நான் அறிந்தவாறு தேனீ இணையத்தளத்தின் நெறியாளரும், எல்லோரும் அறிந்தவாறு TBC வானொலியின் ஜெர்மனி ஏஜென்டுகளில் ஒருவருமான ஜெமினிக்கு வணக்கங்கள்.

நீங்கள்,அவதூறுகளால் நிரப்பி எனக்கு மரியசீலன் எழுதிய பகிரங்கக் கடிதத்தை 28.05.2006ல் உங்கள் தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். நானும் உடனடியாகவே மரியசீலனின் கடிதத்தில் உள்ள பச்சைப் பொய்களையும் அவதூறுகளையும் சொல்லுக்குச்சொல் வரிக்குவரியாகச் சான்றுகளுடன் தெளிவுபடுத்தி ஒரு கட்டுரையை எழுதி உங்களுக்கு 31.05.2006ல் அனுப்பியிருந்தேன். நீங்களும் என் பதிலைத் தேனீயில் பிரசுரிக்கப் போவதாக 01.06.2006ல் தேனீயில் அறிவித்திருந்தீர்கள். தேனீ எனக்கு வழங்கப் போகும் கருத்துச் சுதந்திரத்தை எண்ணி நான் அகமகிழ்ந்திருக்கையில் இன்று " ஷோபாசக்தியின் பதில் பிரசுரிக்கப்படமாட்டாது" என உங்கள் தளத்தில் அறிவித்திருக்கிறீர்கள்.என்ன தோழரே? தீவானைத் தீவானே இப்படிச் சுத்தலாமா?

எனது பதிலை பிரசுரிக்க மறுத்ததற்காக நீங்கள் சொல்லும் சப்பைக் காரணம் உங்களுக்கே யோக்கியமாகப்படுகிறதா? வேறு இணையத்தளங்களில் எனது பதில் பிரசுரிக்கப்பட்டதால் தேனீ பிரசுரிக்காது என்கிறீர்கள். நீங்கள் இதுவரையில் வேறு இணையத்தளங்களில் பிரசுரமான கட்டுரைகளைத் தேனீயில் பிரசுரித்ததே இல்லையா? அவ்வாறான பலபத்து மறுபிரசுரக் கட்டுரைகள் தேனீத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றனவே! உங்கள் தளத்தில் வெளியான ஆதாரங்களற்ற அவதூறுகளுக்கான பதிலை, உங்களுக்கெனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட பதிலை, உங்களுக்கு உடனடியாகவே அனுப்பப்பட்ட பதிலை, முக்கியமாகத் தேனீயில் என் மீதான அவதூறுகளை மட்டுமே வாசித்திருந்த தேனீயின் குறிப்பான வாசகர்களுக்கு என் தரப்பைத் தெளிவுறுத்தும் பதிலைத் தேனித் தளத்திலேயே வெளியிடுவது தானே தார்மீகம்? அத் தார்மீகப் பொறுப்பு ஏன் உங்களிடமில்லை? sathiyak.blogspot.com மிலும் tamilcircle.net லும் பிரசுரிக்கப்பட்டிருந்த என் பதிலுக்குத் தேனியில் Link காவது கொடுக்கும் ஆகக் குறைந்தபட்ச ஊடக அறங்கூட உங்களிடம் கிடையாதா? நீங்கள் பசப்பித் திரியும் கருத்துச் சுதந்திரத்தின் யோக்கியதை இவ்வளவுதானா என்று கேட்கிறேன்? பதில் சொல்லுங்கள் தோழரே!

 

 

- ஷோபாசக்தி


06.06.06