முதல் தேர்தல் நடைபெறத் தொடங்கியதிலிருந்தே நாம் காங்கிரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏனெனில், அது தேவையின்றி நம்முடைய உரிமைகளில் தலையிடுகிறது. காங்கிரஸ் தலைவர் பண்டித நேருவைப் பாருங்கள். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட பட்டியல் சாதியினரின் நலன்களுக்காக அவர் பேசியதில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, நம் மக்கள் மீது என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். பண்டித நேரு எப்பொழுதும் முஸ்லிம்களுக்காகவே இருக்கிறார். முஸ்லிம்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால், அதிக பாதுகாப்பு தேவைப்படும் பிற சமூகங்களின் நிழலில், முஸ்லிம்கள் அதிக சலுகைகளைப் பெற்றுவிடக்கூடாது.
பண்டித நேருவிடம் பட்டியல் சாதியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்ததாக நான் அறிகிறேன். அதற்கு நேரு, அந்த மக்களுக்கு எல்லாமே செய்தாகிவிட்டது. அவர்களுக்கென சிறப்பாக எதையும் செய்யத் தேவையில்லை என்று சொன்னாராம். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் அதிகாரிகள், நம் மக்களை இழிவான வேலைகளை செய்வதற்காக பாகிஸ்தானிலேயே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். நான் பட்டியல் சாதியினரை அங்கிருந்து வெளியேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நேருவிடம் கேட்டேன். ஆனால், அவர் எதையும் செய்ய முன்வரவில்லை. நான் இருவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி, நம் மக்களை அழைத்து வரச் செய்தேன். நம்முடைய “மகர்’ படையும் அங்கு சென்று பட்டியல் சாதியினருக்குப் பாதுகாப்பு அளித்தது. காங்கிரஸ் தலைவர் நம் மக்கள் மீது இவ்வளவு “இரக்கமுடன்’ நடந்து கொண்டால், காங்கிரஸ் கட்சி மட்டும் நமக்கு என்ன செய்துவிடும்?
தற்பொழுது இந்தியாவின் அரசியல் வரைபடம் மாறிவிட்டது. முதலில் காங்கிரஸ் சுயராச்சியத்திற்காகப் போராடியதால், அனைத்து மக்களும் அதில் இணைந்தனர். காங்கிரசை எதிர்த்தவர்கள் தேச விரோதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால், தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியினரைப் பாருங்கள். ஒரு காலத்தில் “பார்கவா’ மற்றும் “சச்சார்’ ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். ஆனால், தற்பொழுது அவர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர். இவ்விரு பிரிவினருமே பிரதமர்களாக விரும்புகிறார்கள். பீகாரிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. பிரிவினையின்போது வலுவாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, குறுகிய காலத்திலேயே பலவீனமடைந்து விட்டது.
இன்று காந்தி தொப்பி அணியும் ஒருவர் நாகரிகமானவராகக் கருதப்படுவதில்லை. மக்கள், “காங்கிரஸ்காரர்’ அல்லது “நாகரிக மனிதர்’ என்றே அழைக்கிறார்கள். இருவரும் ஒரே மனிதராகக் கருதப்படுவதில்லை. இதுதான் காங்கிரசின் தற்போதைய நிலை. காங்கிரசுக்கு வயதாகிவிட்டதால் அதனால் போராட முடியவில்லை. அது விரைவில் இயற்கை மரணத்தை அடைய நேரிடும். எனவே, நீங்கள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.
பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு பத்தாண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், தீண்டாமை நீடித்திருக்கும் வரை, இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் மறைந்த சர்தார் வல்லபாய் படேல் என்னை எதிர்த்தார். எனவே, நம்முடைய உண்மையான பிரதிநிதிகளை சட்டப் பேரவைகளுக்கு அனுப்பினால்தான், அவர்கள் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள். அப்பொழுதுதான் இடஒதுக்கீட்டு உரிமைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் பாதுகாக்கப்படும். ஆனால், பிற கட்சிகள் நம்முடைய வாக்குகளையும் நம்முடைய தொகுதிகளையும் கைப்பற்றவே விரும்புகின்றனர்; அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பதில்லை.
ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை ஒதுக்கும் போது, நம்முடைய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் ஓர் அகில இந்தியக் கட்சியாகக் கருதப்பட்டது. பிற கட்சிகள் பசு, குதிரை, கழுதை போன்ற சின்னங்களை கேட்டனர். ஆனால், நம்மக்களின் வசதிக்காக நான் யானைச் சின்னத்தைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் நம்முடைய வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் நம் மக்களுக்கு சிக்கல் இருக்காது. பிற விலங்குகளிலிருந்து யானையை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும்.
தேர்தலில் இம்முறை தனித் தொகுதிகளில் வாக்காளர்கள் இரு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று, தனித் தொகுதி வேட்பாளருக்கும் மற்றொன்று பொதுத் தொகுதி வேட்பாளருக்கும். நாம் ஒரு வேட்பாளருக்கு இருவாக்குகளை அளிக்க முடியாது. எனவே, நாம் சில கட்சியினருடன் கூட்டணி வைத்தாக வேண்டும்.
நம்முடைய கூட்டணிக் கட்சி எது என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நமது வேட்பாளர்களை ஆதரிப்பார்கள். இவ்வகையில் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
நன்றி:தலித்முரசு