Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அவதூறுகளின் அரசியல் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் லெனின் "அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், பேடித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது."

 



புலம்பெயர் நாட்டில் தொடர்ச்சியாக இந்த எரிச்சலூட்டும் அவதூறுகளும், பேடித்தனம் நிறைந்த ஒட்டாண்டித்தனமும் கூட அரசியல் நக்கிப் பிழைக்கும் பிழைப்பாகி உள்ளது. "கறுப்பு" என்ற பெயரில் ஒரு தொகுப்பு ஒன்று வெளியாகியிருந்தது. இருள், கறுப்பு என்று சமுதாயத்தின் வெளிச்சத்தையே தாங்களாகவே மறுக்கும், சமுதாய நடைமுறை மாற்றத்தை மறுப்போரின் கட்டுரைகளை சமூகமயமாக்கும்   இடைதரகர்களின் முயற்சியால் இத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

 

இந்த தொகுப்பில் சி.புஸ்பராஜா "சிறியதொரு கள ஆய்வு" என்ற பெயரில், எனக்கு எதிராக காழ்ப்புடன் கூடிய சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும் கூடிய வக்கிரத்தை வெளியிட்டு இருந்தார். உயிர்நிழலில் நான் இறந்து போனதாக கூறி எழுதிய கல்வெட்டை எதிர்த்து, நான் அவ் இதழுக்கு பதில் எழுதி இருந்தேன். இந்த பதிலில் இருந்து காழ்புக்கு இசைவாக, எனது கழுத்தை முன்னும் பின்னுமாக வெட்டி முண்டமாக்கிய பின் இந்த பிறப்பைக் குறித்த அவதூற்றைக் கட்டமைத்தனர். அதைப் பார்ப்போம்.

 

" "நான் சாதி கடந்துதான் திருமணம் செய்தவன் (இவர் தன் திருமணத்தையே சாதி வெறியுடன் பார்க்கிறார் என்பது ஒருபுறமிருக்க, இவர் ஒன்றும் பஞ்சமர் சாதியில் திருமணம் செய்யவில்லை. மாறாக, யாழ்ப்பாணத்தில் இன்றைக்கு நடைமுறையிலிருக்கும் சாதியமைப்பில் வெள்ளானுக்கு அடுத்தபடியில் இருக்கும் சாதியில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பது கவணத்தில் எடுக்கப்படவேண்டும்.) ... எனது சொந்த ஊர் பள்ளர், பள்ளிகளை கோவிலுக்குள் நுழைய வைத்தவன்.." என்று அவரது பேனா பள்ளர் பள்ளி என்கின்றது. குறைந்த பட்சம் பள்ளர் என்னும் இனத்தைச் சேர்ந்த பெண்களையும் ஆண்கனையும் என்று எழுத அவரது பேனாவுக்கு முடியாமற்த்தானே போனது. இவர் ஒரு முற்போக்காளாராக பாரிஸில் திரிகிறார். இவர் அறிந்தோ அறியாமலே ஊறியிருக்கும் தான் வெள்ளாளன் என்னும் இறுமாப்பின் விளைவுதானே இந்த எழுத்துக்கள், இந்த புலம்பல்கள்." என்று சி.புஸ்பராஜா தனது சொந்த வக்கிரத்துடன் கூடிய காழ்புடன் முண்டமாக்கிய பின் திரித்து வெளிப்படுத்துகின்றார்.

 

நான் பஞ்சமர் சாதியில் திருமணம் செய்தேன் என்று எப்போதாவது எங்கேயாவது சொல்லியுள்ளேனா! அப்படி சொல்லாத போது ஏன் இப்படி எடுத்துக் காட்டி திரித்து எழுத முனைகின்றனர். நான் ஏன், எங்கே எதற்காக இதை எழுதினேன் என்று சொல்ல முடியாத வக்கிரம். சாதி நிலையில் வெள்ளாளருக்கு அடுத்த படிநிலையில் திருமணம் செய்தேன் என்ற உங்கள் கூற்றும் கூட, யாழ் சமூக ரீதியில், சாதிய நிலையில் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. அடுத்த படிநிலையில் திருமணம் செய்தேன் என்ற கூறுவது எப்படி சாதி பார்ப்பதாக இருக்கும்?!; எப்படி இது வெள்ளாளன் என்ற இறுமாப்பை எற்படுத்தும்?!. 

 

எனது வசனத்தின் முன்பக்கம், பின்பக்கத்தை நீக்கி முண்டமாக்கிய பின்பு தான் (... எனது சொந்த ஊர் பள்ளர், பள்ளிகளை கோவிலுக்குள் நுழைய வைத்தவன்...), இப்படி எனக்கு எதிராக காழ்ப்பாக்க முனைகின்றனர். அதையும் கூட அடிப்படையற்ற வாதங்களால் பூச்சூட்ட முனைகின்றார். சாதி அமைப்பைப் போல், இதன் பூர்விகம் என்ன? சமூகத்தின் மீது விமர்சனபூர்வமான நடைமுறை மாற்றத்தை முன்வைத்து போராடும் அரசியலால் அம்பலப்பட்டு போனவர்கள், எனக்கு எதிரான கல்வெட்டு ஒன்றை வெளியிட்டனர். துப்பாக்கியுடன் கூடிய அதிகாரத்தை இழந்த சருகுகள் என்னை உயிருடன் கொல்ல முடியாத நிலையில், கல்வெட்டு ஒன்றை ஷோபாசக்தி மூலம் வெளியிட்டனர். இந்த கல்வெட்டை எழுதிய ஷோபாசக்தி யார்? "மானுடத்தின் தமிழ் ஒன்று கூடலில்"; புலிகளால் போற்றப்பட்ட "கொரிலா"வைத் தொகுத்தவர். இக் கல்வெட்டை, உயிர்நிழலும், எக்ஸிலிலும் என் மீதான அரசியல் காழப்;புணர்வுடன் தனித்தனியாக கூடிக் கூலாவி தத்தம் இதழில் வெளியிட்டு இருந்தனர். அந்த கல்வெட்டுக்;கான பதிலில் இருந்து தான், புஸ்பராஜா எனக்கு எதிராக வெட்டிச் சுருக்கி இப்படி காழப்;பாக்க முனைகின்றார்.

 


அன்று எனது பதிலை பிரசுரிப்பதை இழுத்தடித்தனர். அன்று இதற்கு நான் பதிலளித்து உயிர்நிழலுக்கு எழுதிய போது, அதை வாசிக்க தூண்டாத வகையில் திட்டமிட்டு கட்டுரைக்கு சிரச்சேதம் செய்தனர். கட்டுரையை விரும்பியவாறு வெட்டி திருத்தியதுடன், பதிலை ஒரு வாசகர் கடிதமாக்கினர். அத்துடன் அவர்கள் அதை விடவில்லை. இதை மிகச் சிறிய எழுத்தில் போட்டதுடன், பந்திகளை நெருக்கியடித்து சிதைத்தனர். இதை திட்டமி;ட்டுச் செய்தனர். அவர்கள் விரும்பியவாறு வெட்டித் திருத்திய கட்டுரையில் இருந்து, புஸ்பராஜா மீளவும் வெட்டித் திருத்தி என்னை தூற்ற முனைகின்றார். 



கல்வெட்டை வெளியிட்டவர்களை எதிர்த்து ஒரு குரலையும் புஸ்பராஜா கொடுக்கவில்லை. வன்முறைக்கு எதிரானவர் என்று கூறும் இவர் தான், அண்மையில் குறுந்திரைப்பட விழாவில்  தீக்கொழுந்து திரைப்படத்தை கொச்சைப்படுத்தி வெட்டிச் சிதைத்த போது, அதை எதிர்த்து குரல் எழுப்பிய என்னைத் தாக்க நெருங்கிய கலைச்செல்வனின் நடத்தையை அங்கீகரித்து நின்றவர். தாக்க நெருங்கி முகத்துக்கு முன்னே நின்று ஆத்திரமூட்மும் வகையில் அவதூறுகளை பொழிந்த போது, வன்முறைக்கு எதிரான வாய் சவடால் பேர்வழிகள் மௌனமாக தாக்குவதை ஊக்குவித்து நின்றனர். நாம் நிதானமாக அரசியல் வழியில் எமது கருத்தை முதன்மைப்படுத்தி இருந்த இடத்தை விட்டே எழாமல் போராடியதால், அவர்களின் வன்முறை முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனால் புஸ்பராஜா இதைப் பற்றி வாய் திறவாத மௌனியாக அங்கீகரித்தார். இது தான் புலம் பெயர் அரசியலின் வெட்டு முகம்.



பிறப்பை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டு தூற்றி அரசியல் பேசும் தலித்துகள், எனக்கு "வெள்ளாளர் திமிர்" என்று கல்வெட்டில் அடித்தனர். எனது அரசியல் வழியில் சரி, என் சொந்த வாழ்வைச்; சரி எந்த விதத்திலும் விமர்சிக்க முடியாத நிலையில், எனது பிறப்பை ஆதாரமாக கொண்டு தலித் பிழைப்பை நடத்த முனைந்தனர். இதற்கு நான் பதிலளித்த போது உயிர்நிழல் வெட்டி திருத்தியது. இக் கட்டுரையை புஸ்பராஜா எப்படி மறுபடியும் வெட்டி முடமாக்கி எழுதியுள்ளார் என சொந்தமாக புரிந்து கொள்ள உயிர்நிழலில் உள்ளது என்ன எனப் பார்ப்போம்.



"ரொக்சியத்தில் இருந்து அ.மார்க்ஸ் ஆசியும் அருளும் பெற்று புது அவதாரம் எடுத்தவரான ஷோபாசக்தி, அங்கு பெற்ற தலித் ஆசியில் கூட போராட்ட மார்க்கத்தை தலித்-ரொக்சிய கோட்பாட்டில் வைக்க முடியுமா?  சவால் விடுகின்றேன். எப்படி சாதி ஒழிப்பீர்கள் என்று. இப்படிக் கேட்டால் வெள்ளாளன் திமிர் என்பீர்கள். இது என்னைப் புலி என்றது போல் தான். நான் சாதி கடந்தவன்;. அதற்காக நான் போராடிய துரும்பைக் கூட உங்களால் செய்ய முடியாது. நான் சாதி கடந்துதான் திருமணம் செய்தவன்;. எனது சொந்த ஊரில் எனது சொந்த உறவினரை எதிர்த்து (பிளாட் தலைவரும் வெள்ளாள சாதித் தடிப்பு கொண்ட உமாமகேஸ்வரன் எனது ஊர் மட்டுமின்றி, எனது உறவினர்கூட) எனது சொந்த ஊர் பள்ளர் பள்ளிகளை கோயிலில் நுழையவைத்து, அங்கு பலாத்காரமாக வெள்ளாளரை மீறி அவர்களை சபை இருத்தியவன்." என்று எழுதியதையே சி.புஸ்பராயா வெட்டிக் குறைத்து முண்டமாக்கியதை நாம் மேல் பாhத்தோம். 



நாங்கள் சாதிக்கு எதிராக போராடிய போது, முகம் தெரியா இடத்தில் போராடவில்லை. சொந்த உறவினரை, சொந்த ஊரிலேயே எதிர்த்துப் போராடினோம். அன்று கோவில் நுழைவை மட்டுமின்றி, ஒரே சபையில் (தனிச் சபையில் அல்ல) உணவு உண்ணவும் (அன்று சித்திரை கஞ்சி நாள்) உரிமையை முன்வைத்த போது, சாதித்தடிப்புள்ள உறவினர் சிலர் மறுத்தனர். நீ  யார் இதைச் சொல்ல என்ற கேள்வியுடன், உங்களுக்கு என்ன உரிமை உண்டு என்ற கேள்வியை, நான் உட்பட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயர் சாதியின் பக்கத்தில் இருந்து முன்வைத்தோம்;. அவர்கள் எம்முடன் முரண்பட்ட நிலையில் கட்டுவனுக்கு ஆள் அனுப்பி, சாதி வன்முறையில் ஈடுபடும் 25 சாதிய குண்டர்களை எம்மைத் தாக்க அழைத்து வந்தனர். புளாட் எமக்கு எதிராக உயர்சாதியின் பக்கம் களம் கட்டி நின்றது. இதற்கு துணையாக கனடாவில் சில கவிதை நூல்களை எழுதிய திருமாவளவன் என்ற கருணாகரன (கலைச்செல்வனின் அண்ணன்);, புளாட் சார்பாக இதை ஆதரித்து நின்றவர். இந்த நிலையில் நாம் துப்பாக்கியை எடுத்து வந்தோம். இதன் பின்பே கட்டுவனில் இருந்து வந்த சாதித் தடியர்கள் கலைந்து சென்றனர். ஒரே சபையில் அன்று உணவு பரிமாறப்பட்டது. இப்படி நான் பல சாதிப் போராட்டங்களை சொந்த ஊரில் மட்டும் நடத்தியிருக்கின்றேன்.



இப்படி இருக்க வெட்டி முண்டமாக்கி திருத்தியதை, மறுபடியும் சி.புஸ்பராயா முண்டமாக்கி  திருத்தி, அதற்கு சாதித்தடிப்பு என்று கூறுவது அப்பட்டமான காழ்ப்புதான்;. இங்கு நான் சாதி கடந்தவன் என்றால், சாதி ரீதியான எந்த சடங்குகள் முதல் அதன் வடிவங்களையும் எதிர்த்து நிற்பவன்;. நான் காதலித்த பெண்ணின் சாதி தெரிந்து ஒரு நாளும் காதலிக்கவில்லை. சமுதாய ரீதியாக குடும்ப ரீதியாக சாதி தெரிந்த போது, அதை முன்வைத்து காதலை தடுக்கும் எந்த முயற்சியையும் நான் அனுமதிக்கவில்லை. இங்கு நான் சாதி கடந்தே இருந்தேன்;. சாதி கடக்கும் போது பஞ்சமரா என்பது இங்கு விவாதத்துக்குரியது அல்ல. இந்த சாதியமைப்புக்கு நான் எதிராக இருந்தேன் என்பது மையப்பொருள். எனக்கு வெள்ளாளர் சாதித் திமிர் என்று சொல்லும் போது, அதன் காழ்ப்பை அம்பலப்படுத்தவே இதை அன்று எடுத்துக் காட்டியிருந்தேன்;. புஸ்பராஜா பஞ்சமர் இல்லை என்று கூறுவதன் பின் உள்ள நோக்கம் என்ன? தனிப்பட்ட வக்கிரமான அரசியல் காழ்ப்புத்தான்;. அடிப்படையும் ஆதாரமும் அற்ற கல்வெட்டில், பிறப்பை அடிப்படையாக கொண்டு பிழைக்க முயன்றனர். இந்த காழ்ப்பை அம்பலப்படுத்த எடுத்துக் காட்டியதை, சாதி ரீதியாக பார்ப்பதாக கூறுகின்றார். நான் சாதி கடந்தவன் என்பது, சாதி ரீதியாக எனது திருமணத்தை பார்ப்பதாக கதை சொல்லுகிறார். நீங்கள் தானே வெள்ளாளத் திமிர் என்று அ.மார்க்ஸ்சின் "வெள்ளைத் திமிர்" (பார்க்க நூலை) கறுப்புத்திமிர் என்ற காழ்ப்பு அரசியலை அடிப்படையாக கொண்டு, கல்வெட்டு அடித்தீர்கள்;;. அதை அம்பலப்படுத்தும் போது, நடைமுறை சார்ந்த வாழ்வியல் போராட்டத்தை எடுத்துக் காட்டும் போது, சாதி பார்ப்பதாக மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு போட முனைகின்றனர்.



பள்ளர் பள்ளியர் எனக் குறிப்பிட்டதாக குற்றம் சாட்டி, குறைந்த பட்சம் பள்ளர் என்னும் இனத்தைச் சேர்ந்தவர் என எழுதவில்லை என்று புல்லரிக்க வைக்கின்றார். பள்ளர் பள்ளிகள் ஒரு இனமல்ல, அது ஒரு சாதியம். சாதியம் என்றால் படிநிலை வரிசையில் உள்ள அடிமட்ட சாதி. அதை இனமென்பது அதை நிலைநிறுத்தும் ஒரு மாபெரும் தலித் மோசடி. அரிஜன் என்று மேல் இருந்து காந்தி கடவுளின் குழந்தைகள் என சொன்னதும் சரி, கீழ் இருந்து தலித் என்று கூறுவது கூட சாதியை பாதுகாக்கும் மோசடியே. சாதிக்கு வெளியில் சாதி கடந்து அணிதிரட்டாத அனைத்தும், சாதியத்தை நிலை நிறுத்தும் சுயநல அரசியல் மோசடியே. பள்ளர் பள்ளிகள் என எழுதினாலே உயர்சாதிய அமைப்பில் தீட்டுப்பட்டுவிடும் என்ற வக்கிரம். உயர்சாதியை எதிர்த்த போராட்டத்தில் எப்போதும் சாதியின் பெயரால் எழுதப்படாத வரை, எதிரியை இனம் காணமுடியாத சூக்குமத்தை உருவாக்குவதாகும்;. பெண்ணின் மீதான கற்பழிப்பு நடக்கும் போது கற்பழிப்பு என்று எழுதுவதால் "ஆணாதிக்கவாதி" என்று கூறுவது போல், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேசியத்தை உயர்த்துவதால் "புலி" என்ற முத்திரை குத்துவது போல், இந்த சாதி விடையமும் உள்ளது. இதை விரிவாக புரிந்து கொள்ள "கற்பு" தொடர்பான ஒரு விவாதத்தில் "ஆணாதிக்கமும் சமூக ஒடுக்கமுறையும்" என்ற எனது நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளேன். எப்போதும் சாதியத்தை எதிர்த்த போராட்டத்தில் அடிநிலைச் சாதிகளின் பெயரில் போராடாத வரை, அது எதிரியை பாதுகாப்பதுதான்;. தலித் என்ற பெயரில் போராடுவது கூட சாதியை பாதுகாப்பதுதான்;. எதார்த்தத்தில்; எதன் பெயரில் ஒடுக்குமுறை உள்ளதோ, அதன் பெயரில் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடவேண்டும்;. இல்லாத வரை சாதியை பாதுகாத்து சலுகை பெறுவதை அடிப்படையாக கொண்டு, சாதியை நிலை நிறுத்துவது தான். சாதி ஒழிப்பு என்பது சாதி கடந்து போராட வேண்டும்;. சாதிகடந்த போராட்டத்தை நிராகரிக்கும் பிழைப்புவாதிகள், அதை சாதித்தடிப்பு என்று பிதற்றுகின்றனர்.



அண்மையில் "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற தலைப்பில், சி.புஸ்பராஜா அதிதமாக நியாயப்படுத்தப்பட்ட வலதுசாரி நூல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். பதிவுகள் என்ற பெயரில் தோற்றுப் போன பாசிச கனவுகளை, இரைமீட்டு நியாயப்படுத்தும் வக்கிரம் இந்த நூலி;ல் அரங்கேறியுள்ளது. இந்த பாசிக் கனவுகளின் போது எங்கேயும் சாதியை ஒழிக்கவில்லை. இன்று அதை சுயவிமர்சனமாக கூடப் பார்க்கவில்லை. இந்த பாசிச வலதுசாரி அரசியல் நியாயப்படுத்தலின் எல்லா நீட்சியிலும், அக்கபக்கமாக ஜனநாயகத்துக்கான ஒரு போராட்டமும், மக்களின் அடிப்படை நலன் சார்ந்த போராட்டமும் நடைபெற்றது. பலர் படுகொலை செய்யப்பட்டனர். அதைப்பற்றி முற்றான எதிர்மறையான கண்ணோட்டத்துடன், இந்த நூல் திட்டமிட்டே மீள்; படுகொலை செய்கின்றது. இந்தியா ஆக்கிரமிப்பு இராணுவம், இலங்கையில் வெறியாட்டம் நடத்திய போது, இந்தியா ஆக்கிரமிப்பாளனின் கூலிப்பட்டாளப் பிரமுகராக வடக்கு கிழக்கில் செயயல்பட்டதைக் கூட நியாயப்படுத்துகின்றார். அதை "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்று கூறி, இது தான் போராட்டம்; என்று  போராட்டத்தையே கொச்சைப்படுத்துகின்றார்;. இந்த நூல் பற்றிய விமர்சனத்தை, மற்றொரு நூலில் பார்ப்போம்;. சி.புஸ்பராஜாவின் தலித் கட்டுரையை பிரசுரிக்கும் கறுப்பும் எப்படி சாதியை ஒழிக்க போகின்றார்கள்;. அதன் அரசியல் என்ன. அதை பரிஸ்;சில் நடைமுறையில் இனம் காணமுடியும்;. சி.புஸ்பராஜா அண்மையில் தொண்டமானுக்கு, துரோகி அமிதலிங்கத்துக்கும் நடத்திய அஞ்சலி கூட்டத்திலும், அதன் நோக்கில் இருந்து இதை புரிந்து கொள்ள முடியும்;. மலையக மக்களை அடிமட்ட சாதியில் இருந்து தெரிவு செய்த காலனித்துவ வாதிகள், அந்த மக்களை கடத்திக் கொண்டு வந்தனர். அடிமட்ட சாதிகளை சாதிய ரீதியாக அடக்கி வேலை வாங்க, உயர்சாதி பிரிவினராக வந்த நக்கிப்பிழைக்கும் கூட்டத்தின் தலைவராக உருவான தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தியவரின் கட்டுரையை தாங்கி வெளிவந்த போதே "கறுப்"பின் தலித் அரசியல் வெளிச்சமாகின்றது. மலையமக்களின் உழைப்பை சுரண்டி ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ வர்க்கமாக திகழ்ந்த உயர்சாதிய தொண்டமான் வழியில், அமர்தலிங்கத்துக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தினார். தமிழ் இனத் துரோகியும் உயர்சாதிய வெறியனுமான தரகு முதலாளி வர்க்க பிரதிநிதியுமான அமர்தலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்தவும், அந்த சாதி வெறிபிடித்த தரகனுடன் தான் எடுத்த போட்டோவை பெருமையாக கருதி தொங்கவிட்டுள்ள புஸ்பராஜா தான், எம்மை சாதி திமிர் உள்ளவர் என தூற்றகின்றார். வாழ்க அதன் நிழலில் நின்றே "கறுப்"பில் கறுப்பு படர சாதிய பிழைப்பு அவதூறை பொழிந்துள்ளனர்.

15.5.2003