Language Selection

இறை நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

(“நான் தொடர் வண்டி நிலையத்திலேயே இருக்கவில்லை. நான் எனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். ஆனால் காவல் துறை என்னை சாட்சிகளில் ஒருவனாக சேர்த்து கொண்டது” – முரளி மூல்சாண்டி)


பதட்டமும் தன்னிச்சையான முடிவுகளும்: கரசேவகர்களின் வாக்குமூலங்களும் அதன் நம்பகத்தன்மையும் எத்தகையது?


கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களைக் கொண்டு வந்ததைப் பார்த்தாக கூறும், S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களின் வாக்குமூலங்கள் வார்த்தைக்கு வார்த்தை ஒன்று போல உள்ளதால், சொல்லக் கூடிய விளக்கங்களின்(வாக்குமூலங்களின்) நம்பகத்தன்மை கேள்விக்குரியதோ என்னும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு, மேஹ்சனாவை சேர்ந்த நான்கு கரசேவகர்கள் – அம்ருத்பாய் பட்டேல், தினேஷ்பாய் பட்டேல், ராம்பாய் பட்டேல் மற்றும் நிதின்பாய் பட்டேல் ஆகியோர் ஒரே குழுவைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாது, மேஹ்சனா மாவட்ட விஹெச்பி தலைவரோடு பயணம் செய்த இவர்களின் வாக்குமூலங்கள், சிறு புள்ளி கூட மாற்றம் இல்லாத மறுபிரதியாக இருப்பதாகும். இன்னும் இவர்களும் கூட, கலவரகாரர்கள் பெட்டியைத் தீயிட்டு கொளுத்தியதைத் தாங்கள் பார்த்ததாக கூறவில்லை. கலவரகாரர்கள் திரவ எரிபொருள்களை கொண்டுக் வந்ததைப் பார்த்ததாகவே கூறுகிறார்கள்.

 

எத்தகைய எரிபொருள்களைக் கரசேவகர்கள் பார்த்ததாக கூறுகிறார்கள்? பதில் குழப்பமாகவே வெவ்வேறு தன்மையுடையதாக உள்ளது. அ) அமில குடுவைகள், ஆ) பெட்ரோல் குடுவைகள், இ) பெட்ரோல் மற்றும் மண்ணென்ணை நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரம்கள் ஈ) தீபந்தங்கள். கரசேவகர்கள் தங்களுடைய வாக்குமூலத்தில், S-6 பெட்டியில் தீ ஏற்பட்ட விதத்தை புரியும் விதத்திலேயே கூறியுள்ளார்கள்.


அவர்கள் கூற்றுப் படி, கலவரகாரர்கள் அ) அமில குடுவைகளையும் பெட்ரோல் குடுவைகளையும் பெட்டியின் உள்ளே வீசினார்கள், ஆ) பெட்டியின் வெளிபுறத்திலிருந்து பெட்ரோல் மற்றும் மண்ணென்ணையை தெளித்தார்கள், இ) உடைக்கப்பட்ட ஜன்னல்கள் வழியாக பெட்ரோல் மற்றும் மண்ணென்ணையை பெட்டியின் உள்ளே ஊற்றினார்கள், ஈ) எரியும் தீபந்தங்களை உடைக்கப்பட்ட ஜன்னல்கள் வழியாக வீசினார்கள்.


S-6, S-2, S-4 மற்றும் பொது பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்கள், மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களையும் பார்த்தாக கூறினார்கள். தொலைவில் இருந்து பார்க்க கூடியவர்களால், வீசப்பட்ட பொருள்களின் தன்மை என்னவென்பதை அவ்வளவு எளிதாக விளக்க முடியாத நிலையில், இவர்கள் எப்படி அப்பொருள்களின் தன்மையை அறிய முடிந்தது?


மனசாட்சியோடு கரசேவகர்களிடமிருந்து இவ் வாக்குமூலங்கள் பெறப்பட்டதா? பதில் இல்லை என்பதேயாகும். S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்த கரசேவகர்களின் வாக்குமூலங்கள் பலவும் கீழே குறிப்பிடப்படும் காரணங்களால், ஒரு பக்க சார்புடையதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளது.


(“ஒரு புகைப்படகாரரை என்னிடம் காட்டி, அவரை நான் அடையாளம் காட்ட வேண்டும் என சொல்லி, நோயல் சாப் என்னிடம் ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்” - ரன்ஜித்சிங் பட்டேல்)

 

"S-6ல் பயணம் செய்த கரசேவகர்கள் மற்ற பெட்டிகளில் பயணம் செய்த கரசேவகர்களுடன் சேர்ந்து நடைமேடையில் வாக்குவாதங்களிலும் சச்சரவுகளிலும் ஈடுபட்டார்கள்" – இது இராணுவ வீரர் பாண்டேவாலும் இன்னும் காவல்துறையாலும் உறுதிபடுத்தபட்ட உண்மையாகும். இருந்தும் கூட, நடைமேடை வாக்குவாத சர்ச்சைகள் பற்றியோ அல்லது தூக்கி செல்லப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் பற்றியோ ஒரு கரசேவகர் கூட தங்களது வாக்குமூலத்தில் கூறவில்லை. அவர்கள் (தங்கள் வாக்குமூலத்தில்) நேரடியாக கல்வீச்சு சம்பவத்திற்கு சென்று விட்டனர். ஆனால் அதற்கு எது தூண்டியதோ, அதை மறைத்து விட்டனர்.

 

இன்னும் மோசமான விசயம் என்னவென்றால், வழக்கிற்குத் துணையாக அவ்வப்போது தங்களுடைய வாக்குமூலங்களை அநேகமான கரசேவகர்கள் உருவாக்கினார்கள். தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொண்டு வரும் புதுப்புது கருத்துக்களை உறுதிப்படுத்த நாடிய போதெல்லாம், கரசேவகர்கள் அதற்கு ஏற்ப தங்களது வாக்குமூலங்களைக் கொடுத்தார்கள் -இதனால் அநேகருடைய வாக்குமூலங்கள் முதல் வாக்குமூலத்திலிருந்து முழுமையாக மாறி இருந்தது.

நடுநிலையான பார்வை: S-6 பெட்டியில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில், கரசேவகர் அல்லாத பொதுமக்களிலுள்ள நடுநிலையான பயணிகளில் எவரேனும் ஒருவர் தீ உருவானதற்கான காரணத்தைப் பார்த்தது உண்டா?

 

ஆம் என்ற பதில் உண்டு. 4 பேரை கொண்ட குடும்பம் அது –லாலன் பிரசாத் சவ்ராசியா, அவரது மனைவி ஜான்கி பென், இவர்களுடைய 13 வயது மகன் கியான் பிரகாஷ் மற்றும் குழந்தை ருஷ்ஹப் – இவர்களும் S-6 பெட்டியில் பயணம் செய்தவர்கள். இவர்கள் தங்களது சொந்த ஊரான அலஹாபாத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள். S-6 பெட்டியில், இவர்களுக்கு இருக்கை எண் 8 மற்றும் 72 முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இருப்பினும், இருக்கை எண் 72ஐ கரசேவகர்கள் ஆக்கரமித்து இருந்ததால் இக்குடும்பம் முழுவதும் இருக்கை எண் 8ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டியதாயிற்று. பிறகு இவர்கள் இருக்கை எண் 6க்கு மாற்றப்பட்டார்கள். 4 மார்ச் 2002 அன்று கொடுத்த வாக்குமூலத்தில் 13 வயது கியான் பிரகாஷ் கூறும் போது, “கல்வீச்சின் காரணமாக, பெட்டியின் கதவுகளும் ஜன்னல்களையும் பெட்டியிலுள்ளவர்கள் மூடிவிட்டார்கள். இருப்பினும் எங்கள் பெட்டியின் மீது கல்வீச்சு தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இரும்பு ஜன்னல் கதவை கொண்டு அடைப்பதற்கு முன்பே, எரியும் ஏதோ ஒரு பொருள் உள்ளே வந்து விழுந்தது. உடனே பெட்டியின் உள்ளே கருப்பு புகை மண்டலம் உருவானது. இதை பார்த்த நான், அக்காள் மகள் ருஷ்ஹபையும் தூக்கி கொண்டு உடனே தொடர் வண்டியிலிருந்து வெளியேறுமாறு எனது தாயாரிடம் கூறினேன்.

 

அந்த நேரத்தில் நாங்கள் மேல் படுக்கையில் அமர்ந்திருந்தோம். புகையின் காரணத்தால் எதையும் பார்க்க முடியவில்லை. எங்களது உடமைகளை தொடர் வண்டியிலேயே விட்டுவிட்டு, எனது பெற்றோர்களும் நானும் கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டோம். எனது தந்தை ருஷ்ஹபை தூக்கி கொண்டு இறங்கும் சமயத்தில் யாரோ ஒருவர் அவனை பறித்து சென்று விட்டதாக அவர் கூறினார். நானும் எனது தாயாரும் ருஷ்ஹபை தேடி அழைந்தோம். ஆனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.”

ஜன்னல் வழியாக எரியும் ஏதோ ஒரு பொருள் உள்ளே வந்து விழுந்ததாகவும், அதன் பிறகு கரும்புகை மண்டலம் பெட்டியின் உள்ளே உண்டானதாகவும் கியான் பிரகாஷின் பெற்றோர்களான லாலன் பிரசாத் சவ்ராசியாவும், ஜான்கி பென்னும் மேலே கூறிய தகவலை உறுதி செய்தனர். ஆனால், கலவரகாரர்கள் பெட்ரோல் அல்லது மண்ணென்ணை அல்லது எரிபொருள் நிரப்பப்பட்ட டின்களை தூக்கி வந்ததை பார்த்தாக இவர்களில் எவரும் கூறவில்லை.


(“எல்லா பெயர்களையும் காவல்துறையினர் தந்தனர். சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் சாட்சிகளில் ஒருவர் கூட தங்கள் வாக்குமூலங்களை அவர்களாக எழுதவில்லை. காவல்துறையே எழுதியது.” – ககுல் பதக்)


கலவரகாரர்கள் தீ வைத்ததை தான் பார்க்கவில்லை என்றாலும், எரியும் பெட்டியிலிருந்து தப்பித்து வெளியே வந்த பிறகு, கலவரகாரர்களில் சிலர், எரிந்து கொண்டிருக்கும் S-6 பெட்டி மேலும் நன்கு எரிவதற்காக புல்களையும், படுக்கை விரிப்புகளையும் பெட்டியின் கீழே போடுவதை பார்த்தாக லால்டாகுமார் ஜத்ஹவ் கூறினார். ஆனால், எரிபொருள்களையோ அல்லது பிளாஸ்டிக் டின்களையோ கலவரகாரர்கள் தூக்கி வந்ததாக தான் பார்க்கவில்லை என்று ஜத்ஹவும் கூறினார்.

 

விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி: முன்னரே நன்கு திட்டமிடப்பட்ட சதி செயலா? அல்லது திடீரென்று உருவான கலவரமா?