04012023
Last updateபு, 02 மார் 2022 7pm

எதிர்ப்பதும் எமது மரபு!

யமுனா ராஜேந்திரன் தேசம் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையில் ஒரு பகிரங்க கருத்தாடலுக்கு என்னை அழைத்துள்ளார். நான் மிக்க மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கும் யமுனாவுக்கும் இனி நடக்கவிருக்கும் கருத்தாடலில் என் தரப்பிலிருந்து வெளியாகும் முதலாவது கட்டுரையிது.

 

பத்து வருடங்களாகத் தன்னை நான் தொடர்ந்து தாக்கிவருவதாகக் குறைப்படும் யமுனா தாக்குதலிற்கான காரணங்களாக என்னில் பொறாமை, தந்திரோபாயம், சதி செய்தல், அவதூறு செய்தல், போன்ற பண்புகள் குவிந்திருப்பதாகவும் இப் பண்புகளுடைய ஒருவரைக் குமிஞ்சானெத் தங்கள் ஊரில் அழைப்பார்கள் என்றும் சொல்கிறார்.

 

1995ல் யமுனா ஈழமுரசில் எழுதிவந்த சினிமா குறித்த கட்டுரைகளின் மீதான எதிர்வினையாக ஈழமுரசில் "சோவியத் யூனியனின் சினிமாவும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்" என்றொரு கட்டுரையை எழுதியிருந்தேன். இதன் பின்னாக அம்மா இதழில் யமுனா எழுதிய "பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்" என்ற கட்டுரையின் மீதான விமர்சனமாக அம்மா - 9 இதழில் "சிங்குச்சா சிங்குச்சா சிவப்புக்கலரு சிங்கிச்சா" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினேன். இதையொட்டி நடந்த விவாதங்களின் நீட்சியாக எக்ஸிலில் எழுதிய ஒரு சிறுகதையில் யமுனாவின் மேலோட்டமான விமர்சன முறைகளைக் கிண்டல் செய்து கதையின் ஒரு பகுதியை எழுதினேன். சில மாதங்களிற்கு முன்பு எஸ்.வி. ராஜதுரையின் நூலொன்றுக்கு எழுதிய மதிப்புரையில் "ஒரு மண்ணும் விளங்காமல் வெறும் மலிவான அரசியல் சொற்தொடர்களை அள்ளிவீசிப் பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்றவற்றை மட்டுமல்லாமல் மார்க்ஸியத்தையும் கொச்சைப்படுத்தி இலக்கியச் சூழலில் தகிடுதத்தம் செய்பவர் யமுனா ராஜேந்திரன்" என்றெழுதினேன். புதுவிசை இதழுக்கு வழங்கிய நேர்காணலில் "அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனை முறைமைகளும் அவை சார்ந்த கலை இலக்கிய வெளிப்பாடுகளும் விமர்சன மரபுகளும் ஒரு பேரலையெனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து அதுவரையிருந்த இலக்கிய பீடங்களையும் ரசிகமணி விமர்சகர்களையும் கவிழ்த்துப் போட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.


‘கண்டதையும் தின்றுவிட்ட வாலைத் தூக்கிக் கழிக்கும் மிருகங்கள்’ என்றார் சுந்தர ராமசாமி. ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என்றார் யமுனா ராஜேந்திரன்" எனச் சொன்னேன். இதைத் தவிர வேறெங்கும் நான் யமுனாவை விமர்சித்திருப்பதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படியான வேறு தருணங்களை யமுனாவும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கவில்லை.

 

நான் யமுனாவின் எழுத்துகள் மீது வைத்தவையெல்லாம் மிக வெளிப்படையான விமர்சனங்கள். தன்னுடைய எழுத்துகள் மீது எதிர் விமர்சனங்களே இருக்கக்கூடாது என யமுனா எதிர்பார்க்கக்கூடாது. "மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில், காக்கை யுகக்கும் பிணம்" என்பார் ஒளவைப் பிராட்டி.

 

நான் விமர்சனம் என்ற பெயரில் தன்மீது தனிநபர் தாக்குதலைத் தொடுக்கிறேன், விஷத்தைக் கக்குகிறேன் என்பது யமுனாவின் கட்சி. யமுனா குறித்து நான் எழுதிய விமர்சனங்களில் முன்னவை இரண்டையும் தோழர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுத் தேடினால் ஈழமுரசு பத்திரிகையிலும், அம்மா – 9 இதழிலும் படிக்கலாம். பின்னைய இரு ஒற்றைவரிக் குறிப்புகளையும் நான் மேலே கொடுத்துள்ளேன். இவற்றைப் படித்த பின்பு நான் யமுனாவின் மீது நிகழ்த்தியது நியாயமான விமர்சனமா அல்லது தனிநபர் தாக்குதலா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ள முடியும். அப்படி நான் யமுனா மீது அவரின் பிறப்பின் அடிப்படையில் சாதிரீதியான விமர்சனமோ அல்லது அவரின் தனிப்பட்ட வாழ்க்கைமுறைமீது விமர்சனங்களை வைத்ததாகவோ யமுனா கருதுவாராயின் அந்தக் குறிப்பிட்ட வரிகளையோ பகுதிகளையோ யமுனா மேற்கோளாகச் சுட்டிக்காட்டுவதுதான் நேர்மையான செயல். யமுனா அப்படி எதையும் தனது கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கவில்லை. இனிமேலாவது அந்தப் பகுதிகளை யமுனா சுட்டிக்காட்ட வேண்டும். அதை விடுத்து விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியற்று "ஷோபாசக்தி தனிநபர் தாக்குதல் நிகழ்த்துகிறான்" என யமுனா மூக்காலே அழுவது யோக்கியமாகாது.

 

2

எனது 'ஈழமுரசு' எதிர்வினையில் வெறுமனே பொறாமை மட்டுமே பொங்கி வழிகிறதென்பது யமுனாவின் குற்றச்சாட்டு. ஷோபாசக்திக்கு தமிழ் தவிர வேறுமொழிகள் தெரியாது என்றொரு பழிப்பு வேறு. எனக்குப் பிறமொழிகளோ அல்லது பிறமொழித் திரைப்படங்கள் குறித்தோ அதிகமாகத் தெரியாது என்று சொல்லித்தான் நான் அந்தக் கட்டுரையையே ஆரம்பித்திருப்பேன். இரண்டு நாட்களில் எட்டுத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்ததாகக் கூறி அந்த எட்டுப்படங்களுக்கும் தவளைப் பாய்ச்சல் நடையில் யமுனா சூட்டோடு சூடாக விமர்சனங்களையும் எழுதியிருந்தார். "இது எப்படிச் சாத்தியம்? இது நுனிப்புல் மேய்தலாகாதா?" என நான் சந்தேகத்தை எழுப்பியிருந்தேன். எனது இந்தச் சந்தேகத்திற்கு யமுனா பொறாமையெனப் பெயரிட்டால் அதற்கு நானென்ன செய்ய முடியும்.

 

தவிர தமிழ்ப் பெண் இயக்குனர்கள் குறித்து யமுனா கொடுத்த பட்டியலிலுள்ள விடுபடல்களையும், பாலுமகேந்திராவின் சினிமாக்கள் குறித்தும் மாற்றுச் சினிமா இயக்குனர்கள் குறித்தும் அவர் வழங்கியிருந்த பட்டியல்களிலுள்ள விடுபடல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஒரே நாளில் நான்கு படங்கள் பார்த்து விமர்சனம் எழுதப்போனால் இப்படியான விடுபடல்களும் நுனிப்புல் தின்பதும் தவிர்க்கமுடியாது, ஆகையால் தலைவரே கொஞ்சம் நிதானியுங்கள் என்றேன். இதற்குப் பொறாமையென்றா பெயர்?

 

எனது எதிர்வினையின் மையம் யமுனா, மணிரத்தினத்தைக் குறித்தம் கமல்ஹாஸனைக் குறித்தும் கட்டியெழுப்பிய பிரமைகளின் மீதான விமர்சனமாகவேயிருந்தது. “மாற்றுச் சினிமாக் கூறுகளை வெகுஜன சினிமாத் தளத்துக்குள் உள்ளேயேயிருந்து கமல்ஹாஸன் உருவாக்க முனைகிறார்” என்றெழுதினார் யமுனா. இதென்ன பேய்க்கதை என்று சாடிய நான் “ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் பொலிஸ் நாய்களுக்குக் குருதிப்புனலில் பாராட்டு, நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களைப் பாதுகாக்க ஒரு தேவர் மகன், மகளிர் மட்டும் படத்தில் 'காளைமாடு ஒண்ணு கறவைமாடு மூணு', இவருக்கெல்லாம் ஒரு சினிமா அதற்குச் சிவப்பக்கம்பளம் விரிக்க ஒரு யமுனா” என்றெழுதினேன். அந்த 'மாற்றுச் சினிமா' கமல்ஹாசன் இந்துத்துவா மனோபாவத்துடன் இயங்குபவர் என்பதை 'ஹேராம்' மூலமும் அவர் தலித் மக்களின் விரோதி என்பதை 'தேவர் மகன்' மூலமும் 'சண்டியர் என்ற விருமாண்டி' மூலமும் திருநங்கைகள் மீதான அவரின் வக்கிரத்தை 'வேட்டையாடு விளையாடு' மூலமும் காலம் இன்று நிரூபித்துத்தானுள்ளது.

 

அக்காலத்தில் யமுனா இயக்குனர் மணிரத்தினத்தை வெகுவாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார். 'ரோஜா', 'பம்பாய்' போன்ற இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகளாகவும் இந்துக் கதாநாயகர்களைத் தேசபக்தர்களாகவும் சித்திரிக்கும் படங்களையெல்லாம் அவர் வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார். 'மணிரத்தினத்தின் சினிமா' என்று ஒரு தனிப் புத்தகமே தலைவர் போட்டிருக்கிறார். என் எதிர்வினையில் மணிரத்தினம் குறித்த யமுனாவின் மதிப்பீட்டை நான் கண்டித்தேன்.

 

"காஷ்மீரிகள் காலம் காலமாய் இந்திய இராணுவத்தால் எரியுண்டு கிடப்பவர்கள். பதிலுக்கு அவர்கள் இந்தியத் தேசியக் கொடியை எரிக்கிறார்கள். எரியும் கொடியில் விழுந்து புரண்டு அரவிந்தசாமி இந்திய அய்க்கியத்தைக் காப்பாற்றுகிறாராம். இந்தியாவின் ரம்போவைக் கண்டு விசிலடிக்காத குறையாக உச்சி குளிர்ந்துகிடக்கிறார் யமுனா" என்றும் "உழைக்கும் வர்க்கத்துக்குக் குந்தியிருக்க நிலம் கிடைக்க வழி கூறுபவன் மாற்றுச் சினிமாக்காரன். குச்சி குச்சி ராக்கம்மா சொல்லிக்கொடுத்த மணிரத்தினம் மோசடிக்காரன்" என்றும் நான் எழுதியிருந்தேன். மணிரத்னத்தின் அப்பட்டமான இந்துத்துவச் சாய்வையும் திராவிட இயக்க எதிர்ப்பையும் வலதுசாரித்தனத்தையும் அவரின் பிற்காலத்திய படங்களும் -குறிப்பாக 'இருவர்', 'குரு' - உறுதி செய்துள்ளன.

 

நான் காலையில் 'புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகத்தின்' அரசியல் வகுப்புகளிற்கும் மாலையில் 'தொழிலாளர் பாதை' பத்திரிகை விற்பதுமாகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் இந்த எதிர்வினையை எழுதியிருந்தேன். எனவே அந்த எதிர்வினையில் கொஞ்சம் தூக்கலாகவே 'வர்க்கம்', 'புரட்சி' போன்ற சொற்கள் விரவிக்கிடக்கும். எனது இந்த எதிர்வினையில் யமுனாவுக்கு உடன்பாடில்லாமலிருப்பது வேறு விசயம். அது அவரின் உரிமை. ஆனால் எனது எதிர்வினை மொத்தத்தையும் பொறாமை, சதி, சூழ்ச்சி, ஷோபாசக்திக்கு ஆங்கிலம் தெரியாது போன்ற சொல்லாடல்களால் மிஸ்டர் யமுனா ராஜேந்திரன் எதிர் கொள்வது என்ன நியாயம்? எவ்வகையான அறம்?

 

இதற்குப் பின்பு அம்மா (1998) இதழ்களில் "பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்" என்ற தலைப்பில் யமுனா ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையிலுள்ள பிரச்சினைகளையும் அபத்தங்களையும் குளறுபடிகளையும் குறித்து அ.மார்க்ஸ், சேனன், வின்சன்ட் மற்றும் நான் 'அம்மா' இதழ்களில் நான்கு தனித்தனிக் கட்டுரைகளை எழுதினோம். வளர்மதி 'எக்ஸில்' ஏழாவது இதழில் 'வாதம்னா வாதம்' என்றொரு கட்டுரையை எழுதினார். ஆனால் நாங்கள் அய்ந்துபேர் சேர்ந்தும் கூட எங்களால் யமுனாவின் கட்டுரையிலுள்ள அபத்தங்களை முழுவதுமாகக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மறிய வீட்டுச் சோற்றில் கற்களைப் பொறுக்குவது போலப் பொறுக்கப் பொறுக்க யமுனாவின் பிரதியில் அபத்தங்கள் பெருகிக்கொண்டேயிருந்தன. பொறுக்கிய அய்வரிலும் என்னைத் தவிர மற்றைய நால்வரும் பின்நவீனத்துவத்தை மூலமொழிகளிலேயே படிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். யமுனா சார்! ப்ளீஸ் நோட் த பாயின்ட்.

 

அந்தக் கட்டுரையில் "தலித்தியம் ஒரு குறுங்குழுவாதப் போக்கு" என்றார் யமுனா. தலித் அரசியலாளர்கள் சந்தர்ப்பவாதக் கூட்டுகளை ஏற்படுத்துகிறார்கள் என்ற யமுனா "ராமதாஸ், பிஜேபி, வைகோ, ஜெயலலிதா கூட்டு அத்தகையது என்றெழுதினார். அய்யா உங்களுக்கு தலித் என்றாலே என்னவென்று புரியவில்லை. இந்த நான்கு கட்சிகளில் எந்தக் கட்சி தலித் கட்சி? என்று நான் கேட்டெழுதினேன். "புகலிடத்தில் தலித்தியத்திற்கான நியாயங்கள் விவாதத்துக்குரியவை" என்பது யமுனாவின் இன்னொரு மானுடவியல் கண்டுபிடிப்பு. எனக்கு வந்த விசருக்கு "பத்மநாப அய்யரின் தொகுப்புகளில் படுகிடையாய் கிடந்து ஆசிரியப் பணியாற்றினால் யமுனாவுக்கு இந்தச் சந்தேகமும் வரும் இதற்கு மேலேயும் வரும்" என்ற பொருள்பட எழுதினேன்.

 

"பக்தி இயக்கம் பரந்துபட்ட மக்கள் நலன்களை இணைத்தது என்று வரலாறு இருக்கிறது" என்றார் யமுனா. "அப்படியெல்லாம் ஒரு புண்ணாக்கும் கிடையாது. சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுளமே என்று சம்மந்தர் தேவாரம் பாடியதும், பக்தி இயக்க காலங்களிலே சமணர்களும் பவுத்தர்களும் கூண்டோடு கழுவிலேற்றப்பட்டதும்தான் வரலாறு" என்றேன் நான். தனது கட்டுரையில் 'கற்பழிப்பு', 'தேவடியாள்' போன்ற ஆணாதிக்கச் சொற்களை யமுனா உபயோகித்திருப்பதைச் சுட்டிக்காட்டி யமுனா திருத்திக்கொள்ள வேண்டுமென்றேன். தோழியர் ஓவியாவைத் தலித் கோட்பாட்டாளாராக யமுனா சொல்வது தவறென்றேன்.

 

"பின்நவீனத்துவம் அராஜகமும் வன்முறையும் நிறைந்த நம்பிக்கையின்மைக் கோட்பாடு" என்றெழுதிய யமுனா அடுத்த வரிகளில் "நல்ல கூறுகளை பின்நவீனத்துவத்திலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்" என்றெழுதினார். அராஜகமும் வன்முறையும் நிறைந்த கோட்பாட்டிலிருந்து என்ன நல்ல புடலங்காயை யமுனா பிரித்தெடுக்கப்போகிறார் என்று நான் கேட்டேன். தத்துவங்களையும் கோட்பாடையும் கடுமையாக விமர்சிக்கும் பின்நவீனத்துவத்தையே யமுனா ஒரு கோட்பாடு எனச் சுட்டிக்காட்டுவது சரியா எனக்கேட்டேன். (அதெல்லாம் ரொம்பத் தப்பு என்று வளர்மதியும் அ.மார்க்சும் சேனனும் தங்கள் கட்டுரைகளில் யமுனாவைப் பவுடர் செய்தார்கள்.) இப்படியாக யமுனாவின் கட்டுரையிலுள்ள பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். வாய்ப்புள்ள தோழர்கள் எனது கட்டுரை வெளியாகிய அம்மா – 9 இதழைப் படித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கட்டுரையில் பின்நவீனத்துவம் குறித்து மட்டுமல்ல மார்க்ஸியம், தலித்தியம், இலக்கியம் குறித்த்தெல்லாம் யமுனா எழுதியவை வெற்று அலம்பல்களும் புலம்பல்களுமே என்பது எனது நிலைப்பாடு. ஆக யமுனாவின் கட்டுரையை நான் நேராக எதிர்கொண்டு எனது விமர்சனங்களைப் பகிரங்கமாக வைத்தேன். என் விமர்சனத்தில் அவருக்கு உடன்பாடில்லாமலிருக்கலாம். என்னைப் பொருட்படுத்திப் பதில் தராதிருப்பதும் அவருடைய உரிமை. ஆனால் இவ்வாறாகக் கேள்விகளை எழுப்புவதும் விமர்சிப்பதும் குமிஞ்சான்தனம் என அவர் கொடுக்கிழுத்துக் கட்டிக்கொண்டு என்னோடு மல்லுக்கு நிற்பது அழிவழக்காடுதல் அல்லவா. இவ்வளவு நடந்த பின்பும் விவாதங்கள் எழுந்தபோது நாங்கள் எந்த நேர்மையான எதிர்வினைகளும் செய்யவில்லை என்று யமுனா புளிப்புக் காட்டுவதை எப்படிப் புரிந்துகொள்வதுது?

 

ஒரு மண்ணும் விளங்காமல் யமுனா பின்நவீனத்துவம் பற்றிப் பேசிக்கொண்டிக்கிறார் என்ற என்னுடைய விமர்சனம் கபடத்தனம் என்பார் யமுனா. தேசத்தில் வெளியாகிய தன்னுடைய கடைசிக் கட்டுரையில் கூட "நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன்: காலனிய எதிர்ப்பு இந்துத்துவமும், மேற்கத்திய மற்றும் மார்க்சிய எதிர்ப்பு அரசியல் இஸ்லாமும், நரேந்திர மோடியும் பின்லாடனும் ‘பின்நவீனத்துவ’ உற்பத்திகள்தான்" என்கிறார் யமுனா. கோத்ரா ரயில் எரிப்பும், அதைத் தொடர்ந்து 2000 இஸ்லாமியர்கள் மோடியால் படுகொலை செய்யப்பட்டதையும், இன்று குஜராத்தில் இஸ்லாமியர்கள் கடுமையாக மோடியின் அரசால் ஒடுக்கப்படுவதையும் இந்துப் பாஸிசச் செயற்பாடாகத்தான் நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். அருந்ததிராய் முதற்கொண்டு நமது தமிழகத்துச் சிறுபத்திரிகையாளர்கள் வரைக்கும் இப்படியாகத்தான் சொல்கின்றார்கள். ஆனால் யமுனாவோ இந்துப் பாஸிசத்தின் குற்றங்களை பின்நவீனத்துவத்தின் மீது தூக்கிப்போடுகிறார். இது ஒரு ஆர். எஸ் .எஸ்.காரர் செய்யும் வேலையல்லவா? இந்தத் தருக்கத்தின் அடிப்படையில் சங்கரராமனைக் கொலைசெய்த சங்கராச்சாரியும் பின்நவீனத்துவாதிதான் என்ற முடிவுக்கு யமுனாவால் மட்டுமே வந்துசேர முடியும். பின்லேடனுக்கும் பின்நவீனத்துவத்திற்கும் “பின்” என்ற எழுத்துக்களைத் தவிர வேறென்னய்யா சம்மந்தம்? ஒரு புறத்தில் மேற்கிலேயே பின்நவீனத்துவம் செல்வாக்கிழந்து விட்டது என்று சொல்லிக்கொண்டே மறுபுறத்தில் இன்றைய உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த போக்குகளான மேற்கத்திய மார்க்ஸிய எதிர்ப்பு அரசியல் போக்குகளும் இந்தியாவையே ஆட்சி செய்த மோடியின் பிஜேபியும் அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் நம்ம பின்லேடனும் பின்நவீனத்துவ உற்பத்திகள்தான் என்று சுய நினைவுள்ள எவராவது எழுதுவார்களா? தனது கட்டுரை நெடுகிலும் குடிகாரன் என்றெழுதி என்னைக் கௌரவப்படுத்தியதற்கு யமுனாவுக்கு நன்றி. நான் குடித்தால் சலம்புவேன், பாட்டுப் பாடுவேன், ஆனால் கட்டுரையெல்லாம் எழுதமாட்டேன்.

 

ஆக, பின்நவீனத்துவத்திற்கும் பிஜேபிக்கும் பின்லேடனுக்கும் உள்ள தொடர்பை யமுனா நிறுவும் வரை பின்நவீனத்துவம் குறித்து யமுனாவுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

"அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்ற எழுத்துகளை சமூக விரோத எழுத்துகள் என்கிறார் யமுனா" என்று 'புதுவிசை' இதழின் நேர்காணலில் நான் சொன்னேன். "இது அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு, நான் அப்படிச் சொல்லவேயில்லை" என்கிறார் யமுனா. இல்லை அப்படித்தான் சொன்னார் என்கிறேன் நான். இப்போது விஷயத்துக்கு வருவோம்.

 

நமது நண்பர் சாருநிவேதிதா இன்று பாபாவின் பக்தராகிப்போனதையும் அவர் நல்லி குப்புசாமியின் நிழலில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளைச் செய்வதையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது குறித்து நாங்கள் வெளியிட்ட 'அநிச்ச' பத்திரிகையிலும் எழுதியிருக்கிறோம். இந்த மோதல்களின் தொடர்ச்சியில் 'தீராநதி' இதழ் நேர்காணலில் சாரு என்னைத் தும்பு தும்பாய்க் கிழித்துத் தோரணம் கட்டியதையும் தோழர்கள் படித்திருக்கக்கூடும்.

 

ஆனால் சாருவின் இன்றைய குத்துக்கரணங்களால் சாரு என்ற புனைகதை எழுத்தாளன் தமிழ் இலக்கியத்தில் செய்த பாய்ச்சல்களையும் சாதனைகளையும் என்னால் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. சாருவின் கடைசி நாவலான 'ராசலீலா' வையும் அவர் வாரமலர்களில் எழுதிய சிறுகதைகளையும் தவிர்த்து அவரின் ஒட்டுமொத்த புனைகதை எழுத்துகளுக்கும் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நிரந்தரனமான இடமிருக்கிறது என்பதைத் தமிழின் அத்தனை முக்கியமான இலக்கிய விமர்சகர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்பொழுது மலையாளத்திலும் சாருவின் கொடி பறக்கிறது. பின்நவீனத்துவம் சார்ந்த புனைகதை முயற்சிகளைத் தமிழில் ஆரம்பித்து வைத்தவர்களில் சாருவே முதன்மையானவர். 'எக்ஸிஸ்டென்ஸியலிசமும் பான்ஸி பனியனும்', 'ஸீரோ டிகிரி', 'நேநோ' போன்ற நூற்கள் சாருவின் புதுவகை எழுத்துகளிற்குச் சாட்சி.

 

பண்பாடு, மொழி, சமூக ஒழுங்குகள், தேசியப் பெருமிதங்கள் எல்லாவற்றையும் தனது எழுத்தால் மீறிப் பார்த்தவர் சாரு. பின்நவீனத்துவ அறிதல் முறைகளால் உந்தப்பட்டு எழுதும் சாருவின் எழுத்தையோ, சுகனின் எழுத்தையோ ஆபாச எழுத்துகள், சமூகவிரோத எழுத்துகள் என்ற வகைக்குள் அடக்கிவிடுவது யமுனாவின் விமர்சன உரிமையென்றால் இத்தகையை எழுத்துகளை சீரணிக்க முடியாதவர்களும், கலாச்சாரப் பொலிஸ்காரர்களும், வெள்ளை வேட்டிக் கள்ளர்களும் இவ்வகை எழுத்துகளை சமூகவிரோத எழுத்துகள் என்று சொல்லி எதிர்க்கிறார்கள் எனச் சொல்வது என் உரிமை.

 

ஆனால் யமுனா வெறும் விமர்சனத்தோடு நின்றுவிடவில்லை. அவர் சாருநிவேதிதா 'உன்னத சங்கீதம்' என்ற கதையை எழுதியதற்காக தண்டனையையும் சிபாரிசு செய்தார். 'உயிர்நிழல்' மார்ச்- ஏப்ரல் 2001 இதழில் பக்: 25ல் யமுனா என்ற கலாச்சாரப் பொலிஸ் இப்படி எழுதினார்:


"மனித உரிமை குறித்து அதி அக்கறைகொண்ட மேற்கத்திய நாடுகளில் சாநியின் இம்மாதிரியான போர்னோகிராபி எழுத்துகள் குற்றப்பிரிவின் கீழ் வரும் என்பதை நாம் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. மின்கம்பங்கள் அதீதமானவை என்பதில் சந்தேகமில்லை. நாகரீக சமூகங்களில் சிறைச்சாலைகளையும் பெரும்பாலான வேளைகளில் மனோசிகிச்சைக் காப்பகங்களையும் சிலரைப் பொறுத்துப் பாவிக்கத்தான் வேண்டியிருக்கிறது."

 

முதலில் மேற்கு நாடுகளின் அதி அக்கறையான மனித உரிமைகள் குறித்த யமுனாவின் போதனைக்கு நன்றி. வியட்நாமிலும் அல்ஜீரியாவிலும் ஈராக்கிலும் இலங்கையிலும் அவர்களின் மனிதாபிமானத்தைக் கண்டு நாம் வியந்திருக்கிறோம் என்பது நிற்க, ஒருவரின் எழுத்துக்காக அவரைச் சிறையிலடைக்கலாம் என்று சிபாரிசு செய்யும் ஒருவருக்குக் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதையிருக்கிறது. "நீ சொல்லும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதைச் சொல்லும் உனது உரிமைக்காக நான் உயிரைக் கொடுத்தும் போராடுவேன்" என்று வால்டேயர் சொன்னதை முகப்பில் போட்டுத் தங்கள் கட்டுரைகளையோ பின்னூட்டங்களையோ எழுதினால் மட்டும் போதாது. அதைக் கடைப்பிடிக்கவும் தோழர்கள் முயற்சி செய்ய வேண்டும். நாளையே அடூர் கோபாலகிருஷ்ணன், சேகர் கபூர் மாதிரியாகச் சினிமாவை நன்கு தெரிந்த ஒருவர் இந்தியாவின் பிரதமரானால் யமுனா ராஜேந்திரன் எழுதும் மோசமான சினிமாக் கட்டுரைகளுக்காகவே யமுனாவைத் தூக்கி உள்ளே போடுவார் என்பது சர்வ நிச்சயம். ஆனால் அப்போதும் நாங்கள் எழுதுவதற்காக ஒருவரைச் சிறையிலடைப்பது அராஜகம் என்று குரல் கொடுக்க வேண்டுமே தவிர யமுனாவைப்போல 'சாருவைச் சட்டப்படி சிறையிலடைக்க வேண்டும்' என்று அகராதி பேசக் கூடாது.

 

"மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப்போக்கு இருத்தலியல்" என்று நான் எழுதியதைப் படிக்கும்போது யமுனாவுக்குக் குண்டியில் தட்டிச் சிரிக்கத் தோன்றுகிறதாம். யமுனா எதால் எங்கே தட்டிச் சிரிப்பார் என்பது என்னுடைய பிரச்சினையல்ல. என்னுடைய பிரச்சினையெல்லாம் இருத்தலியல் மார்க்ஸியத்துக்குப் பிந்திய சிந்தனையல்ல என்று 'தேசம்' கட்டுரையில் மறுக்கும் யமுனா அந்த மறுப்பிற்கான காரணங்கள் எதையும் வைக்கவில்லை. அப்படியானால் இருத்தலியல் மார்க்ஸியத்திற்கு முந்திய சிந்தனைப் போக்கு என்கிறாரா யமுனா? இங்கே ஒரு தத்துவார்த்தச் சிக்கலும் கிடையாது. வெறும் காலம் குறித்த கேள்விதான் இது. எனக்குத் தெரிந்து மார்க்ஸியம் என்றவொரு தத்துவம் பருமட்டாக உருவாகி அரைநூற்றாண்டுக்குப் பின்புதான் இருத்தலியல் என்ற சிந்தனை அறிவுப் புலங்களில் கோட்பாட்டுருவாக்கம் கொள்கிறது. இல்லையென்கிறாரா யமுனா? யமுனா குண்டியில் தட்டிச் சிரிப்பதை நிறுத்திவிட்டு முதலில் இதை விளக்க வேண்டும்.

 

நான் கடந்த பத்துவருடங்களாக யமுனாவின் மீது வைத்த விமர்சனங்களின் சாரங்களையும் தருணங்களையும் மேலே முழுவதுமாக விளக்கியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். என் பதிலில் யமுனா போதாமைகளை உணருவாரானால் அவற்றை அவர் தெரிவிக்கும் பட்சத்தில் மேலும் விளக்கங்களைத் தர நான் கடமைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இனி, யமுனா என் எழுத்துகளுக்கு அப்பால் என் 'தகிடுதத்தங்களை' அம்பலப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பார்க்கலாம். "தண்ணியும் பாரின் கரன்சியும் ஓடவிட்டு, நீங்கள் குமுதத்திலும் ஆனந்த விகடனிலும், இந்தியா டுடேயிலும் நேர்முகம் தருகிறீர்கள்" என்கிறார் யமுனா. நல்லது. என்னை 'ஆனந்தவிகடனுக்காக' நேர்காணல் செய்தவர் டி. அருள்எழிலன். அவர் ராஜாங்கத்தின் முடிவு என்ற குறும்படத்தின் இயக்குனர், நடிகர். 'இந்தியா டுடே'க்காக என்னை நேர்கண்டவர் பீர் முகமது. சிறந்த கட்டுரையாளர். எங்களது கறுப்புத் தொகுப்பிற் கூட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். 'குமுதத்திற்காக' நேர்கண்டவர் கடற்கரய். கடற்கரய் ஒரு கவிஞர். 'தீராநதி'க்காக என்னை நேர்கண்டவர் தளவாய் சுந்தரம். தளவாய் சுந்தரம் சிறுபத்திரிகைகளில் நீண்டகாலமாகக் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர். இவர்கள் நால்வருமே எனது வாசகர்கள். என்னை நேர்காணலிற்காக விகடன் நிர்வாகமோ குமுதம், இந்தியா டுடே நிர்வாகமோ தொடர்புகொள்ளவில்லை. இந்தத் தோழர்களே என்னை அணுகி நேர்காணல்களைப் பெற்றுச் சென்றார்கள். இப்போது சொல்லுங்கள் யமுனா! இந்த நால்வரில் எவர் என்னிடம் பணமும் தண்ணியும் வாங்கிக்கொண்டு எனது நேர்காணலை வெளியிட்டார்கள்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படியொரு கேவலமான குற்றச்சாட்டைச் சுமத்துகிறீர்கள்? என் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு இந்த அவதூறுகளையா துணைக்கழைக்கிறீர்கள். நீங்கள் என்னை மட்டுமல்ல, அந்த நான்கு இளந் தோழர்களையும் சேர்த்தே அவதூறு செய்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். "தனிநபர் தாக்குதலைத் தவிர்த்து புதிய விமர்சனக் கலாச்சாரம் ஒன்றைத் தொடக்கி வைத்துள்ளீர்கள்" என்று உங்களை வாயார வாழ்த்தினார் பாருங்கள் நாவலன். அவரின் வாயில் சக்கரையைப் போடுவதா! இல்லைச் சயனைட்டைப் போடுவதா!!

 

இன்னுமொன்று, இந்த வெகுசன இதழ்களில் என்னைக்காட்டிலும் கவிஞர்கள் சேரனும், வ.ஐ.ச ஜெயபாலனும் அதிகமான பேட்டிகளை நிச்சயமாகக் கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்களை நோக்கி ஒருபோதும் இந்தப் பாரின் கரன்ஸி, தண்ணிக் குற்றச்சாட்டுகள் கிளம்புவதில்லை. அவர்கள் ஓடி ஓடிப் பேட்டி கொடுக்கிறார்கள் என்றும் ஒருவரும் பழிப்பதில்லை. ஆனால் என்னை நோக்கி மட்டும் பரவலாக ஏன் இப்படியான குற்றச்சாட்டுகள்? ஒரு வேளை பேட்டி கொடுப்பதற்குப் பல்கலைக்கழகப் பட்டம், ஆங்கிலப் புலமை, நாகரீகமான நடையுடை பாவனை போன்றவை இன்றியமையதாதது என்று தமிழ் கூறும் நல்லுலகம் கருதுகிறதோ தெரியவில்லை. தோழர்களே! வரலாற்றில் அறிவுஜீவிகளுக்கு மட்டுமல்ல தற்குறிகளிற்கும் ஒரு பாத்திரமிருக்கத்தான் செய்கிறது.

 

பிறர் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களில் நான் குடித்துவிட்டுத் தகராறு செய்கிறேன் என்பது யமுனாவின் இன்னொரு குற்றச்சாட்டு. நான் இதுவரை புகலிடத்தில் ஆகக் குறைந்தது இருநூறு கூட்டங்களில் கலந்துகொண்டிருப்பேன். சொல்லுங்கள் யமுனா! நான் எந்தக் கூட்டத்தில் குடித்துவிட்டுத் தகராறு செய்தேன்? எந்தக் கூட்டத்தின் அமைப்பாளர் உங்களிடம் இவ்வாறு முறைப்பாடு செய்தார்? நான் குடித்துவிட்டுத் தகராறு செய்த செய்தி எந்தச் சிறுபத்திரிகையில் வெளியானது. கூட்டங்களில் கேள்வி கேட்டிருப்பேன், கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டு மேலே பேசுங்கள் என்று சொல்லியிருப்பேன். நான் சற்று 'சபை நாகரிகம்' மீறியது பாரிஸில் நடந்த தோழர். கே. ஏ. குணசேகரனுடைய கூட்டத்தில் மட்டும்தான். அவர் புலிகளின் இந்துக்கோயிலில் போய் உரைநிகழ்த்தியது என்ன நியாயம் என்று கேட்டு அவர் சரியான சமாதானம் சொல்லும்வரை அவரைப் பேசவிடாமல் இடையூறு செய்தேன். கே.ஏ.ஜி.க்கும் எனக்குமுள்ள நெருங்கிய நட்பினால் அவரை உரிமையுடன் கோபித்துக்கொண்டேன். யமுனா சொன்னதுபோல நான் தகராறு செய்து எந்தக் கூட்டத்தையும் இதுவரை குழப்பியதில்லை. யமுனா நீங்கள் சொல்வது பச்சைப் பொய். ஆதாரம் தர முடியுமா? ஆதாரமில்லாமல் அயோக்கியத்தனமாய் எழுதுவது நீங்கள். ஆனால் அயோக்கியன் என்ற பட்டம் மட்டும் எனக்கு. இது நல்ல யாவாரந்தான்.

 

'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் குறித்து யமுனா வைத்த விமர்சனங்களுக்கு நன்றி. நான் இதுவரை என்னுடைய சிறுகதைகள் குறித்தோ என் நாவல்கள் குறித்ததோ வைக்கப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொன்னது கிடையாது. விமர்சனக் கூட்டங்களில் ஏற்புரை நிகழ்த்தியதும் கிடையாது. ஜெயகாந்தனை அடியொற்றிச் சொன்னால் என்னுடைய நாவல் சொல்லாத எதையும் நாவலுக்கு வெளியே என்னாற் சொல்லிவிட முடியாது.

 

ஆனால் விமர்சனம் என்ற எடுப்பில் யமுனா உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கசிய விடும்போது அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது.

 

'கொரில்லா'வை விமர்சிக்கும்போது 'தேசம்' இணையத்தில் "கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட நிலையில் மரணமுற்ற சீனர்களைக் கடத்தியவர்கள் நான்காம் அகிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரு தகவல் ‘ஷோ’வின் நாவலில் வருகிறது. ஆனால், அந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் தொழில்முறையிலான ஆள் கடத்தல்காரர்கள் என நீருபிக்கப்பட்டிருக்கிறது. ‘ஷோ’ இங்கு செய்திருப்பது பின்நவீனத்துவப் புனைவு அல்ல, அதிர்ச்சி மதிப்புக்காக மார்க்சியர்களைக் கொச்சைப் படுத்தும் ஒரு விவரணை" என்றெழுதுகிறார் யமுனா. நான்காம் அகிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள் கடத்தல் செய்தார்கள் என்று நான் எழுதவேயில்லை. "ஒரு ட்ரொஸ்கியக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவன், சில காலங்களிற்குப் பின்பு சீனர்களை லண்டனுக்குக் கடத்தியதில் சம்மந்தப்பட்டான் என்ற செய்தி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது" என்றுதான் எழுதியிருப்பேன்.

 

இடதுசாரிக் கட்சிகளிலிருந்து வெளியேறியவர்களை விடுங்கள், இடதுசாரிக் கட்சிக்குள்ளிருந்தே இப்படியான வேலைகளைச் செய்பவர்கள் குறித்து நாம் அறிந்ததில்லையா? அண்மையில் இந்தியாவையே உலுக்கிய நந்திகிராமச் சம்பவம் இவ்வகைப்பட்டது தானே. இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பின்பு பேர்போன சர்வாதிகாரிகளாய் உருவாகிய சம்பவங்களே வரலாற்றில் நிகழ்ந்திருக்கும்போது கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவன் இப்படியான தொழில்முறைக் கடத்தல்காரனாவதற்கு வாய்ப்பில்லையா? நான் கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவனைப் பற்றி எழுதும் போது, நான் நான்காம் அகிலத்தின்மீது பழிசுமத்தினேன் என்று அடாத்து வாசிப்புச் செய்யும் யமுனாவின் இலக்கிய நுண்ணுணர்வை நான் எந்த வார்த்தைகளால் அழைக்க? தலைவரே! நீங்கள் உங்களைச் சர்வதேச வாசகரென்று குறிப்பிட்டுள்ளீர்கள். சர்வதேச வாசகராயிருப்பதற்கு முன்னால் தமிழைச் சரிவர வாசிக்கும் வாசகராயிருக்க முயற்சி செய்யுங்கள்.

 

'ம்' நாவல் குறித்து "ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற குழந்தையை கர்ப்பமாக்கியதனை, அப் பெண் குழந்தையின் கண்களில் காதல் தெரிவதை எழுதுகின்ற ஷோவின் "ம்" நாவலது சித்திரிப்பும் குழந்தைகள் மீதான காதல் எனும் அளவில் சமூக விரோதமானதுதான். அதைச் சித்தரிக்கும் ஷோபாசக்தியும் சமூகவிரோதிதான்" எனத் தீர்ப்பிடுகிறார் யமுனா.

 

யமுனாவோடு இலக்கியம் பேசிப் புண்ணியமில்லை. யமுனாவுக்குப் புரிந்த மொழியிலேயே இதை விளக்க முயற்சிக்கிறேன். பிரதாப் போத்தனும் ஷோபாவும் நடித்த 'மூடுபனி' என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். அத் திரைப்படத்தின் நாயகன், பாலியல் தொழிலாளர்களைத் தொடர்ச்சியாகக் கொலை செய்வான். அப்படிக் கொலை செய்வதை அவன் நியாயம் என்றும் நம்புவான். அவன் கொலைகாரனாவதற்குரிய புறச் சூழல்களையும் அவனின் ஆழ்மனச் சிக்கல்களையும் இயக்குநர் திரைப்படத்தின் அடிநாதமாகச் சித்திரித்தும் காட்டியிருப்பார். அதற்காகப் படத்தை உருவாக்கிய பாலு மகேந்திரா பாலியல் தொழிலாளர்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்துகிறார் என்றோ பாலு மகேந்திரா ஒரு சமூகவிரோதியென்றோ எந்த முட்டாளாவது சொல்வானா.

 

நல்லவன் x கெட்டவன், நன்மை x தீமை, தியாகம் x துரோகம் போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைத்துத் தட்டையாக இலக்கியப் பிரதிகளை உருவாக்கும் இலக்கியமுறைமை விக்டர் ஹியுகோ, பால்சாக் காலத்தைச் சேர்ந்தவை. இன்றைய இலக்கியம் பல்வேறு அடுக்குகளையும் சிடுக்குகளையும் கலைத்துப்போட்டு இந்த இருமை எதிர்வுகளைக் கடந்து வாசகர்களோடு பேச முயல்வது. எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் திரைப்பட அரங்கினுள் நம்பியாரைத் தும்பு பறக்கத் திட்டுவதுண்டு. அந்த இரசிக மனோநிலையில் யமுனா நவீன இலக்கியப் பிரதிகளை அணுகினால் இப்படியான பாரதூரமான விமர்சன விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. குமிஞ்சான் என்பது யமுனாவின் ஊர் வழக்காம். "தனக்கெடாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்பது எங்கள் ஊர் வழக்கு.

 

'தேசம்' இணையத்தளத்தின் பின்னூட்டப் பகுதியில் "நான் மட்டுமா ஈழமுரசில் எழுதினேன். ஷோபாவும்தானே எழுதியிருக்கிறார்" என்று யமுனா இன்னொரு அழிவழக்கும் ஆடியிருப்பார்.

 

ஈழமுரசில் வெளியாகிய யமுனாவின் கட்டுரைக்கு 1995ம் வருடம், ஈழமுரசில் முதலும் இறுதியுமாக எனது எதிர்வினையை எழுதியிருந்தேன். இந்தவொரு எதிர்வினையை எழுதியதினாலேயே ஈழமுரசோடு எனக்கும் யமுனாவுக்குமுள்ள தொடர்புகள் ஒருபடித்தானவையா? 'சத்தியக் கடதாசி'யில் எப்போதோ ஒருமுறை தோழர். அழகலிங்கத்தினுடைய கட்டுரையொன்றிற்குப் பின்னூட்டம் எழுதிய ஆனந்தலிங்கத்துக்கும் சத்தியக்கடதாசியில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த அழகலிங்கத்துக்கும் 'சத்தியக் கடதாசி'யோடுள்ள தொடர்பும் பங்களிப்பும் ஒருபடித்தானவையா?

 

கேள்வியெல்லாம் பாஸிசப் புலிகளின் பத்திரிகையான ஈழமுரசிலும் அவர்களின் வானொலியான IBC யிலும், தன்னை வார்த்தைக்கு வார்த்தை மார்க்ஸிஸ்ட் என அழைத்துக்கொள்ளும் யமுனா, புலிகள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் சில்லறையும் பெற்றுக்கொண்டு வருடக்கணக்காக எப்படிப் பங்களிப்புச் செய்ய முடிந்தது என்பதுதான். அவர் வரித்துக்கொண்ட மார்க்ஸியம் குறிப்பிட்ட உடன்பாடுகளுடனும் நிபந்தனைகளுடனும் பாஸிஸ்டுகளின் ஊடகங்களில் பங்களிப்புச் செய்வதையும் சில்லறை பொறுக்குவதையும் அனுமதிக்குமெனில் அதென்ன மண்ணாங்கட்டி மார்க்ஸியம்? ஈழமுரசிலும் IBCயிலும் தான் பங்களித்ததை நியாயப்படுத்துகிறார் பாருங்கள் யமுனா, இதைவிட எத்துவாளித்தனம் ஒன்றுண்டா? இதைவிட அரசியல் பொறுக்கித்தனம் ஒன்றுண்டா? இதற்கு யமுனா மட்டுமல்ல, யமுனாவின் 'தேசம்' கட்டுரையை உச்சிமுகரும் நமது மாற்றுக் கருத்துத் தோழர்களும் பதிலளிக்கலாம். பதில்கள் வரவேற்கப்படுகின்றன.

இறுதியாக ஒன்று,

 

"ஷோபா சக்தி, போதும், உமது கபடத்தனங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளும்" என்கிறார் யமுனா. வாத்தியரே! உங்களை விடப் பெரிய பெரிய கைகளெல்லாம் என்னை நிறுத்தச் சொல்லி மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள். என்னவொரு வித்தியாசம் நீங்கள் 'கபடத்தனம்' என்கிறீர்கள், அவர்கள் 'துரோகத்தனம்' என்பார்கள். I Oppose: Therefore I Exist என்பது உங்கள் ஞாபகத்திலிருக்கட்டும்!

 

3

தேசம் இணையத்தளத்தில் யமுனாவின் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து பின்னூட்ட மன்னர்கள் 175க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை எழுதி இணைய உலகில் ஒரு ரெக்கோர்ட் ப்ரேக்கையே ஏற்படுத்திவிட்டார்கள். முகத்தை மறைத்துக்கொண்டு என்மீது மட்டுமல்லாமல் யமுனா மீதும் மற்றவர்கள் மீதும் ஆதாரங்களற்ற பின்னூட்டக் கற்களை எறிபவர்களுக்கு ஒரு வார்த்தை:

 

ஊரில் சினிமாத் தியேட்டர் மற்றும் பஸ்நிலைய கழிப்பறைச் சுவர்களில் 'கலாவுக்கும் கோபுவுக்கும் கள்ளக் காதல்', 'ஒண்டுக்கிருந்துவிட்டு ஒருமுறை சுண்டாவிடில் நிண்டொழுகுமாம் சலம்', ' அமிர் எங்கள் உயிர்; நவம் எங்கள் மயிர்' என்றெல்லாம் சொற்களை எழுதுவதில் இன்பமடையும் கூட்டமொன்று உண்டு. இது ஓர் வகையான மனப் பிறழ்வும் கூட. புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பொதுக் கழிவறைகளில் இவ்வாறெல்லாம் எழுதி இன்பமுற வாய்ப்பில்லாததால் நீங்கள் இணையத்தளங்களில் பின்னூட்டம் எழுதி மகிழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களையிட்டுக் கோபப்படுவதைக் காட்டிலும் உங்கள் மீது இரக்கம் கொள்வதே சரியாயிருக்கும்.

 

அடையாளங்களுடன் வந்து பின்னூட்டமிட்ட தோழர்களுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள்: என்னோடு முரண்படும் இலக்கியவாதிகளை நான் ஒழித்துக்கட்டுவதில் முனைப்புடன் செயற்படுவேன் என்ற தொனியில் சிலர் எழுதியிருக்கிறீர்கள். கருத்து மோதல்களை 'ஒழித்துக்கட்டல்' என்று புரிந்துகொள்ளும் உங்களை எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே எனக்குப் புரியவில்லை. நட்பு முரண்பாட்டிற்கும் பகை முரண்பாட்டிற்கும் உள்ள இடைவெளியை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதாகவே நம்புகிறேன். என் புகலிட வாழ்க்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அரசியலிலிருந்து 'அம்மா', 'எக்ஸில்', 'NON குழு', ஊடாக இன்றைய தலித் மாநாடுகள் வரைக்கும் நான் கூட்டுச் செயற்பாடுகளில் நம்பிக்கைகொண்டுதான் இயங்கிவருகிறேன். எனவே நான் அமைப்புகளை உடைப்பவன், பத்திரிகைகளை உடைப்பவன் என்றெல்லாம் நீங்கள் குற்றம் சுமத்துவது சரியாகாது. நான் அவ்வளவு சக்தி வாய்ந்தவனும் கிடையாது.

 

'எக்ஸில்' இதழில் நானும் ஞானமும் சேர்ந்து லஷ்மியைக் குறித்து நச்சுத்தனமாகத் தலையங்கம் எழுதிவிட்டோம் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு. 'எக்ஸில்' இதழில் தலையங்கம் எழுதுமளவிற்கு எனக்கு என்றைக்கும் அதிகாரமிருந்ததில்லை. அந்தத் தலையங்கத்தை விஜி, கற்சுறா, ஜெபா, எம்.ஆர். ஸ்டாலின் அடங்கலான ஆசிரியர் குழுவே எழுதியிருந்துது. அந்தத் தலையங்கத்தில் அவர்கள் "லஷ்மி பேசும் பெண்ணியம் மேட்டுக்குடிசார் பெண்ணியம்" என்று எழுதியிருப்பார்கள். இது லஷ்மி குறித்த அவர்களது அரசியல் விமர்சனம். இந்த விமர்சனத்தின் பொருத்தப்பாடுகள் பொருத்தப்பாடின்மைகள் வேறு விடயம். ஆனால் இதை நச்சுத்தனமான விமர்சனம், தரக்குறைவான விமர்சனம் என்று சொல்வது என்ன நியாயம். ஆனானப்பட்ட லெனினே ஒரு முறை ட்ரொஸ்கியைக் 'கந்தலாண்டி' என எள்ளலாய் விளித்து எழுதியிருப்பார்.

 

ஷோபாசக்தி பாரிசுக்கு வந்ததிலிருந்ததான் பாரிஸ் இலக்கிய உலகமே கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டது என்பது இன்னொரு தோழரின் நிலைப்பாடு. தோழரே நாங்கள் (இந்த நாங்கள் என்பது என்னையும், சுகனையும், சேனனையும், வின்சன்ட் போலையும் குறிக்கும்) பாரிஸின் இலக்கிய பீடங்களையும் பிதாமகர்களையும் எதிர்த்து விமர்சனரீதியாகப் போராடினோம் என்பது உண்மைதான். ஆனால் எங்களது விமர்சனங்கள் அவ்வளவும் வெளிப்படையானவை. அளவுநாடா நோட்டிஸோ, கல்வெட்டோ, சுவரொட்டிகளோ, துண்டுப்பிரசுரங்களோ, கட்டுரைகளோ, நாட்டாமைத் தொகுப்போ எல்லாவற்றையும் முகத்தை மறைக்காமல் நேருக்கு நேர் நின்றுதான் செய்தோம். எங்களின் எல்லா விமர்சனங்களும் எல்லா நடவடிக்கைளும் சரியானவைதான் என்று நான் ஒருபோதும் சொல்லப்போவதில்லை. நான்கு வருடங்களிற்கு முன்பு 'தீராநதி' நேர்காணலில் கூட "சில சின்ன விடயங்களிற்குப் பெரிதாகச் சண்டை போட்டுவிட்டோம். இப்போது நினைத்தால் வெட்கமாயிருக்கிறது" என்று பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறேன்.

 

இப்படி வெளிப்படையாகத் தங்களது விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கருத்துகளையும் பொது வெளிகளில் வைப்பவர்கள் சதிகாரர்களா அல்லது மரியசீலன், கருணைதாசன் என்ற பெயர்களில் ஒளிந்திருந்து சக மாற்றுக்கருத்தாளர்கள் மீது 'தேனி'யில் புலிகளின் உளவாளியென்றும், 'தீப்பொறி'யில் கருணாவின் முகவர்களென்றும், தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் உறுப்பினர்கள் இலங்கை அரசின் உளவாளிகளென்றும் அவதூறுக் கோட்டைகளைக் கட்டியெழுப்புவர்கள் சதிகாரர்களா? தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

மாற்றுக் கருத்துத் தோழர்களே! நூறு பூக்கள் மலரட்டும் என்ற வாக்கில் நீங்கள் தீராத நம்பிக்கையுடையவர்கள் என நான் அறிவேன். ஆனால் நூறு பூக்களும் ஒரே விருட்சத்தில்தான் மலர வேண்டுமென்று தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள்.

11.03.2008

நன்றி ஷோபாசக்தியின் பக்கங்களுக்கு


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்