புலிகளுக்கும், ரணில் அரசுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் யாப்புக்கு முரணானது என ஜேவி;பியும், ஜாதிகவும் வழக்குத் தாக்குதல் செய்திருக்கிறது. இந்த அரசியல் யாப்பே இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு விரோதமான இனவாத யாப்பாகத்தான் எப்பவும் இருந்து வருகிறது. இதுபற்றி ஜேவிபிக்கு ஏதாவது சூடு சுரணை இருந்திருக்கிறதா? இதைவிடுவம், இந்த யாப்பு தனது சொந்த உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துத் தள்ளுவதை எல்லாம் அந்த மக்களின் சொந்த அதிகாரத்தில் வழக்காடி புரட்சிகர தீர்ப்பாக மாற்ற வக்கில்லாத இந்த ஞான சூனியங்கள்தான் ஏகாதிபத்திய வாசல்படி கூட்டுகின்ற இனவாத யாப்பு எனும் துடைப்பங்; கட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறது. புலிப் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று இவர்கள் ஆடுகின்ற சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களையும், ஏனைய சிறுபான்மை மக்களையும் பகடைக்காய்களாக உருட்டுகின்ற "மசாலவடே' அரசியல் இனவாதக் கட்சிதான் ஜேவிபி.

 

இப்படிச் சொல்வதால் பலருக்குப் பொத்திக் கொண்டு வரும்தான். வந்தாலென்ன, வந்திட்டுப் போகட்டுமே. இதுவரை காலமும் தீர்வுக்காக எடுக்கப்பட்ட எல்லாவித முயற்சிகளையும் தாக்கி வந்ததோடு தீர்வுகளை எல்லாம் நிராகரித்த ஜேவிபி, அரசில் இன்று அங்கம் வகிக்கும் போது கூட இனச்சிக்கலுக்கு உருப்படியாகச் சிறு துரும்பைக் கூட செய்ய முன்வராத நிலைமை ஆச்சரியத்துக்கோ அதிர்ச்சிக்கோ உரிய விடயம் ஒன்றல்ல. ஒருகாலத்தில் ஐந்து வகுப்புக் கொள்கை நடத்திய ஜேவிபி அதில் ஒரு வகுப்பாக இந்திய விஸ்தரிப்பு வாதத்தினை நடத்தியது. இலங்கையின் சிறுபான்மை இனங்களில் ஒன்றான மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இறுதி அங்கமாக அது கருதியது. இதன் பிரதிநிதி இ.தி.மு.க என்ற கருத்தை ஜேவிபி முன்வைத்தது.

 

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கிவந்து, 62ல் இராணுவச்சதியை அடுத்துக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் (இ.தி.மு.க) 68ல் சீர்திருத்த இயக்கமென்ற தனது நிலையினை மாற்றி அரசியல் கட்சியாக பிரவேசித்தது. 1969ல் தனது 4வது மாநில மாநாட்டையும், பொதுக் கூட்டமொன்றையும் யாழ் முற்றவெளியில் நடத்தியது. இக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ஏ.இளஞ்செழியன் ~~தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை சாதவீகப் போராட்டம் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் பெறவிரும்பின் தமிழ் மக்கள் கொரில்லா யுத்தமொன்றிற்கு தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமெனக்" கூறினார்.

 

~~ தற்கொலைப்படை அமைத்தல், பொலீஸ் நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டுமெனவும் ஆயினும் அதற்கான தேவை தற்போது இல்லை" எனவும் அவர் பேசியிருந்தார். (ஆதாரம்- எழுதாத வரலாறு ) இவ்வுரை சிங்கள இனவாதிகளுக்கு எரிச்சலை ஊட்டின. இ.தி.மு.கதை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்தின. தமிழ் காங்கிரசும் ஏனைய தமிழ் தலைவர்களும் இவ்வுரையைக் கண்டித்து அறிக்கைள் விட்டனர். சமத்துவம், சமாதானம், சமதர்மக்குடியரசு போன்றவற்றை இ.தி.மு.க வலியுறுத்தியதுடன், பேராதனைப் பல்கலைக் கழகம் போன்ற ஒர் நிறைவான பல்கலைக்கழகத்தை தமிழ் பிரதேசத்தில் கோரியது. ஆயினும் உடனடிக் கோரிக்கையாக வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பை அது கோரியிருந்தது.

 

இவ்வாறான ஒரு சூழலில் இ.தி.மு.க இன்னொரு இடதுசாரி பெயர் கொண்ட இளம் சோசலிச முன்னணி (இ.சோ.மு) எனவும் இயங்கத் தொடங்கியது. இளஞ்செழியன் இ.தி.மு. வின் மறைமுகத் தலைவராகவும், இ.சோ.மு தலைவராகவும் இயங்கினார். இ.சோ.மு 70களில் இடதுசாரி கூட்டரசை ஆதரித்தது. இ.தி.மு.க வடகிழக்கில் தேர்தலில் குதித்தது. கூட்டரசு ஆட்சிப்பீடம் ஏறிய ஒரு சில மாதத்தில் பதுளை சீனாக்கொல தோட்டத்தில் நோய்வாய்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வாகன வசதியை தோட்டத் தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கோரிக்கையாக முன்வைத்து 90 நாட்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுமிருந்தனர் அத் தோட்டத் தொழிலாளிகள்.

 

1970.10.01 திகதி தோட்டத்துக்குள் புகுந்த இடதுசாரி கூட்டரசின் பொலீஸ் படை துப்பாக்கிகொண்டு இப் போராட்டத்தை நசுக்கியது. இத்துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி அழகர்சாமி, இராமையா என்ற இரண்டு தொழிலாளர்கள் 1970.10.04ம் மரணமடைந்தனர். இப்படுகொலைக்கான கண்டன நடவடிக்கையில் இ.சோ.மு யுடன், ஜே.வி.பி கூட்டுக்கு வந்தது. இக்கூட்டின் தொடர்ச்சி வேலைத் திட்டமாக 71ல் தொழிலாளர் தினத்தை மலையகத்தில் இணைந்து நடத்துவதாக இணக்கம் ஏற்பட்டிருந்தது. இம் மேதினத்துக்கு முன்னர் 1971.03.13ல் ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீரா கைது செய்யப்பட்டார். இக் கைதைத் தொடர்ந்து 1971.04.05ல் ஜேவிபி திடீர் ஆயுதக் கிளர்ச்சியில் குதித்தது. இவ் ஆயுதக் கிளர்ச்சியில் தமக்கு ஆதரவாக மலையகத்தில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடும்படி ஜேவிபி, இ.சோ.மு யிடம் கோரியது. இதற்கு அவர்கள் தம் முடிவுக்கு 10 நாள் அவகாசத்தை ஜேவிபியிடம் கேட்டனர். இந்த அவகாசத்துக்குள் ஜேவிபியின் ஆயுதக் கிளச்சியை படு மோசமாக அரசு அடக்கத் தொடங்கியதுடன், ஜேவிபி, இ.சோ.முயினர் உட்பட ஏனைய இடதுசாரிகள் பலரும் நாடு அடங்கலாகக் கைது செய்யப்பட்டனர். 3 வாரத்தில் அடக்கப்பட்ட இக்கிளச்சியில் 50,000 க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர், 15,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

ஜேவிபி யாரை இந்நிய விஸ்தரிப்புவாதத்தின் நேரடிப் பிரதிநிகளாக இனங்காட்டியதோ, அவர்களிடமே தமது கிளச்சிக்காக கூட்டையும் கோரியும் இருந்தது. மலையக மக்கள் தொடர்பான தனது மிகமோசமான இனவெறிக் கருத்தை மாற்றாமல் - சுயவிமர்சனம் செய்யாமல் அவர்களிடம் கோரிய இக்கோரிக்கை ஜேவிபி தனது அதிகாரத்தைப் பெறுவதற்கான கபடம் நிறைந்த கோரிக்கையே ஆகும். 84ல் ஜேவிபியின் அதிருப்திப்பிரிவால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் ~~எல்லா அயல்நாட்டுத் தமிழர்களும் புரட்சிக்குப்பின் கொல்லப்படுவர்" என 71க்கு முன்னர் விஜேவீரா சொன்னதாக குறிப்பிட்டிருந்தனர். (ஆதாரம் இலக்கு-4) ஒருவேளை இக்கிளர்சிக்கு ஆதரவாக மலையகத்திலும் கிளர்ச்சி நடத்தப்பட்டு ஜேவிபி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அதன் பின் நிச்சயமாக இவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று யாரும் வாதிடவும் முடியாது. ஜேவிபியின் இக்கிளர்ச்சிக்கு உதவக்கூடிய நிலையில் மலையகமக்களை ஆயுதபாணியாக்கக்கூடிய தயார் நிலையில் இ.சோ.மு அன்று இருந்திருக்கவில்லை என்று யாரும் சப்பைக்கட்டும் கட்டமுடியாது. 70 களில் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கக் கூடிய விளைச்சல் நிலமாகவே இலங்கை முழுவதும் காணப்பட்டது. வேலையில்லாப் பிரச்சனை எரியும் பிரச்சனையாக நாடடலங்கலாகக் காணப்பட்டது. 69-70களில் வேலையில்லாப் பிரச்சனையே ஜேவிபியினதும், இ.தி.மு.கழகத்தினதும் முதன்மைக் கோரிக்கையாகக் காணப்பட்டது.

 

ஏன் வடக்குக் கிழக்கிலும் 70களில் ஆயுத இளைஞர் இயக்கங்கள் தோன்றுவதற்கான மூல ஊற்றும் இப்பிரச்சனையே ஆகும். தழிழ் இளைஞர் இயக்கங்களின் மூலம் ~மாணவர் பேரவை" என புஸ்பராஜா தரவளிகள் சாட்சியப்படுத்துபவை எல்லாம் அன்றைய சமூக நிலவரங்கள் கணக்கில் எடுக்கப்படாத தற்பெருமைகளே ஆகும். இவ் ஆயுத இயக்கங்களின் தோற்றத்துக்கு தரப்படுத்தலை முதன்மையான மையப் பிரச்சனையாகக் காட்டுவதே யாழ்த் தேசியத்தின் முகிழ்வுதான். ~மாணவர் பேரவை" யை உருவாக்கிய உரும்பிராய் சத்தியசீலன் இவ்வமைப்பை உருவாக்கும் போது "வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தை" உருவாக்கி வழிநடத்தி வந்தவரே. சத்தியசீலனின் கைது கூட மாணவர் பேரவையால் மட்டும் ஏற்பட்டதல்ல. மாணவர் பேரவைக்கு முன்னரே "ஈழ விடுதலை இயக்கம்", "தமிழர் விடுதலை இயக்கம்" என்பன வேலையில்லாப் பிரச்சனையின் சமூகப் பின்புலக் காரணிகளிலிருந்தும் இவை தோன்றியிருந்தது என்பதே யதார்த்தமாகும்.

 

ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்ற இளைஞர்களையும் இவ் நிலைமைகளையும் பாவித்தது, யாழ்த் தலைமைகள் அதிகாரத்தைத் தக்கவைக்க இளைஞர்களயும் இவ் நிலைமைகளையும் பாவித்தது அவ்வளவே!

 

84 யூலையில் ஜேவிபி தடை செய்யப்பட்ட போது தொடர்ந்து மூன்று பிரசுரங்களை அது வெளியிட்டிருந்தது. 16 பக்கங்கள் கொண்ட "சிறீலங்காவின் முற்போக்கான மக்களுக்கு" என்றும், 71 கிளர்ச்சியின் 13வது நிறைவுக்காக 18 பக்கங்கள் கொண்ட "காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" (உட்சுற்றுக்கு மட்டும்) என்றும், மேதினப் பிரசுரமாக இன்னொன்றுமாக அவை இருந்தன. இவை அனைத்துமே தமிழ் அமைப்புகள் பற்றியும், தமிழர்களுக்கான தீர்வுகள் பற்றியுமே கருக்கட்டி வெளிவந்திருந்தன. இன்று புலிகளையும் அதன் பாசிசத்தையுமே மட்டும் பேசுகின்ற ஜேவிபி அன்று வடக்கிலிருந்த எல்லா ~இனவாத" இயக்கங்கள் பற்றியும் கருத்துக் கூறி நிராகரித்திருந்தது. அக்காலகட்டம் வட்டமேசை மாநாட்டுக் காலமாக இருந்தது. வட்டமேசை மாநாட்டை நிராகரித்தது மட்டுமின்றி சமஸ்டி முறையிலான மாவட்ட மாகாண சபைகளைக் கூட இது நிராகரித்திருந்தது. சமஸ்டி முறையால் ஈழ இயக்கங்களை அழிக்க முடியாது என்பதே இதன் திருமந்திரமாகும். சமஸ்டி ஆட்சிமுறை இனவாதத்தை தூண்டி வளர்க்கும் முறையென இது ஓதியது. சமஸ்டியே பிரிவினை என்னும் ஜேவிபி இன்று இனவாத யாப்புக்கு குஞ்சங்கட்டி அதில் தன்னை அழகு படுத்துகிறதென்றால் இதுவே மிக மோசமான இனவாதக் கட்சியாகும்.

 

சுதேகு
03.03.2006