11292021தி
Last updateச, 09 அக் 2021 9am

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக்காயிதம் போட்டான் வெள்ளக்காரன்

இலங்கை:அய். நாவின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையும் அதன் அரசியலும்

2002 ல் பிறக்கும் போதே சவலைக் குழந்தையாகப் பிறந்த இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான யுத்த நிறுத்த உடன்படிக்கை லஷ்மன் கதிர்காமர் கொலை, பொங்கியெழும் மக்கள் படையின் வலிந்த தாக்குதல்கள், அல்லைப்பிட்டி, வங்காலை, வள்ளிபுனம், ஹெப்பட்டிக்கொலாவப் படுகொலைகள், மாவிலாறு, மூதூர், சம்பூர் மோதல்கள் போன்ற எண்ணற்ற கரங்களால் தூக்கிச் சவப்பெட்டியில் வைக்கப்பட பனிச்சங்கேணி, முகமாலை, ஹபரண, காலி கடற்படை முகாம் தாக்குதல்கள் அந்தச் சவப்பெட்டியில் இறுதி ஆணிகளை அறைந்து விட்டன. முப்பது வருட காலப் போரியல் அனுபவங்களுடாக இரு தரப்பினருமே மிகத் திறமையாகத் தான் சண்டையிடுகிறார்கள். தீவின் வடமுனையிலிருந்து தென்முனை வரை திட்டமிட்ட துல்லியமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வளவு காலங்களும் டொலர்க் கணக்கில் ஊதியம் பெற்றுக்கொண்டு அவ்வப்போது கூலிக்கு மாரடித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இனித் தங்களது முட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு சோமாலியாவிற்கோ லைபீரியாவிற்கோ அமைதியை உருவாக்கப் போய்விட்டுச் சற்று நாட்கள் பொறுத்துத் திரும்பி வரலாம். யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பசி பொறுக்காமல் இராணுவத்தினரின் எச்சில் உணவுகளைப் பொறுக்கித் திரிவதாகச் செய்திகள் வெளியாகின்றன. இலங்கை சிறுவர் விபச்சாரத்திலும் தற்கொலை வீதத்திலும் இந்த வருடமும் உலக அளவில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது. யுத்தத்தினால் அகதிகளாவோர் பட்டியலில் கடந்த இருபது வருடங்களைப் போலவே இந்த வருடமும் ஈழத் தமிழர்கள் முதற் பத்து இடங்களுக்குள் வருவார்கள்.

 

அரசும் விடுதலைப் புலிகளும் தாங்கள் சமாதானத்திற்குத் தயாராயிருப்பதாகவே ஒவ்வொரு தாக்குதலை, ஒவ்வொரு படுகொலையை நடத்துவதற்கு முன்பாகவும் பின்பாகவும் பேசி வருகிறார்கள். சமாதான செயற்பாடுகளின் பிரதான அனுசரணையாளரான நோர்வேயும் இணைத் தலைமை நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமென வலியுறுத்துகின்றன. இந்தியாவும் அமைதி வழியில் தீர்வொன்றை எட்ட வேண்டுமென்று அரசுக்கும் புலிகளுக்கும் இடைவிடாமல் பரிந்துரை செய்கிறது. இலங்மையின் தமிழ், முசுலீம் மக்கள் மடடுமல்லாது பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கூட யுத்தத்தின் சுமையைத் தாங்க முடியாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள். எனினும் அமைதிக்கான, சமாதானத்திற்கான பாதையில் நம்மால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியாயின் சமாதானத்தின் பகைவன் யார்? அவன் எங்கே ஒளிந்திருக்கிறான்?

 

இந்த ஆதாரமான கேள்வியோடு நாம் இந்த வருடத்தின் நடுப்பகுதியில் அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறுபத்தியிரண்டாவது அமர்வில் வெளியிடப்பட்ட “இலங்கை: காணாமற் போதல் பற்றிய கேள்விகளும் விசாரணைகளற்ற கொலைகளும் மற்றும் அரசியல் - குடியியல் உரிமைகளும்” என்ற அறிக்கையை அணுகலாம். இந்த அறிக்கையை அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் தயாரித்துள்ளார். இந்த அறிக்கையைத் தயார் செய்வதற்காக பிலிப் அல்ஸ்டன் 2005 நவம்பர் 28 வது நாள் தொடக்கம் டிசம்பர் 6 வது நாள் வரையில் இலங்கையில் தங்கியிருந்து ‘கள ஆய்வு’ நடத்தியிருக்கிறார். அவர் கொழும்பு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபர், இலங்கை இராணுவ உயரதிகாரிகள் விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன், புலிகளின் காவற் துறைத் தலைவர் நடேசன் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்தின் பொறுப்பாளர் மற்றும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் அடங்கலாகப் பலரைச் சந்தித்து உரையாடித் தனது அறிக்கையைத் தயாரித்துள்ளார்.

 

இந்த அறிக்கையின் நோக்கத்தைக் குறித்து பிலிப் அல்ஸ்டன் கூறும் போது “எனது நோக்கம் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற படுகொலைகளைப் பற்றிய விபரக்கொத்தொன்றைத் தயாரிப்பதல்ல. அந்த முயற்சியில் வேறு பல குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மாறாக எனது நோக்கம் இக் கொலைகளின் பரிமாணங்களை ஆராய்ந்து அதன் வழியே நிலைமைகளைச் சீர் செய்வதற்குரிய வழி வகைகளை முன் வைப்பதேயாகும்” என்கிறார். எனவே தனது ஆய்வுகளின் அடிப்படையில் பிலிப் அல்ஸ்டன் நிலைமகளைச் சீர் செய்வதற்கெனப் பதின்மூன்று பிரதான பரிந்துரைகளைத் தனது அறிக்கையில் முன்வைக்கிறார். எனினும் இந்த அறிக்கையைப் பற்றியோ அறிக்கையின் பரிந்துரைகளைப் பற்றியோ இலங்கை அரசோ விடுதலைப் புலிகளோ இதுவரையில் வெளிப்படையாகப் பொறுப்பான கருத்துக்கள் எதையுமே வெளியிடவில்லை. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்றிருக்கும் இலங்கை அரசியற் சூழலில் தமது வர்த்தக நலன்களுக்காக மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இலங்கையின் அச்சு, காட்சி ஊடகங்களும் இந்த அறிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை. புகலிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் புலிகள் அல்லாத தமிழ் வலதுசாரிகள் மட்டுமே இந்த அறிக்கையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஓரளவு முயன்றனர். இந்த அறிக்கையை முன்வைத்து பிலிப் அல்ஸ்டனின் முன்னிலையில் இலண்டனில் நடந்த கலந்துரையாடலில் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றியிருந்தனர். அவர்கள் சார்புத் தமிழ் இணையத்தளங்களும் இந்த அறிக்கையைப் பிரசுரித்தன. இந்தத் தமிழ் வலதுகள் ஏகாதிபத்தியங்களின் தலையீட்டைக் கோருவதில் ஈராக்கின் பொம்மைப் பிரதமர் ஜவாத் அல் மலிக்குக்குச் சற்றும் சளைக்காதவர்கள். மேற்கத்தைய சனநாயகத்தில் அளவில்லாத விசுவாசம் கொண்டவர்கள். இலங்கை மக்களின் இறைமையைக் குறித்தும் ஏகாதிபத்தியங்கள் மூன்றாமுலக நாடுகளில் அரங்கேற்றும் அரசியற் சதிகளைக் குறிததும் கள்ள மௌனம் சாதிப்பவர்கள். ரொனி ப்ளேர் மலம் துடைத்து எறியும் காகிதங்களைக் கூட வெள்ளை அறிக்கையாகக் கொண்டாடத் தயங்காதவர்கள். கண்டு கொள்ளாமலேயேயிருக்கும் அல்லது கொண்டாடித் திரியும் இந்தப் போக்குகளிலிருந்து விலகி நின்று பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையை வாசிக்க முயல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

 

2002ல் ஏற்பட்ட யுத்த நிறுத்தத்துக்கும் 2005 டிசம்பர் மாதத்திற்குமிடையில் இலங்கையில் 300க்கும் மேற்பட்ட அரசியற் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன எனவும் இவற்றில் பெரும்பாலான கொலைகளை விடுதலைப் புலிகள் இயக்கமே நடத்தியிருப்பதாகவும் பிலிப் அல்ஸ்டன் தெரிவிக்கிறார். தவிரவும் கருணாவின் தலைமையில் இயங்கும் ரி.எம்.வி.பி. அமைப்பும் கிழக்கு மகாணத்தில் புலி உறுப்பினர்களையும் புலிகளது ஆதரவாளர்களையும் கொன்றிருப்பதாகவும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்ற அமைப்புக்கள் தமது ஆயுதங்கள் களையப்பட்டிருப்பதாகவும் தாங்கள் இப்போது அரசியற் கட்சிகளாகவே இயங்கி வருவதாகவும் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் ஆயுதங்களுடன் இயங்கி வருவதாகவும் பிலிப் அல்ஸ்டன் தனது அறிக்கையில் தெரிவிக்கிறார். இலங்கை அரசு தன்னிடம் கொடுத்த பட்டியலின்படி யுத்த நிறுத்தத்திற்குப் பின்பாக 2005 செப்டம்பர் 30 வரை விடுதலைப் புலிகள் 363 பேர்களைக் கொன்றிருப்பதாகவும் ஈ.பி.டி.பியினர் தமது உறுப்பினர்களில் 43 பேர்களைப் புலிகள் கொன்றுவிட்டதாகத் தெரிவித்திருப்பதாகவும் இந்தக் காலகட்டத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் மட்டுமே விடுதலைப் புலிகள் 334 பேர்களைக் கொன்றிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் தன்னிடம் தெரிவித்ததாகவும் பிலிப் அல்ஸ்டன் கூறுகிறார்.

 

“முக்கியமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு சிறிய அளவில் வேறு குழுக்களும் தமிழ்ப் பொது மக்கள் மீது தமது அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கங்களை நிலை நிறுத்துவதற்காக வன்முறைகளில் தொடர்சியாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகத் தமிழ் சமூகத்திலுள்ள தமது அரசியல் எதிர்ப்பாளர்களை துரோகிகள் என்று வரையறை செய்வதும் அவர்களைக் கொலை செய்வதின் மூலம் பொதுமக்களை மிரட்டித் தமக்கு அடிபணிய வைப்பதுமான தமிழீழ விடுதலைப் புலிகளின் செய்கையானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்” என்கிறார் பிலிப் அல்ஸ்டன்.

 

“மறுபுறத்தில் முழு இலங்கையிலும் 20 000 பொலிஸார் நிரந்தரப் பொலிஸ் பிரிவிலும் 45 000 பேர்கள் ரிஸர்வ் பொலிஸ் படையிலுமிருக்கிறார்கள். தடுப்புக் காவல் மரணங்கள், ‘என்கவுண்டர்’ கொலைகள், சித்திரவதைகள், ஊழல்களால் பீடிக்கப்பட்டிருக்கும் சிறிலங்காக் காவற்துறை கொலைகளைத் தடுத்து நிறுத்தவோ கொலைகள் மீதான நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவோ தகுதியற்றதாகி விட்டது. முப்பது வருடங்களாக நிகழும் யுத்தத்தாலும் வன்முறைகளாலும் இலங்கைக் காவற்றுறையானது ஓர் எதிர்க் கிளர்ச்சிப் படையாகத் திரிபடைந்து விட்டது” என்பதையும் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

அரசால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தட்டிக் கேட்கப்படுவதோ தண்டிக்கப்படுவதோ இல்லையென்பது இலங்கையில் மிக ஆழமாக உணரப்படும் பிரச்சினையாகும். தமிழரைக் கொன்றதற்காக இராணுவத்தினரின் மீதோ பொலிஸாரின் மீதோ வழக்குத் தாக்கல் செய்யப்படுவது மிக அரிதாகவேயிருக்கிறது. ஆறு படை வீரர்கள் தண்டிக்கப்பட்ட கிருஷாந்தி வழக்கைத் தவிர வேறொரு சம்பவத்தில் தன்னும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. விசாரணைகளும் தண்டனைகளும் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் தெளிவற்றவை. ஆனால் அதன் விளைவுகள் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றன: தங்களது உயிர்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படுமா? என்று பெரும்பாலான பொதுமக்கள் சந்தேகப்படுகிறார்கள். பிந்தனுவெவ படுகொலைகளில் சம்மந்தப்பட்ட எவரையும் தண்டிப்பதில் அரசு அடைந்த தோல்வியானது குற்றம் புரிந்தவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கொள்ளும் வழமைக்கு – நிலமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பிந்தனுவெவவில் 2000 ஒக்ரோபர் 25ம் நாள் இருபத்தேழு தமிழ் இளைஞர்கள் அறுபது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் தடுப்புக் காவலிலிருந்த போது ஒரு கூட்டத்தினரால் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். ஆனால் அதிற் சம்மந்தப்பட்ட ஒரு அரசு உத்தியோகத்தர் கூட, ஒரு தனி நபர் கூட அரசால் தண்டிக்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கை பதிவு செய்கிறது.

 

விடுதலைப் புலிகளின் பிரதான பொருளியல் - அரசியல் ஆதரவுத் தளமான புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் குறித்து ” அவர்கள் புலிகளின் இரட்டை வேடங்களுக்கு முன்னால் தம்மைச் சமரசம் செய்து கொள்கிறார்கள். கிளிநொச்சியில் புலிகளின் அமைப்பு அரசு நிர்வாகம், நீதித்துறை, காவற்றுறை போன்ற விடயங்களில் ஒரு கவர்ச்சிகரமான பரீட்சார்த்தத்தில் ஈடுபட்டிருக்கின்றதென்ற ஒரு தோற்றப்பாட்டைக் கொடுக்கலாம். புலிகள் உருவாக்கியுள்ள வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் மூலம் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் புலிகள் முயல்வதாகவும் தோன்றும். ஆனால் நடைமுறையில் புலிகளின் செயற்பாடானது -குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில்- பொது மக்களை மிரட்டுதல், பலவந்தப்படுத்தல், தாக்குதல் மற்றும் கொலை செய்வதாயிருக்கிறது. புலம் பெயர் தமிழ் மக்கள் தாம் வழங்கும் ஆதரவுகளோடு நிகழும் இவ்வன்முறைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அத்தோடு அவர்கள் மனித உரிமைகளைக் காப்பதற்கு ஆக்கபூர்வமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். இதுவொரு ‘விடுதலைப் போராட்டம்’ என்றளவில் இந்தப் பிரச்சினையை அணுகுபவர்கள் கூட அப்பாவிப் பொதுமக்களும் நிராயுதபாணிகளும் கொலை செய்யப்படுவதை எதிர்க்க வேண்டும்” என்கிறார் அல்ஸ்டன்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திரம், மக்கள் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், அரசியல் அமைப்புக்களில் இணைந்துகொள்வதற்கான சுதந்திரம், வாக்களிக்கும் உரிமை போன்ற சனநாயக விழுமியங்களை விடுதலைப் புலிகள் மதிப்புச் செய்ய வேண்டும். கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் தமது கொலைச் செயல்களை நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் மீது அரச படையினர் நிகழ்த்திய கொலைகளுக்கு நீதி விசாரணைகள் வேண்டும் அநீதியான கைதுகளையும் சித்திரவதைகளையும் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கை கோருகிறது.

 

நாற்பது பக்கங்களில் விரியும் இந்த அறிக்கையில் மேற்கூறிய விடயங்களை நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இந்த விடயங்களை ஆள்- படை- அம்புகளோடு அமெரிக்காவிலிருந்து வந்து பிலிப் அல்ஸ்டன் கள ஆய்வுகள் செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கான ஒரு சிறுபத்திரிகையாலோ ஒரு இணையத்தளத்தாலோ இதைவிடத் துல்லியமாகப் படுகொலைகளைப் பட்டியலிட முடியும். இதைவிடத் தீவிரமாக அவர்களால் இலங்கையில் அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க முடியும். இவற்றை அவர்கள் எந்த அரசியற் பக்க பலங்களுமில்லாமல் குழுக்களாகவும் தனியர்களாகவும் நின்று செய்து கொண்டுதானிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் ஏதாவதொரு விடயத்திற்காக பிலிப் அல்ஸ்டனுக்கு நன்றி பாராட்ட வேண்டுமெனில் அவர் எதைச் செய்யப் போவதில்லை எனக் குறிப்பிட்டரோ அதைச் செய்ததற்காக -இந்த அறிக்கையில் இலங்கையில் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்பு நடந்த அரசியற் படுகொலைகளின் குத்துமதிப்பான விபரக்கொத்தொன்றை நமக்கு வழங்கியிருப்பதற்காக- மட்டுமே நாம் நன்றி பாராட்ட முடியும்.

 

ஆனால் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கை இத்தோடு முடிவடைந்து விடவில்லை. இந்த விபரக் கொத்துக்கும் கண்டனங்களுக்கும் அப்பால் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் பிரச்சினைகள், சர்வதேசக் குற்றவியல் நீதிச் சட்டம், சர்வதேசக் கண்காணிப்பு, அரசுக்கும் புலிகளுக்குமான பரிந்துரைகள் என அவர் தனது அறிக்கையைத் தொடருகிறார். அறிக்கையின் இத்தகைய கதையாடல்கள் அய்க்கிய நாடுகள் சபையிலும் மேற்கத்தைய முதலாளிய அமைப்பிலும் சனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள ஒருவருக்கு அல்லது ஓர் அரசியல் அப்பாவிக்கு இந்த அறிக்கையின் மீது நம்பகத் தன்மையை எற்படுத்தலாம். ஆனால் ஈழத்தில் நீதியுடன் கூடிய சமாதானத்தை வேண்டி நிற்பவர்கள் அல்ஸ்டனின் மிகுதி அறிக்கையில் கட்டப்பட்டிருக்கும் மேற்கத்தைய முதலாளிய மறு காலனித்துவக் கருத்துருவாக்கங்களைக் கட்டவிழ்த்துப் பார்க்க வேண்டும்.

 

2

சிறப்பு விசாரணையாளர் பிலிப் அல்ஸ்டன் “மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களாகத் தொழிற்படக்கூடிய பல அமைப்புகளுக்குள் அய்க்கிய நாடுகள் சபையே பிரதானமானது, மனித உரிமைகளைக் கண்காணிப்பதில் திறமையாக ஈடுபடக்கூடிய அமைப்பு என்ற வகையில் அய்க்கிய நாடுகள் சபை பெற்றுள்ள பிரபல்யமும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு அரசியற் தொடர்புகள் இல்லையென்பதினாலும் அய்க்கிய நாடுகள் சபை பெரிதும் விரும்பப்படுகிறது” என்கிறார். ஆனால் எண்ணிச் சில நாட்களுக்கு முன்பு அய்க்கிய நாடுகள் அவையில் உரையாற்றிய வெனிசுலா அதிபர் ஹியுகோ சாவெஸ் பிலிப் அல்ஸ்டனுக்கு முற்று முழுதான எதிர் நிலையை எடுத்தார். அவர் “அய்க்கிய நாடுகள் சபை வீற்றோ அதிகாரமுள்ள அய்ந்து நாடுகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுவதாகவும் இன்றைக்கு மூன்றாம் மண்டல நாடுகளிலுள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும் மோதல்களுக்கும் அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸிலில் உறுப்புரிமை பெற்றுள்ள பதினைந்து நாடுகளும் மேற்கொள்ளும் மேலாதிக்கத்திற்கான சதிகளே காரணங்கள்” என்றார். “அய்க்கிய நாடுகள் சபை ஏகாதிபத்தியங்களின் குறிப்பாக அமெரிக்காவின் எடுபிடியாகவேயிருந்து வருவதாகவும் அய்க்கிய நாடுகள் சபையில் ஏதாவது பண்பு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பின் உடனடியாகவே அய்க்கிய நாடுகள் சபையின் அமைவிடத்தை அமெரிக்காவிலிருந்து தெற்கு நாடொன்றுக்கு மாற்றியாக வேண்டும்” என்றும் சாவெஸ் கிளர்ச்சிக் குரல் எழுப்பினார்.

 

கடந்த காலங்களில் மூன்றாம் மண்டல நாடுகளிலும் பால்கன் நாடுகளிலும் இன மோதல்களைத் தீர்த்து வைப்பதாகக் கூறிக்கொண்டு அய்க்கிய நாடுகள் சபை தலையீடு செய்த அனைத்துச் சந்தர்ப்பங்களும் ஹியுகோ சாவெஸின் கருத்துக்களையே உறுதி செய்தன. இதற்குச் சர்வதேசப் பிரபலமான எடுத்துக்காட்டொன்றைச் சொல்வதானால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் “இது என் வாழ்வின் மகத்தான தருணங்களிலொன்று” எனப் பிதற்றியவாறே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசீர் அரபாத் அமெரிக்க அரசு அதிபரின் மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்த தருணத்தைச் சொல்லலாம். தொடர்ந்து வந்த நாட்களில் அய்க்கிய நாடுகள் சபை இஸ்ரேலுடன் ஓர் அநீதியான உடன்பாட்டுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இட்டுச் சென்றது. அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் ராபினும் யாசீர் அரபாத்தும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசுக்காக அய்க்கிய நாடுகள் சபையால் பரிந்துரையும் செய்யப்பட்டனர். ஆனால் அந்த உடன்படிக்கையால் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அரசால் இன்றுவரை இறைமைகளோடு இயங்க முடியவில்லை. இந்த உடன்படிக்கை தொடர்ச்சியாக இஸ்ரேல் சியோனிஸ்டுகளால் மீறப்பட்டே வருகிறது. அவர்கள் தொடர்ந்தும் பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அமைதி உடன்படிக்கை ஏற்பட்டுப் பதினைந்து வருடங்களிற்குப் பின்னும் பாலஸ்தீன சுயாட்சி அரசால் பாலஸ்தீன மண்ணில் அற்ப உட்கட்டுமானங்களைக் கூட உருவாக்க முடியவில்லை. தொடரும் இஸ்ரேலின் பயங்கரவாதங்களுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் சபையில் கேவலம் ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற முடியவில்லை.

 

உயிரியல் ஆயுதங்களையும் இரசாயன ஆயுதங்களையும் களைவது என்ற படு பொய்யான குற்றச்சாட்டுக்களுடன் மத்திய கிழக்கின் மூலவளங்களையும் எண்ணெய் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த ஏகாதிபத்தியங்கள் தொடுத்த கொடுமையான போர்கள் அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸிலின் ஒப்புதலுடனேயே முன்னெடுக்கப்பட்டது. இன்று மூன்றாம் மண்டல நாடுகளில் எகாதிபத்தியங்கள் நடத்தும் அனைத்து யுத்தங்களிலும் சுரண்டல்களிலும் கொள்ளைகளிலும் அரசியற் சதிகளிலும் அய்க்கிய நாடுகள் சபையும் அதன் அலகுகளான பாதுகாப்புக் கவுன்ஸிலும் சமூக – பொருளாதாரக் கவுன்ஸிலும் மற்றும் உலக வங்கி, உலக வர்த்தக கழகம், சர்வதேச நாணய நிதியம் இன்னும் எண்ணற்ற தன்னார்வக் குழுக்களும் பங்காளிகளாயிருக்கின்றன.

 

மனித உரிமைகளைக் குறித்து வாய் கிழியப் பேசும் அய்க்கிய நாடுகள் சபையின் வரலாறென்ன? சிலியில் அலண்டேயின், நிக்கிரகுவாவில் சண்டினிஸ்டுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்தது உட்பட லத்தீன் அமெரிக்காவில் யங்கி ஏகாதிபத்தியம் நடத்திய எண்ணற்ற அரசியற் சதிகளிலும் ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பிலும் அய்க்கிய நாடுகள் சபை ஏகாதிபத்தியங்களின் பக்கமே நின்றது. ஈராக்கின் அபு கிரைப் சிறையிலும் குவாண்டனமோவிலும் அமெரிக்க - பிரித்தானியப் படைகள் கைதிகள் மீது சொல்லொணா உடல் உளவியல் சித்திரவதைகளை நிகழ்த்துவது குறித்து அய்க்கிய நாடுகள் சபை அமெரிக்காவுக்கு எதிராகவோ பிரித்தானியாவிற்கு எதிராகவோ வாய் திறந்ததுண்டா? தமது மேலாதிக்கத்திற்கு வணங்க மறுக்கும் மூன்றாம் மண்டல நாடுகளின் மீது ஏகாதிபத்தியங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டு மக்களைப் பட்டினிச் சாவிற்குள் தள்ளிய போது அத் தடைகளை நியாயப்படுத்தி நாடு கொழுத்திய அமெரிக்காவிற்கு அய்க்கிய நாடுகள் சபை நெருப்புத்தானே எடுத்துக் கொடுத்தது? அண்மையில் ஆப்கானிலும் ஈராக்கிலும் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகளுக்கான பெரும் வதைமுகாம்கள் அய்ரோப்பாவின் பல பாகங்களிலும் இயங்கிக்கொண்டிருப்பது அம்பலமானதைத் தொடர்ந்து அந்த நாடுகளின் மீது அய். நா என்ன நடவடிக்கைகளை எடுத்தது?

 

ஏகாதிபத்தியங்கள் உலகம் முழுவதும் தமது தங்கு தடையற்ற மேலாதிக்கத்தை நிலை நிறுத்தச் செய்யும் சதிகளை அமைதி, சமாதானம், மனித உரிமைகள் என்ற முகமூடிகளுடன் ஒழுங்கிணைப்பதுவும் நியாயப் படுத்துவதுமே அய்க்கிய நாடுகள் சபையினதும் அதன் கவுன்ஸில்களினதும் ஒரே பணியாயிருக்கிறது. இந்த அரசியற் சார்பு நிலையில் நின்று தான் அய்க்கிய நாடுகள் சபை சர்வதேச அரசியலை அணுகுகிறது. அதன் சர்வதேச அரசியல் நிலைப்பாடு வறிய நாடுகளை மென்மேலும் சுரண்டும் உலக முதலாளியத்தின் நிலைப்பாடாகவேயிருக்கிறது. மூன்றாம் மண்டல நாடுகளின் தேசிய இனச் சிக்கல்கள், உள் நாட்டு யுத்தங்கள் ஆகியவற்றின் உள்ளார்ந்த தனித்துவமான பிரச்சினைகளின் அடிப்படையில் அய்.நா. குறித்த நாட்டுப் பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை வகுத்துக் கொள்வதில்லை. மாறாகத் தனது ஏகாதிபத்தியச் சார்பு அரசியல் நிலைப்பாடுகளிலிருந்தே குறித்த நாட்டின் மீதான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் அய்.நா வகுத்துக்கொள்கிறது.

 

அய்.நா பொருள்கொள்ளும் மனித உரிமைகள், பயங்கரவாத எதிர்ப்பு, சமாதானம் என்ற கருத்துருவாக்கங்கள் வெறும் மேற்கத்தைய முதலாளிய கருத்துருவாக்கங்களே. அய். நா பேசும் சனநாயகம் சாவெஸ் சொல்வது போல மேட்டுக்குடியினரின் போலி சனநாயகம். வேறு மாதிரியாகச் சொன்னால் வெடிகுண்டுகளாலும் ஆயுதங்களாலும் கட்டமைக்கப்படுகிற சனநாயகம். அவர்கள் உலகம் முழுவதும் வெடித்துக் கிளம்பும் எண்ணற்ற நீதியான போராட்டங்களைப் பயங்கரவாதம், அடிப்படைவாதம், பொதுவுடைமைவாதம் என ஒரு சில முத்திரை குத்தல்களுடன் எதிர்கொள்பவர்கள். பிரச்சினைகளின் ஆழமான சிக்கலான வேர்களை நன்கு விளங்கிக்கொண்ட போதும் அந்தப் பிரச்சினைகளை வெறும் பயங்கரவாதமாகவோ அடிப்படைவாதமாகவோ எளிமைப்படுத்தி ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் உரையாடல்களைக் கட்டியெழுப்புபவர்கள்.

 

பிலிப் அல்ஸ்டனின் இந்த அறிக்கையும் திட்டமிட்ட ரீதியில் இலங்கையின் இன மோதல்களை எளிமைப்படுத்திக் காட்டியிருக்கிறது. ஊடும் பாவுமாக ஆயிரமாயிரம் சிக்கலான இன, பண்பாட்டு, பொருளியல் பொறிகளுக்கள் சிக்கிக் கிடக்கும் இலங்கைப் பிரச்சினையை வெறும் அரசபடைகள் x விடுதலைப் புலிகள் என்னும் எதிர்வுக்குள் அல்ஸ்டன் முடக்கி விடுகிறார். எடுத்துக்காட்டாக இலங்கை இனமோதல்கள் குறித்து அறிமுகஞ் செய்யும் போது மிக மிகச் சுருக்கமாக “இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தனி நாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் 1970களின் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அரசாங்கத்துடன் போரிடத் தொடங்கியது” என்ற வரிகளுக்கு அதிகமாக ஒரு சொல்லைத் தன்னும் அல்ஸ்டன் எழுதினாரில்லை. இது மிகவும் எளிமையான கூற்று மட்டுமல்லாமல் மிகத் தவறான கூற்றுமாகும்.

 

முதலில் நாம் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்துக் கற்பிதம் செய்யப்பட்டுள்ள மில்லியன் கணக்கான சொல்லாடல்களிலிருந்தும் கற்பிதங்களிலிருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். இன்னும் எத்தனை காலங்களுக்குத் தான் புலிகள் தனிநாடு கேட்டுப் போரிடப் புறப்பட்டார்கள் என்ற ‘அம்புலிமாமா’க் கதையை நாம் சகித்துக்கொண்டிருப்பது? புலிகள் எழுபதுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மிதவாதத் தலைவர்களால் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களின் ஆயதப் போராட்ட வரலாறே கூட்டணியினரின் அரசியல் எதிரிகளை அழிப்பதிலிருந்துதான் தொடங்கியது. வட்டுக்கோட்டை மாநாட்டில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பிரகடனப்படுத்திய அரசியற் சித்தாந்தப் பலமற்ற, விளையாட்டுத்தனமான தனிநாட்டுக் கோரிக்கையிலிருந்து புலிகளின் அப்போதையத் தனிநாட்டுச் சொல்லாடல்கள் அரசியல் உள்ளடக்கத்தில் மயிரளவு தன்னும் வித்தியாசப்பட்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுத அணிகளாக, உடைத்துச் சொல்வதானால் அடியாட்களாகத்தான் புலிகள் மற்றும் புளொட், ரெலோ இயக்கத்தினர் இயங்கி வந்தார்கள் என்று கூடச் சொல்ல முடியும்.

 

எண்பதுகளின் முற்கூறுகளில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசின் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகளை - குறிப்பாக அமெரிக்க மற்றும் சீன ஆதரவு நிலைப்பாடுகள்- தொடர்ந்து இந்திய அரசு இலங்கையில் ஒரு ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தச் செய்த எண்ணற்ற அரசியற் சதிகளின் ஒரு பாகமாக இந்திய அரசு புலிகளையும் மற்றைய இயக்கங்களையும் எண்பத்து மூன்றில் தத்தெடுத்து எண்பத்தைந்தில் நட்டாற்றில் விட்டது. இந்திய அரசின் இராணுவப் பயிற்சியுடனும் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத வழங்கலுடனும் இராணுவ அணிகளாக உருவாகிய நமது இயக்கங்கள் ஒன்றரை வருட காலத்துக்குள்ளாகவே தாம் வாயடித்து வந்த தனிநாட்டுக் கோரிக்கையைக் கைகழுவி திம்புவில் பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்றன. தமிழ்த் தேசியவாத சிறு முதலாளிய வர்க்கப் பின்னணியில் வந்த தலைமைகளால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கங்களுக்கு சாகசவாத இயக்கங்கள் என்பதற்கு மேல் எந்த மதிப்பும் கிடையாது. நிச்சயமாக அவை தமிழ் மக்களின் இறைமைகளுக்காக அரசியல் தொலைநோக்குடன் கட்டப்பட்ட இயக்கங்கள் கிடையாது. அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எந்தவிதப் புரட்சிகர உள்ளடக்கங்களும் கிடையாது. அந்தத் தனி நாட்டுக் கோரிக்கைக்கு அந்த இயக்கங்களின் தலைமைகளும் கொள்கை வகுப்பாளர்களும் எந்தக் காலத்திலும் விசுவாசமாயிருந்ததும் கிடையாது.

 

சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் உருவாகிய சிங்களப் பேரினவாத அரசுகளின் தமிழ் - முசுலீம் மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள், அந்த அரசுகளுடன் தமிழ் முதலாளிய அரசியலாளர்களின் சமரசங்கள், பேரங்கள், நாட்டின் வறுமை, கல்வி மறுப்பு, எண்பதுகள் வரையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கிருந்த கணிசமான அரசியற் செல்வாக்குக்கு தமிழ் - சிங்கள முதலாளிய அரசியாலாளர்கள் அஞ்சியது, எழுபத்தேழில் நாடு பன்னாட்டு மூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டது, சிறுபான்மை இனங்களுக்கு இடையேயான முரண்கள், தமிழர்களின் அரசியல் பண்பாட்டோடு இரண்டறக் கலந்திருக்கும் சாதியம், அரசின் பௌத்த மதச் சார்பு நிலை, இலங்கையின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் இந்தியாவினதும் சர்வதேச முதலாளியத்தினதும் சகிக்க முடியாத தலையீடுகள், இலங்கையிற் தொடரும் யுத்தத்தால் பன்னாட்டு ஆயுத வியாபாரிகளும் இராணுவ உயரதிகாரிகளும் கொழிக்கும் செல்வம், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தித் தமிழ் மேட்டுக்குடிகள் சுகித்துக்கொண்டிருக்கும் அரசியல் - பொருளாதார நலன்கள் எனப் பல்வேறு உள்ளுறைக் காரணிகளால் மேலும் மேலும் சிக்கலாகி வரும் இலங்கை அரசியலை நாமும் அய்.நாவின் சிறப்பு விசாரணையாளர் போல வெறும் அரசபடைகள் எதிர் புலிகள் என்ற எளிமையான முரணுக்குள் அடக்கிவிட முடியாது.

 

மேலே சுட்டிக்காட்டிய தோற்றுவாய்க் காரணங்களை அறியாதவரல்ல பிலிப் அல்ஸ்டன். ஆனால் இவற்றில் எந்தப் பிரச்சினையையுமே வலுவான பிரச்சினைகளாக ஏற்றுக்கொள்ள பிலிப் அல்ஸ்டனின் அரசியல் மறுத்துவிடுகிறது. இந்த அடிப்படைப் பிரச்சினைகள் அப்படியே இருக்கும்போது பிரச்சினைகளின் விளைவுகளை அற்றுப்போகச் செய்வதும் அதன் மேல் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதும் ஓர் இனிமையான கனவாக மட்டுமேயிருக்க முடியும்.

 

பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையைப் போலவே அவரின் ஆய்வு முறைமையும் வேண்டுமென்றே எளிமைப் படுத்தப்பட்டிருப்பதாகத்தான் தெரிகிறது. ஏற்கனவே இலங்கையின் இனப் பிரச்சினை குறித்து நியூயோர்க்கிலிருந்து செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருந்த அறிக்கைகளிலும் இந்த ஆய்வுப் பலவீனம் தெரிகிறது. பிலிப் அல்ஸ்டன் தனது அறிக்கைக்கான தரவுகளையும் சான்றுகளையும் பெறுவதற்கு பெரும்பாலும் வாய்வழி வாக்குமூலங்களையே பயன்படுத்தியிருக்கிறார். இன்றைய நவீன மானுடவியல் ஆய்வு முறைமைகளில் குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் குறித்த ஆய்வுகளில் வாய்வழி வாக்குமூலங்களுக்கு மிகவும் முக்கியத்துவமுண்டு. ஆவணக் காப்பகங்களிலும் செய்தி நிறுவனங்களிலும் கிடைக்கக் கூடிய சான்றுகளுக்கு வாய்வழி வாக்குமூலங்கள் எந்தவிதத்திலும் முக்கியத்தும் குன்றாதவை என்றபோதிலும் உலக மகா பொய்யர்களான இலங்கை அரசிடமிருந்தும் உலக மகா புரட்டர்களான புலிகளிடமிருந்தும் வெறும் வாய்வழி வாக்குமூலத்தில் சிறப்பு விசாரணையாளரால் என்ன உண்மையைக் கறந்துவிட முடியும்? அரசியற் படுகொலைகள், யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்கு இந்த இருசாராரின் வாக்குமூலங்களையே பிலிப் அல்ஸ்டன் பெருமளவிற்குச் சார்ந்திருக்கிறார். இதை விடுத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ்- சிங்கள- முசுலீம் மாற்றுக் கருத்தாளர்கள், இன்னும் இலங்கையில் ஆகக் குறைந்தபட்ச அரசியல் அறத்துடனாவது இயங்கி வரும் இடதுசாரிகள் ஆகிய தரப்புகளிடம் பிலிப் அல்ஸ்டன் விசாரணைகள் நடத்தியிருந்தால் கூடியளவு உண்மைகளை – ஆனால் அவர் விரும்பாத உண்மைகளை - அல்ஸ்டனால் கண்டறிந்திருக்க முடியும்.

 

இந்த அறிக்கையில் இடதுசாரிகளின் குரல் மட்டுமல்ல முசுலீம் அரசியற் தலைமைகளின் குரல்களும் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டிருக்கின்றன. முழு அறிக்கையிலும் முசுலீம்களின் அரசியல் உரிமைகள் பற்றி எதுவுமே பேசப்படவில்லை. இன்று இருபது மில்லியன் சனத்தொகை கொண்ட இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் 13 விழுக்காடாயிருக்க முசுலீம்கள் 7 விழுக்காடு சனத்தொகையைக் கொண்டவர்களாகவும் அவர்கள் கிழக்கு மாகாணச் சனத்தொகையில் 35 வீதத்தை அண்மித்தவர்களாகவும் இருக்கிறார்கள். இலங்கை முசுலீம்களிடமிருந்து முசுலீம் தேசியம் என்ற உறுதியான குரல் ஒலிக்கத் தொடங்கிப் பதினைந்து வருடங்களுக்கு மேலாகின்றன. முசுலீம்களுக்கான தனி அரசியல் அலகு என்ற கோரிக்கையும் அவர்களிடமிருந்து பலமாக ஒலிக்கிறது. அவர்கள் ஒருபோதும் தங்களது பிரதிநிதிகளாகப் புலிகளையோ வேறெந்தத் தமிழ்த் தலைமைகளையோ அங்கீகரிக்கப் போவதில்லை. இலங்கைக்கான நீதியான அரசியற் தீர்வு முசுலீம்களின் தரப்பையும் உள்ளடக்கியதாகவே இருக்க முடியும. ஆனால் பேச்சுவார்த்தைகளில் முசுலீம்களைத் தனித் தரப்பாக அங்கீகரிக்க அரசு தயங்குகிறதென்றால் புலிகளோ அதை முற்று முழுவதுமாக நிராகரிக்கிறார்கள். இந்த மிக முக்கியமான பிரச்சினையைப் பற்றி அல்ஸ்டன் எதுவுமே பேசாததற்கான காரணம் எதுவாகயிருக்க முடியும்? அவர் வேறொரு விளக்கத்தைத் தராதவரை இஸ்லாமியர்கள் குறித்த மேற்குலக இராஜதந்திரிகளின் மரபான அணுகுமுறையின் தொடர்ச்சியேயிது என்றுதானே நாம் பொருள்கொள்ள முடியும்?

“தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சிவில் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் என்பவற்றை நடத்துகிறார்கள், தமது சொந்தப் பொலிஸ் படையையும் நீதிமன்றத்தையும் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அல்ஸ்டன். இந்தக் கூற்றின் மூலம் புலிகள் ஏறக்குறைய ஒரு தனியரசை நடத்திக்கொண்டடிருப்பதாக அல்ஸ்டன் சித்திரிக்க முயல்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல. இன்றுவரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருத்துவம், கல்வி, இலவச சமூக நல உதவிகள், நிவாரணங்கள் உட்பட அனைத்துப் பொதுச் சேவைகளையும் அரசுதான் மேற்கொண்டு வருகிறது. சும்மாயிருந்து அனைத்துத் துறைகளிலும் வரிகளை அறவிடுவது மட்டும் தான் புலிகளின் ஒரே சிவில் நிர்வாகச் சேவையாயிருக்கிறது. புலிகளின் புனர்வாழ்வு நிறுவனங்களெல்லாம் புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டும் வேலையை மட்டும்தான் செய்துகொண்டிருக்கின்றன. சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து புலிகளின் அமைப்புக்கள் புகலிட மக்களிடமும் பொது நிறுவனங்களிடமும் திரட்டிய மில்லியன் கணக்கான டொலர்கள் போய்ச் சேர்ந்த இடம் இதுவரை தெரியவில்லை. இந்தத் தாலியறுப்புக்களைத் தவிர வேறென்ன சிவில் நிர்வாகத்தைப் புலிகள் நடத்துகிறார்கள் என்கிறார் அய். நாவின் சிறப்பு விசாரணையாளர்?

 

“புலிகளிடம் பொலிஸ் படையும் நீதித்துறையும் இருக்கின்றன” என்கிறார் பிலிப் அல்ஸ்டன். ஆனால் புலிகளிடமிருப்பது நீதித்துறையல்ல, அது கட்டப் பஞ்சாயத்துத் துறையென்பது அல்ஸ்டனுக்குத் தெரியாததல்ல. அவை புலிகளின் அரசியல் எதிரிகளையும், பிச்சைக்காரர்களையும், சிறு திருடர்களையும், பஞ்சத்தில் அடிபட்ட பாலியல் தொழிலாளர்களையும் பாவப்பட்ட விளிம்புநிலை மக்களையும் தண்டிக்கும் துறை. பல்லாயிரக் கணக்கான கொலைகளின் குற்றவாளிகள் நீதியின் பெயரால் அதிகார பீடத்தில் வீற்றிருந்து சனங்களுக்குச் ‘சாவொறுப்பு’ விதிக்கும் துறை. புலிகளின் நீதித்துறைச் சட்டங்களும் விநோதமான தண்டனை முறைமைகளும் முதலாளிய சனநாயக விழுமியங்களுக்குள் கூட அடங்காதவை. அவர்களுடைய சட்டவிதிகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை. புலிகள் வழங்கும் மின்கம்ப, பங்கர், கழுதை மேல் ஏற்றிக் கரும்புள்ளி செம்புள்ளிகள் குத்தும் தண்டனைகள் காட்டுமிராண்டிக் காலத்தைச் சேர்ந்தவை.

 

குதிரை குப்புறத் தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாய் “குற்றங்களைக் கட்டுப்படுவதில் அரசுக்கும் புலிகளுக்கும் பொதுவான நோக்கமுண்டு. எனவே அரசின் பொலிஸ் படையும் புலிகளின் பொலிஸ் படையும் கைகோர்த்துச் செயற்படவேண்டும். இது குறித்து நான் இலங்கைப் பொலிஸ் மா அதிபருடனும், முன்னர் இலங்கைக் காவற்றுறையில் பணியாற்றியிருந்த புலிகளின் காவற்றுறைத் தலைவர் நடேசனுடனும் கலந்துரையாடினேன். இரு படைகளின் தலைவர்களும் இதற்கான அவசியத்தை உணர்ந்தவர்களாயிருக்கிறார்கள்… இந்த இணைப்பைத் தாமதமின்றிச் செயற்படுத்துவது இரு தரப்பினருக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவும் என்பது எனது அபிப்பிராயம்” என்கிறார் அல்ஸ்டன். ஆனால் இந்த அபிப்பிராயத்துக்கும் மனித உரிமைகளுக்கான முன்னெடுப்புகளுக்கும் எதுவிதத் தொடர்புகளுமில்லை. சீரழிந்த இலங்கையின் பொலிஸ் படையும் புலிக் காட்டுமிராண்டிகளின் பொலிஸ் படையும் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் எனத்தான் ஒரு மனித உரிமைப் போராளியால் சொல்ல முடியும், சொல்ல வேண்டும். ஆனால் அய்.நாவின் சிறப்பு விசாரணையாளரால் அப்படிச் சொல்ல முடியாது. ஏனெனில் முதலாளிய அமைப்பு முறையைத் தடங்கலில்லாமல் இயக்கிச் செல்வதற்கு பொலிஸ், இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை ஆகியவை இன்றியமையாதவை என்பதை அவர் கசடறக் கற்றவர்.

 

இந்த அறிக்கையின் பரிந்துரைகளில் மூன்றாவது பரிந்துரை “அரசாங்கம் கருணா குழுவினரோடு கூட்டாகச் செயற்படுதலை உறுதியாகக் கைவிட வேண்டும்” என்கிறது. பெப்ரவரி 2006ல் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் “கருணா குழுவிற்கு அரசு உதவுவதை நிறுத்த வேண்டும், கருணா குழு உட்பட அனைத்துத் ‘துணைப் படைகளி’டமும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்” என்பதையே தங்களது பிரதான நிபந்தனையாக முன் வைத்தார்கள். கருணாவின் பிளவால் தங்களது ஆதரவுத் தளத்தின் கணிசமான பகுதியைப் புலிகள் இழந்ததோடு மட்டுமல்லாமல் கருணா அணியினர் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் ஊடுருவித் தாக்குவதால் தமது உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் புலிகள் இழந்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் நிலைகளைப் பலவீனப்படுத்தி அந்தப் பிரதேசங்களிலிருந்த அவர்களின் அலுவலகங்களை மூடப்பண்ணியதுடன் அவர்களது செயற்பாடுகளையும் முடக்கியது. இந்த நிலையில் கருணா அணியினர் குறித்த புலிகளின் வெப்பியாரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கருணா அணியினர் குறித்த பிலிப் அல்ஸ்டனின் வெப்பியாரத்தை நாம் எந்தத் தருக்கத்தின் மூலம் புரிந்து கொள்வது?

 

கருணாவின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று நாட்டின் கிழக்குப் பகுதிகளில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையோடு இயங்குகிறது. தமிழ்த் தேசியவாதத்தின் ஆதரவுத் தளத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியிடம் அது செல்வாக்கும் பெற்றுள்ளது. பிலிப் அல்ஸ்டனே கூறுவது போல “இலங்கை அரசு கருணா அணியினருக்கு ஏதாவது வழியில் உதவுகிறது என்பது ஒருபுறமிருக்க அவர்களின் ஆயுதங்களைக் களையும் வல்லமையை அரசு கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. இனி இலங்கையில் முன்னெடுக்கப்படும் அமைதி முயற்சிகளும் ஒப்பந்தங்களும் கருணா தரப்பினரால் உருவாக்கப்பட்ட தள யதார்த்தத்தை உள்வாங்குவதன் மூலமே சாத்தியமாகும்…” இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் கருணாவின் புறக்கணிக்க முடியாத செல்வாக்கை இவ்வாறாக அறிக்கையிடும் அல்ஸ்டன் இலங்கை அரசு கருணா அணியினரோடு இணைந்திருக்கக் கூடாதென்று கோருவதன் அரசியல் என்ன? கருணா அணியினர் மட்டுமல்ல சிறிலங்கா அரசின் தொடரும் பேரினவாதச் செயற்பாடுகளினாலும் விடுதலைப் புலிகளின் பாஸிஸ அரசியலினாலும் இன்னும் வேறு வேறு அணிகளும் இயக்கங்களும் கட்சிகளும் இலங்கை அரசியலில் தோன்றத்தான் போகின்றன. அவை சனநாயகச் சக்திகளா இல்லையா? அவை மக்கள் நலன் சார்ந்தவையா இல்லையா? என்பவை வேறு கேள்விகள்; ஆனால் அவற்றோடு அரசு எந்தத் தொடர்புகளையும் வைத்திருக்கக் கூடாது,அவர்களோடு பேசக்கூடாது, அவர்களுடன் அரசியல் இணக்கப்பாட்டுக்குச் செல்லக்கூடாது என்பதில் என்ன நியாயமிருக்க முடியும்?

 

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முதலாவது சரத்தின் எட்டாவது பிரிவு விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய எல்லாத் தமிழ் இயக்கங்களையும் ‘இராணுவத் துணைப்படை’ (Paramilitary) என்றே குறிப்பிடுகிறது. “ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்ற இந்த அமைப்புக்களைத் துணைப்படைகள் என்று வரையறுப்பது அபாயகரமான திரிபுபடுத்தலாகும்” என அறிக்கையின் பன்னிரெண்டாவது பந்தியில் ஒப்புக்கொள்ளும் பிலிப் அல்ஸ்டன் அதே அறிக்கையின் முப்பதாவது பந்தியில் அதே துணைப்படை என்ற வரையறையின் அடிப்படையிற் தான் கருணா குழுவினருடனான எல்லாத் தொடர்புகளையும் அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் எனக் கோருகிறார். இது பிள்ளையானையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் வேலையாகும், இது ஈழத்து அரசியலில் புலிகள் தவிர்ந்த மற்றைய தரப்புகளை ஓரங்கட்டும் படு நுட்பமான வேலையன்றி வேறென்ன?

 

இந்தக் கேள்விகள் எல்லாமே நம்மை ஒரே பதிலை நோக்கித்தான் இட்டுச் செல்கின்றன. ஆம்! இன்றைய இலங்கை அரசியலில் வடக்குக் கிழக்கு மக்களின் ஏகபிரதிநிதிகளாகச் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் அய்.நாவும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளைத் தான் அங்கீகரிக்கின்றன.

 

3

ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேகத்துக்கிடமற்ற முறையில் தம்மை அப்பட்டமான வலதுசாரிகளாக நிறுவிக் காட்டியிருக்கிறார்கள். அவர்களிடம் காலங் காலமாகவே பொதுவுடமைவாத எதிர்ப்பு ஊறிக்கிடக்கிறது. உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் என எல்லாவற்றிற்கும் அவர்கள் செங்கம்பளங்களை ஏ-9 பாதையில் விரித்து வைத்திருக்கிறார்கள். இன்று வடக்கில் மின்சார வழங்கல், தொலைத்தொடர்பு என அடிப்படைச் சேவைகள் கூட அந்நிய பன்னாட்டு நிறுவனங்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதோடு மட்டுமல்லாமல் சிறு வணிகத்திலும் பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. விடுதலைப் புலிகள் இவற்றை எதிர்த்து ஒரு சொற்கூடப் பேசுவதில்லை என்பது ஒருபுறமிருக்க அவர்கள் இந்தப் பன்னாட்டு நிறுவனங்ககளின் கொள்ளை இலாபத்தின் ஓர் பகுதியையும் வரிகளாகப் பெற்றுக்கொள்வதோடு அந்த நிறுவனங்களுக்கு வசதிகளையும் விளம்பரங்களையும் செய்து கொடுக்கிறார்கள். இந்த இம்சை அரசர்கள் நடத்தும் மைதான நிகழ்வுகளில் ‘அக்காமாலா’ விளம்பரத் தட்டிகள் கூட வைக்கப்படுகின்றன.

 

நடந்துகொண்டிருக்கும் யுத்தம் தீவு முழுவதும் வெறுமனே பிணங்களை மட்டுமே புதைத்துத்துக் கொண்டிருக்கவில்லை. யுத்தத்தின் பெயராலும் அவசரகாலச் சட்டத்தின் பெயராலும் ஆட்சியாளர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சமூகநல உதவிகள்,தொழிற் சங்க உரிமைகள் என்பவற்றையும் சேர்த்துத்தான் ஆழப் புதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் தரகு முதலாளிய அமைப்பும் திறந்துவிடப்பட்ட சந்தையும் சிங்கள- தமிழ் முதலாளிய அரசியற் தலைமைகள் முன்னெடுக்கும் யுத்தமுமாகச் சேர்ந்து இலங்கை மக்களை பொருளியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் மீள முடியாத படுகுழிக்குள் தள்ளிவிடடன. உலகத்தின் ஆகச் சீரழிந்த இருபத்தெட்டு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது. ஏறக்குறையப் பொறிந்து விழுந்துவிட்ட இலங்கைத் தரகு முதலாளிய அரசு இயந்திரத்தைக் குறுக்கு வழியில் தூக்கி நிறுத்தும் முயற்சியிற்தான் அண்மையில் சுதந்திரக் கட்சியும் அய்க்கிய தேசியக் கட்சியும் தங்களது அய்ம்பது வருடகால பகையையும் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டுக் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த அரசியற் பலம் வாய்ந்த கூட்டில்லாமல் இனியும் இலங்கையில் வெகுசனங்களிடையே கிளர்ந்தெழும் உரிமைக் குரல்களையும் சமூகக் கோரிக்கைகளையும் இலங்கையின் தரகு முதலாளிய ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியாது.

 

வடக்குக் கிழக்கில் இந்த தரகு முதலாளிய அமைப்பைக் காப்பாற்றுவதற்கும் சுரண்டல் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனங்களுக்கு வழி சமைத்துக் கொடுப்பதற்கும் இவற்றுக்கெதிராகக் கிளர்ந்தெழப்போகும் வடக்குக் கிழக்கு வெகுசனங்களின் எதிர்க் குரல்களை அடக்கவும் வல்லமை பெற்ற அமைப்பாக விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். புலிகளைக் காட்டிலும் ஓர் பலம் வாய்ந்த வலதுசாரி அமைப்பு வடக்குக் கிழக்கில் தோன்றும் வரையில் புலிகள் அரசியல்ரீதியில் பலமிழப்பதை உலக ஏகாதிபத்தியம் அனுமதிக்கப் போவதில்லை. வேண்டுமானால் இப்போது இருப்பதுபோல பெயரளவிலான தடைகளையும் சில மட்டுப்படுத்தப்பட்ட அழுத்தங்களையும் அது புலிகளின் மேற் திணிக்கும். அதன் மூலம் புலிகளைத் தனது பூணர கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கும்.

 

புலிகள் அல்லாத தமிழ் வலதுசாரிகள் இலங்கை அரசியற் களத்திலிருந்து புலிகளை ஒழிக்கவும் தமிழ் மக்களின் அரசியற் தலைமையைக் கைப்பற்றுவதற்கும் தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆனால் அதிகார ஆசை இருக்குமளவுக்கு இவர்களிடம் அரசியல் ஞானம் இருப்பதில்லை. இவர்களில் அநேகர் புலிகளுக்கெதிராக இந்தியா ‘வெட்டிப் புடுங்கும்’ என்ற நப்பாசையில் காலத்தைக் கழிப்பவர்கள். ஆயிரம் சந்ததியார்கள் தோன்றி மில்லியன் கணக்கான ‘வங்கம் தந்த பாடங்’களை எழுதித் தந்தாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை. இந்திய அரசு தன் சொந்த நாட்டிலேயே தேசிய இனங்களையும் மதச் சிறுபான்மையினரையும் ஒடுக்குவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. இந்தியாவின் ஆளும் வர்க்கம் பார்ப்பன -பனியா நலன்களைச் சார்ந்தது என்பதைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. எல்லாவித அரசியல் அறங்களையும் விழுமியங்களையும் துறந்து இந்திய ஆளும் வர்க்கத்திடம் ஆனந்த சங்கரியாரின் தலைமையிற் தெண்டனிட நமது தமிழ் வலதுசாரிகள் தயாராயிருக்கிறார்கள். ஆசை வெட்கமறியாது என்பார்கள்.

 

ஆசைக்கு வெட்கம் மட்டுமல்ல அறிவுமிருப்பதில்லை. நாங்கள் நேருவின் காலங்களிலோ அணிசேரா இயக்கத்தில் இந்தியா தலையாய பாத்திரத்தை வகித்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசிய காலங்களிலோ வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. அணு ஆயுதக் கொள்கையிலிருந்து தனியார் மயமாக்கல்வரை இந்தியா அமெரிக்காவுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் பணிந்து போயிருக்கும் காலங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள் காரியக் கிறுக்குக் கவிஞன் வ.ஐ.ச. ஜெயபாலன் ‘தீராநதி’யில் உளறிக்கொட்டியதைப் போன்று பாகிஸ்தானை மையமாக வைத்து வகுக்கப்பட்டு இன்றுவரை மாறாமல் இருப்பவையல்ல. இன்றைய இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை மட்டுமல்ல இந்தியாவின் உள்கட்டமைப்பு, பொருளியல், ஊடகப் பரப்பு, ஏன் பண்பாடு கூட உலகமயமாக்கலினதும் திறந்த பொருளாதாரக் கொள்கையினதும் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவையே. இலங்கைப் பிரச்சினையில் மேற்கு நாடுகளின் நிலைப்பாடு எதுவோ அதுதான் இனிமேல் இந்திய அரசின் நிலைப்பாடாகவுமிருக்க முடியும். வளைகுடாப் போரிலிருந்து வட கொரியாவின் அணுச் சோதனை வரை இந்தியாவின் நிலைப்பாடு அவ்வாறுதானிருக்கிறது. இலங்கையில் சர்வதேச மூலதனங்களும் மேற்கு நாடுகளில் ஈழத்து அகதிகளும் குவிந்துள்ள நிலையில் கடந்த காலங்களைப் போல இலங்கைப் பிரச்சினை மீதான இந்தியாவின் தங்குதடையற்ற தலையீட்டை அமெரிக்காவோ அய்ரோப்பிய யூனியனோ அனுமதிக்கப் போவதில்லை.

 

இன்று இலங்கை மீது இந்தியா ஒரு தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக மேம்போக்கான பார்வைக்குத் தெரிகிறது. 1987ல் ஏற்பட்ட இந்தியா இலங்கை உடன்படிக்கை முற்றிலும் செயலிழந்து போயிருப்பதை வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரித்து அண்மையில் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் நமக்கு அறிவிக்கிறது. இன்றைய ‘புதிய உலக ஒழுங்கில்’ இலங்கை அரசியலில் இந்தியா நேரடித் தலையீடு செய்ய முடியாது என்பதோடு அதற்கான அவசியமும் இந்திய ஆளும் வர்க்கத்திற்குக் கிடையாது. அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்குள் பில்லியன் கணக்கான ரூபாய்களை இலங்கையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இலங்கையின் அகலத் திறந்த பொருளாதாரக் கொள்கை இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இப்போது திருகோணமலையிலும் கொழும்பிலும் கத்தியின்றி இரத்தமின்றி இந்தியா ‘ரூபாய் யுத்தத்தை’ நடத்திக்கொண்டிருக்கிறது. இங்கே இந்தியா வைத்திருப்பது தலையிடாக் கொள்கையல்ல. அவர்கள் வைத்திருப்பது இலங்கையைக் கொள்ளையடிக்கும் கொள்கை. இதைத் தவிர ஆசிய அபிவிருத்தி முன்னோக்கு, அணிசேரா இயக்க முன்னோக்கு என ஒரு புண்ணாக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திடம் கிடையாது. தன்னுடைய மூலதன நல நோக்கிலேயே இலங்கைப் பிரச்சினையை இந்தியா அணுகுகிறது. தொப்புள் கொடி உறவென நீங்கள் துடித்துக்கொண்டிருக்கும் காலம் ‘நேரு சோசலிஸ’த்தின் காலமல்ல. இது அம்பானிகளின் காலம், மிட்டல்களின் காலம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வடக்குக் கிழக்கைப் பிரபாகரன் ஆளுகிறாரா? மகிந்தா ஆளுகிறாரா? என்பதல்ல இந்தியா ஆளும் வர்க்கத்தினுடைய பிரச்சினை. பிரபாகரனும் மகிந்தாவும் உலகமயமாக்கலின் ஆதரவாளர்களா? இலங்கையில் கிடக்கும் இந்திய மூலதனத்தின் பாதுகாவலர்களா என்பதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கேள்வி. தாங்கள் எக்காலத்திலும் இந்திய ஆட்சியாளர்களின் நலன்களுக்கு எதிரானவர்களல்ல என ஒன்றுவிட்ட ஒரு நாளைக்கு அன்ரன் பாலசிங்கமும் தமிழ்ச்செல்வனும் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கும் வரை ஈழத்தில் மக்களை வசக்கி எடுத்துக்கொண்டிருக்கும் புலிப் பாஸிசத்தைக் குறித்து இந்திய ஆட்சியாளர்களுக்கு என்ன கவலை? தமது சொந்தக் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளையே பாரத ஒருமைப்பாடு, தீவிரவாத ஒழிப்பு ,சுதந்திர வர்த்தகம் என்ற முகமூடிகளுடன் தூக்கிப் போட்டு மிதித்துக்கொண்டிருக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகள் குறித்து என்ன கவலையிருக்க முடியும்?

 

பஞ்சத்துக்குக் கொள்ளைக்காரர்களான இந்தியாவே இப்படியாகத் தவித்த முயல் அடிக்கும்போது பாரம்பரைக் கொள்ளைக்காரர்களான அய்ரோப்பிய - அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இலங்கை மீதான அணுகுமுறை எவ்வாறிருக்கும்? அவர்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் மூன்றாம், இரண்டாம் மண்டல நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளை உருவாக்கி வருகிறார்கள். யுத்தத்தாலும் உற்பத்தி வளர்ச்சியின்மையாலும் கடன் சுமையாலும் சகல மட்டத்திலும் ‘வங்குரோத்’ அடையும் நாடுகளின் இறைமை வெளிகளுக்குள் மனித உரிமைகளின் பெயராலும் உலக வங்கியின் பெயராலும் சமாதானத்தின் பெயராலும் தன்னார்வக் குழுக்களின் மூலமாகவும் நுழைந்துவிடுகிறார்கள். அவர்கள் அங்கே தமது மூலதன நலன்களுக்கான வணிக வலைகளையும் சுதந்திர வர்த்தக வலயங்களையும் மலிவான - தொழிற்சங்க உரிமைகளற்ற- கூலிகளையும் உருவாக்குகிறார்கள். இந்த அந்நியர்களின் இரவு பகல் கொள்ளையடிப்புக்கு எதிராக எழும் கிளர்ச்சிக் குரல்களை அவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்பு, மறு சீரமைப்பு, வறுமை ஒழிப்பு, எய்ட்ஸ் ஒழிப்பு என்ற முகமூடிகளுடன் ஆழ ஊடுருவிச் சிதைக்கிறார்கள். நமது முன்னை நாள் சமூகப் போராளிகளெல்லாம் இன்றைய நாளில் என்.ஜீ. ஓ.பணியாளர்களாகக் குறுகிப் போனார்கள்.முன்பு ஒரு கையில் பைபிளும் மறுகையில் சிலுவையுமாக அய்ரோப்பாவிலிருந்து கொள்ளையடிக்க வந்தவர்கள் இப்போது ஒரு கையில் ஆணுறையும் மறுகையில் தையல் மெஷினுமாக வருகிறார்கள்.

 

இந்த வெள்ளைக்காரத் தொண்டர்களின் மனிதாபிமானத்தை சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தோலுரித்துக் காட்டினார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டும் இந்த வெள்ளைத் துரைகளால் இவர்களின் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய 346 பெண்கள் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் முசுலீம் அமைப்புக்கள், முசுலீம் பெண்களை எந்தவொரு வெள்ளைக்காரத் தொண்டு நிறுவனத்துக்கும் பணிக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளன. ஏறக்குறைய இதே காலப் பகுதியில் கொங்கோவில் அமைதிப் பணிகளுக்காகச் சென்றிருந்த அய்.நா ஊழியர்கள் கொங்கோவில் நடத்திய பாலியல் வதைகள் நிரூபணமாகி அவர்களில் 260 ஊழியர்கள் கொங்கோவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

 

நாட்டின் அரசியல் மையத்திலிருந்து சாதாரண தனிநபர் வரைக்கும் ஏகாதிபத்தியத்தின் அரூபக் கரங்கள் நீண்டு செல்கின்றன. விமல் வீரவன்ச குறிப்பிட்டது போல கொள்ளுப்பிட்டியைச் சூழவுள்ள வெளிநாட்டுத் தூதுவரகங்களே நாட்டை ஆட்டுவிக்கின்றன. இந்த வல்லாதிக்கவாதிகளின் கரங்களிலிருந்து நாட்டு மக்களைத் தப்புவிக்கவோ அல்லது தாங்கள் தப்பிப்பதற்கோ அரசிடமோ புலிகளிடமோ எதுவித அரசியல் வேலைத் திட்டமும் கிடையாது. ஆனால் அரசையும் புலிகளையும் கயிற்றில் கட்டி தங்கள் நலன்களுக்குச் சாதகமாக வழிநடத்திச் செல்வதற்கு மேற்கு நாடுகளிடம் செம்மையான வேலைத் திட்டமும் நிகழ்ச்சி நிரல்களுமிருக்கின்றன.

 

பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையின் நான்கு சாராம்சமான கூறுகளை நாம் இங்கே தொகுத்துக் கொள்ளலாம். (1) இலங்கை இன மோதல்களின் பிரதான தரப்பினர் அரசும் புலிகளுமே, ஆகவே மற்றைய தமிழ்க் கட்சிகளையும் இயக்கங்களையும் முசுலீம்களையும் தீர்வுத் திட்ட மேசைக்கு அழைக்கத் தேவையில்லை. (2) விடுதலைப் புலிகளும் அரச தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். (3) இலங்கை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் ‘ரோம் சட்டக் கோவையை (Rome Statute) ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேசக் குற்றவியல் சட்டத்தின்படி பாரதூரமாகத் தண்டிக்கக் கூடிய மனித உரிமை மீறல் குற்றங்களை இருதரப்பினருமே இழைத்திருக்கின்றார்கள். (4) இலங்கையின் மீது சர்வதேசச் சமூகத்தின் தொடர் கண்காணிப்புகளிருக்க வேண்டும். அகண்ட கண்காணிப்பு முறையொன்று உருவாக்கப்படும் வரை அய்க்கிய நாடுகள் சபையின் உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் உடனடியாக விரிவாக்கப்பட வேண்டும்.

 

முதலில், விடுதலைப் புலிகள் ‘சுட்டு’ வலியுறுத்தும் அதே ஏகபிரதிநிதித்துவத்தைத்தான் பிலிப் அல்ஸ்டனும் வேறு வார்த்தைகளில் நாசூக்காக அங்கீகரிக்கிறார். அடுத்தகட்டமாக இலங்கை அரசினதும் புலிகளினதும் மனித உரிமை மீறல்களை மிகவும் விலாவாரியாகவே சர்வதேச குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து இரு தரப்பினருமே தண்டனைக்குரிய குற்றவாளிகள் என நிறுவுகிறார். கடைசியில் இரு தரப்பினரையும் சர்வதேசம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார். இப்படியாகச் சர்வதேச வல்லாதிக்கவாதிகள் இலங்கை அரசியலில் தலையீடு செய்திருப்பதற்கான எல்லாவிதமான சப்பை நியாயங்களையும் பிலிப் அல்ஸ்டன் தனது அறிக்கையில் உருவாக்கிக் காட்டுகிறார்.

 

நோர்வே, அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகிய இணைத் தலைமை நாடுகளின் வழிநடத்துதலில் கடந்த அய்ந்து வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளால் புலிகளை ‘ஷொப்பிங்’குக்கு அனுப்பி எடுத்ததைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறென்ன நன்மை கிடைத்திருக்கிறது? அண்மையில் அணிசேரா நாடுகள் மாநாட்டில் உரையாற்றிய குரோசியா அதிபர் ஸ்டீபன் மெஸிக் “பத்து வருடங்கள் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது, பத்து நாட்கள் யுத்தம் நடத்துவதை விட எவ்வளவோ சிறந்தது” என்றார். ஆனால் இலங்கையில் யுத்தமும் கொடிது! பேச்சுவார்த்தையும் கொடிது!! பேச்சுவார்த்தைகள் நடந்த இந்த ஆறு வருடங்களிலும் இலங்கையில் கொலை விழாத நாளேயில்லை. அமைதிப் பேச்சுச் சூழலைப் பயன்படுத்திப் புலிகள் தமது அரசியல் எதிரிகளை கொன்றொழித்தனர். யுத்த நிறுத்தத்தை அனுசரிக்கிறோம் என்று கூறிக்கொண்டுதான் அரசு வங்காலை, வள்ளிபுனம் படுகொலைகளை நிகழ்த்தியது.

 

இன்னும் பத்து வருடங்கள் தொடர்ந்து பேசினாலும் புலிகளாலோ அரசாலோ ஓர் இணக்கப்பாட்டுக்கு வர முடியாது. ஒக்ரோபர் 28-29ல் ஜெனிவாவில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் அடுத்த பேச்சுவார்த்தைக்கான நாட்களைக் கூடத் தீர்மானிக்க முடியாதவாறு படு தோல்வியடைந்திருக்கின்றன. புலிகளிடம் ஒரு சிறிய அரசியல் விட்டுக்கொடுப்பைச் செய்தால் கூட சிங்கள இனவாதிகளினதும் ஜே.வி. பியினதும் ஹெல உருமயவினதும் கடுமையான எதிர்ப்பை அரசு சந்தித்தேயாகும். அந்தச் சிறிய விட்டுக்கொடுப்புக் கூட இலங்கையில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்தலாம். மறுபுறத்தில் புலிகள் அரசிடம் செய்யும் ஒவ்வொரு விட்டுக்கொடுப்பும் புலிகளின் பெரும் ஆதரவுத் தளமான புலம்பெயர் தமிழர்களிடமும் தமிழ்த் தேசியவாதிகளிடமும் பெரும் அதிருப்திகளை ஏற்படுத்தும். அந்த விட்டுக்கொடுப்புக்கள் புலிகளின் அணிகளுக்குள் கூட இன்னொரு பெரும் பிளவை உண்டாக்கலாம். விட்டுக்கொடுப்புகள் இல்லாமல் தீர்வை நோக்கி எப்படி நகருவதாம்? பெரும் அரசியல் முட்டுச் சந்துக்குள் சிக்கியிருக்கும் அரசும் புலிகளும் தாங்கள் வளர்த்தெடுத்த கண்மூடித்தனமான இனவாதத்துக்குத் தாங்களே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.

 

இலங்கை அரசியலின் அடுத்த கட்டம் இப்படியாகத் தொட்டுத் தொடரும் பேச்சுவார்த்தையும் ‘மட்டுப்படுத்தப்பட்ட’ யுத்தமுமாக நகருவதற்குத்தான் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இலங்கை மக்களின் தலைவிதி சிறிலங்காத் தரகு முதலாளித்துவ அரசிடமும் பாஸிசப் புலிகளிடமும் சிக்கியிருக்கும்வரை, அந்த அரசும் புலிகளும் மட்டுமல்லாமல் தமிழ் ‘சனநாயகச்’ சக்திகளும் ஏகாதிபத்தியங்களின் கால்களில் விழுந்து கிடக்கும் வரை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சொன்னதைத்தான் சற்றே மாற்றி வருத்தத்துடன் நாமும் சொல்லவேண்டியிருக்கிறது: “இலங்கை மக்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்”.

 

இலங்கையில் இன ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போராட்டமும் புலிப் பாஸிசத்தை ஒழிப்பதற்கான போராட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றுக்கு எதிரான போராட்டங்களை நாம் எந்த முனையிலிருந்தும் எந்த வடிவிலும் தொடங்கலாம். ஆனால் பிலிப் அல்ஸ்டனின் அறிக்கையைப் போல நாமும் பிரச்சினைகளை எளிமைப்படுத்தியும் குறுக்கு வழிகளிலும் விளங்கிக்கொள்ளக் கூடாது. எங்கிருந்து தொடங்கினாலும் இன்றைய ‘புதிய உலக ஒழுங்கையும்’ ஏகாதிபத்திய இயங்கு முறைமைகளையும் சர்வதேச முதலாளியங்களின் மூலதனப் போட்டியில் இலங்கையின் வகிபாகத்தையும் இவற்றுக்கும் இலங்கை அரசியலுக்குமுள்ள நேரடி மற்றும் கள்ளவழித் தொடர்புகளையும் நாம் கருத்தில் வைத்தாக வேண்டும். சர்வதேசச் சமூகம், அய்க்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம் போன்றவற்றின் கபடத்தனங்களைப் புரிந்து கொண்டு சர்வதேச அரசியலில் வேறு மாற்றுக்களைக் கண்டடைய நாம் முயலவேண்டும். இதுவொரு ‘பஞ்சி’ பிடித்த வேலை என நீங்கள் கருதி, உங்கள் தனிமனித அக விருப்பங்களினால் உந்தப்பட்டுச் சமாதானத்தை வரலாற்றின் குறுக்கு வழிகளால் சென்று கண்டடையலாம் என நம்புவீர்களானால் உங்களுக்கும் ‘தலைவர்’ மாவீரர் தின உரையில் ஒரு வழியைக் காட்டுவார் என இப்போதே வாயை அகலத் திறந்து வைத்திருப்பவர்களுக்கும் இந்தியாவின் ‘சிக்னலுக்காகக்’ காத்துக் கண்கள் பூத்துக் கிடப்பவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. வரலாறு தனி மனிதர்களின் விருப்பங்களை - அவை எவ்வளவு தான் உன்னதமாய் இருந்த போதிலும் - பொருட்படுத்துவது கிடையாது.