந்த அற்ப மகிழ்ச்சி, தமிழ் சமூகமோ எதற்கும் நாதியற்று குலுங்கிக் குலுங்கி அழுகின்றது. அரசோ இதை சர்வதேச தலையீட்டுக்குரிய ஒன்றாக்க, பெரிதாக்கி சாவதேச தலையீட்டை இதற்குள்ளும் ஆழமாக்குகின்றது.

 

மக்களிடம் தோற்ற புலிகள், எதிரியுடன் யுத்தமுனையில் அடிவாங்கிக் கொண்டிருகின்றார்கள். ஒரு அதிரடியான எந்தத் தாக்குதலும் (இதை செய்யும் இராணுவ ஆற்றல் புலிகளிடம் அழிந்துவிடவில்லை), அவர்களை மீட்காது என்ற உண்மை முதன்மையானது. மக்களிடம் இருந்து முற்றாக தோற்ற புலிகளின் மீட்சி என்பது சாத்தியமற்ற ஒன்று. மண்ணில் யுத்தத்தையே வெறுக்கும் மக்களின் முன், பாசிசம் யுத்தத்தை திணிக்க முனைகின்றது. மறுபக்கம் யுத்தம் வேண்டும் என்று சில புலம்பெயர் மலடுகளின் கூச்சலால், புலியின் மீட்சியை உருவாக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் யுத்த விரும்பிகளாக உள்ள மலட்டுக் கூட்டம், யுத்தத்தை வெறுக்கும் மக்களின் உணர்வுகளை நலமடிக்க முடியாது. அதாவது யுத்தத்தின் தேவையை மக்கள் முன் உருவாக்க முடியாது. பாசிசத்தைக் கொண்டு மக்களை அடக்கி அடிமைப்படுத்தலாம், ஆனால் மக்களை ஒருநாளும் வெல்லமுடியாது. புலிகள் ஒவ்வொரு கணமும் மக்களிடம் மேலும் மேலும் அன்னியமாகி ஆழமாக தோற்கின்றனர். இதனால் எதிரியுடனான யுத்தத்தில் தோற்கடிக்கப்படுகின்றனர்.

பி.இரயாகரன்
08.04.2007